இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனை வாழ்த்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும் இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பினர். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டத்தோடு கூட்டமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சுதந்திர தின விழாவில் இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ [Credit: AP Photo/Eranga Jayawardena]

ஒரு ட்விட்டர் செய்தியில், ஜனாதிபதி இராஜபக்ஷ பைடனின் "வரலாற்று வெற்றியை" வரவேற்றதுடன் "எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில்" நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாக கூறினார். பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸின் கீழ் "இன்னும் வலுவான, பரஸ்பர பலனளிக்கும் கூட்டாண்மையை" இராஜபக்ஷ எதிர்பார்க்கிறார்.

பிரதமர் இராஜபக்ஷ இரு நாடுகளுக்கும் இடையேயான 72 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் பைடன் மற்றும் ஹரிஸுடன் இணைந்து “இலங்கை-அமெரிக்கா உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு” செயற்பட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஆளும் உயரடுக்கின் உறுப்பினர்கள், குறிப்பாக வாஷிங்டனில் உள்ள அரசியல் மாற்றங்கள் தங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதில் அக்கறை கொண்டுள்ள அதே நேரம், அவர்கள் இந்த பெரும் வல்லரசுடன் நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கின்றனர். அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவை எதிர்த்து நிற்கின்ற நிலையில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளதால், இந்த கவலைகள் கடந்த தசாப்தத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

வாஷிங்டன், புதுடெல்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான மோதல், இந்து சமுத்திரத்தில் பிரதானமான கடல் பாதைகளுக்கு அருகில் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்துள்ள இலங்கையில், அரசாங்கங்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து வத்துள்ளன. சீனாவிற்கு எதிரான அதன் மூலோபாய மற்றும் இராணுவ தயாரிப்புகளுடன் இலங்கை இணங்க வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி இராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்தார். பொம்பியோவின் வருகை சீனாவிற்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும்.

கொழும்பில், சீனாவிற்கு எதிராக இலங்கை நேரடியாக அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும் என்று பொம்பியோ கோரினார். "[ஒரு] வலுவான, இறையாண்மை கொண்ட இலங்கை, அமெரிக்காவுக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் மூலோபாய பங்காளியாகும்," நாடு "சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டாக" இருக்கக்கூடும், என அவர் கூறினார்.

பூகோள தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, கொழும்பு ஆட்சி சீனாவின் நிதி உதவிகளில் பெருகிய முறையில் தங்கியிருப்பதை அமெரிக்க அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. "மோசமான ஒப்பந்தங்கள், இறையாண்மையை மீறுதல் மற்றும் நிலம் மற்றும் கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளை" மேற்கொள்வதாக பொம்பியோ சீனாவை குற்றம் சாட்டினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு "ஆக்கிரமிப்பாளன்" என்று கண்டித்தார் அவர், அமெரிக்கா இலங்கைக்கு "நண்பராகவும் பங்காளியாகவும்" வந்துள்ளது என்று கூறினார்.

பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த, முந்தைய ஒபாமா நிர்வாகம், சீனாவை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தவும் இராணுவ ரீதியாக சுற்றி வளைக்கவும் வடிவமைக்கப்பட்ட "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை பின்பற்றியது. நிதி உதவி கோருவதில் பெய்ஜிங்குடனான உறவுக்காக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை அது எதிர்த்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ ஆட்சியின் யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்தது. 2009 மே மாதம் முடிவடைந்த யுத்தத்தின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வாஷிங்டன், பின்னர் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பெய்ஜிங்கிலிருந்து விலகிச் செல்லுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமை மீறல்களை பாசாங்குத்தனமாக சுரண்டிக்கொண்டது. இறுதியாக, ஒபாமா வெள்ளை மாளிகையானது புது டில்லியின் ஆதரவோடு, 2015 ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவை வெளியேற்றவும், அவருக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவும் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் 2015 இற்குப் பின்னர் கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்காவுடனான இராணுவ உறவைத் தொடர்ந்தார்.

வாஷிங்டனுடனான இந்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இராஜபக்ஷ பொம்பியோவுடன் உடன்பாட்டுக்கு சென்றதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பைடனுக்கு தனது வாழ்த்துக்களை அனுப்புவதன் மூலம், இராஜபக்ஷ, அமெரிக்கா மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வாழ்த்துக்களில், எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச, "ஜனநாயகம் மற்றும் நீதியின் மதிப்புகளை நிலைநிறுத்த அமெரிக்க மக்களுடன் நின்றதற்காக", பைடன் மீது பாராட்டு மழை பொழிந்தார். "உங்கள் தேர்தல் தளம் உலகிற்கு முற்போக்கான ஜனநாயகம், பன்மைத்துவ தேசபக்தி மற்றும் சமூக சமத்துவம் பற்றிய ஒரு உதாரணத்தை வழங்கியது" என்று அவர் கூறினார். தனது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அந்த இலட்சியங்களை முன்னிலைப்படுத்துவதாக பிரேமதாச கூறினார்.

உண்மையில், கொழும்பில் 2015 அமெரிக்க ஆட்சி மாற்றத்தை பிரேமதாச ஆதரித்தார். சமீப காலம் வரை அவர் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) அரசாங்கங்களில் ஒரு தலைவராக இருந்து, அதன் அடக்குமுறை ஆட்சியையும், புலிகள் மீதான மூன்று தசாப்த கால இரத்தக்களரி போரையும் முன்னெடுத்தார்.

அனைத்து பகட்டான பாராட்டுக்கள் ஒருபுறம் இருக்க, பைடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு பிற்போக்கு பிரதிநிதி ஆவார். அவர் பதவியேற்றால், அதன் நலன்களை ஈவிரக்கமின்றி தொடருவார்.

இவற்றுக்கு சமமாக, இன்னொரு வாஷிங்டன்-சார்பு விசுவாசியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தன், பைடன் மற்றும் ஹாரிஸை வாழ்த்துவதில் ஆர்வமாக இருந்தார். பைடன் "நீதி, சமத்துவம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கரிசனை கொண்டவராகவும் முற்போக்குவாதியாகவும் காணப்படுகிறார்,” என்று நவம்பர் 9 அன்று அவர் வீரகேசரி பத்திரிகைக்கு கூறினார். சம்பந்தன், ஹரிஸின் இந்திய வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் நீதிக்காகவும் குரலற்றவர்களுக்காக போராடுகின்ற ஒருவராகவும் காணப்படுகிறார்" எனத் தெரிவித்ததோடு, "எதிர்காலத்தில் அவர்களைச் சந்திக்க" முயற்சிப்பதாகவும் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை தனது சொந்த நலன்களை முன்னேற்றுவதற்கான நம்பிக்கையில் இந்த வகையான பாராட்டுக்களை வெளியிடுகிறது. இது உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் போலித்தனமான மனித உரிமை பிரச்சாரத்தை ஆதரித்ததுடன் 2015இல் இலங்கையில் வாஷிங்டனின் தலையீட்டோடு முழுமையாக இணைந்திருந்தது. அமெரிக்க மூலோபாய நலன்களுடன் ஒத்துப் போவதில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கான தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவை அது எதிர்பார்க்கின்றது.

2016 இல் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை அமெரிக்கா மற்றும் அதன் இராஜதந்திரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததுடன், அமெரிக்க இராணுவத்துடன் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கான சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது.

எவ்வாறாயினும், நவம்பர் 9 அன்று, கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலிமிரர் பத்திரிகையின் ஒரு ஆசிரியர் தலையங்கம், வாஷிங்டனில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், நாட்டில் தலையிடுவதற்கு இலங்கையில் போர்க்குற்றங்கள் சம்பந்தமான வழிமுறையை அமெரிக்கா மீண்டும் பயன்படுத்துவதைக் காணும் என்பது பற்றி, கொழும்பு ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் மத்தியில் நிலவும் சில பதட்டங்களைக் குறிக்கிறது.

இலங்கைப் போரின்போது, "அமெரிக்கா நாட்டிற்கு ஆயுத விற்பனையை அனுமதித்தது", ஆனால் “’பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பயங்கரவாத அமைப்பின் வெற்றிகரமான தோல்விக்கு வழிவகுத்தபோது, அமெரிக்கா இலங்கைக்கு எதிரான ஒரு கடுமையான கொள்கையை பின்பற்றியது" மற்றும் "போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பத் தொடங்கியது, என்று அந்த தலையங்கம் குறிப்பிட்டது.

அமெரிக்கா சில ஆயுத விற்பனையை மட்டுப்படுத்தியிருந்தாலும், வாஷிங்டன் மற்றும் புதுடில்லியின் தளவாட மற்றும் பிற ஆதரவு இல்லாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என்று மஹிந்த மற்றும் கோடாபய இராஜபக்ஷ ஆகியோர் பலமுறை கூறியுள்ளனர்.

இரத்தக்களரி மோதல் ஒரு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு போராகும். தொழிலாள வர்க்கத்தை தமிழர்-விரோத இனவாத அடிப்படையில் பிரித்து, கொடூரமான இனவாத கொள்கைகளை கொழும்பு பல தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ளது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய சூழ்ச்சிகளை இலங்கை அரசாங்கங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கோருவதற்காக அமெரிக்கா சர்வதேச அளவில் ஆவணப்படுத்தப்பட்ட போர்க்குற்றங்களை சுரண்டிக்கொண்டுள்ளது.

இலங்கை ஆளும் வர்க்கமும் இராணுவமும் தங்களது அட்டூழியங்களுக்கு விலக்களிப்பை எதிர்பார்த்தாலும், "பைடனின் ஜனாதிபதி பதவியில் இலங்கை மீதான அமெரிக்க அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் காண்பது கடினம்," என்று மிரர் எச்சரித்தது,

இந்த பதட்டமான கணிப்பீடுகளுக்கு மத்தியிலேயே, இராஜபக்ஷ ஆட்சி பொம்பியோவுக்கு அளித்த வாக்குறுதிகளின் வழியில், வாஷிங்டனுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாக வாக்குறுதியளித்து வருகிறது.

Loading