இந்தியாவுடனான கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இலங்கை பிரதமர் ஒப்புக் கொண்டார்.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்கி ஒரு இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டங்களுக்கு எதிராக கடந்த மாதம் கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டங்களால் அரசாங்கம் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. தொழிலாளர்களின் நடவடிக்கைகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் முனையத்தை இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்திற்கு மாற்ற விரும்புகின்றன என்று பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ ஒப்புக்கொண்டார்.

ஜூலை 24 அன்று, துறைமுகத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) சார்ந்த தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் உதேனி களுதந்திரி, தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமர் இராஜபக்ஷவை அவரது சொந்த இல்லத்தில் சந்தித்தபோது, அவர் பின்வருமாறு கூறியதாக தெரிவித்தார்: “நிலத்தாங்கி பாரந்தூக்கிகளை இறக்குவதற்கு உங்களை அனுமதிக்க முடியும், ஆனால் [முனையத்தில்] நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக்க முடியாது. நான் மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால் அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் நான் முன்னரே வாங்கிக்கட்டிக்கொண்டேன் (தண்டிக்கப்பட்டுவிட்டேன்). நான் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டேன்.”

முனையத்தில் இரண்டு நிலத்தாங்கி பாரந்தூக்கிகளை பொருத்தி தனியார்மயமாக்கம் செய்யாமல் அரசாங்கத்தின் துறைமுக அதிகாரசபையின் கீழ் இயங்கத் தொடங்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையையே இராஜபக்ஷ இங்கு குறிப்பிடுகிறார்.

கொழும்பு துறைமுக முனையத்தை தனியார்மயமாக்குவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (Photo: WSWS)

களுதந்திரி மேலும் கூறியதாவது: “கடந்த ஆட்சியின் போது, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் [முனையம்] தனியார்மயமாக்கலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். அது இந்தியாவை வெறுப்பூட்டும். இந்தியாவை வெறுப்பூட்டினால் எங்கள் அரசாங்கத்தை நாங்கள் பாதுகாக்க முடியாது.”

இராஜபக்சேவின் “வாங்கிக்கட்டிக்கொண்டேன்” என குறிப்பிடுவது 2015 இல் வாஷிங்டன்-திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையையே ஆகும். இது அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கி, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இந்த அரசியல் நடவடிக்கைக்கு புது தில்லி ஆதரவளித்தது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் கொடூரமான போரையும் அவரது ஜனநாயக விரோத ஆட்சிக்கும் வாஷிங்டன் ஆதரிவளித்த போதிலும், பெய்ஜிங்குடனான அவரது வளர்ந்து வந்த உறவுகளுக்கு விரோதமாக இருந்தது. சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதில் இலங்கையை ஒருங்கிணைக்கவும், பெய்ஜிங்குடனான மோதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றவும் அமெரிக்கா விரும்பியது.

ஆட்சியைப் பிடித்தபின், சிறிசேன விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அவர்கள் ஆரம்பத்தில் அனைத்து சீன திட்டங்களையும் நிறுத்தி, இராணுவத்தை, குறிப்பாக கடற்படையை, அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்துடன் ஒருங்கிணைக்கத் தொடங்கினர். அவர்கள் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு தீவை ஒரு தளவாட மையமாக உருவாக்க முயன்றனர். இந்தியா இலங்கையுடனான தனது இராணுவ மற்றும் அரசியல் உறவுகளையும் மேம்படுத்தியது.

பணப் பற்றாக்குறையை எதிர்கொண்ட சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், பின்னர் கடன்களுக்காக பெய்ஜிங் பக்கம் திரும்பி சீன திட்டங்களை மீண்டும் தொடங்க அனுமதித்த அதே வேளை, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இராணுவ ஒருங்கிணைப்பைத் தொடர்ந்தது. இந்தியாவை வெறுப்பூட்ட முடியாதது குறித்து ஐ.தே.க. தொழிற்சங்கத் தலைவருக்கு விக்ரமசிங்கவின் கருத்து விளக்குகிறது.

இராஜபக்ஷ மற்றும் விக்ரமசிங்க இருவரினதும் கருத்துக்கள், இலங்கையின் முதலாளித்துவ ஸ்தாபனத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணைந்திருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு அடிபணியச் செய்வதை நிரூபிக்கின்றன.

ஜூலை 24, தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் பிரதிநிதியைச் சந்தித்து, முனையம் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை கோரினர். அத்தகைய உத்தரவாதத்தை வழங்க அவர் மறுத்துவிட்டார்.

தனியார்மயமாக்கல் மீதான தொழிலாளர்களின் கோபம் தங்களது கட்டுப்பாட்டை மீறிவிடும் என்று பீதியடைந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், ஜூலை 29 முதல் ஒரு பலவீனமான “சத்தியாகிரக” போராட்டத்தைத் தொடங்கினர். “[முனையம்] தனியார்மயமாக்கப்படாது” என்று மீண்டும் ஜனாதிபதியிடமிருந்து “எழுதப்பட்ட வாக்குறுதியை” கோரி, சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு தேசியவாத இந்திய-விரோத பிரச்சாரமாக திசை திருப்ப முயற்சித்தன.

இருப்பினும், 10,000 தொழிலாளர்கள் ஜூலை 31 அன்று ஒரு வேலைநிறுத்தத்தைத் தொடங்கி, துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து வீதிகளையும் தடுத்து, அதை முற்றிலுமாக முடக்கிவிட்டனர்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, தொழிற்சங்கங்களுடன் பேச மறுத்தது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் போராட்டத்தை ஒரு "தீவிரவாதிகளின் நாசவேலை" என்று தாக்கி, "இதுபோன்ற செயல்களால் என்னை பயமுறுத்த முடியாது" என்று அறிவித்தார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், பிரதமரை மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்து, இந்தியாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர மாட்டோம் என்ற மற்றொரு வெற்று உறுதிமொழியைப் பெற்றனர். மஹிந்த இராஜபக்ஷ ஒரு "வாக்குறுதியை" வழங்கினார், ஆனால் அது ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, வேலைநிறுத்தம் தொடராமல் தடுப்பதற்காகவாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டனர்.

அரசாங்கமும் தொழிற்சங்கங்களும், இந்த வேலைநிறுத்தம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பல தசாப்த கால தாக்குதல்களால் கோபமடைந்துள்ள ஏனைய தொழிலாளர்களின் ஆதரவையும் ஈர்க்கும் என்று பீதியடைந்தன.

ஜனாதிபதி இராஜபக்ஷவின் அச்சுறுத்தல் மற்றும் அவரது சகோதரர் பிரதமரின் சூழ்ச்சிகளுக்கும் பின்னால், மூலோபாய கொழும்பு துறைமுகத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெற விரும்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தமே உள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும், தாம் ஒரு புவிசார் மூலோபாய கண்ணிவெடியின் மீது நிற்கிறார்கள் என்பதை நன்கு அறிவார்கள், அதனால் அவர்கள் வாஷிங்டன் மற்றும் புது தில்லியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய ஆட்சி, 2012 இல் கொழும்பு தெற்கு துறைமுகத்தை நிர்மாணிக்கவும் இயக்கவும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்சுக்கு (சி.எம்.பி.எச்) அனுமதி கொடுத்தது. சீன நிறுவனமானது ஹம்பாந்தொட்ட துறைமுகத்தையும், அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்தள விமான நிலையத்தையும் கட்டியது. 2016 இல், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், முழு ஹம்பந்தொட்ட துறைமுகத்தையும் சி.எம்.பி.எச். இற்கு வாடகைக்கு விட்டது. தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய அமெரிக்காவும் இந்தியாவும், துறைமுகத்தைக் கைப்பற்ற சீனா ஒரு "கடன் பொறியை" உருவாக்கியதாக குற்றம் சாட்டின.

முனையத்திற்கான இந்திய நிறுவனத்தின் முயற்சி, வெறுமனே அதிலிருந்து இலாபத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது இந்த பிரதான துறைமுகத்தின் மீதான இந்தியாவின் பிடியை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கிய "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் வழியில் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலின் மற்றொரு படியாகும்,

கோவிட்-19 தொற்றுநோயால் உலக முதலாளித்துவ நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளார். சீனாவுக்கு எதிராக ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஆசிய-பசிபிக் நாற்கர (குவாட்) கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர எல்லை மோதல்களிலும் வாஷிங்டன் இந்தியாவை ஆதரித்தது.

கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டமானது, அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஆயுதம் கொண்ட சீனாவுக்கு எதிரான மூலோபாய மற்றும் இராணுவ நடவடிக்கைகளுடன் இலங்கை பிணைக்கப்பட வேண்டும் என விரும்புவதை வெளிப்படுத்தியிருப்பதோடு, ஒரு பேரழிவுகரமான போரின் அபாயத்தில் இலங்கை தீவு சிக்கிக் கொள்ளும் ஆபத்தையும் குறிக்கின்றது.

Loading