இலங்கை முழுவதும் தொற்றுநோய் பரவுவதற்கு பொதுமக்களே பொறுப்பு என ஜனாதிபதி இராஜபக்ஷ கூறுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

“இது அரசால் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல. உலகளாவிய சுகாதார பிரச்சினை. இதில் மக்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை நிறைவேற்றாததால் தான் நாங்கள் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம்,” என்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நேற்று கொரோனா ஒழிப்பு செயலணியுடன் நடத்திய கூட்டத்தில் கூறினார்.

தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க ஒரு முறையான மற்றும் போதுமான கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஆரம்பத்தில் இருந்தே அவர் நிறைவேற்றத் தவறிய குற்றவியல் அலட்சியத்தின் காரணமாகவே இந்தப் பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் முன் அம்பலத்துக்கு வந்துள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி இராஜபக்ஷ இந்த வஞ்சகத்தனமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

பேரழிவின் அளவு பின்வருமாறு: இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 14,9285 ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய தொற்றுநோயால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் 2 முதல் கடந்த மாதத்தில், சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 இலிருந்து 5,186 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொள்ளவை மீறியுள்ள மருத்துவமனை அமைப்பு, அதிகரித்து வரும் நோயாளிகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தினமும் குறைந்தது 400 பேராவது தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளமை, வெறுமனே வைரஸின் தனித்துவமான தன்மை காரணமாக மாத்திரமல்ல. பொது சுகாதாரத்தை விட முதலாளிகளின் இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் முதலாளித்துவ கொள்கையின் காரணமாகவே இது உலகளாவிய பேரழிவாக மாறியுள்ளது. இத்தகைய வைரஸ் பரவுவது குறித்து விஞ்ஞானிகளின் ஆரம்ப எச்சரிக்கைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், இத்தகைய பேரழிவிற்கு எதிராக மருத்துவ ஆராய்ச்சியை விரிவுபடுத்துவது அல்லது சுகாதார சேவை கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதை கூட முன்னெடுக்கவில்லை.

இதற்கு நேர்மாறாக, பொது சுகாதார சேவை கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டது. இந்த வெட்டுக்களின் செயல்முறை, முதலாளித்துவ அமைப்பு முறையின் சரிவை அடையாளப்படுத்திய 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் துரிதப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் கூட பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று தொற்றுநோய் மிக வேகமாக பரவி வருகிறது.

தொற்றுநோயின் உலகளாவிய தன்மை மற்றும் அதன் பேரழிவை நன்கு அறிந்திருந்த போதிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விஞ்ஞானபூர்வமான கொள்கைகளை பின்பற்றவில்லை. "கோவிட்-19 வைரஸை வென்றது ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி" என்பதே இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார தொணிப்பொருளாக இருந்தது. அதற்கு இணங்க, ஜனாதிபதி இராஜபக்ஷ மக்களின் சமூக இடைவெளியை ஒரு சதத்துக்கேனும் கணக்கெடுக்காமல் பிரமாண்டமான பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.

தொற்றுநோயை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஒன்றான, நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதை நிராகரித்துக்கொண்டு, ஆரம்பத்தில், தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இரத்தக்களரி யுத்தத்தின் முடிவில் கூட, நாடு பொது முடக்கம் செய்யப்படவில்லை என்று இராஜபக்ஷ கூறினார். பின்னர், மார்ச் மாத இறுதியில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எந்தவொரு முறையான சமூக வேலைத் திட்டத்தையும் மேற்கொள்ளாமலேயே நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இப்போது மீண்டும், மேல் மாகாணத்தில் தாமதமான பொது முடக்கம் மற்றும் "தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு" பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரம் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லாத சூழ்நிலையில், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு, பொதுமக்களுக்கு வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பொலிசார் அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகினறனர். நோய்த்தொற்று தொடர்ந்து பரவிவரும் சூழ்நிலைக்கு மத்தியில், மலிவான உழைப்பு வலயங்களும் ஏனைய தொழிற்சாலைகளதும் தொடர்ச்சியான இயக்கத்திற்கு அனைத்து அரச நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில், தொற்றுநோய் திட்டவட்டமாக ஒழிக்கப்பட்டது எவ்வாறு என்பது ஒருபுறம் இருக்க, பாதுகாப்பான நிலைமை இருப்பதாக பாசாங்கு செய்து, முதலாளித்துவ பொருளாதார நடவடிக்கைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்ட வேண்டிய அவசரத்திலேயே அரசாங்கம் இருந்தது. தொற்றுநோயினை முகமூடியாகப் பயன்படுத்திகொண்டு, தொழிற்சங்கத் தலைவர்களின் உதவியுடன், வரலாற்று ரீதியாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை வெட்டிக்குறைத்து, மீண்டும் தொழிற்சாலைகள் பின்னர் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மீண்டும் திறக்கப்பட்டன.

"இரண்டு மாதங்களுக்கும் மேலாக எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை" என்பது இந்த அலட்சியத்தின் விளைவே அன்றி, சரியான பொது சுகாதார நடவடிக்கையின் பெறுபேறு அல்ல. உண்மையில் நடந்தது என்னவென்றால், நோயாளிகள் பல்வேறு சமயங்களில் சமூகத்தில் மீண்டும் மீண்டும் அடையாளம் காணப்பட்டனர். இது அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் பேரழிவு தன்மையை முன்னறிவித்தது. ஜூலை 10, கந்த காடு தனிமைப்படுத்தல் மையத்தை மையமாகக் கொண்ட தொற்றுநோய் விரிவாக்கம் அடையாளம் காணப்பட்டது. ஆகஸ்ட் 13 ராஜங்கனை பகுதியில் ஒரு பாடசாலை மாணவர் தொற்றுக்கு உள்ளாகிய இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த பாதுகாப்பற்ற நிலைமைகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி, முதலாளித்துவ அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், அதே போல், முன்நிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடது கட்சிகளும் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் முதலாளித்துவ உற்பத்தியை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டன.

கடந்த அக்டோபர் 29 அன்று, கொரோனா தடுப்பு செயலணியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, புதிய சிந்தனை ஒன்று தோன்றியது போல், அவ்வப்போதான பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். உலக சுகாதார அமைப்பும் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தீர்க்கமான சுகாதார நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

அரசாங்கம் தினசரி சோதனை திறனை பல சந்தர்ப்பங்களில் அதிகரிக்க வேண்டியிருந்தது. ஒரு திட்டமிட்ட சுகாதாரக் கொள்கையின் காரணமாக அன்றி, நோய் கட்டுப்பாட்டில் இருக்காத போது அதைச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டதே உண்மையாகும். எனினும், அரசாங்கம் வேண்டுமென்றே பி.சி.ஆர். பரிசோதனையை முடிந்தவரை மட்டுப்படுத்தி, தொற்றுநோயின் உண்மையான அளவை பொதுமக்களிடமிருந்து மூடி மறைக்க முயன்றது. "பொருளாதாரத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கு" அது அவசியமாக இருந்தது.

இராஜபக்ஷ அவ்வாறு கூறும்போது, பி.சி.ஆர். பரிசோதனைகள் அவற்றின் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளதால், மாற்று சோதனைகளை நடத்துவதற்கான சாத்தியத்தை பற்றி சிந்திப்பதாக, சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினார். மேலும், நாளொன்றுக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதிப்பதத்திற்கு போதுமான சோதனை திறன் இல்லாததால், நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளியின் சோதனை அறிக்கை கிடைக்கும் வரை இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு நோய் அறிகுறிகளையும் காட்டாத அல்லது சிறிய அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளை, 10 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியும் என்றும், வெளியேற்றும் போது பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை என்றும், தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகிறார். இன்னும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தினால் போதும் என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற நோயாளிக்கு 10 நாட்களுக்குப் பின்னர் தொற்று ஏற்படாது என்று இயக்குனர் கூறியிருந்தாலும், இது மருத்துவமனை திறனை மீறிய நிலைமைகளை எதிர்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகத் தெரிந்தது. கடந்த வாரம், சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெயருவான் பண்டாரா, அறிகுறியற்ற நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதை நிறுத்தி, அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கான வழியை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

ஆனால் இப்போது அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் கூட அங்கும் இங்குமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அரசாங்கம் கடந்த வாரம், தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாத நிலையில், பொலிஸ் பலாத்காரமும் அடங்கிய வீட்டு தனிமைப்படுத்தலை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய வங்கி அதிகாரிகளை அச்சுறுத்தி, பணத்தை அச்சிட்டு பெருவணிகங்களுக்கு கடன் வழங்குவதற்கு இராஜபக்ஷவுக்கு இருந்த ஆர்வம் "உலகளாவிய தொற்றுநோய்க்கு" பாரிய சுகாதார பதிலிறுப்பை ஏற்பாடு செய்வதில் இருக்கவில்லை. அதற்கு பதிலாக, அந்த செலவுகளை ஈடுசெய்ய இராஜபக்ஷ அரசு நன்கொடை நிதி சேகரிப்பை ஆரம்பித்துள்ளது. இது இராஜபக்ஷவின் கருத்துப்படி, "இந்த தொற்றுநோய் அரசாங்கத்தால் உருவாக்கப்படவில்லை," என்பதாலேயே ஆகும்.

அவரது செய்தி என்னவென்றால், "தொற்றுநோய் உலகளாவியது" என்பதால், முதலாளித்துவ இலாப உற்பத்திக்கு தடங்கல் ஏற்படாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் "பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்பதாகும். அவ்வாறு செய்யாதவர்கள் இராணுவம் மற்றும் பொலிசால் ஒழுக்கப்படுத்தப்படுவார்கள். இல்லாவிட்டால், நோய்வாய்ப்பட்டு செத்துப் போ! இதுவே ஜனாதிபதி இராஜபக்ஷ உட்பட அனைத்து முதலாளித்துவ தலைவர்களின் நிலைப்பாடு ஆகும்.

ஆனாலும், முதலாளித்துவ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஒரு சமூக வெடிப்புக்கு அஞ்சி, இராணுவம் மற்றும் பொலிசிடம் தஞ்சம் கோரும் இராஜபக்ஷ, பொதுமக்களை அச்சுறுத்துவதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்கிறார். "29 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, கொழும்பிலிருந்து தப்பிச் சென்றவர்களை" தேடும் நடவடிக்கை, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பயிற்சியின் ஒரு பகுதியாகும்.

Loading