2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், 21,000 இறப்புக்களையும் ஒரு மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்களையும் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனில், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக இறப்புக்களும், நோய்தொற்றுக்களும் மற்றும் மருத்துவமனையில் சேர்ப்புக்களும் பெரிதும் அதிகரித்து வருகின்றது. இந்த வாரம், செவ்வாயன்று 1,610 ஆகவும், அதிலிருந்து கூர்மையாக அதிகரித்து புதனன்று 1,820 ஆகவும் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நாளாந்த இறப்புக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகள் பதிவாகின. தொடர்ந்து வியாழனன்று, சமீபத்திய பாதிப்பாளர்களில் எட்டு வயது குழந்தை உட்பட, மேலும் 1,290 பேர் பலியானதும் அறிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் அதிர்ச்சி தரும் வகையில் 21,024 பேர் இறந்திருப்பது கிரகத்திலேயே மிகுந்த உச்சபட்ச இறப்பு விகிதத்தை இங்கிலாந்து பதிவு செய்வதற்கு இட்டுச் சென்றுள்ளது. கடைசி ஏழு நாட்களில் மற்றொரு 283,388 புதிய நோய்தொற்றுக்கள் பதிவானது, இந்த ஆண்டின் மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை 1 மில்லியனுக்கு (1,054,866) கூடுதலாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்தொற்று வெடித்தெழ தொடங்கியதிலிருந்து இங்கிலாந்தின் மூன்றாவது தேசியளவிலான பூட்டுதலின் போது, ஜனவரி 12, 2021 செவ்வாய்க்கிழமை, கிழக்கு இலண்டனில் உள்ள ராயல் இலண்டன் மருத்துவமனைக்கு வெளியே ட்ராலியில் வைத்து ஒரு நோயாளி கொண்டு செல்லப்படுகிறார். ஐரோப்பாவிலேயே உச்சபட்சமாக 81,000 கொடிய வைரஸ் தொற்று இறப்புக்களை பிரிட்டன் கொண்டிருப்பதோடு, ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு மருத்துவமனை படுக்கைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிவதும் நிலையாக அதிகரித்து வந்துள்ளது. (AP Photo/Matt Dunham)

இந்த வாரம் திங்கட்கிழமை அன்றே மருத்துவமனை சேர்க்கைகள் 39,068 ஐ எட்டியது, இது கடந்த ஆண்டின் நோய்தொற்றின் முதல் அலையின் போதான உச்சபட்ச எண்ணிக்கையைப் போல கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது. செயற்கை சுவாச வசதி பொருத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 3,947 ஆக உள்ளது.

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (National Health Service England) வியாழக்கிழமை பிரசுரித்த தரவு, கடந்த வாரம் 10 பிரதான மருத்துவமனை அறக்கட்டளைகளில் ஒன்று வயதுவந்தோருக்கான முக்கிய பராமரிப்பு படுக்கைகளை கொண்டிருக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியது.

அரசாங்கங்கள் அறிவித்த நோய்தொற்றுக்களின் நாளாந்த எண்ணிக்கைகள் நோய்தொற்றுக்குள்ளானவர்களின் துல்லியமான எண்ணிக்கையை வழங்கவில்லை. அதே நேரம், இம்பீரியல் கல்லூரியின் REACT-1 நோய்தொற்று ஆய்வு மிகத் துல்லியமாக உள்ளது. ஜனவரி 6-15 தேதிகளுக்கு இடையில் 142,900 பேரை பரிசோதனை செய்ததன் அடிப்படையிலான அதன் சமீபத்திய இடைக்கால கண்டுபிடிப்புக்களின் படி, ஜனவரி மாதம் ஆரம்பத்தில் மக்கள்தொகையில் 1.58 சதவிகிதத்தினர் – டிசம்பரில் இருந்த 0.91 சதவிகிதத்திலிருந்து அதிகரித்து - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று இம்பீரியல் மதிப்பிட்டுள்ளது. இது 63 பேருக்கு ஒருவர் வீதம் அல்லது சுமார் 900,000 பேர் நோய்தொற்றுக்குள்ளாகியிருப்பதற்கு சமமானதாகும்.

டிசம்பர் தொடக்கத்தில் நோயுற்றவர்களின் விகிதம் 1.21 சதவிகிதமாக இருந்தது தற்போது 2.8 சதவிகிதமாக அதிகரித்து இலண்டனில் நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. ஏனைய மதிப்பீடுகள், தலைநகரின் அண்ணளவான 10 மில்லியன் மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினர் வரை நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றன. இந்த வாரம், இலண்டன் அவசர மருத்துவ ஊர்தி சேவை நாளொன்றுக்கு 8,500 அழைப்புக்களை சந்தித்துள்ளன – நோய்தொற்றுக்கு முன்னர் நாளாந்தம் 5,000 முதல் 6,000 வரையிலான அழைப்புக்களை அது எதிர்கொண்டது. கார்டியன், நேற்று “கோவிட் நோய்தொற்று தலைநகரின் சுகாதார சேவைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதன் மற்றொரு அடையாளமாக, இரண்டு இலண்டன் பேருந்துகளை தற்காலிக அவசர மருத்துவ ஊர்திகளாக மாற்றி நோயாளிகளை கொண்டு செல்வதற்கு தேசிய சுகாதார சேவை பணியாளர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தது.

டோரி அரசாங்கம் ஜனவரி 5 அன்று பொதுமுடக்கத்திற்கு அறிவித்திருந்த போதிலும், நோய்தொற்றுக்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன. வைரஸின் புதிய திரிபுவகை மிகுந்த தொற்றும் தன்மையுடன் இருப்பதும் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் படு மோசமாக இருப்பதும் ஒருபுறமிருக்க, மார்ச் மாதம் தொடக்கத்தில் செயல்படுத்தப்பட்டதை விட கணிசமாக குறைந்தளவிலான கட்டுப்பாடுகளையே தற்போதைய பூட்டுதல் நடவடிக்கை கொண்டுள்ளது. டிசம்பர் தொடக்கத்திலிருந்து ஜனவரி 15 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என REACT-1 ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வு, “ஜனவரி 2021 இல் இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்ட மூன்றாவது கோவிட்-19 பூட்டுதலின் போதான முதல் 10 நாட்களின் போது, SARS-CoV-2 நோய்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாமல் மிக அதிகமாகவே இருந்தது. சமூகத்தில் நோய்தொற்றின் தாக்கம் கணிசமாக குறைக்கப்படும் வரை, சுகாதார சேவைகள் தொடர்ந்து தீவிர அழுத்தத்திற்கு உள்ளாகும் என்பதுடன், நோய்தொற்று காலத்தில் நிகழும் உயிரிழப்புக்களின் கூட்டு எண்ணிக்கையும் தொடர்ந்து விரைந்து அதிகரிக்கும்” என்று நிறைவு செய்கிறது.

நோய்தொற்றின் முதல் எழுச்சி அலையின் போது, அரசாங்கத்தின் மிருகத்தனமான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை, வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களில் அண்ணளவாக 20,000 பேர் இறப்பதற்கு இட்டுச் சென்றது. வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்-19 இறப்புக்கள் மீண்டும் வெடித்தெழுந்துள்ளமை, இங்கிலாந்தில் வயோதிபர் பராமரிப்பு இல்ல இறப்பு எண்ணிக்கையை இரண்டே வாரங்களில் இருமடங்காக்கியுள்ளது. ஜனவரி 15 வரையிலான இரண்டு வார காலத்தில் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் 1,260 கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் பதிவு செய்துள்ளது – இது இரண்டு வாரங்களுக்கு முன்னைய இறப்பு எண்ணிக்கையான 661 ஐ போல கிட்டத்தட்ட இருமடங்காகும். வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் அதிர்ச்சியூட்டும் வகையிலான பரவும் விகிதத்தை வைரஸ் கொண்டுள்ளது, அதாவது இங்கிலாந்தில் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் நிகழும் ஒட்டுமொத்த இறப்புக்களில் 40 சதவிகிதம் இதனால் ஏற்படுகிறது – டிசம்பரில் கால் பகுதிக்கும் மேற்பட்ட காலத்திற்கு பின்னர் தொடங்கி அதிகரிக்க ஆரம்பித்தது. இங்கிலாந்தின் 400,000 குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இதுவரை வைரஸூக்கு எதிரான தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறக்க வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்து, மார்ச் மாதத்தில் பள்ளிகளை ஒரு கட்டமாக மீண்டும் திறக்க விவாதிக்கப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பின்னர், நோய்தொற்று பரவும் வீதம் கடுமையாக அதிகரித்த நிலையில், அரசாங்கம் பின்வாங்க நேரிட்டது. வியாழக்கிழமை பைனான்சியல் டைம்ஸ், “இந்த பூட்டுதல் நீண்டகாலம் செயல்படுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும், இதுவே கடைசி பூட்டுதலாக இருக்க வேண்டுமென போரிஸ் விரும்புகிறார். இந்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர அவர் விரும்புவதாலேயே, விஞ்ஞானிகளின் பக்கம் அவர் நிற்பதாகத் தெரிகிறது. அவர் எச்சரிக்கையாக இருக்கிறார்” என்று பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு நெருங்கிய ஒரு மூத்த அதிகாரி தெரிவித்ததை மேற்கோள் காட்டியது.

அதிகரித்து வரும் இறப்புக்களின் எண்ணிக்கை ஒரு சமூக வெடிப்பிற்கு எரியூட்டக்கூடும் என்பதை ஜோன்சன் அறிவார். கடந்த வியாழனன்று, டவுனிங் வீதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த பூட்டுதல் கோடை வரை நீடிக்கும் என்பதை நிராகரிக்க முடியாது என்று கூறினார்: “அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்பதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புவதே எங்களது நிலைப்பாடாகும், என்றாலும் அதை செய்ய வைரஸின் பரவும் வீதம் குறைவதையும், தேசிய சுகாதார சேவை மீதான அழுத்தம் குறைவதையும் நாங்கள் காண வேண்டும்.”

இந்த பூட்டுதல் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து, அதனை முடிவுக் கொண்டு வருவதை கடுமையாக மக்கள் எதிர்ப்பதற்கு ஏற்ப ஜோன்சன் நடந்து கொள்ள வேண்டும். அப்சர்வர் செய்தித்தாளின் கருத்து வாக்கெடுப்பின் படி, 61 சதவிகிதம் பேர் குழந்தைகள் வளர்ப்பகங்கள் மூடப்படுவதை ஆதரித்தும், 51 சதவிகிதம் பேர் காப்பி கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்படுவதை ஆதரித்தும் வாக்களித்திருந்தனர். மேலும், கேள்வி எழுப்பியவர்களில் 75 சதவிகிதம் பேர் தொற்றுநோய் விவகாரத்திற்கு அரசாங்க அமைச்சர்கள் மிக மெதுவாக பதிலளித்ததாகக் கூறியுள்ளனர்.

இவை அனைத்தும் முற்றிலும் எதிர்பார்க்கக்கூடியவையாக இருந்தன. டிசம்பர் 17 அன்று, இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சி, “இங்கிலாந்தின் மரண குளிர்காலத்தை நிறுத்து! உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளை எடு!” என்று அறிக்கை விடுத்தது.

அந்த கட்டுரை, “இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று கட்டுப்பாட்டை மீறி பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு உடனடி ஆபத்தை விளைவிக்கும் ஒரு கொலைகார கொள்கையை பின்பற்றுகிறது” என்று எச்சரித்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை குறித்து ஐந்து நாட்களுக்கு மக்கள் தடையின்றி பயணிக்கவும் ஒன்றுகூடவும் அனுமதிக்கும் திட்டங்களை அரசாங்கம் மீண்டும் திருத்தியமைக்க வேண்டியிருந்தது என்றாலும், “கிறிஸ்துமஸை சிறப்பாக” கொண்டாடும் வகையில் 24 மணி நேரமும் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க அது ஊக்குவித்தது, அதாவது பெருநிறுவன இலாபங்களை பாதுகாக்கும் வகையில்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளின் படி 66,000 பேர் இறந்துவிட்டனர், அதிலும் இறப்புச் சான்றிதழ்களில் கோவிட்-19 நோயாளியாக பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மிகத் துல்லியமான இறப்பு எண்ணிக்கை 80,000 ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டு வெறும் நான்கு வாரங்களில், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த வாரம் வியாழக்கிழமைக்குள், ஒரு நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதிக்கப்பட்டு 28 நாட்களுக்குள் இறந்துபோனவர்களைப் பற்றி பதிவு செய்த அரசாங்கத்தின் நடவடிக்கையின் படி, 94,580 இறப்புக்கள் பதிவாகின. இங்கிலாந்தின் புள்ளிவிபர நிறுவனங்கள் பதிவு செய்த தரவுகளின் படி, உண்மையான எண்ணிக்கை – சமீபத்திய நாட்களில் நிகழ்ந்த இறப்புக்கள் தொடர்பான கூடுதல் தரவுகளுடன், இறப்புச் சான்றிதழில் கோவிட் தொற்று பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது உட்பட - வைரஸால் ஏற்பட்ட இறப்புக்கள் 111,000 ஐ கடந்துவிட்டதைக் காட்டுகிறது.

மருத்துவமனை ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் சங்கத்தின் (Hospital Consultants and Specialists Association) தலைவர் டாக்டர் குளோடியா பவுலோனி (Dr Claudia Paoloni), கிறிஸ்துமஸ் திட்டங்கள், “நோயாளிகள் தேவையில்லாமல் இறப்பதையும், ஆயிரக்கணக்கான தீவிர நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் போகும் நிலையையும்” எதிர்கொள்ளும் என்று எச்சரித்ததை சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கை சுட்டிக் காட்டியது. மேலும், முன்னணி பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் காப்ரியல் ஸ்காலி கூட, “மிகுந்த கொண்டாட்டத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதிலும், அதன் பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நண்பர்களையும் உறவுகளையும் அடக்கம் செய்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை” என்று எச்சரித்திருந்தார்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே, அல்லது முதன்மையாக கூட ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் தொடர்புபட்ட ஒரு விடயமாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.

டவுனிங் வீதியிலுள்ள பரம குற்றவாளியும், மற்றும் அவரது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கை ஆர்வலர்களின் சதிகார கூட்டமும் தான், இந்த பரந்தளவிலான சமூக கொலைக்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் பரவலாக வெறுக்கப்படும் இந்த அரசாங்கம், மற்றும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சி மற்றும் தொழிற் சங்கங்களிலுள்ள தமது பங்காளிகளின் ஒத்துழைப்புடன், பிரிட்டனை ஆளும் தன்னலக்குழுவின் சார்பாக, 111,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இலாபத்திற்கான பலிபீடத்தில் தியாகம் செய்திருக்கிறது.

“தேசிய ஒற்றுமை” என்ற பதாகையின் கீழ், நெருக்கடியான நேரத்தில் “ஆக்கபூர்வமான எதிர்ப்பை” தெரிவிப்பதில் தனது முன்னோடியான ஜெர்மி கோர்பின் உச்சரித்த மந்திரத்தையே தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரும் உச்சரித்தார். இந்த தொற்றுநோய்க்கு பதிலிறுக்கும் விதமாக தொழிற்சங்கங்கள், “பெருந்திரளாக வேலைக்குத் திரும்புவது” என்று தொழிற்சங்க காங்கிரஸ் விவரித்ததற்கு உதவிய வசந்தகால பூட்டுதலின் போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. தொழிற்சங்கத்தின் ஒத்துழைப்புடன், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வைரஸ் பரவுவதற்கான முக்கிய இடங்களாக செப்டம்பர் முதல் திறக்கப்பட்டுவிட்டன. இது, கோவிட்-19 இன் அபாயத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்கம் ஒடுக்கியதுடன் பிணைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி தனது டிசம்பர் அறிக்கையில் பின்வருமாறு எச்சரித்தது: “வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும். தொழிலாளர்கள் இப்போது எடுக்கும் நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எங்கள் கட்சியில் சேரவும், தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான ஒரு புதிய சர்வதேச, சோசலிச தலைமையை உருவாக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.”

தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, பணியிடங்கள் மற்றும் அண்டை தொழிலாளர் குழுக்களின் ஒன்றோடொன்று உள்ளிணைக்கப்பட்ட வலையமைப்பை உருவாக்குவது தொடங்கி, இந்த அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைப்பது வரையிலுமாகவும், மற்றும் தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கு முடிவெடுப்பதன் மூலமாகவும் தொழிலாள வர்க்கம் இந்த அழைப்பை அவசர அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Loading