அரச வழக்குத்தொடுனரின் அறிக்கை:

மிச்சிகன் சதிகாரர்கள் தலைநகரைத் தாக்கவும், மரணதண்டனையை நேரடியாக ஒளிபரப்பவும், சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பூட்டி கட்டிடத்தை எரிக்கவும் திட்டமிட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மிச்சிகன் அரச வழக்குத்தொடுனர் டானா நெசெல் சமீபத்தில் தாக்கல் செய்த ஒரு சட்ட அறிக்கையின்படி, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்ய சதி செய்ததற்காக அக்டோபரில் கைது செய்யப்பட்ட பதினான்கு ஆயுததாரிகளும் தலைநகரை தாக்கவும், பணயக்கைதிகளை பிடிக்கவும், ஒரு பயங்கரமான தொடர் மரணதண்டனைகளை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டதுடன், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முழு மாநில தலைமையையும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்திருக்கின்றனர்.

Wolverine Watchmen இன் துணை நிறுவனர் பீட் மியூசிகோ உட்பட மூன்று சதியாளர்களை மிச்சிகன் நீதிபதிகள் அமைதியாக விடுதலை செய்தபின்னர் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏப்ரல் 15, 2020 அன்று மிச்சிகன், லான்சிங்கில் தலைநகர கட்டிடத்தின் வெளியே தானிங்கி ஆயுதங்களுடன் நபர்கள் (AP Photo/Paul Sancya)

அரச வழக்குத்தொடுனரின் அலுவலகம் பின்வருமாறு எழுதியது: “திட்டம் A ஆனது 200 ஆட்களைச் சேர்ப்பது, பின்னர் காங்கிரஸ் அமர்வில் இருக்கும்போது லான்சிங்கில் உள்ள தலைநகர கட்டிடத்தைத் தாக்குதலை உள்ளடக்கியது. [காங்கிரஸ் என்று சதிகாரர்கள் குறிப்பிடுவது மாநில சட்டமன்றத்தை]. அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து, கொடுங்கோலர்களை தூக்கிலிட வேண்டும், அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு ஒரு வாரம் எடுக்கும், யாரும் உயிருடன் வெளியே வரமாட்டார்கள்”. அறிக்கை கூறுகிறது, “இரண்டாம் திட்டம் காங்கிரஸ் அமர்வில் இருந்தபோது லான்சிங்கில் உள்ள தலைநகர கட்டிடத்தைத் தாக்கி, பின்னர் அவர்கள் கட்டமைப்பிற்கான உள்நுழைவாயில்கள் / வெளியேறும் வாயில்களைப் பூட்டி, பின்னர் அவர்கள் கட்டிடத்திற்கு தீ வைப்பார்கள்.”

இதை எழுத்திக்கொண்டிருக்கம் நேரத்தில், எந்தவொரு தேசிய ஊடகமும் இந்த விவரங்களை அறிவிக்கவில்லை. மாநில அரச வழக்குத்தொடுனரை தவிர ஜனநாயகக் கட்சி முழுவதும் மௌனத்தை பேணி வருகிறது.

வழக்குத்தொடுனர்களின் கூற்றுப்படி, பெயர் குறிப்பிடப்படாத பல அரசியல் பிரமுகர்களின் குடியிருப்பு முகவரிகளை ஆராய்ச்சி செய்து அவர்களது வீடுகளில் அவர்களை கொல்லவும் சதிகாரர்கள் திட்டமிட்டனர்.

சதித்திட்டக்காரர்களால் நடத்தப்பட்ட இராணுவப் பயிற்சியின் கூடுதல் விவரங்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர். அவர்கள் விஸ்கான்சினில் ஜூன் 14 அன்று நடைபெற்ற ஒரு பயிற்சி அமர்வுக்கான அட்டவணையில் அங்குள்ள பாசிச Oath Keepers அமைப்பின் முன்னணி உறுப்பினரின் நிலத்திலேயே நடைபெற்றிருந்தது குறித்து எழுதினர். இந்த அட்டவணையின்படி, “புதிய உறுப்பினர்களுக்கான அடிப்படை கொள்கைகளை எழுதுதல்,” “தாக்குதலுக்கு உள்ளான ஒரு வாகன சாரதியின் நிலைமையை கணிப்பிடல்,” “ஒரு (சாத்தியமான) விரோதிகளின் வாகனத்தை எடுத்துக்கொள்வது,” “திட்டமிட்ட பதுங்கியிருந்து தாக்குதல்,” “L வடிவில் பதுங்கியிருந்து தாக்குதல்” மற்றும் “சரியான நேரத்தில் ஒரு மருத்துவ உதவியாளரை நாடுதல்?” என்பன உள்ளடங்கியிருந்தன.

Wolverine Watchmen தங்களை முன்னர் ஒரு Boogaloo group என்று தம்மை விவரித்துக்கொண்டனர். குழுவால் பயன்படுத்தப்படும் ஒரு தனியார் பேஸ்புக் பக்கத்தின்படி, அவர்களின் நோக்கம் “ஒத்த எண்ணம் கொண்ட நபர்களை ஒருங்கிணைத்து, அணிதிரட்டுவது” என்பதாகும். குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட பூட்டுதலுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அவர்கள் பயன்படுத்தியதுடன் மற்றும் அவர்களின் திட்டங்களைப் பற்றி விவாதிக்கவும் புதிய பிரிவினரை அணிதிரட்டவும் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்டனர்.

Wolverine Militia இணை நிறுவனரான பீட் மியூசிகோவின் பிணைப்பத்திரக் கோரிக்கையை எதிர்ப்பதற்காக அரச வழக்குத்தொடுனரின் அலுவலகம் இந்த வாதங்களை முன்வைத்தது. ஆனால் இந்த ஆதாரங்களை பரிசீலித்தபின், மைக்கேல் கிளாரன் $ 10,000 மதிப்பீட்டில் பிணைப்பத்திரத்தை வழங்கி மியூசிகோவை சிறையிலிருந்து வெளியேற அனுமதித்தார். கிளாரன் முன்பு மியூசிகோவின் பிணையை 10 மில்லியனில் இருந்து குறைத்திருந்தார்.

புதன்கிழமை, மிச்சிகனில் உள்ள அன்ட்ரிம் கவுண்டியில் 38 வயதான ஷோன் ஃபிக்ஸ் பிணைப்பத்திரத்தில் விடுவிக்கப்பட்டதாக வழக்குரைஞர்கள் அறிவித்தனர். வாரங்களுக்கு முன்பு, விஸ்கான்சின் குடியிருப்பாளரான பிரையன் ஹிக்கின்ஸ் 10,000 டாலர் பணத்தை செலுத்திய பின்னர் கவுண்டி நீதிபதி டோட் ஹெப்லரால் ஜாமீனில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது உள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கோரிய 1 மில்லியனை விட மிகவும் குறைவான தொகையாகும்.

இந்த தொகைகள் மற்றும் ஜாமீன் விதிமுறைகள் சதிகாரர்களின் மீது குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கையில் மென்மையானவையாகும்.

மியூசிகோ ஒரு கணுக்கால் கண்காணிப்பு கருவி அணியுமாறு மட்டுமே கட்டளையிடப்பட்டார். அதே நேரத்தில் ஹிக்கின்ஸால் விஸ்கான்சின் மாநிலத்தை விட்டு வெளியேற முடியாது என்று கூறப்பட்டது. சதிகாரர்களை நட்புரீதியான பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அவ்வதிகாரிகளில் சதிகாரர்களை புகழ்ந்த தீவிர வலதுசாரி குழுக்களைச் சேர்ந்தவர்களும், சதிகாரர்களின் செயல்கள் சட்டபூர்வமானவை என்று பாதுகாத்த பலரும் அடங்குவர்.

தீவிர வலதுசாரிக் குழுக்களை ஆராய்ச்சி செய்து அவர்களின் செயல்பாட்டின் தரவுத்தளத்தை பராமரிக்கும் MilitiaWatch நிறுவனர் ஹாம்ப்டன் ஸ்டால், உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார்: “ஆயுதக் குழுக்களிடையே பெரும்பாலும் நிறைய பெரிய வாயடிப்புக்கள் உள்ளன. அவை செயலற்ற அச்சுறுத்தல்கள் என்று நிராகரிக்கப்படலாம். ஆனால் தனித்தன்மைமிக்க மற்றும் அரச வழக்குத்தொடுனரின் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அக் கற்பனைகளில் சேர்க்கப்பட்டுள்ள பெரும் வன்முறையின் அளவு ஒரு பெரிய சிவப்புக் கொடியாக உள்ளதுடன், குறிப்பாக இதில் முக்கிய ஈடுபட்டுள்ளவர்களின் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.”

அக்டோபர் மாதம் 14 ஆயுததாரிகளின் கைதுகள் “நான் கண்காணிக்கும் ஆயுதக்குழுக்களிடையே ஆட்சேர்ப்பைக் குறைக்கவில்லை, தேர்தலுக்கு முன்னர் தலைவர்கள் தங்கள் குழுக்களை விளம்பரப்படுத்துவதும் மற்றும் ஆயுதமேந்திய இயக்கங்களுடன் இணைக்க விரும்பும் புதிய ஆட்களில் ஆட்சேர்ப்புக்கு இட்டுச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிகிறது”.

பைடனின் வெற்றி தேர்தல் மோசடியின் விளைபொருள் மட்டுமே என்ற ட்ரம்ப்பின் ஆதாரமற்ற கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தீவிர வலதுசாரி வலைப்பின்னல்கள் நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பாடு செய்கின்றன.

பாசிச Oath Keeper தலைவர் ஸ்டீவன் ரோட்ஸ் “ட்ரம்பின் உத்தரவின் பேரில் வன்முறையில் ஈடுபட டி.சி.க்கு வெளியே ஆண்களை நிறுத்தியுள்ளதாக கூறுகிறார்” என்று Media Matters வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது. ரோட்ஸ் பாசிச வலைத் தள நபரான அலெக்ஸ் ஜோன்ஸிடம் "ஆயுதம் ஏந்திய நாங்கள் டி.சி.க்கு வெளியே இருப்போம். ஜனாதிபதி எங்களை அழைத்தால் உள்ளே செல்லத் தயாராக இருக்கிறார்கள்" என்று கூறினார்.

இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட ஜோ பைடென் வென்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவை முறியடிக்கும் நோக்கம் கொண்ட ட்ரம்ப் சார்பு “களவாடலை நிறுத்து” ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு YouTube நிகழ்ச்சியில் ரோட்ஸ் இந்த கருத்துக்களை வெளியிட்டார். கடந்த வார இறுதியில் பல்வேறு மாநிலங்களில் சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ட்ரம்பின் தோல்வியைக் கொண்டாடும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் Proud Boys இருப்பது அவர்களின் தலைவர் என்ரிக் டாரியோ கூறியதையடுத்து, “நாங்கள் வெளியேறுகிறோம். காத்திருக்குமாறு விடப்பட்ட உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது”. இது Proud Boys “பின்வாங்கி தயாரான நிலையில் நிற்க வேண்டும்” என்ற முதல் ஜனாதிபதி விவாதத்தில் ட்ரம்ப் கூறிய கூற்றைக் குறிக்கும்.

கடந்த வார இறுதியில் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பேர்க்கில் நடந்த ஒரு தீவிர வலதுசாரி பேரணியில், ஆயுதமேந்திய Proud Boys, "என் ஜனாதிபதிக்காக பின்வாங்கி தயாரான நிலையில் நிற்கிறேன்" மற்றும் ஆகஸ்ட் மாதம் விஸ்கான்சின் கெனோஷாவில் பொலிஸ் வன்முறையை எதிர்த்த இரண்டு பேரை கொன்ற பாசிசவாதியான கைல் ரிட்டன்ஹவுஸைக் குறிக்கும் "கைலை விடுதலைசெய் " என்று இரண்டு பதாகைகளை தாங்கி கூடியிருந்தார். ஹாரிஸ்பேர்க் ஆர்ப்பாட்டம் மாநில தலைநகர கட்டிடத்தில் நடைபெற்றதுடன் மற்றும் குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆயுதமேந்திய பாசிச ஆர்ப்பாட்டக்காரர்களை பார்வையிடுவதும் ஆதரிப்பதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகியவை குடியரசுக் கட்சியின் சட்டமன்றம் மற்றும் ஜனநாயக ஆளுநரைக் கொண்ட நான்கு போர்க்கள மாநிலங்களில் இரண்டு ஆகும். அங்கு மக்கள் வாக்குகளை மீறி ட்ரம்ப் மாற்று தேர்தல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அழைப்புவிடுவதில் கவனம் செலுத்தியுள்ளார். ஜோ பைடன் மிச்சிகனில் சுமார் 150,000 வாக்குகள் மற்றும் பென்சில்வேனியாவில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பரந்த தாக்குதலை சான்றுகள் சுட்டிக்காட்டினாலும், ஜனநாயகக் கட்சியும் இந்த தாக்குதல் குறித்து முற்றிலும் மௌனமாக இருந்து வருகிறது. இது மாநில வழக்குத்தொடுனர் அலுவலகத்தையும், சதிகாரர்களை சிறையில் இருந்து விடுவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையையும் திறம்பட அமைதிப்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது வன்முறை மற்றும் பொலிஸ் அடக்குமுறை மூலம் தேர்தலை மீறுவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிக்க்கான வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியினரின் மிகப்பெரிய அச்சமாகும்.

Loading