அசாஞ்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில் பெல்மார்ஷ் சிறை கைதிகள் கோவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசாஞ்ச் அடைக்கப்பட்டிருக்கும் லண்டனின் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் அதே கட்டிடத்தில் உள்ள பலர் கோவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இன்று காலை அறிவித்தது.

கட்டிடத் தொகுதி 1 இல் உள்ள மூன்று கைதிகளிடையே நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விக்கிலீக்ஸின் கூற்றுப்படி, பெல்மார்ஷ் சிறைச்சாலை ஆளுநர் அசாஞ்ச் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொற்றுக்குள்ளாகி இருப்பதை பற்றி அடையாளம் கண்டிருப்பதாக விபரமாக கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து கைதிகளும் ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும், இதன் முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது. கைதிகள் குளிப்பது பொழிவது அல்லது உடற்பயிற்சி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்படும். அதாவது அவர்கள் 24 மணி நேரமும் தங்கள் அறைகளில் அடைத்து வைக்கப்படுவார்கள். சிறை அதிகாரிகளால் இந்த அறிக்கைகள் உண்மையில் உறுதிப்படுத்தப்பட்டன. அவர்கள் பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு, "பல நேர்மறை தொற்றுக்களைத் தொடர்ந்து மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்" என தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 11 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச்

இந்த நோய்வெடிப்பு அசாஞ்சின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தலாக உள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் இந்த நோயின் தொற்றுக்குட்பட்டால் கொரோனா வைரஸினால் குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்று முன்னணி மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் கைகளில் அவர் தசாப்த காலமாக துன்புறுத்தியதன் விளைவாக அசாஞ்ச் ஒரு நீண்டகால சுவாச மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளைக் கொண்டுள்ளார்.

மருத்துவர்களின் எச்சரிக்கைகள் மற்றும் மார்ச் மாதத்தில் பிணை மனு ஆகியவை பிரிட்டிஷ் அரசால் நிராகரிக்கப்பட்டன. இது உலகப் புகழ்பெற்ற வெளியீட்டாளரை வேண்டுமென்றே தொற்று அச்சுறுத்தலுக்கு அம்பலப்படுத்துகிறது. இது அசாஞ்சை அழிக்கும் முயற்சியின் ஒரு முனையாகும். மற்றொன்று, அவரை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் முயற்சியாகும். அங்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் உளவு சட்டத்தின் கீழ் 17 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதுடன், மேலும் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவார்.

ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையில், அசாஞ்சின் நண்பியும் அவரது இரண்டு இளம் குழந்தைகளின் தாயுமான ஸ்டெல்லா மோரிஸ்: “ஜூலியனை இங்கிலாந்தின் மிகக் கடுமையான சிறையில் வைத்திருப்பதும், ஒரு கொடிய வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாக கூடியதாக வைத்து, அவரது குடும்பத்திலிருந்து விலக்கிவைத்து இருப்பது கொடுமை மட்டுமல்ல, அது பிரித்தானியாவின் மதிப்புகளையும் ஜனநாயகத்தையும் ஏளனம்செய்கின்றது… நான் ஜூலியனைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஜூலியனின் மருத்துவர்கள் அவர் வைரஸின் பாதிப்புக்கு இலகுவாக ஆளாகலாம் என்று கூறுகிறார்கள்” என அறிவித்தார்.

பிரிட்டன் முழுவதும் தொற்றுநோய் மீண்டும் எழுச்சியடைந்ததற்கு மத்தியில் பெல்மார்ஷில் உள்ள தொற்றுக்கள், சிறைச்சாலை அமைப்பு முழுவதும் தொற்றுநோய்களின் கூர்மையான அதிகரிப்பின் ஒரு பகுதியாகும். அக்டோபர் மாத இறுதியில் நீதி அமைச்சின் புள்ளிவிவரங்கள் மார்ச் மாதத்திலிருந்து 1,529 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டியது. செப்டம்பர் மாத 883 ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது இது 600 க்கும் அதிகமானதாகும். குறைந்தது 32 கைதிகள் இறந்துள்ளனர்.

அவர்கள் முழு அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவோடு கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட கொலைகார “சமூகநோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கைக்கு பலியாகிறார்கள். இந்த போலி விஞ்ஞான கோட்பாட்டின் கீழ், கோவிட்-19 பரவவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க முடியும் மற்றும் பெருநிறுவன இலாபங்களை தொடர்ச்சியாக பெறலாம்.

சமூகத்தில் பரவலாக நோய் பரவும்போது சிறைவாசிகளின் அளவின் காரணமாக, கைதிகள் மற்றும் காவலர்கள் உட்பட, சிறைச்சாலைகளில் வைரஸ் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கைதிகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மோசமடைந்த நிலைமைகளால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பாராளுமன்ற ஆய்வில் 35 சிறைகளில் 10 இல் குறைந்தபட்ச சுகாதாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கண்டறியப்பட்டது. கைதிகளின் உரிமைக்கான வக்கீல்கள், பற்றாக்குறையான சுகாதாரப் பாதுகாப்பு குறித்து ஆவணப்படுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் குடலிறக்க நோய்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான கைதிகள், பெரும்பாலும் ஏழை மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் தொற்றுநோய் காலம் முழுவதும் கொரோனா வைரஸ் வெடிப்புமையங்கள் என வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மிகக் குறைந்த தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர்.

எந்தவொரு குற்றமும் செய்யப்படாத ஒரு அரசியல் கைதியான அசாஞ்ச்சின் வழக்கு அனைத்திலும் மிகவும் வெட்கக்கேடானது. ஏப்ரல் தொடக்கத்தில், அவர் 4,000 குறைந்த ஆபத்துள்ள கைதிகளை உள்ளடக்கிய ஒரு விடுதலை செய்யும் திட்டத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். அவர் ஒரு காவல் தண்டனை அனுபவிக்கவில்லை, எனவே விடுதலைக்கு தகுதியற்றவர் என்ற அசாதாரண அடிப்படையில் இது செய்யப்பட்டது.

முந்தைய மாதம், நீதிபதி வனேசா பரைட்சர், அசாஞ்ச்சின் ஒரு பிணை விண்ணப்பத்தை அவர் ஒரு "தப்பி ஓடலாம்" என்ற போலிக்காரணத்தில் நிராகரித்தார். பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்கான பெரும்பாலான தொற்றுநோயால் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த தீர்ப்பு உண்மையில் நடைமுறையில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், கொரோனா வைரஸ் நெருக்கடி முழுவதும் அசாஞ்சிற்கு ஒரு அடிப்படை பாதுகாப்பான முகமூடி கூட வழங்கப்படவில்லை என்று மோரிஸ் தெரிவித்தார். அவர் சிறைச்சாலையில் பொதுவாக பலரும் இருக்கும் பகுதிகளில் இருந்தபோதும் அவ்வாறே இருந்தது. ஒருபோதும் விளக்கப்படாத இந்தக் கொள்கை என்ன அர்த்தப்படுத்துகின்றது என்றால், அசாஞ்ச்சின் அறை இருக்கும் தொகுதியில் வைரஸ் சுற்றோட்டத்தில் இருந்திருந்தால், அவர் வைரஸினால் தொற்றுக்குள்ளாகும் பெரும் அபாயத்தினை எதிர்கொண்டிருப்பார் என்பதே.

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான படுகொலை அணுகுமுறை உயர்மட்டத்திலிருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் குழுவான அசாஞ்சிற்கான வைத்தியர்களின் கடிதங்களுக்கு அரசாங்கம் அவமதிப்புடன் பதிலளித்துள்ளது. அவர்கள் அசாஞ் சிறையில் இறக்கக்கூடும் என்று எச்சரித்து அவரை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

பல மருத்துவ பிரச்சினைகள் அசாஞ்சை பெல்மார்ஷ் சிறைச்சாலையின் மருத்துவ பிரிவுக்கு மாற்றும்படி கட்டாயப்படுத்திய பின்னர், தொற்றுநோய்க்கு முன்னரே கடந்த ஆண்டு அக்டோபரில் மருத்துவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

மோரிஸ் தனது செய்திக்குறிப்பில் விளக்கமளித்தபடி, அசாஞ்சை பாதிப்பிற்குள்ளாக்குவது “இது வெறும் கோவிட் மட்டுமல்ல”. "கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ஜூலியனுக்கு கடுமையான ஆபத்து," என்று அவர் கூறினார். "பெல்மார்ஷ் என்பது மிகவும் ஆபத்தான சூழலாகும், அங்கு கொலைகள் மற்றும் தற்கொலைகள் பொதுவானவை. ஜூலியன் பத்திரிகை சுதந்திரத்திற்கும் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கும் வாதாடும் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உயிருடன் உள்ள ஒரு பாதுகாவலனாவார். ஜூலியன் தனது வாழ்க்கையை இழக்க நேரிடும் முன் இங்கிலாந்தின் முடிவெடுப்பவர்கள் தமது போக்கை மாற்ற வேண்டும்.

Loading