2020 தேர்தல் முடிவை மறுத்தளிக்கும் முடிவை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

Trump escalates defiance of the 2020 election outcome

2020 தேர்தல் முடிவை மறுத்தளிக்கும் முடிவை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

Patrick Martin

https://www.wsws.org/en/articles/2020/11/10/elec-n10.html

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை பல தொடர்ச்சியான நடவடிக்கைகளில், ஜனாதிபதி ட்ரம்பும் அவரின் நெருக்கமான கூட்டாளிகளும் மற்றும் அரசியல் ஒத்துழைப்பாளர்களும் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கான அமெரிக்க மக்கள் வாக்குகளை அவர்கள் ஏற்கவில்லை என்பதையும், வெற்றி பெற்றிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடென் ஜனவரி 20 இல் பதவியேற்பதைத் தடுக்க அவர்கள் சக்திக்குட்பட்டு எதையும் அவர்கள் செய்யவிருப்பதையும் எடுத்துக்காட்டினர்.

அமெரிக்க நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை துருப்புகளைப் பயன்படுத்தி ஒடுக்குவதை பாதுகாப்புத்துறை செயலர் எஸ்பர் எதிர்த்தார் என்பதற்காக திங்களன்று மதியம் ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் எஸ்பரைப் பணியிலிருந்து நீக்கினார்—"தோல்வியடைந்து வரும்" ட்ரம்ப், எஸ்பருக்கு அடுத்த பென்டகன் தலைவரைக் கொண்டு அதை சீர் செய்ய கருதுகிறார்.

மத்திய அரசின் சரக்கு பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பைக் கையாளும் பொதுச் சேவை நிர்வாகத்தின் (GSA) ட்ரம்ப் நியமன தலைவர் கூறுகையில், பைடெனின் வரவிருக்கும் ஆட்சிக் குழுவுக்கு அவசியப்படும் சட்டபூர்வ உதவியை அவர் தேர்தல் முடிவு தெரியும் வரையில் முன்னெடுக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

அவரிடமிருந்து தேர்தல் களவாடப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறும் பொய் வாதங்களுக்குப் பின்னால் நீதித்துறையை நடைமுறையளவில் அணித்திரட்டும் விதத்தில், வாக்கு மோசடி “மத்திய அரசு தேர்தலின் முடிவைப் பாதிக்கும் சாத்தியக்கூறு" இருந்தால் அதன் மீது விசாரணைகள் நடத்துமாறு அனைத்து அமெரிக்க அரசு வழக்குரைஞர்களுக்கும் அனுமதி வழங்கி தலைமை அரசு வழக்குரைஞர் வில்லியம் பார் (William Barr) ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

செனட் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் (Mitch McConnell) 2020 தேர்தல் குறித்து அவரின் முதல் பகிரங்க கருத்துக்கள் வழங்கிய அதேநாள் மதியம் பார் அவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சந்திப்பு நடத்தினார். அவர் செனட் தளத்திலிருந்து பேசிய மெக்கொன்னல், பைடென் ஜெயித்த அரை டஜன் மாநிலங்களில் விதிமீறல்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதன் மீது சட்டவழக்குகள் தாக்கல் செய்யும் ட்ரம்பின் "உரிமையை" தாங்கிப் பிடித்தார்.

Senate Majority Leader Mitch McConnell of Ky., talks with reporters after he spoke on the Senate floor Monday, Nov. 9, 2020, at the Capitol in Washington [Credit: AP Photo/Susan Walsh]

இதற்கிடையே ட்ரம்ப் ட்வீட்டரில், ஜோர்ஜியா, அரிசோனா மற்றும் நெவாடாவில் போல மாநில குடியரசுக் கட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்த தேர்தல்களும் மற்றும் விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவில் போல பிரதானமாக உள்ளாட்சி குடியரசுக் கட்சி அதிகாரிகளால் நடத்தப்பட்ட வாக்கு சரிபார்ப்பும் பைடெனுக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் சாதகமாக மோசடி செய்யப்பட்டதாக ஆதாரமற்ற வாதங்களை முன்வைத்து, தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக பல்வேறு கண்டனங்களை முன்வைத்தார்.

எஸ்பரைப் பணியிலிருந்து நீக்கியது மிகவும் அச்சுறுத்தலான நடவடிக்கையாக உள்ளது, Military Times இல் பென்டகன் தலைவர் ஒரு பேட்டி அளித்து வெறும் ஒரு சில நாட்களில் இது நடந்துள்ளது, அப்பேட்டியில் அவர் கடந்த ஜூனில் பரவலாக நன்கு அறியப்பட்டிருந்த ட்ரம்புடனான அவரின் சர்ச்சையை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது ஜனாதிபதி, ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்குப் பின்னர் பொலிஸ் வன்முறைக்கு எதிரான மில்லியன் கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக, கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி பணியிலுள்ள மத்திய அரசு துருப்புகளை நிலைநிறுத்த அச்சுறுத்தி இருந்தார்.

இதுபோன்றவொரு பகிரங்கமான ஒடுக்குமுறை தலையீடுக்குப் போதுமானளவுக்கு தயாரிப்பு இல்லை என்பதாலும், அது அமெரிக்க மக்களின் பார்வையில் இராணுவத்தை மதிப்பிழக்கச் செய்யலாம் என்ற கவலையினாலும், முப்படைகளின் தலைமை தளபதிகள் மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளிடம் இருந்து வந்த அழுத்தத்திற்கு விடையிறுத்து, ட்ரம்ப் தற்காலிகமாக அதிலிருந்து பின்வாங்கினார். ஆனால் தெளிவாக பைடென் வெற்றி பெற்றுள்ள நவம்பர் 3 தேர்தல் முடிவுகளை இராணுவப் படைகளைப் பயன்படுத்தி மட்டுமே அவரால் மாற்ற முடியும் என்பதை அவர் தெளிவாக அறிந்துள்ளார்.

எஸ்பர் இந்த விடயத்தை நேரடியாக விவாதிக்கவில்லை என்றாலும், அவர் இராஜினாமா கடிதம் தயாரித்து வைத்திருந்ததாகவும், அடுத்து எதுவும் நடக்கலாம் என்ற கவலையில் பின்னர் அதை அனுப்ப வேண்டாமென முடிவெடுத்ததாகவும் Military Times க்கு அவர் தெரிவித்தார். “எனக்குப் பின்னால் யார் வரவிருக்கிறார்கள்?” என்று வினவிய அவர், “அது நிஜமாக ஒரு 'கீழ்படிந்தவராக' இருப்பார். அதற்கடுத்து கடவுள் நமக்கு உதவுவார்,” என்றார்.

தேர்தல் முடிவுகளை மறுக்கும் ஜனாதிபதியின் ஒரு முயற்சியைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமின்றி ஏற்படக்கூடிய பாரிய அமைதியின்மையைக் கையாள அமெரிக்க நகரங்களுக்குள் துருப்புகளை நிலைநிறுத்த தலையாட்டும் ஒரு பென்டகன் தலைவரை ட்ரம்ப் விரும்புகிறார் என்பதே எஸ்பரைப் பணியிலிருந்து நீக்கியதன் மறுக்கவியலாத உள்நோக்கமாக உள்ளது.

எஸ்பரைப் பிரதியீடு செய்து பென்டகனுக்கு "இடைக்கால" தலைவராக இருக்க, தேசிய பயங்கரவாத-தடுப்பு மையத்தின் (NCTC) இயக்குனர் கிறிஸ்தோபர் மில்லரை ட்ரம்ப் பெயரிட்டார். சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரியாக 31 ஆண்டுகால தொழில் வாழ்க்கைக்குப் பின்னர் மில்லர் 2014 இல் ஓய்வூ பெற்றார். ஜோன் போல்டன் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும், பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றிய பின்னர், அவர் 2018 இல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) வெள்ளை மாளிகையில் இணைந்தார்.

செப்டம்பர் 2019 இல் மில்லர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் உடனடியாக, ISIS தலைவர் அபு பக்ர் அல்-பாக்தாதி படுகொலை செய்யப்பட்ட சிறப்பு படை நடவடிக்கையின் போது பென்டகனுக்கு NSC தொடர்பு அதிகாரியாக மில்லர் ட்ரம்பின் கவனத்திற்கு வந்தார். அதற்குப் பின்னர் ட்ரம்பால் NCTC தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, மில்லர் பென்டகனில் பயங்கரவாத தடுப்பு பதவிக்கு நகர்த்தப்பட்டிருந்தார்.

ஒரெகான் போர்ட்லாந்தில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஒடுக்க உதவியாக, NCTC அமெரிக்க பிரஜைகளின் விபரங்களை FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு அனுப்புவதை அவர் தடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி விளக்கவுரையில் மில்லர் கூறியிருந்தார் என்பதற்காக, குறைந்தபட்சம் ஒரேயொரு செனட்டர், ஒரெகானின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரொன் வைடென், மில்லரின் நியமனத்திற்கு ஆட்சேபணைகள் எழுப்பினார்.

ட்ரம்ப் மீண்டும் மீண்டும் போர்ட்லாந்து போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று கண்டித்ததுடன், அந்நகருக்குள் மத்திய துணை இராணுவப் படைகளை அனுப்பினார். பெயர்-வாக்கெடுப்பு நடத்தவும் கூட போதுமானளவுக்குப் பலமாக ஜனநாயகக் கட்சியினர் விரும்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில், ஒரு வாய்மொழி வாக்கெடுப்பில் ஆகஸ்ட் 6 இல் செனட்டால் மில்லர் உறுதி செய்யப்பட்டார்.

பைடெனின் ஆட்சிக்கு வரவிருக்கும் குழுவுடன் உத்தியோகபூர்வமாக ஒத்துழைக்க தொடங்க முடியாதென்ற GSA நிர்வாகி எமிலி முர்பியின் முடிவு அரசியல்ரீதியிலும் நடைமுறைரீதியிலும் இரண்டு விதத்திலும் முக்கியத்துவம் கொண்டது. பிரதான தொலைக்காட்சி வலையமைப்புகள் மற்றும் ஏனைய செய்தி அமைப்புகளால் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட உடனேயே GSA நிர்வாகம் தொடர்பு முயற்சிகளைத் தொடங்கும் பாரம்பரிய நடைமுறை இருந்தாலும் கூட, முர்பியின் பெண் செய்தி தொடர்பாளர் ராய்டர்ஸிற்குக் கூறுகையில் "வெற்றியாளர் தெளிவாகும்" வரையில் அவர் காத்திருப்பதாக தெரிவித்தார்.

பைடெனின் வெற்றி "மிகப்பெரும் பெருநிறுவனங்களால்" மக்கள் விருப்பத்தின் மீது திணிக்கப்பட்டிருந்தாலும், அசோசியேடெட் பிரஸ், CNN, ABC, NBC, CBS, Fox News, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றால் அது சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதை ட்ரம்பும் அவரின் காங்கிரஸ் சபை ஆதரவாளர்களும் உணர்ச்சிகரமாக எதிர்த்தனர், ஆனால் அதேசமயம் 2016 தேர்தலில் தேர்தல்கள் முடிந்த பின்னர் காலையில் இதே அமைப்புகள் ட்ரம்பை வெற்றியாளர் என்று அழைத்த போது அவர் இதுபோன்ற ஆட்சேபணைகளைக் கூறவில்லை.

தபால் வாக்குகள், குறிப்பாக வெளிநாட்டு வாக்குகளும் இராணுவத்தினர் வாக்குகளும், தாமதமாக வந்தடையும் என்பதுடன், மறுதொகுப்பு செய்வதற்கும் மறுஎண்ணிக்கை செய்வதற்கும் ஆணையிட வேண்டிய கடுமையாக போட்டி நிலவும் மாநிலங்களில் அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் எடுக்கும் என்கின்ற நிலையில், கொலம்பியா மாவட்டம் மற்றும் 50 மாநிலங்களின் அதிகாரிகள் தேர்தல் முடிவுகள் மீது உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம் என்பதால், அதுவரையில் புதிய நிர்வாகத்திற்குக் கைமாற்றிக் கொடுக்கும் நடைமுறையைத் தாமதப்படுத்துவது என்பது முன்நிகழ்ந்திராததாக இருக்கும்.

போட்டி ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேர்வுக்குழு வாக்குகளை இட தேர்வுக் குழு டிசம்பர் 14 வரையில் கூடாது. சில மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வலதுசாரி பண்டிதர்களும் குறிப்பிட்டதைப் போல, வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் ஆதரவு வேட்பாளர்களை விட ட்ரம்ப் ஆதரவு போட்டியாளர்களைத் திணிப்பதற்காக விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜியா மற்றும் அரிசோனாவில் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்ற பிரதிநிதிகள் குறுக்கீடு செய்து முயற்சித்தால், இந்த நிகழ்வுபோக்கும் தொந்தரவுக்கு உள்ளாகலாம்.

விஸ்கான்சின் சட்டமன்ற சபாநாயகர் ரோபின் வொஸ், “வாக்காளர் மோசடி மற்றும் தபால் வாக்குகள் குவிப்பு மீது கவலைகள் மேலெழுந்திருப்பதாக" குறிப்பிட்டு, தேர்தலைப் பரந்த முறையில் புலனாய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்—இம்மாநிலத்தில் ட்ரம்ப் 20,000 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பென்சில்வேனியாவில், ஏற்கனவே அங்கே ட்ரம்ப்-ஆதரவு வேட்பாளர்களை எவ்வாறு நியமிப்பது குறித்து குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விவாதம் நடந்துள்ளது.

அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் பார் எழுதிய ஒரு கடிதம், “விதிமுறைமீறல் மீது வெளிப்படையாக நம்பத்தகுந்த மற்றும் தெளிவான குற்றச்சாட்டுக்கள் இருந்தால்" விசாரிக்குமாறு மத்திய அரசுத்துறை வழக்குதொடுநர்களுக்கு அதிகாரம் வழங்குகிறது. தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் பகிரங்கமாக மறுக்கும் உள்ளடக்கத்தில் பார்த்தால், இந்த வழிகாட்டுதல் நீதித்துறை ஆதாரவளங்கள் சுதந்திரமாக ட்ரம்ப் நிர்வாகத்திற்குக் கிடைக்க செய்வதற்கு ஒப்பாக உள்ளது. தேர்தல் முடிவுகளை மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் வரையில் தேர்தல் சம்பந்தமான வழக்குகளில் மத்திய அரசு வழக்குதொடுநர்கள் தங்களைச் சம்பந்தப்படுத்த கூடாது என்ற நீண்டகால கொள்கையையும் இது மீறுகிறது.

பைடென் ஆதரவு ஊடகங்களின் தகவல்படி, செனட் சபையின் பெரும்பான்மையினர் அணித் தலைவர் மெக்கொன்னல் அவரின் தேர்தல் அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியும், முன்னாள் செனட்டருமான அவரின் “நண்பர்" என்று கூறப்படுவரைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை. மெக்கொன்னலின் சுருக்கமான உரை, வாக்கு மோசடி அல்லது தேர்தல் எண்ணிக்கை முடக்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது எந்த குறிப்பும் வழங்கவில்லை.

ஆனால் செனட் சபையின் ஏனைய குடியரசுக் கட்சியினர் பெரிதும் குறைவாகவே கட்டுப்பாட்டுடன் இருந்தனர். தெற்கு கரோலினாவின் லிண்ட்சி கிரஹாம், Fox News இல் தோன்றி, மிச்சிகனில் குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர் ஜோன் ஜேம்ஸூம் தோல்வியை ஏற்க மறுக்க வேண்டுமென கோரினார். “குடியரசுக் கட்சியினர் அமெரிக்க தேர்தல் முறையைச் சவால்விடுத்து மாற்றாவிட்டால், அங்கே மீண்டும் ஒருபோதும் மற்றொரு குடியரசுக் கட்சி ஜனாதிபதி வர முடியாது,” என்றார்.

ட்ரம்பின் ஒரு சட்ட ஆலோசகர், கடந்த வாரம் Fox News க்கு கூறுகையில், “உள்நுழைந்து ஏதேனும் செய்வதற்கு, நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்காக காத்திருக்கிறோம் —இதில்த்தான் ஜனாதிபதி மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளார். நம்பத்தகுந்த முறையில் அமி கொனெ பாரெட் தலையிடக்கூடும்,” என்று கூறி, மாநில சட்டவழக்குகளுக்கு பின்னால் நடந்து வரும் மூலோபாயத்தை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸ் சபையிலுள்ள அல்லது உள்ளாட்சிகளில் உள்ள வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய குடியரசுக் கட்சியினர் மட்டுமே ட்ரம்பின் தோல்வியையும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடெனின் வெற்றியையும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் பலம் மிகுந்த மேரிலாந்து, வேர்மாண்ட் மற்றும் மாசசூசெட்ஸ் ஆகிய மாநிலங்களில் மூன்று ஆளுநர்களும், 53 செனட் குடியரசுக் கட்சியினரில் நான்கு பேரும், பிரதிநிதிகள் சபையில் அண்மித்து 200 உறுப்பினர்களில் வெளியேறவிருக்கும் நான்கு உறுப்பினர்கள் உட்பட வெறும் டஜன் கணக்கானவர்களும் மட்டும் இதில் உள்ளடங்குவர்.

இத்தகைய எல்லா பிற்போக்குத்தனமான தந்திரங்களிலும், இரண்டு தரப்பிலும் விரக்தி மற்றும் மூளைக் குழப்பத்தின் அம்சங்கள் உள்ளன. குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையினர், பைடென்-ஹரீஸ் வேட்பாளர்களுக்கு 75 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ள ஒரு தேர்தலின் முடிவுகளை மறுக்கும் ஓர் அரசியல் போக்கைத் தொடங்கி உள்ளனர். ஜனநாயகக் கட்சி இதுபோன்றவொரு அரசியல் சதிக்கு அடிபணியலாம் என்றாலும், ஒட்டுமொத்தமாக அமெரிக்க மக்களும் ஜனாதிபதி பதவியை உரிமையின்றி கைப்பற்றுவதை எந்தவித எதிர்வினையுமின்றி ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. பாரிய ஒடுக்குமுறை மற்றும் வன்முறை அணுகுமுறைகள் மூலமாக மட்டுமே ட்ரம்ப் அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும்.

வெள்ளை மாளிகை சூழ்நிலையே முற்றுகையிடப்பட்ட கோட்டைக்கு நிகராக தெரிகிறது. பெயர் வெளியிட விரும்பாத CNN க்கு பேசிய ஒரு அதிகாரியின் தகவல்படி, “வெள்ளை மாளிகை ஜனாதிபதியின் தனிநபர் அலுவலகத்தின் இயக்குனர் ஜோன் மெக்என்டெ, யாரேனும் வேறு வேலை தேடுவதாக தெரிய வந்தால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற வார்த்தைகளை நிர்வாகம் எங்கிலும் பரப்பி வருகிறார்.” கோவிட்-19 இன் மூன்றாம் அலையானது, தலைமைத் தளபதி மார்க் மீடொவ்ஸ், வீட்டுவசதி மற்றும் நகர்புற அபிவிருத்தித்துறை செயலர் பென் கார்சன், மற்றும் உயர்மட்ட ட்ரம்ப் பிரச்சாரக் குழுவின் ஆலோசகர் டேவிட் போஸ் ஆகியோரைத் தாக்கி உள்ளதாலும் நிர்வாகம் அதிர்ந்து போயுள்ளது.

Loading