பெருந்தொற்றுக்கான தயாரிப்பு நிலை மீதான சுதந்திர ஆய்வுக் குழு, கோவிட்-19 விடையிறுப்பில் இருந்த கூர்மையான உலகளாவிய சமத்துவமின்மைகளை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடென் பதவியேற்றதால் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறப்படுகின்ற அதேவேளையில், உலகெங்கிலும் கோவிட்-19 நோய்தொற்றால் 17,350 பேர் உயிரிழந்துள்ளனர். இது, இதுவரையில் இல்லாதளவில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மரண எண்ணிக்கையாகும். கோவிட்-19 ஆல் அமெரிக்காவில் 4,385 க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கிறார்கள், இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் இது அரை மில்லியனைக் கடந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பெருந்தொற்றுக்கான தயாரிப்பு நிலை மற்றும் விடையிறுப்பு மீதான சுதந்திர ஆய்வுக் குழு, ஜனவரி 6 இல் வெளியிட்ட இந்த பெருந்தொற்றின் அதிகரிப்பு மீதான இரண்டாவது அறிக்கையை மீளாய்வு செய்ய, உலக சுகாதார அமைப்பின் (WHO) செயற்குழு இந்த வாரம் அதன் 148 ஆவது அமர்வைக் கூட்டுகிறது. இந்த பெருந்தொற்றுக்கான உலகளாவிய விடையிறுப்பிலிருந்து பெற்ற படிப்பினைகளை மதிப்பிடவும் மற்றும் இந்த பெருந்தொற்று அம்பலப்படுத்தி உள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளுக்கு தீர்மானங்களை நிறைவேற்றவும், வாரக்கணக்கிலான கூட்டங்களுக்கு இந்த அறிக்கை ஒரு செயல்திட்டத்தை வகுத்தளிக்கிறது.

முன்கூட்டியே அறிந்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட ஒரு பெருந்தொற்றுநோய்க்கு உலகின் விடையிறுப்பு மீது இந்த ஒட்டுமொத்த அறிக்கையுமே ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாக உள்ளது. எத்தனையோ எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், உயர்-வருவாய் நாடுகளும் அவற்றின் தலைவர்களும் அவர்களது மக்களின் நலன்கள் மற்றும் இப்புவியிலுள்ள உயிர்களின் நல்வாழ்வுக்காக அல்லாமல் அவர்களின் நிதியியல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக நின்றனர். அந்த அறிக்கையில் என்ன இல்லை என்றால், இந்த தோல்விகளுக்கு ஒரு விஞ்ஞான உள்ளடக்கத்தை வழங்கக்கூடிய மிகவும் தேவைப்படும் மார்க்சிச பகுப்பாய்வு ஆகும், இவ்வாறு செய்யத் தவறிய காரணங்களாலேயே கோவிட்-19 ஆல் அண்மித்து 100 மில்லியன் நோய்த்தொற்றுகளையும் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளையும் கண்டிருக்கிறது.

ஏற்றுக் கொள்ளவியலாதளவுக்கு நோய்தொற்று தொடர்ந்து பரவுவதையும், தடுப்பூசி வெளியிடப்பட்டும் கூட கொடூரமான எண்ணிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நோய் மற்றும் மரணங்களைத் தடுக்க —முன்கூட்டியே நோயாளிகளைக் கண்டறிவது, நோய்தொற்று ஏற்படுத்துபவர்களின் தடமறிந்து தனிமைப்படுத்துவது, இடைவெளி பேணுதல், சுகாதாரம், பயணம் மற்றும் ஒன்றுகூடல் மீதான கட்டுப்பாடுகள் உள்ளடங்கலாக— விரிவான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து தவறியதைக் குறித்த குறிப்புகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய ஆரம்ப புள்ளிகளில் ஒன்றாக உள்ளது.

இந்த பெருந்தொற்று நாடுகளுக்கு இடையிலும் நாடுகளுக்குள்ளும் நிலவும் சமத்துவமின்மைகளைக் கூடுதலாக அம்பலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் மட்டுமே செய்துள்ளது. பல நாடுகளின் "பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு" மருத்துவச் சிகிச்சையும் அத்தியாவசிய சேவைகளும் கிடைக்கவில்லை என்பதையும், நோயை உறுதி செய்வதற்கான வசதி, ஆக்சிஜன் போன்ற சிகிச்சை வசதிகள் மற்றும் அவசியமான மருத்துவப் பொருட்களும் உயர்-வருவாய் நாடுகளுக்கே சாதகமாக கிடைத்திருந்தன என்பதையும் அந்த ஆய்வுக் குழு கண்டறிந்தது. இந்த பெருந்தொற்றிலிருந்து ஏற்படும் துணைவிளைவுகளில், தடுப்பூசித் தேசியவாதம் மற்றொரு கூடுதல் அச்சுறுத்தலாக இருப்பதை அவர்கள் மேற்கோளிட்டனர்.

“உயர்-வருவாய் நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் 100 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி வழங்க முடியும், அதேவேளையில் வறிய நாடுகள் வெறும் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒரு கோட்பாடு நிறுவப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது,” என்று குறிப்பிட்ட அந்த ஆய்வுக் குழுவினர், “கோவிட்-19 வறிய நாடுகளில் ஆரம்பிக்கவில்லை, ஆனால் பிரமாண்டமான துணை பாதிப்புகளால் அவைதான் அவதிப்பட்டு வருகின்றன, அவற்றுக்கு இன்னும் கூடுதலான ஒற்றுமையுணர்வும் சர்வதேச சமூகத்தின் உதவியும் அவசியப்படுகிறது,” என்று குறிப்பிட்டனர்.

இந்த உலகளாவிய பெருந்தொற்று எச்சரிக்கை முறையானது, அதன் தற்போதைய வடிவில் பயனற்றதாகவும் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது. உடனடி தரவு கருவிகள் மற்றும் தீர்வு-காணும் கருவிகளுடன் செயல்படும் உள்ளூர் சிகிச்சை மையங்கள் மற்றும் ஆய்வுகூடங்களில் இருப்பவர்கள், அபாயகரமான இந்த தொற்றுநோய் நோய்கிருமிகள் மீது வாரக் கணக்கில் அல்ல சில நாட்களிலேயே "எதிர்வினையாற்ற உதவும்" முக்கிய விபரங்களை வழங்கும் விதத்தில், "ஒரு பரந்துபட்ட தகவல் அமைப்பை" உருவாக்குமாறு அந்த ஆய்வுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், “எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடனேயே அவசியமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்க அவர்களைக் கணக்கில் கொண்டு வரும் விதத்தில்" இதற்கு நாடுகளின் பாகத்தில் அரசியல் முன்முயற்சி அவசியப்படுகிறது.

அந்த அறிக்கையை எழுதியவர்கள், முந்தைய பெருந்தொற்றுக்களுடனான அனுபவங்கள், அதிலிருந்து எடுக்கப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளுடன் செயல்ப்படவில்லை என கவலை எழுப்புகின்றனர். “ஒரு பெருந்தொற்று அச்சுறுத்தல் மனிதயினத்திற்கும் இப்புவியின் எதிர்காலத்தில் அதன் இடத்திற்கும் முன்நிறுத்தும் உயிர்வாழ்வு அபாயத்தை தீவிரமாக எடுப்பதில் முற்றுமுதலாக தோல்வி ஏற்பட்டுள்ளது,” என்றவர்கள் எழுதுகின்றனர். இதற்கும் கூடுதலாக, உலக சுகாதார அமைப்பு (WHO) “அதனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணியைச் செய்ய போதுமான அதிகாரமின்றி உள்ளது" என்பதைக் குறிப்பிடுகிறார்கள். போதுமான நிதியின்மை மற்றும் பொருட்களுக்கான உதவியின்மை ஆகியவற்றால் உள்ளூர் பகுதிகளில் பணியாளர்களை நிறுத்துவதற்கான அல்லது நோயைக் கட்டுப்படுத்தும் ஆதாரவளங்களை வழங்குவதற்கான அதன் ஆற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்திற்குச் சிக்கலை உண்டாக்கி வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒத்துழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பது, உலகிற்கு "இந்த பெருந்தொற்று குறித்த எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெடிப்பைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை" பலவீனப்படுத்துகிறது.

ஆனால் இந்த பெருந்தொற்றுக்கு, நகைப்புக்கிடமான உலக விடையிறுப்பு குறித்து இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விரிவான விமர்சனத்தை எடுத்துக்காட்டுவதற்குப் பதிலாக, பூர்ஷூவா பத்திரிகைகளோ, அந்த 34 பக்கம் நீண்ட அறிக்கையில் ஒப்பீட்டளவில் சிறிய அம்சங்களை மட்டும் பிடித்துக்கொள்கின்றன, அவை சீனாவின் வூஹானில் அந்நோய் வெடித்ததற்கு அதன் ஆரம்ப விடையிறுப்பின்போது, சீன அரசிடமும் மற்றும் உலக சுகாதார அமைப்பிலும், தாமதங்கள் இருந்ததாகக் குறை கண்டுபிடித்திருந்தன. பிரதான பத்திரிகைகளது இத்தகைய கண்கூடான தட்டிக்கழிப்புகளுக்குப் பின்னால் தேசியவாத நலன்கள் உள்ளன, அவை தேச மக்களின் உயிர்பறித்துள்ள இந்த பெருந்தொற்றுக்கான பொறுப்பைத் திசைதிருப்ப முயல்கின்றன.

அந்த அறிக்கையைக் குறித்த CNN இன் ஆரம்ப பத்தியே, “கோவிட்-19 வெடிப்பைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த சீனாவும் உலக சுகாதார அமைப்பும் வேகமாகவும் இன்னும் வலுவாகவும் செயல்பட்டிருக்கலாம்,” என்று தொடங்குகிறது. நியூ யோர்க் டைம்ஸ் அந்த அறிக்கையின் சில முக்கிய புள்ளிகளை உயர்த்திக் காட்டியுள்ளது என்றாலும், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் பள்ளிக்கு மீண்டும் திரும்பச் செய்யும் முனைவுகளை ஊக்குவிப்பதில் அப்பத்திரிகையே உடந்தையாய் இருந்ததை உதறிவிட்டு, இறுதியில் அது உலக சுகாதார அமைப்பையும், சீனாவையும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தையும் பலிக்கடா ஆக்க திரும்புகிறது.

அதன் செய்தி, உயர்-வருவாய் நாடுகள் மற்றும் அவற்றின் தலைவர்களது அடிப்படை தோல்விக்கு WHO விடையிறுப்பின் குறைபாடுகளைச் சாடுகிறது. உலக சுகாதார அமைப்பு மீது சில "உறுப்பு நாடுகளின்" நம்பிக்கையிழப்பு, உலகளாவிய உறவுகளில் பல ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த பிளவுகளில் வேரூன்றி இருப்பதாக அது குறிப்பிடுகிறது.

Beerdigung eines Corona-Toten in Thessaloniki am 5. Dezember 2020 (AP Photo/Giannis Papanikos)

தனிநபர் இலாபத்திற்காக அல்ல சமூக தேவை அடிப்படையில் உறுதியான சர்வதேசியவாத கோட்பாடு தான், துல்லியமாக, WHO போன்ற ஓர் உலகளாவிய அமைப்புக்கு, ஓர் உலகளாவிய அவசரநிலையை அறிவித்து உரிய சர்வதேச விடையிறுப்பை நடத்துவதற்கு அவசியமான அரசியல் அதிகாரத்தை வழங்கும். இதுவே, சர்வதேச சோசலிச கோட்பாடுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்படாத போது உலகம் எதிர்கொள்ளும் அபாயங்களை, எதிர்மறையாக, இப்போது இந்த பெருந்தொற்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டி வருகிறது.

ஆனால் WHO ஆலோசனை வழங்கும் பாத்திரம் மட்டுமே வகிக்கும் ஒரு பூர்ஷூவா அமைப்பாகும். ஓராண்டுக்கு முன்னர் சர்வதேச கவலைகளின் மீது உலக சுகாதார அமைப்பு பொது மருத்துவ அவசரநிலையை அறிவித்த போது, ஒரு சில நாடுகள் மட்டுந்தான் அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த அபாயத்திற்கு உரிய பொது மருத்துவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின.

“எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதற்கு மத்தியிலும் அடிப்படை மாற்றங்களைச் செய்யத் தவறியமை, கோவிட்-19 பெருந்தொற்று எடுத்துக்காட்டுவதைப் போல, உலகை அபாயத்திற்குள் சிக்க வைத்துள்ளது என்பதை அந்த ஆய்வுக் குழுவினர் ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிடுகின்றனர். அந்த சுதந்திர ஆய்வுக் குழு இந்த அறிக்கையும் மற்றொரு அறிக்கையாக மூலையில் முடக்கப்படாமல் காப்பாற்றப்பட விரும்புகிறார்கள், அதன் பரிந்துரைகள் கவனிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை வரலாற்றாளர்களிடம் விடுகின்றனர்.”

மருத்துவத்துறை தொழிலாளர்களும் செவிலியர்களும், “மருத்துவமனைகளை மற்றும் மருத்துவச் சேவைகளை மறுஒழுங்கமைக்க உதவவும், புத்துயிரூட்டவும், கோவிட்-19 நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதிலும், மருத்துவச் சிகிச்சை சேதிகளை வழங்குவதிலும், அதிகரித்தளவில் தடுப்பு மருந்து வினியோக முறையை ஏற்படுத்தி செயல்படவும்" தங்களின் வாழ்வையும் உயிரையும் ஆபத்திற்குட்படுத்தி, அந்த பெருந்தொற்றின் போது கடுமையான பணியில் ஈடுபடுத்திக் கொண்டதற்காக அந்த ஆய்வுக் குழு அவர்களைப் பெரிதும் பாராட்டி உள்ளது. இது, உலகளவில் மருத்துவத்துறை பணியாளர் சக்தியில் 6 மில்லியன் நபர்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் நடந்தது.

இருப்பினும் மருத்துவத் துறை தொழிலாளர்களின் இந்த இன்றியமையா பணியைக் குறித்து பத்திரிகைகளில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்படுகின்றன. அக்டோபரில் இருந்து 1,500 க்கும் அதிகமான செவிலியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வுக் குழு குறிப்பிடுகிறது, அனேகமாக இது மிகவும் குறைவான எண்ணிக்கையாக இருக்கலாம். தேசிய செவிலியர் அமைப்புகளில் 70 சதவீதம், "செவிலியர்கள் மத்தியில் அதிகளவில் மன அழுத்தமும், அத்துடன் உடல்ரீதியான சோர்வும், வார்த்தையளவிலும் மற்றும் உடல்ரீதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் மற்றும் பாகுபாடுகள் காட்டப்பட்டதாகவும்" குறிப்பிடுகின்றன.

கோவிட்-அல்லாத மருத்துவப் பிரச்சினைகள் மீது ஏற்படுத்தி இருந்த இந்த பெருந்தொற்றின் தாக்கமும் மலைப்பூட்டுவதாக உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 105 நாடுகளில், 90 சதவீத நாடுகள் மருத்துவச் சேவைகளில் இடையூறுகள் இருந்ததாக தெரிவிக்கின்றன. குறைந்த வருவாய் மற்றும் குறைந்த-மத்திய வருவாய் நாடுகள் இந்த சுமையை அதிகமாக சுமந்திருந்தன. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (global GDP) 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டிருந்ததாகவும், இது 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம் என்றும் உலக வங்கி கணக்கிட்டது. ஆச்சரியத்திற்கிடமின்றி, கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளை பயன்படுத்திய நாடுகள் நல்ல பொருளாதார விளைவுகளைக் கண்டுள்ளதுடன் கோவிட் நோய்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளும் அங்கே குறைந்திருப்பதைக் காண்கின்றன.

அந்த அறிக்கையை எழுதியவர்கள் எழுதுகின்றனர், “இந்த பெருந்தொற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஆகவே பொருளாதார பாதிப்புடன் சம்பந்தப்பட்ட நீண்டகால போக்கு இன்னும் முற்றிலுமாக முடிந்துவிடவில்லை என்பதை குழு நன்கறிந்துள்ளது என்கின்ற அதேவேளையில், குறிப்பிடத்தக்களவில் அதிக உயிரிழப்புகள் மற்றும் நோயாளிகளைக் குறைப்பதற்காக கடுமையான பொது சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கும் பொருளாதாரங்கள், இத்தகைய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாத பொருளாதாரங்களை விட மோசமடையும் என்பதற்கு நம்பிக்கை அளிக்கும் போதுமான ஆதாரம் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.”

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதைத் தடுக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டமை ஜனாதிபதி பைடெனின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மற்றொன்று, மத்திய அரசின் கட்டாய முகக்கவச உத்தரவு. வியாழக்கிழமை உலக சுகாதார அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுடன் பேசிய டாக்டர் ஆண்டனி ஃபார்சி, WHO இன் உலகளாவிய பொது மருத்துவ விடையிறுப்புக்கு அவரின் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், “கோவிட்-19 க்கான சர்வதேச விடையிறுப்புக்கு ஆதரவாகவும், உலகம் மீதான அதன் பாதிப்பைக் குறைக்கவும், நமது அமைப்புகளைப் பலப்படுத்தவும், எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கான தயாரிப்புநிலையை முன்னெடுக்கவும் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் பங்காண்மையுடன் செயல்பட தயாராக உள்ளது,” என்று நிறைவு செய்தார்.

வாய்சவடால்களுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா நிர்வகிக்க முடியாத ஒரு பொருளதார நெருக்கடியை முகங்கொடுக்கிறது, இது தற்காலிகமாக பெடரல் ரிசர்வ் மற்றும் சர்வதேச வங்கிகளிலிருந்து பாரியளவில் பணம் பாய்ச்சப்பட்டதால் சற்று மூடிமறைக்கப்பட்டு இருக்கிறது. பாரியளவிலான கடன் திரட்சி, கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் எதேச்சதிகார ஆட்சி அணுகுமுறைகளையும் தீவிரப்படுத்தும். இந்த பெருந்தொற்று திடீரென உலக அரங்கில் வந்துவிடவில்லை. இதுபோன்றவொரு பெருந்தொற்று உருப்பெறும் என்பதும், அது எப்போது என்பதுதான் கேள்வி என்பதும் நன்கறியப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான இந்த விடையிறுப்பானது, முதலாளித்துவத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையின் துணைவிளைவாகும். பெருந்தொற்றுக்கான தயாரிப்புநிலை மற்றும் விடையிறுப்பு மீதான இரண்டாவது அறிக்கையில் அந்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள், உலகளாவிய ஆதாரவளங்களைச் சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைக்க வேண்டியதன் இன்றியமையா அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

Loading