பிரெஞ்சு காவல்துறையினரை ஒளிப்பதிவு செய்வதை தடைசெய்யும் “உலகளாவிய பாதுகாப்பு” சட்டத்தை மக்ரோன் தயாரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் தனது “உலகளாவிய பாதுகாப்பு” மசோதாவை தேசிய சட்டமன்றத்தில் முன்வைத்தது. இஸ்லாமிய குழுக்களை வெளிப்படையாக குறிவைத்து "பிரிவினைவாதத்திற்கு" எதிரான ஒரு சட்டத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த மசோதா நிரந்தர அவசரகால நிலையை நிறுவுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது கடுமையான அதிகாரங்களை காவல்துறைக்கு ஒப்படைக்கிறது.

அதனுடைய விதிகள் முன்னோடியில்லாதவை. பொலிஸ்காரர்கள் உட்பட ஒரு பொது நிகழ்வின் ஒளிப்பதிவுகளை “பொலிஸ்காரின் உடல் அல்லது உளவியல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்” வெளியிடும் எவருக்கும் ஒரு வருட சிறைத்தண்டனையும் 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும். இது முற்றிலும் அகநிலை அளவுகோலாகும், ஒளிப்பதிவாக்கம் செய்யப்படுவது அவர்களுக்கு சங்கடமாக இருப்பதாகக் கூறி வெறுமனே ஒளிப்பதிவாக்கத்தில் ஈடுபடும் எவரையும் கைது செய்வதற்கு காவல்துறையை அனுமதிப்பதானது, பத்திரிகை சுதந்திரத்தையும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு பாதுகாப்புப் படைகளை பொறுப்புக்கூற வைக்கும் எந்தவொரு முயற்சியும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

Emmanuel Macron (en.kremlin.ru)

மக்கள்தொகையை வீடியோ கண்காணிப்பு செய்ய பொலிஸாருக்கு பரந்த புதிய அதிகாரங்களையும் இந்த சட்டம் வழங்குகிறது. கடைகள் அல்லது பொதுநிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி வளாகங்களில் பாதுகாப்பு கேமராக்களுக்கான அணுகல் தேசிய காவல்துறையினருக்கு மட்டுமல்ல, நகராட்சி காவல்துறையினருக்கும் வழங்கப்படும். மேலும், இந்த மசோதா பொதுமக்களின் முக அடையாளம் காணல் தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்களை நிலைநிறுத்தவும், பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அணிவகுப்புகளை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்களை சாதகமாக தடைசெய்ய, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிதியை அங்கீகரிக்கும் ஒரு சட்டத்தை அரசாங்கம் அமைதியாக நழுவவிட்டது என்பது வெளிவந்த பின்னர் இது வருகிறது. இது பின்வருமாறு கூறுகிறது: "நிர்வாகத்தால் அல்லது ஒழுங்குமுறைச் சட்டங்களால் அல்லது பொருத்தமான அதிகாரிகளால் அங்கீகாரம் இல்லாமல் உயர்கல்வி நிறுவனத்தில் ஊடுருவுவது அல்லது தங்கியிருப்பது, ஸ்தாபனத்தின் அமைதி அல்லது நல் ஒழுங்கைத் தொந்தரவு செய்வதற்காக, அபராதங்களை எதிர்கொள்ள வேண்டும்." இவற்றுள் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 45,000 யூரோக்கள் அபராதமும் அடங்கும்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஒரு திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. வேலைநிறுத்தங்கள் மற்றும் "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களின் இரத்தக்களரி அடக்குமுறைக்குப் பின்னர், இந்த வசந்த காலத்தில் மினியாபோலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் கொலை செய்யப்பட்ட பின்னர், பிரான்ஸ் உட்பட சர்வதேச ரீதியாக பாரிய ஆர்ப்பாட்டங்களால் மக்ரோன் அரசாங்கம் பீதியடைந்தது. COVID-19 இலிருந்து ஏற்பட்ட பாரிய இறப்பு எண்ணிக்கை குறித்து அதிகரித்து வரும் பொதுமக்கள் கோபத்தை எதிர்கொண்டுள்ள, ஆளும் உயரடுக்கு ஒரு பொலிஸ் சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறது.

சமூக சமத்துவமின்மையின் தாங்கமுடியாத நிலைமைகளும், தொற்றுநோயால் வெளிப்படுத்தப்பட்ட அரச குற்றமும் எல்லா இடங்களிலும் ஜனநாயக ஆட்சியின் வடிவங்களில் எஞ்சியுள்ளவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அமெரிக்காவில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் மறுத்து, ஒரு சதித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார், தீவிர வலதுசாரி துணைப் படைகளுக்கு அவரை பதவியில் வைக்க முயற்சிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். பிரான்சில், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளான பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றை அரசாங்கம் நசுக்கி வருகிறது, ஒரு பொலிஸ் பயங்கரவாத சூழலை உருவாக்குவதன் மூலம் எதிர்ப்பை மெளனமாக்குவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் ஒரு சட்டவிரோத சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்துகிறது.

இந்தச் சட்டம் சட்டவிரோதமானது மற்றும் ஜனநாயக வடிவிலான அரசாங்கத்துடன் பொருந்தாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையும், பிரெஞ்சு அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் குறைதீர்ப்பாளர் அமைப்பும், இந்தச் சட்டத்தை, அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை மீறுவதாக கண்டித்துள்ளன.

காவல்துறையின் ஒளிப்பதிவுகளை வெளியிடுவது "தகவல் சுதந்தர உரிமையை மதிக்க வேண்டியது மட்டுமல்லாமல், பொது நிறுவனங்களின் ஜனநாயக கட்டுப்பாட்டை செயற்படுத்துவதற்கு சட்டபூர்வமானது" என்றும் “அவை இல்லாதிருப்பது, குறிப்பாக சாத்தியமான துஷ்பிரயோகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்பு படையினரின் அதிகப்படியான சக்தியை பயன்படுத்துவதை ஆவணப்படுத்துவதை தடுக்கும்" என்றும் ஐ.நா குறிப்பிட்டது. இந்தச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், பிரான்ஸ் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தையும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையையும் மீறுகிறது என்று ஐ.நா எச்சரித்தது.

பிரான்சின் மனித உரிமை குறைதீர்ப்பாளரான கிளேய்ர் எரோன், "பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளைப் பாதுகாக்க சட்டம் தேவையில்லை, இது கருத்துச் சுதந்திரத்தை தேவையற்ற முறையில் அச்சுறுத்துகிறது, மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தடைகளை உருவாக்குகிறது" என்று எச்சரித்தார். ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டத்தின் விதிமுறைகளின்படி ஒளிப்பதிவு செய்வது ஆர்ப்பாட்டக்காரர்களின் "தனிப்பட்ட அந்தரங்க உரிமையை நேரடியாக அச்சுறுத்தும்" என்றும் "ஆர்ப்பாட்டத்திற்கான சுதந்திரத்தை அச்சுறுத்தும்" என்றும் அப்பெண்மணி கண்டறிந்தார்.

இந்த மசோதா தேசிய சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஊடகவியலாளர்கள் சங்கங்களும் மனித உரிமைக் குழுக்களும் இந்த ஜனநாயக விரோத சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தின. துலூஸில், தங்களுடைய ஆர்ப்பாட்டங்களின் இரண்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்கள் உட்பட சுமார் 1,300 பேர்கள் நகர மையத்தில் கூடினர், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கலகப் பிரிவு போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் அவர்களைக் கலைத்தனர். போர்தோ மற்றும் லியோனில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர், அங்கு போலிஸ் தலைமையகத்திற்கு முன்பும், மார்சேய் மற்றும் ரென்னில் குடியரசு சதுக்கத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பாரிஸில், செவ்வாயன்று பல நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தேசிய சட்டமன்றத்தின் முன் கூடியிருந்தனர், அதே நேரத்தில் உள்ளே இருந்த பிரதிநிதிகள் மசோதாவை விவாதிக்கத் தொடங்கினர். கலகப் பிரிவு போலீசார் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, 33 பேரைக் கைது செய்தனர்.

France3 பொது தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு பத்திரிகையாளர் ஒரு செல்ஃபோனுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதை ஒளிப்பதிவு செய்த போது கைது செய்யப்பட்டார். "அவரது பத்திரிகை அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் விடுவிக்கப்பட்டார். காவலில் வைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் வழங்கப்படவில்லை, எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை," என்று France3-Paris கூறியது, "பணி நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் இந்த முறைகேடான மற்றும் எதேச்சதிகாரமான கைதுக்கு கண்டனம்" என்று France3-Paris பெரும் உறுதியுடன் கூறியது.

"பிரான்ஸ்-தொலைக்காட்சிகளின் நிர்வாகம் பத்திரிகை சுதந்திரம், தகவல் தெரிவிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது மீதான இந்த கட்டுப்பாட்டை கண்டிக்கிறது" மற்றும் "தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது" என்று பிரான்சின் பொது தொலைக்காட்சி ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆயினும்கூட, மக்ரோன் குடியரசிற்கான அணிவகுப்பு (LREM) கட்சியின் உறுப்பினர்கள் தாங்கள் சட்டத்தை எந்த விலைகொடுத்தாலும் நிலைநிறுத்துவோம் என்று வலியுறுத்தினர். உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன், தனது "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை முன்வைக்கும் போது, சூப்பர் மார்க்கெட்டுகளில் கோஷர் மற்றும் ஹலால் உணவு அடுக்கு வரிசைகள் இருப்பதைக் கண்டிப்பதன் மூலம் யூத-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இந்தச் சட்டம் பத்திரிகைகளை வாயை மூடவைக்கும் நோக்கம் கொண்டது என்பதை தெளிவுபடுத்தினார்.

பிரெஞ்சு அரசு தொலைக்காட்சி ஊழியர்களை கைது செய்வதை டார்மனன் ஆதரித்தார், அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி கொடுக்க விரும்பினால், ஊடகவியலாளர்கள் "அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்" என்றும் "அவர்களுக்கு அறிக்கைகளை வழங்க வேண்டும்" என்றும் கூறினார்.

மக்ரோன் நிர்வாகத்திலிருந்து ஒரு பாசிச துர்நாற்றம் எழுந்து கொண்டிருக்கிறது. “உலகளாவிய பாதுகாப்பு” மசோதாவின் இணை அனுசரணையாளரும், பிரெஞ்சு தேசிய காவல்துறையின் RAID தாக்குதல் அணியின் முன்னாள் தலைவருமான Jean-Michel Fauvergue, அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் சீற்றத்தைத் தடுக்க, தணிக்கை அவசியம் என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். "அதிகாரம், குறிப்பாக அரசு தற்போது இழந்து கொண்டிருக்கிறது" என்ற "விம்பங்களின் போரில்" இழந்த "நிலைமையை மீண்டும் சட்டம்" வெல்லும் என்று அவர் கூறினார்.

ஆனால் அரசு தொடுத்திருக்கும் போரின் இலக்கு மக்களாகும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கமாகும் என்பதை Fauvergue சொல்லவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சமூக ஊடகங்களில் எண்ணற்ற வீடியோக்கள் "மஞ்சள் சீருடை" எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்கள், வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான கொடூரமான பொலிஸ் மிருகத்தனமான தாக்குதல்களை அம்பலப்படுத்தியுள்ளன. "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் போது மட்டும், 11,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர், 4,400 க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் காயமடைந்தனர், இரண்டு டஜன்கணக்கான மக்கள் கண்களை இழந்தனர் மற்றும் ஐந்து பேர்கள் கைகளை இழந்தனர், அதே நேரத்தில் ஒரு பார்வையாளரான, 80 வயதான ஜினெப் ரெடூனே ஒரு போலீஸ் கண்ணீர்ப் புகைக் குப்பியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரெடூனைக் கொன்ற பிரிவுக்கு தலைமை தாங்கிய காவல்துறை அதிகாரியை மக்ரோன் அரசாங்கம் கெளரவித்தது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பணியில் மற்றும் பள்ளியில் தொடர்ந்து வைத்திருக்க கட்டாயப்படுத்துதல் மற்றும் கொரோனா வைரஸைப் பரப்புதல் போன்ற கொள்கைகள் உட்பட, மக்ரோன் நிர்வாகத்தின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாக இருக்கிறது. பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி உள்ளிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அவற்றின் அரசியல் கூட்டாளிகள் அனைவரும் பொலிஸ்-அரசு எந்திரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

LFI அதிகாரி டானியல் ஒபோனோ பிரான்சில் "சுய தணிக்கையை" ஊக்குவிக்கும் "உலகளாவிய பாதுகாப்பு" மசோதாவை விமர்சித்தார், சோசலிஸ்ட் கட்சிக்காக (PS) Hervé Saulignac கருத்துரைக்கையில் "கடக்கக்கூடாது என்ற சிவப்பு கோடுகள் உள்ளன. [முன்னாள் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா] சார்க்கோசி கூட அவ்வளவு தூரம் சென்றதில்லை.” எவ்வாறாயினும், இந்த விமர்சனங்கள் பாசாங்குத்தனமானவை: அதாவது ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து, 2015 ல் இரண்டு ஆண்டு அவசரகால நிலைமையை விதித்தது சோசலிஸ்ட் கட்சி (PS) தான். அந்த நேரத்தில் தேசிய சட்டமன்றத்தில் அவசரகால நிலைக்கு வாக்களித்தது மெலோன்சோனின் சட்டமன்ற குழுதான்.

"உலகளாவிய பாதுகாப்பு" சட்டமானது சோசலிஸ்ட் கட்சியால் (PS) மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் நேரடி தொடர்ச்சியாக உள்ளது, LFI ஆதரவுடன், மக்ரோனுக்கு நிரந்தர அவசரகால நிலையை நிறுவ சட்டபூர்வமான நிலைமையைத் தயார் செய்கிறது.

COVID-19 இன் இரட்டை அச்சுறுத்தல்களும், நிதியப் பிரபுத்துவத்தின் சர்வாதிகார உந்துதலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பரந்த சவால்களை முன்வைக்கிறது. உலகம் முழுவதிலும் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இந்த வைரஸை தடுத்து நிறுத்த, மீண்டும் பணிக்கு திரும்புவதை ஆதரிக்கும் இந்த தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை அமைப்பது அவசியமாக இருக்கிறது. இது, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கும், மற்றும் அவர்களை பாதுகாப்பாக வீட்டில் தங்கயிருக்க அனுமதிக்கும் ஒரு பொது முடக்க கொள்கையை வலியுறுத்துவதற்குமாகும். சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சோசலிச அரசியல் இயக்கம் தேவைப்படுகிறது, இது பிரான்ஸ் மற்றும் சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்புக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்காக போராட வேண்டும்.

Loading