தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கம்பனிகள் வலியுறுத்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய அதிகரிப்பு சம்பந்தமாக, தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தலைமையில், தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் டிசம்பர் 21 நடந்த பேச்சுவார்த்தையின் போது, தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை பெருந்தோட்டக் கம்பனிகள் ஒரேயடியாக நிராகரித்தன. அதற்கு பதிலாக, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு மாற்று ஊதிய திட்டங்களை தோட்டக் கம்பனிகள் சமர்ப்பித்தன.

அதில் முதலாவது, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு தினசரி ஊதியமும், ஏனைய நாட்களுக்கு கிலோ அடிப்படையில் பணம் செலுத்தும் ஒப்பந்த முறையையும் கொண்ட ஒரு கலப்பு முறையாக முன்வைக்கப்பட்டுள்ளது. கிலோவுக்கு சம்பளம் கொடுக்கப்படும் நாட்களில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி உட்பட, பறிக்கப்படும் தேயிலை கொழுந்து ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ. 50 கொடுக்கப்படும். இது தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு வழிவகுத்துள்ள வருமானப் பகிர்வு ஒப்பந்த முறைமையை படிப்படியாக அவர்கள் மீது திணிக்கும் கொள்கையாகும்.

2018 ஆம் ஆண்டில், தோட்டத் தொழிலாளர்கள் 100 சதவீத ஊதிய உயர்வு கோரி தொடர் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்தனர். அந்த ஆண்டு அக்டோபரில், டிக்கோயா தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நடத்திய ஊர்வலம். (WSWS media)

நாளொன்றுக்கு 30-40 கிலோ கொழுந்து பறிக்க முடிந்தால் தொழிலாளர்கள் தங்கள் வருவாயை பெரிதும் "அதிகரித்துக்கொள்ள" முடியும் என்று கம்பனிகள் வாதிடுகின்றன. 50 ரூபாய் என்ற விகிதத்தின் கீழ், 20 கிலோ கொழுந்து பறிக்கும் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாயும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாயும் சம்பாதிக்க முடியும் என்றும், அந்த வழியில் தொடர்ந்து பணிபுரிந்தால், ஒரு மாதத்திற்கு 37,500-62,000 ரூபாய் வரை சம்பாதிப்பார் என்றும் கம்பனிகள் கூறுகின்றன. ஆனால் தோட்டங்களின் விளைச்சல், காலநிலை மற்றும் தொழிலாளர்களின் வயது உட்பட பல காரணிகளைப் பொறுத்து, தற்போதுள்ள 16-18 கிலோ கொழுந்து பறிக்கும் இலக்குகளை அடைவது கூட அவர்களுக்கு கடினம் ஆகும்.

இந்த திட்டங்களை முன்வைத்து, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாதிய புலுமுல்ல பின்வருமாறு கூறினார்: “நாங்கள் பாரம்பரிய ஊதிய முறையிலிருந்து விலக வேண்டியிருப்பதோடு, தொழிலாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்தக் கூடியவாறு தொழில்துறையின் ஸ்திரத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தித்திறன் மாதிரியை செயல்படுத்திய உடன், தொழிலாளர்கள் நெகிழ்வான வேலை நேரத்தினையும், அதே போல், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சம்பாதிக்கும் செயல்முறைக்கு பங்களிக்கக் கூடிய தொழிலாளர் ஒத்துழைப்பையும் பெறுவார்கள். வேலை செய்ய வேண்டிய நேரம் மற்றும் முறை பற்றி தீர்மானிப்பதில், நமது தொழிலாளர்களுக்கு ஒரு வகிபாகம் கிடைப்பதோடு, அவர்களின் வருவாய் செயல்முறை வியத்தகு முறையில் வளர்ச்சியடையும்.”

கம்பனிகள் மிகைப்படுத்திக் காட்டும் சித்திரத்துக்கு மாறாக, அவர்கள் கணிக்கும் தொகையை சம்பாதிக்க வேண்டுமெனில், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட தொழிலாளியின் முழு குடும்பமும் உழைக்க வேண்டும்.

இரண்டாவது, தினசரி சம்பளத் திட்டம் 1,025 ரூபா ஆகும். அடிப்படை நாள் சம்பளம் 700 ரூபாயும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி 105 ரூபாவும், வருகை கொடுப்பனவு ரூபா 70, உற்பத்தி கொடுப்பனவு 75 ரூபாய் மற்றும் விலை பங்கு மேலதிக கொடுப்பனவு 75 ரூபாயுடன் சேர்த்து, மொத்தம் 1,025 என்ற நாள் சம்பள திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளியின் மாத வருமானம் சுமார் ரூ. 4,250 அளவில் அதிகரிக்கும் என்று பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தற்போதைய அடிப்படை தினசரி ஊதியத்தில் 20 ரூபா வெட்டப்படும் அதே நேரம், வருகை, உற்பத்தித்திறன் மற்றும் தேயிலை விலை உட்பட்ட காரணிகளின் அடிப்படையில் ஏனைய கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படுமே ஒழிய, நிச்சயமாக மற்றும் கட்டாயமாக தொழிலாளியின் வருமானத்திற்கு எந்த சேர்க்கையும் கிடையாது.

இரண்டு திட்டங்களில் எது செயல்படுத்தப்பட்டாலும். அதன் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்கள் மீது கொடூரமான சுரண்டல் நிலைமைகள் திணிக்கப்படும்.

அதே போல், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தினசரி ஊதியம் 1,000 ரூபா கிடைத்தாலும், அது தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. 2015 ஆம் ஆண்டிலேயே தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளம் கோரினர். இப்போது வரை ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதன் ஊடாக ஊதியங்களின் உண்மையான மதிப்பில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சி போன்ற காரணங்களால், வாழ்க்கைச் செலவு 2015 ஆம் ஆண்டை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், பதீட்டு பிரேரணையாக அரசாங்கம் இந்த திட்டத்தை முன்வைத்தது, தோட்டத் தொழிலாளர்கள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் கொந்தளிப்பை தணிப்பதே ஆகும். மற்றொன்று, பெருந்தோட்டப் பிரதேசங்களில் சுற்றுலா, வணிக வேளாண் பயிர்கள் மற்றும் ஆடை உட்பட ஏற்றுமதி தொழில்களுக்கு முதலீட்டை ஈர்ப்பது ஆகும்.

1,000 ரூபா சம்பளக் கோரிக்கையை செலுத்த முடியாத கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள், திரும்பப் பெறப்பட்டு “பொருத்தமான” முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்ற அமைச்சர் சில்வாவின் அறிக்கையின் அர்த்தம் இதுதான்.

அண்மையில் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தின் இந்த திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. “பிரச்சினை சம்பளம் மட்டும் அல்ல. தோட்டத் தொழிலாளர் இளைஞர்கள் வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தோட்டங்களைத் தவிர, சுற்றுலா போன்ற பிற தொழில்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்,” என தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கங்களின் வகிபாகம், அரசாங்கம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளால் எடுக்ப்படும் முடிவுகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதும் அவர்களின் போராட்டங்களை நாசமாக்குவதும் ஆகும்.

2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் ஊதியம் கோரி இரண்டு வாரங்களுக்கும் மேலாக உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் சங்கம் (ஜ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) உட்பட சகல தோட்டத் தொழிற்சங்கங்களாலும், தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பை தொழிலாளர்கள் மீது திணித்து, இந்த போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது.

தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2018 இல் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில், உற்பத்தித்திறன் மற்றும் வருமான விநியோகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்த முறையின் விதிமுறைகள் அடங்கும்.

இந்த முறைமையின் கீழ், தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகளை கொண்ட ஒரு நிலத்தைப் பெறுகிறார்கள், அவை அனைத்தும் அவர்களால் பராமரிக்கப்பட வேண்டும். நிறுவனம் வழங்கிய உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களின் விலையைக் கழித்த பின்னர், மீதமுள்ள வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே தொழிலாளர்கள் பெறுகிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் ஊழியர் சேமலாபா நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளிலிருந்தும் ஓய்வூதிய உரிமைகளையும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சமூக நலன்களையும் இழக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் 'சிறு தொழில்முனைவோராக' மாற்றப்படுவது குறித்து தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அளித்த மோசடி அறிக்கைகளின் பொருள் இது.

தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் 2018 இல் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில், உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற மற்றும் வருமானப் பகிர்வு ஒப்பந்த முறைமையையும் அறிமுகப்படுத்தும் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.

இந்த முறைமையின் கீழ், தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் கொண்ட ஒரு நிலம் வழங்கப்படுவதோடு, அவை அனைத்தும் அவர்களால் பராமரிக்கப்பட வேண்டும். கம்பனி வழங்கிய உரங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களுக்கான செலவுகளை கழித்த பின்னர், மீதமுள்ள வருமானத்தில் ஒரு அற்ப பகுதியை மட்டுமே தொழிலாளர்கள் பெறுவார்கள். அதே நேரம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி போன்ற ஓய்வூதிய உரிமைகளையும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் தொழிலாளர்கள் இழக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களை “சிறு தொழில்முனைவோராக” மாற்றுவது பற்றி தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூறும் மோசடி கதைகளின் உண்மையான அர்த்தம் இதுவே.

தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை அலட்சியம் செய்து, தொழிற்சங்கங்களின் நேரடி ஆதரவுடன், இப்போதே களனி வெலி, வட்டவல மற்றும் பொகவந்தலாவா உட்பட்ட தோட்டக் கம்பனிகளால் வருவாய் பகிர்வு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்த தாக்குதல், புதிய திட்டங்களுடன் கூர்மைப்படுத்தப்படும். உலகசோசலிசவலைத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த பல தொழிலாளர்கள், வருமானப் பகிர்வு முறை மற்றும் தொழிற்சங்கங்களின் பிற்போக்கு நடவடிக்கைகள் குறித்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு கடினமான வேலை நிலைமைகளையும் விவரித்தனர்.

சாமிமலை, கிளனூஜி தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் தொழிலாளி தேவிகா கூறியதாவது: “700 ரூபாய் சம்பளம் பெற நாளொன்றுக்கு 16 கிலோ பறிக்க வேண்டும். அதை விட குறைவாக இருந்தால், எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் அரை நாள் சம்பளம்தான் கிடைக்கும். அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவுடன் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் வாழ முடியாது. முன்னர் நான் சாப்பாட்டுக்காக சுமார் 12,000 ரூபாய் செலவிட்டேன். இப்போது சாப்பாட்டுக்கு 7,000 ரூபா மட்டுமே செலவிடலாம்.”

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் மொக்கா தோட்டத்தின் மேல் பிரிவில் உள்ள தொழிலாளர்கள், டிசம்பர் 23 முதல் ஊதிய வெட்டுக்கு எதிராக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அன்றாட கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோ ஆகும். இலக்கு பூர்த்தி செய்யாவிட்டால், தொழிலாளர்கள் பெறும் சம்பளம் 350 ரூபாய் மட்டுமே. இது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் பாதி மட்டுமே. தொழிற்சங்கங்களின் கட்டுப்பாடுகளை மீறியே தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களது போராட்டத்தை குழப்புவதற்காக, தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாக தொழிலாளர்கள் கூறினர்.

கிளனூஜி தோட்டத் தொழிலாளியான எம். ரவீந்திரன், 48, “1,000 ரூபா கோரிக்கை இப்போது பழசாகிவிட்டது” என்றார். “உயரும் வாழ்க்கைச் செலவின்படி, 1,500 ரூபா இப்போது கிடைத்தாலும் போதுமானதல்ல. அரசாங்கத்தின் பிரேரணை ஒரு பொய் ஆகும். முந்தைய அரசாங்கமும் 1,000 கோரிக்கையை தருவதாக வாக்குறுதியளித்தது. எல்லா அரசாங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன. தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களை ஆதரித்து எங்களை காட்டிக் கொடுத்தன. கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இலக்கை நாளொன்றுக்கு 2 கிலோ அதிகரிக்க வேண்டும் என்று கம்பனிகள் தெரிவித்துள்ளன. எங்கள் அனைத்து உரிமைகளையும் அழிக்கவே தோட்ட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இந்த பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கே சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன் தொழிலாளர் வழிநடத்தல் குழு ஒன்றை நாங்கள் அமைத்தோம். அதன் கீழ் நாங்கள் தொழிலாளர்களை ஒழுங்கமைக்க வேண்டும்,” என அவர் மேலும் விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்கள், அரசாங்கமும் மற்றும் தோட்ட கம்பனிகளும் முன்வைக்கும் ஊதிய திட்டங்களை நிராகரிக்க வேண்டும். ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழக்கூடிய மாத சம்பளம் மற்றும் வீட்டுவசதி உட்படட சமூக உரிமைகளுக்காக அவர்கள் போராட வேண்டும்.

தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டின் கீழ் தோட்டக் கம்பனிகளை மக்கள்மயப்படுத்துகின்ற, சோசலிச உற்பத்தி பொருளாதார முறையொன்றை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் அந்த உரிமைகளை வெல்ல முடியும்.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் மூலம், அதற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.

Loading