கொசோவோவின் ஜனாதிபதி தாச்சி போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொசோவோவின் தலைவர் பதவியை இந்த வாரம் இராஜினாமா செய்த ஹாஷிம் தாச்சி, போர்க்குற்ற குற்றச்சாட்டில் ஹேக்கில் உள்ள ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தில் ஆஜராவார். மற்ற ஒன்பது பிரதிவாதிகளுடன் சேர்ந்து, 1998 மற்றும் 1999 க்கு இடையில் சேர்பியாவுடனான போரின்போது நூற்றுக்கணக்கான கொலைகள், துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட வழக்கறிஞரின் குற்றச்சாட்டுகள், இந்த வாரம் கொசோவோ சிறப்பு தீர்ப்பாய அறைகள் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டன. நிதி மற்றும் இராணுவ ஆதரவுக்காக மேற்கத்திய சக்திகளை நம்பியுள்ள தாச்சி, தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் இதற்கு பதிலளித்தார். அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததுடன் மற்றும் வழக்கு விசாரணையை கண்டித்தார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக தனது விருப்பத்தை அறிவித்தார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஹாஷிம் தாச்சி (Bild: Moerk / MSC)

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தாச்சி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது அல்ல. ஆனால் அது இப்போதுதான் நடக்கிறது. தாச்சியை அதன் தலைவர்களில் ஒருவராகக் கருதிய கொசோவோ விடுதலை இராணுவம் (KLA) அரசியல் கொலைகள், இன அழிப்பு மற்றும் மாஃபியா பாணி குற்றங்களில் ஈடுபட்டது என்பது நீண்ட காலமாக அறியப்பட்ட ஒன்றாகும். தாச்சியின் அதை தொடர்ந்த அரசியல் வாழ்க்கையும் குற்றச் செயல்களுடன் இணைந்திருந்தது. ஆனால் அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவை அனுபவித்தார். ஏனெனில் பால்கன் நாடுகளை அவர்களின் ஏகாதிபத்திய நலன்களுக்கு அடிபணிய வைக்கும் முயற்சிகளை அவர் ஆதரித்தார்.

எனவே, தாச்சி மற்றும் அவரது கொசோவோ விடுதலை இராணுவ கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரைப் பயன்படுத்தி ஊக்குவித்த மேற்கத்திய அரசியல்வாதிகளும் விசாரணைக் கூண்டில் இருக்க தகுதியுடையவர்களாகும். இவர்களில் முதல் இடத்தில் போரின் போது ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக இருந்த ஜொஸ்கா பிஷ்ஷர் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலரான மடலின் ஆல்பிரைட் ஆவர். 2010 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தபோது தாச்சியை "கொசோவோவின் ஜோர்ஜ் வாஷிங்டன்" என்று புகழ்ந்தவர்களில் இப்போது முன்னறிவிக்கப்பட்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜோசப் பைடெனும் அடங்குவார்.

1990 களில், கொசோவோவில் உள்ள சேர்பிய இராணுவப் பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்கள் மீது வெளிநாடுகளிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏற்பாடு செய்த கொசோவோ விடுதலை இராணுவம், சி.ஐ.ஏ. ஆல் ஒரு பயங்கரவாத அமைப்பாக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் யூகோஸ்லாவியாவை முழுமையாக சுற்றிவளைப்பதற்கும் பால்கன்களை அவர்களின் நலன்களுக்கு அடிபணியச் செய்வதற்குமான உந்துதலுக்கு தடையாக இருந்த சேர்பியாவை தாக்க ஒரு சாக்குப்போக்கு தேவைப்பட்டபோது இது விரைவாக மாறியது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் அரசியல் செய்தித் தொடர்பாளர் தாச்சி, பிப்ரவரி 1998 இல் பிஷ்ஷர் மற்றும் ஆல்பிரைட் ஆகியோரால் கொசோவோவின் பிரதிநிதியாக, பிரெஞ்சு நகரமான ரம்புயே (Rambouillet) இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார். இந்த மாநாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது. இது, யூகோஸ்லாவியா மீது குண்டுவீச்சுக்கு சாக்குப்போக்காக செயல்பட்டது. யூகோஸ்லாவியாவுக்கு எதிரான போரில் கொசோவோ விடுதலை இராணுவம் (KLA) நேட்டோவின் உத்தியோகபூர்வ தரைப்படையாக உருவெடுத்தது. இந்தச் செயல்பாட்டில் செய்யப்பட்ட குற்றங்களுக்காகத்தான் தாச்சி இப்போது பொறுப்பேற்கப்படுகிறார்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறையாகப் பிரிந்த பின்னர், பல அரசியல் கட்சிகள் கொசோவோ விடுதலை இராணுவத்தில் இருந்து தோன்றின. கொசோவோவில் தாச்சி ஆதிக்கம் செலுத்தும் அரசியல் நபராக ஆனார். அவர் பல சந்தர்ப்பங்களில் வெளியுறவு மந்திரி, பிரதமராக, மற்றும் 2016 முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் UNIMIK நடவடிக்கையின் பாதுகாப்பின் கீழ், தாச்சி மற்றும் பிற முன்னாள் கொசோவோ விடுதலை இராணுவத்தின் தளபதிகள் சேர்பியர்களையும் ரோமாக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை பலவந்தமாக இடம்பெயர்த்து, பயத்தையும் பயங்கரத்தையும் பரப்பினார்கள். 2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவினதும் ஜேர்மனியின் ஆதரவுடன் கொசோவோ சேர்பியாவிலிருந்து ஒருதலைப்பட்சமாக அதன் சுதந்திரத்தை அறிவித்தது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் போர்க்குற்றங்களைக் கண்டறியும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சாட்சியமளிக்கத் துணிந்த எவரும் தங்கள் உயிரை விலையாக செலுத்தினர். விவரிக்க முடியாத கார் விபத்துக்கள், தற்கொலைகள் மற்றும் கொடிய துப்பாக்கிச் சூடுகள் ஆகியவை இதன் விளைவாகும். முன்னாள் கொசோவோ விடுதலை இராணுவத்தின் தலைவரான ராமுஸ் ஹராடினாஜ், கொசோவோவின் பிரதமராக இருந்தபோது, 2005 இல் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன் கொண்டுவரப்பட்டார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட 37 போர்க்குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஆனால் 2008 ஆம் ஆண்டில் ஆதாரங்கள் இல்லாததால் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அந்த நேரத்தில் உண்மையான 10 சாட்சிகளில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருந்தார். இறுதி சாட்சி ஒரு தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய பின்னர் தனது சாட்சியத்தை திரும்பப் பெற ஒப்புக்கொண்டார்.

1999 மற்றும் 2007 க்கு இடையில் முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞரான கார்லா டெல் பொன்டே 2008 இல் வெளியிடப்பட்ட தனது நினைவுக் குறிப்புகளில் பின்வருமாறு எழுதினார், “சாட்சிகள் மிகவும் பயந்து மிரட்டப்பட்டனர், சில பகுதிகளில் உண்மையான குற்றங்களை ஒருபோதும் பொருட்படுத்தாது கொசோவோ விடுதலை இராணுவம் இருப்பதைப் பற்றி பேசக்கூட அவர்கள் அஞ்சினர். சாட்சியமளிக்க விரும்புவோர் தங்கள் முழு குடும்பத்தினரையும் வேறு நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட வேண்டியிருந்தது. பல நாடுகள் அவர்களை ஏற்க தயாராக இருக்கவில்லை.” நேட்டோவின் Kfor படை உறுப்பினர்கள் மற்றும் ஹேக்கில் உள்ள போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கூட தங்கள் உயிருக்கு அஞ்சினர்.

1999 ஆம் ஆண்டில் கொசோவோ விடுதலை இராணுவம் 300 சேர்பியர்களைக் கடத்தி, அவர்களின் உறுப்புகளை விற்பனை செய்வதற்கு அகற்றியது என்ற சந்தேகத்தையும் டெல் பொன்டே தெரிவித்தார். இதுபற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் கேள்விப்பட்டது. போதுமான சான்றுகள் கிடைத்தாலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை “முளையிலேயை அடக்கப்பட்டது.”

ஏப்ரல் 2009 இல், BBC ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பியது, அதில் பல சாட்சிகள் கைதிகளின் உறுப்புகளை அகற்றுதல் மற்றும் வர்த்தகம் செய்வது உட்பட கொசோவோ விடுதலை இராணுவத்தின் கொடூரமான குற்றங்களைப் பற்றி பேசினர். எழுத்தாளர் மைக்கேல் மாண்ட்கோமெரி, கொசோவோவில் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போன ஆயிரக்கணக்கான அல்பானியர்கள், சேர்பியர்கள் மற்றும் ரோமாக்கள் இருக்கும் இடம் குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதன்போது கூறமுடியாத அட்டூளியங்களை பற்றி அவரால் அறியமுடிந்தது.

டெல் பொன்டேவின் புத்தகத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஆணைக்குழு ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத்தலைவரான டிக் மார்ட்டியை இரண்டு ஆண்டு விசாரணைக்கு நியமித்தது. மார்ட்டியின் அறிக்கை 2010 இல் வெளிவந்தது. கொசோவோவை "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான மாஃபியா போன்ற கட்டமைப்புகள்" கொண்ட ஒரு நாடு என்று அவர் விவரித்தார். மேலும் முன்னாள் கொசோவோ விடுதலை இராணுவத்தின் தலைவர்களும், அந்த நேரத்தில் பிரதமராக இருந்த தாச்சியும், ஒப்பந்தக் கொலைகள், போதைப்பொருள் கையாளுதல், விபச்சாரம் மற்றும் உறுப்புகளில் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு குற்றவியல் வலையமைப்பை வழிநடத்தியதாக குற்றம் சாட்டினார்.

முன்னாள் சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை கூட்டாக எழுதிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறப்பு புலனாய்வாளராக நியமிக்கப்பட்ட அமெரிக்க நீதிபதி ஜோன் சி. வில்லியம்சன், மார்ட்டியின் அறிக்கை அடிப்படையாகக் கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஒரு ஆய்வுக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்தார். அது உறுதியான ஆதாரங்களை கொண்டிருந்ததாகவும் மற்றும் குற்றப்பத்திரிகையை நியாயப்படுத்துவதாகவும் இருந்ததாக கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்காததுடன், தாச்சி 2016 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், ஒரு வருடத்திற்கு முன்னதாக, கொசோவோவின் பாராளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவ சர்வதேச அழுத்தத்தின் கீழ் முடிவு செய்தது. இது முறையான கொசோவோவின் நீதித்துறை அமைப்பின் ஒரு பகுதியாகும். ஆனால் இது நெதர்லாந்தை மையமாகக் கொண்டதுடன் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களால் நடாத்தப்படுகிறது.

தாச்சியை ஐரோப்பியர்கள் குற்றம்சாட்டுவது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெருகிவரும் பதட்டங்களுடன் பிணைந்துள்ளது. வாஷிங்டனில் தாச்சி மற்றும் அவரது சேர்பிய சமதரப்பபான அலெக்ஸாண்டர் வூசி க்கும் இடையே திட்டமிடப்பட்ட உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் அக்கூட்டம் இரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னர், தாச்சி Frankfurter Allgemeine Zeitung பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் பங்கு "இன்றியமையாதது" என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சித்தார். அமெரிக்கர்கள் "ஐரோப்பியர்களை விட விரைவாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை காட்டுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

தாச்சி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், கொசோவோ விடுதலை இராணுவத்தின் போர்க்குற்றங்களில் நேட்டோ சக்திகளின் பங்கை ஒடுக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். நீதிமன்றம் தனது சொந்த விசாரணைகளை நடத்த முடியாது என்பதால், அது சாட்சிகளின் சாட்சியமளிப்பை சார்ந்துள்ளது. செப்டம்பர் பிற்பகுதியில், பிரிஸ்டினாவில் உள்ள கொசோவோ விடுதலை இராணுவத்தின் படையினர்கள் சங்கத்தில் சாட்சிகளின் இரகசியப் பெயர்கள் அடங்கிய உள் நீதிமன்ற ஆவணங்கள் காணப்பட்டன. அவர்கள் இப்போது தாங்கள் சாட்சியமளிக்கச் சென்றால் அவர்கள் தங்களினதும், தங்கள் அன்புக்குரியவர்களினதும் உயிர்களுக்கு பயப்பட வேண்டும்.

Loading