பைடெனின் பொருளாதார அணி: நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடென் ஏறத்தாழ முற்றிலுமாக பிரதான நிதியியல் அமைப்புகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதிய அமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட மந்திரிசபையின் இரண்டாவது பெரிய குழுவையும், அவரின் பொருளாதார அணியின் பெரும்பான்மையினர் உள்ளடங்கலாக, வெள்ளை மாளிகை நியமனங்களையும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் அறிவித்தார்.

மிக முக்கிய பதவி நியமனம், முன்னாள் பெடரல் ரிசர்வ் ஆணைய தலைவர் ஜெனட் யெலென் நிதித்துறை செயலராக ஆகக்கூடும் என்று கடந்த வாரம் பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. 2010 இல் இருந்து 2014 வரையில் யெலென் பெடரலின் துணை தலைவராக இருந்தார், பின்னர் 2014 இல் இருந்து 2018 வரையில் அவர் தலைவராக இருந்தார், இதன் அர்த்தம் ஒபாமா நிர்வாகத்தில் பெரும்பாலான பொருளாதார கொள்கையில் அவர் பிரதான பாத்திரம் வகித்தார், இந்த காலகட்டம் அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு காலத்தையும் விட செல்வ வளத்தை வறியவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வந்தர்களுக்கு மிகப் பெரியளவில் கைமாற்றுவதைக் கண்டது.

பெடரலில் அவர் பதவியிலிருந்த காலம் நெடுகிலும், யெலென் "பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும்" கொள்கையுடன் அடையாளம் காணப்பட்டார், இதில் மத்திய வங்கி மிகத் திறமையாக பணத்தை மட்டுப்பாடின்றி நிதியியல் சந்தைகளுக்குக் கிடைக்க செய்தது. வேலைகளை உருவாக்கவும், கல்வி மற்றும் ஏனைய சமூக சேவைகளைத் தாங்கிப் பிடிக்கவும், வறுமை ஒழிக்கவும், அல்லது ஏனைய பிற முற்போக்கான சமூக நோக்கங்களைப் பூர்த்தி செய்யவும் பணம் இல்லை என்று வெள்ளை மாளிகையும், காங்கிரஸ் சபை மற்றும் ஊடகங்களும் வலியுறுத்தி வந்த அதேவேளையில் தான் இந்த கொள்கை பின்தொடரப்பட்டது.

நிதித்துறையில் அவரின் உயர்மட்ட துணை தலைவராக Adewale Adeyemo இருப்பார், உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டார், ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமாக உருவெடுத்த பிளாக்ராக் (BlackRock) இன் மூத்த ஆலோசகராக இருந்த இவர் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஒரு முன்னாள் உதவியாளர் ஆவார். 2019 இல், சிகாகோவில் Obama Foundation அமைப்புக்கு தலைமை ஏற்பதற்காக Adeyemo பிளாக்ராக் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

பைடென் நிர்வாகத்தில் உயர்மட்ட பொருளாதார பதவிகளுக்குப் பெயரிடப்பட்ட இரண்டு பிளாக்ராக் அதிகாரிகளில் Adeyemo உம் ஒருவராவார், மற்றொருவர் ஒபாமாவின் முன்னாள் உதவியாளராக இருந்து முதலீட்டு வங்கியாளராக மாறிய பிரைன் டீசன் வெள்ளை மாளிகை பொருளாதார கொள்கை வகுக்கும் உயர்மட்ட பதவியான தேசிய பொருளாதார கவுன்சில் தலைவராக ஆக உள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

நீரா டான்டன் 2016 (Wikimedia Commons)

நிர்வாகம் மற்றும் வரவு-செலவுத் திட்டக்கணக்கு அலுவலக இயக்குனரைப் பொறுத்த வரையில், பைடென் ஒரு பிரதான ஜனநாயகக் கட்சி சிந்தனைக் குழாமான அமெரிக்க முன்னேற்ற மையத்தின் (Center for American Progress - CAP) தற்போதைய தலைமை செயலதிகாரி நீரா டான்டனை நியமித்தார், இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அனேகமாக பைடென் இடைக்கால பதவியேற்பு குழுவின் இதுவரையில் இல்லாத மிகவும் அப்பட்டமான முடிவாக உள்ளது.

தாராளவாதம் மற்றும் "முற்போக்கு" அரசியல் மொழியைப் பயன்படுத்தியவாறு அமெரிக்க ஏகாதிபத்திய பாதுகாப்பு மற்றும் வலதுசாரி சமூக கொள்கைகளை ஊக்குவிப்பதில் டான்டன் வகித்த பாத்திரம் குறித்து ஒரு புத்தகமே எழுதலாம்.

டான்டன், ஜனநாயகக் கட்சியின் 2016 ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக உரக்க பேசிய ஓர் ஆதரவாளர் ஆவார். கிளிண்டனுக்குத் தலையாய போட்டியாளராக இருந்த பேர்ணி சாண்டர்ஸிற்கு எதிராக அவர் நடத்திய தாக்குதல்களுக்காக டான்டன் இழிபெயரெடுத்தவர், 2020 பிரச்சாரத்தில் அவர் பைடெனுடன் அணி சேர்ந்த போதும் அது தொடர்ந்தது.

ஊடகங்கள் அமெரிக்க முன்னேற்ற மையத்தை (CAP) "இடதுசாரி" சிந்தனை குழாமாக குணாம்சப்படுத்திய போதினும், டான்டன் ஒபாமா வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த போது வடிவமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ,கட்டுபடியாகிற மருத்துவக் கவனிப்பு சட்டம் போன்ற ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களினது வலதுசாரி சந்தை சார்பு கொள்கைகளைத் தயாரித்து நிறைவேற்றுவதில் அந்த மையம் முக்கிய செயல்பாடுகளைச் செய்துள்ளது.

சலுகைகளில் உயர்வு என்பது, சொல்லப் போனால் வயதானவர்களுக்கான நிஜமான வாழ்க்கை செலவு அதிகரிப்பை விட இந்த அதிகரிப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதால், இது நிஜமான அர்த்தத்தில் வெட்டுக்களே என்றாலும் இதை குறைப்பதற்காக கட்டமைக்கப்பட்ட நுகர்வு விலை குறியீட்டின் (CPI) ஒரு வடிவமான "சங்கிலி-தொடர் CPI” (chained-CPI) என்றழைக்கப்பட்ட ஒன்றின் மூலமாக சமூக பாதுகாப்பு தொகைகள் உயர்த்தப்படுவதைக் கணக்கிடுவதற்காக, காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினருடனான வரவு-செலவு திட்டக்கணக்கு பேச்சுவார்த்தைகளின் போது, ஒபாமா வழங்கிய ஒரு முன்மொழிவை CAP ஆமோதித்திருந்தது.

அந்த நேரத்தில் பேர்ணி சாண்டர்ஸ் சங்கிலி-தொடர் நுகர்வு விலை குறியீட்டை எதிர்த்தார் என்றாலும், டான்டன் அதை பின்னோக்கிய உயர்வுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஒப்புக்கொண்டாலும், குடியரசுக் கட்சியினருடன் வரவு-செலவுத் திட்டக்கணக்கு "விட்டுக்கொடுப்பில்" ஒரு அவசியமான அம்சம் என்பதால், அதை தொடர்ந்து ஆதரித்தார். செனட் குடியரசுக் கட்சி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் மற்றும் ஏனைய காங்கிரஸ் சபை பிற்போக்குவாதிகளுடன் "பொதுவான அடித்தளத்தை" காண முடியும் என்று ஜோ பைடென் வாதிட்டபோது, துல்லியமாக இந்த நிலைப்பாடு தான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் ஜோ பைடென் அறிவுறுத்திய தோரணையாக உள்ளது.

“மருத்துவக் கவனிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு திட்டமிட்ட அணுகுமுறை" என்ற தலைப்பின் கீழ், மருத்துவத்திற்கான புதிய இங்கிலாந்து ஆய்விதழில் 2012 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பிரபல கட்டுரைக்கும் அவர் துணை ஆசிரியராக இருந்தார், அது பெருநிறுவனங்களுக்கும் அரசுக்கும் இரண்டுக்கும் மருத்துவக் கவனிப்பு செலவைக் கணிசமாக குறைக்கும் அடித்தளத்தில் ஒபாமாகேர் திட்டத்தை பாதுகாத்தது. சிகாகோவின் முன்னாள் நகரசபை தலைவரின் சகோதரரும் ஒபாமாவின் உதவியாளரும், வயதானவர்களின் ஆயுள்காலத்திற்காக செலவிடப்படும் மருத்துவக் கவனிப்பு செலவைக் குறைப்பதற்கான ஒரு முன்னணி பொது ஆலோசகருமான டாக்டர் Ezekiel Emanuel அக்கட்டுரையின் பிரதான எழுத்தாளராக இருந்தார்.

ஒபாமா வெள்ளை மாளிகையில் உள்நாட்டு கொள்கை தான் அப்பெண்மணியின் பிடியில் இருந்தது என்றாலும், வெளியுறவுத்துறை செயலராகவும் பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்து ஹிலாரி கிளிண்டன் தழுவிய ஆக்ரோஷமான வெளிநாட்டு தலையீட்டு வகையை ஆதரிப்பதில் CAP இல் இருந்து டான்டன் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்.

“அமெரிக்காவினால் தாக்கப்பட்ட நாடுகள் படையெடுப்புகளுக்காக திருப்பி செலுத்துகின்றன என்பதை அமெரிக்கர்கள் கண்டால் மட்டுமே அவர்கள் எதிர்கால போர்களை ஆதரிப்பார்கள் என்ற அடித்தளத்தில், லிபியா மீதான குண்டுவீச்சுக்காக ஏற்பட்ட செலவுகளை அமெரிக்காவுக்குத் திருப்பி செலுத்துவதற்காக லிபியர்கள் அவர்களின் எண்ணெய் வருவாய்களில் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கு வழங்க நிர்பந்திக்கப்பட வேண்டும்,” என்று, லிபியா மீதான 2011 அமெரிக்க-நேட்டோ தாக்குதலின் போது, டான்டன் வாதிட்டதாக பத்திரிகையாளர் க்ளீன் கிரீன்வால்ட் குறிப்பிட்டார். இது சிரியா மற்றும் ஈராக் சம்பந்தமாக டொனால்ட் ட்ரம்ப் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது.

சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆதரித்த அடிப்படைவாத சக்திகளின் துணை அமைப்பான இஸ்லாமிக் அரசை (ISIS) எதிர்த்து போராடும் சாக்குப்போக்கில், ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவரீதியில் தலையிடுவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் முடிவை ஆதரித்து, 2014 இல், CAP ஓர் அறிக்கை வெளியிட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை ஆய்வுகளுக்கு நிதி வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் இருந்து CAP 2.5 மில்லியன் டாலர் பெற்றிருந்ததாக கடந்தாண்டு நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது.

2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிலாரி கிளிண்டனுக்கு சேதமேற்படுத்தும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்த பின்னர் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை "பாசிச சார்பு அரசு, ரஷ்யாவின் முகவர்" என்று குறிப்பிட்டும், “ட்ரம்ப் தேர்வானதற்கு அவரே மத்திய காரணம்" என்று முத்திரைக் குத்தியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்துடனும் டான்டன் பகிரங்கமாக தொடர்புபட்டுள்ளார். டான்டனின் சொந்த சாண்டர்ஸ் விரோத கருத்துக்கள் விக்கிலீக்ஸ் பிரசுரித்த மின்னஞ்சல்களில் உள்ளடங்கி இருந்தன.

பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் மூன்று உறுப்பினர்களில், தலைவராக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சிசிலியா ரோஸ் இருப்பார், இவருடன் நீண்டகால பைடென் ஆலோசகரும் தொழிலாளர்-சார் பொருளாதார நிபுணருமான ஜாரெட் பேர்ன்ஸ்டீன் மற்றும் ஒரு தாராளவாத ஆலோசனை குழுவான சம வளர்ச்சிக்கான வாஷிங்டன் அமைப்புக்குத் தற்போது தலைமை வகிக்கும் ஹீதர் பவுஸ்சே ஆகியோர் இணைந்து கொண்டனர்.

திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட ஆறு பொருளாதார பதவிகளில் நான்கு பேர் பெண்கள், இரண்டு பேர் ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ரௌசி மற்றும் அடெயெமோ) மற்றும் ஒரு இந்திய-அமெரிக்கர் (டான்டன்). இது, பைடென் முகாம் மற்றும் ஊடகங்களால் “அமெரிக்காவைப் போல தெரியும்" ஒரு மந்திரிசபை என்று இடைவிடாது கொண்டாடப்படுகின்ற அதேவேளையில், யதார்த்தம் என்னவென்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பலரும் பல கோடி மில்லியனர்கள். அனைவரும் முதலாளித்துவ அமைப்புமுறையின் வெறித்தனமான பாதுகாவலர்கள் என்பதோடு, மிகப்பெரும் பெருநிறுவனங்கள், வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்களின் மற்றும் அமெரிக்காவினது பொருளாதார ஆதாரவளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சில நூறு பில்லியனர்களின் "வலதாக" இருப்பவர்கள்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பைடென் அவரது ஏழு உறுப்பினர் மக்கள்தொடர்பு குழுவைப் பெயரிட்ட போது, அவர்கள் அனைவரும் பெண்கள் என்பதோடு, அவர்களில் மூவர் கருப்பினத்தவர் ஒருவர் இலத்தீனோ என்பதன் மீதே ஊடக செய்திகள் பிரதானமாக ஒருமுனைப்பட்டிருந்தன. அண்மித்து அனைவருமே ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளாக இருந்தவர்கள், இதன் அர்த்தம் ஏற்கனவே அவர்கள் லிபியா, சிரியா, யேமன் மீதான டிரோன் ஏவுகணை படுகொலைகள், சட்டவிரோத போர்கள் குறித்தும், அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தின் உலகளாவிய உளவுபார்ப்பு குறித்தும், வாஷிங்டனின் ஏனைய குற்றங்கள் மற்றும் தீச்செயல்கள் குறித்தும் அமெரிக்க மக்களிடமும் உலக மக்களிடமும் பொய்யுரைப்பதில் நிறையவே பயிற்சி கொண்டவர்களாக உள்ளனர்.

முன்னதாக Move-on அமைப்பில் இருந்த கரின் ஜோன்-பியர், 2016 இல் பேர்ணி சாண்டர்ஸூடன் செயல்பட்ட சைமன் சாண்டர்ஸ், தாராளவாத புலம்பெயர்ந்தோர் சீர்திருத்த குழுவான America’s Voice இன் பிலர் தோபர் ஆகியோர் உள்ளடங்கலாக அதிக தாராளவாத அணியிலிருந்து நபர்களை ஒருங்கிணைத்திருப்பதே மக்கள்தொடர்பு நியமனங்களின் பிரதான முக்கியத்துவமாக உள்ளது. இவர்கள் அனைவருமே முற்றிலுமாக பெருவணிக நலன்களுக்குச் சேவையாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிர்வாகத்திற்குச் சேவையாற்ற ஜனநாயகக் கட்சியின் "பெருநிறுவன விரோத" அணி என்பதிலிருந்து சுமூகமாக உள்நகர்ந்துள்ளனர்.

Loading