மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தணிக்கை செய்வதைக் கண்டிக்கின்றனர்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் டுவிட்டர் கணக்கை நிறுத்தியதை பிங்க் ஃபுளோய்ட் இன் இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸ் கண்டிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்த இளைஞர்கள் மற்றும் மாணவர் குழுவான அமெரிக்காவின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் (IYSSE) கணக்கை இடைநிறுத்தியது. ஒரு வாரத்திற்குப் பின்னரும், கணக்கு மற்றும் அதன் தலையங்க இடுகைகள் அதன் வாசகர்களின் கண்ணுக்கு தெரியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கில் ஆர்வம் அதிகரித்து வரும் நேரத்தில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் தணிக்கை அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் எதிர்ப்புக்குரல்கள் மற்றும் எதிர்ப்பு அறிக்கைகளை சந்தித்துள்ளது.

புகழ்பெற்ற இசைக்கலைஞரும் பிங்க் ஃபுளோய்ட்டின் [Pink Floyd] இணை நிறுவனருமான ரோஜர் வாட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகக் கணக்குகளில், “டுவிட்டர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பிற்கு தடை விதித்துள்ளது. தணிக்கை செய்வதற்கான இந்த முயற்சி குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படுவது மிகவும் முக்கியமானது” என்று எழுதினார்.

நன்றி: Twitter_Nachricht von @rogerwaters

Twitter மற்றும் Square இனது பில்லியனரான தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸியை (Jack Dorsey) பற்றிய குறிப்பில், வாட்டர்ஸ், "ஜாக் நீங்கள் எதைப்பற்றி பயப்படுகிறீர்கள்?" என எழுதினார். அத்துடன் "டுவிட்டர்" என்ற வார்த்தை எழுதிய நாடாவை வாயில் ஒட்டிய ஒரு புகைப்படம் அதனுடன் இருந்தது. டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரது ஒருங்கிணைந்த பதிவுகள் இதை எழுதும் நேரத்தில் 75,000 க்கும் மேற்பட்ட விருப்புகளைப் பெற்றுள்ளன.

ஒரு முன்னணி சர்வதேச மாடல் கலைஞரான ஆண்ட்ரியா பெஜிக் தனது டுவிட்டர் கணக்கில், “அன்புள்ள டுவிட்டர் @IYSSE_US இனை மீட்டமை @டுவிட்டர் ஆதரவு. உலக வலைத் தளத்தை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள். புகழ்பெற்ற இடதுசாரி வெளியீடுகள் / அமைப்புகளை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள். குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக அதிக குரல் கொடுத்தவர்களை தணிக்கை செய்வதை நிறுத்துங்கள்” என அதில் எழுதினார்.

டுவிட்டரின் தணிக்கைக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த டஜன் கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

வட கரோலினாவில் உள்ள அப்பலாச்சியன் அரச பல்கலைக்கழகத்தின் மாணவர் லாச்லன், WSWS இடம் “நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மூலஆதாரமாக IYSSE டுவிட்டர் கணக்கைப் பின்பற்றுவதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பெறும் தகவல்கள் இப்போது முக்கியமாக தேவைப்படுகின்றன” என்று கூறினார்.

"தேர்தல் நெருக்கடி, கோவிட்-19 தொற்றுநோய் ... பள்ளிக்கு பணம் செலுத்துவதற்காக எங்கள் வேலைகளை இழக்கும் வாய்ப்பு" மற்றும் "அதிகளவில் செல்வந்தர்கள் இலாபமடையும் நீடித்த பொருளாதார நெருக்கடியின் நீடித்த தாக்கங்கள்" ஆகியவற்றை சுட்டிக்காட்டி "மாணவர்களும் தொழிலாளர்களும் ஒரு தீவிர பகுப்பாய்வினை அறிய தாகம் கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார். அவர் "சமூக ஊடகங்களில் வேறு எந்த அரசியல் பக்கமும் IYSSE வெளியிடும் வேலைத்திட்டத்துடன் நெருங்கிவரவில்லை. அதனால்தான் டுவிட்டர் அதை தணிக்கை செய்ய விரும்புகிறது." என்று கூறி முடித்தார்.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் புதியவரான ஜெய்லா, டுவிட்டரின் தணிக்கை “எதிர்பாராதது, ஆனால் ஆச்சரியமல்ல” என்று கூறினார். "சோசலிசத்தின் மீதான அப்பட்டமான கட்டுப்பாடு" என்பது "இன்றைய இளைஞர்களின் மத்தியில் சோசலிசத்தில் வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு" ஒரு பிரதிபலிப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சான் டியாகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சார்லஸ் தோர்பே, WSWS இடம் IYSSE தணிக்கை செய்வது “அதிகரித்துவரும் ஜனநாயக விரோத ஆணவம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சட்டவிரோத பலத்தின் சான்றாகும்” என்று கூறினார். இந்த இணைய தளங்களை ஏன் தனியார் முதலாளித்துவ கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுத்து மற்றும் பொது பயன்பாடுகளாக சமூகமயமாக்க வேண்டும் என்பதை இது துல்லியமாக விளக்குகிறது.” அவர் இந்த இடைநீக்கத்தை "ஜனநாயகம் மீதான தாக்குதல்" என்று கூறினார்.

பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் செபஸ்டியன், டுவிட்டர் IYSSE கணக்கை தற்காலிகமாக நிறுத்தியதை “இலகுவாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது” என்று கூறினார். அவர் தொடர்ந்தார், “IYSSE விதிகளை தெளிவாகப் பின்பற்றி வருகிறது. டுவிட்டர் எடுத்த நடவடிக்கைகள் அரசியல் தணிக்கையை தவிர வேறொன்றுமில்லை. இணைய யுகத்தில், டுவிட்டர் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பேச்சினை கட்டுப்படுத்துபவர்களாகவும், முதலாவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுபவர்களாகவும் மாறிவிட்டன. இந்த செயலும் அது போன்ற செயல்களும் பயனர்களை தவறான தகவல் அல்லது “தேவையற்ற” spam கணக்குகளிலிருந்து ‘பாதுகாப்பதை’ நோக்கமாகக் கொண்டவை அல்ல. மாறாக பெருநிறுவன நலன்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் மாறுபாடான கருத்தைக் கொண்ட குரல்களை மௌனமாக்குகின்றன.”

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) “வர்க்க ஒற்றுமை” குழு டுவிட்டரில் IYSSE க்கு கொள்கைரீதியான பாதுகாப்பை வெளியிட்டது. “இணைய தணிக்கை மற்றும் மாற்றுக் கருத்துக்களை தணிக்கை செய்யும் இந்த குழப்பம் விளைவிக்கும் எழுச்சியை, பேச்சு சுதந்திரக் கொள்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட எவரையும் எச்சரிக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்திற்கும், சோசலிச சமத்துவக் கட்சிக்கும் எதிராக டுவிட்டர் எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.” என எழுதியது.

IYSSE (அமெரிக்கா) இன் தேசிய செயலர் ஜெனெவீவ் லீ, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் இளைஞர் இயக்கமான YDSA க்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜோசப் கிஷோர், DSA க்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டிக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இருவருக்கும் பதில் கிடைக்கவில்லை.

IYSSE இன் டுவிட்டர் பக்கத்தை தணிக்கை செய்வது என்பது தனித்த செயல் அல்ல. இது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அக்டோபர் 28 அன்று காங்கிரஸின் பதிவில் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து வருகிறது. கூகுள், ஏப்ரல் 2017 இல், ஹிலாரி கிளிண்டனின் தோல்வியைத் தொடர்ந்து, புதிய தேடல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இது குறைந்த “அதிகாரப்பூர்வ” உள்ளடக்கத்தை மதிப்பிடவில்லை. இது 13 முன்னணி இடதுசாரி, முற்போக்கான மற்றும் போர் எதிர்ப்பு வலைத் தளங்களின் தேடல் போக்குவரத்தை 2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 55 சதவீதம் குறைத்தது.

பிரபலமான கலந்துரையாடல் தளமான Reddit இன் பல துணை தளங்களில் r/Socialism உட்பட WSWS ஐ தடை செய்துள்ளன. ஆகஸ்ட் 2018 வரை, பேஸ்புக் இடதுசாரி வெளியீட்டாளர்களின் கணக்குகளை நீக்கியுள்ளது. “நம்பத்தகாத நடத்தை” என்ற ஆதாரமற்ற கூற்றுக்களின் அடிப்படையில் உலக சோசலிச வலைத் தள நிருபர்களின் கணக்குகளையும் நீக்கியுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களையும், டுவிட்டர் IYSSE ஐ தணிக்கை செய்வதை அம்பலப்படுத்தும் எங்கள் கட்டுரைகளை பரவலாக பகிர்ந்து கொள்ளவும், இந்த நடவடிக்கையை எதிர்க்கும் அறிக்கைகளை எழுதவும், பரப்பவும் நாங்கள் அழைக்கிறோம். கீழே, IYSSE இன் ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த பல கருத்துகளையும் குறிப்புகளையும் வெளியிடுகிறோம்:

பசிபிக் வடமேற்கில் உள்ள ஒரு இளம் தொழிலாளி எரிக்: “டுவிட்டரால் IYSSE (US) கணக்கை இடைநிறுத்தியது அப்பட்டமான அரசியல் தணிக்கை செயலாகத் தெரிகிறது. IYSSE (US) இன் ஆதரவாளராக, டுவிட்டர் அவர்களின் கணக்கை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்.”

வடக்கு வேர்ஜீனியா சமுதாயக் கல்லூரியின் மாணவர் மைக்: “டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மக்களை மூடுவது தவறு.” டுவிட்டர் IYSSE பக்கத்தை அகற்றுவதைக் கண்டித்து அவர் கூறினார், “அது அனைத்தையும் குழப்புவதாக உள்ளது. டுவிட்டர் மக்களை உண்மையிலிருந்து திசைதிருப்ப விரும்புகிறது. "முதலாளித்துவ வர்க்கம்" நிலைமையை ஸ்திரப்படுத்த விரும்புகிறது. அவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் உங்களை ஏன் தடை செய்தார்கள் என்ற உங்கள் கேள்விகளுக்கு அவர்கள் ஒரு பதிலைக் கூட கொடுக்கவில்லை.”

வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி துஷாரா இவ்வாறு கூறினார்: “IYSSE என்பது குறிப்பாக வாழ்க்கையை விட இலாபங்களுக்கு மதிப்புக்கொடுக்கும் ஒரு ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் கொள்கையால் முழு உலகமும் தலைகீழாக வைக்கப்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் இளைஞர்களுக்கான ஒரு முக்கியமான தகவல் ஆதாரமாகும். இன்று தான், இந்த விடயம் பற்றி கேட் ராண்டால் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு பரந்த வாசகர்கள் தேவை. குறிப்பாக இதனால், இளைஞர்களால், அவர்களுக்கு முன்னால் இருக்கும் தமது வாழ்க்கையை தமது கையில் எடுத்துக்கொள்ள அரசியல்ரீதியாக அவர்கள் தயாராக இருக்க முடியும்.”

Loading