இணையவழி பொதுக் கூட்டம்: "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் அரசியல் தாக்கங்கள்”

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உலகின் பிரதான ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவின் அரசியல் அபிவிருத்திகள், எப்போதும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை. 2020 ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு பல அரசியல் சவால்களை முன்வைத்துள்ள நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) இளைஞர் மற்றும் மாணவர் பிரிவான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, “அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் அரசியல் தாக்கங்கள்” என்ற தலைப்பில், எதிர்வரும் நவம்பர் 12 இரவு 7.00 மணிக்கு இணையவழி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தலைதூக்கிய அரசியல் நெருக்கடி இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த போராட்டங்கள் வெடித்துள்ள நிலைமைகளின் கீழ், வெள்ளை அமெரிக்கர்களின் பாசிச இயக்கமொன்றை கட்டியெழுப்ப முற்படும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளினதும் "ஐக்கியத்துக்கு" அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளான ஜனநாயக சோசலிச கூட்டணி (DSA) போன்ற போலி-இடது குழுக்கள், அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்களை திசைதிருப்புவதற்காக, வெள்ளை-கறுப்பு இனவெறி மற்றும் பாலினம் போன்ற விடயங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பிய அடையாள அரசியல் விவரிப்புகளை தேர்தல் முடிவுகள் தகர்த்தெறிந்துள்ளன.

தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும், பெரும் முதலாளிகளின் இலாபங்களை பெருக்குவதற்காக தொற்றுநோய்க்கு பலிகடாக்கள் ஆக்கப்படுவதையும், வளர்ந்து வரும் வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் படுகொலைகள் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஆனால் இந்த சமூக-பொருளாதார பிரச்சினைகள் சம்பந்தமாக முதலாளித்துவ ஸ்தாபகத்தின் எந்தப் பகுதியினரும் அக்கறை காட்டுவதைக் காண முடியாது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைந்தாலும், இந்த தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதோடு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு எதிராக போராட முன்வருவார்கள்.

நாட்டில் வர்க்கப் போர் தீவிரமடைவதற்கு சமாந்தரமாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கை, மூன்றாம் உலகப் போரை நோக்கி மனிதகுலத்தை வேகமாக தள்ளிச் செல்லும். அமெரிக்காவின் ஆசியாவில் முன்னிலை கொள்கையுடன் கட்டுண்டுள்ள இந்தியா, இலங்கை உட்பட தெற்காசியாவின் ஆளும் வர்க்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த பேரழிவிற்கு இரையாக்குவதற்கு பங்களிக்கின்றன.

சர்வதேச சோசலிச முன்நோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சுயாதீனமான மற்றும் சர்வதேச இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டியது தீர்க்கமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இது குறித்து கலந்துரையாடுவதற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்த இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு  IYSSE அழைப்பு விடுக்கின்றது.

கூட்டத்திற்கு ஸூம் வழியாக பதிவு செய்வதற்கான இணைப்பு.

கூட்டம் நவம்பர் 12, இரவு 7.00 மணி முதல் facebook.com/iyssesl வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Loading