கொரோனா வைரஸால் ஏற்படும் பாரிய இறப்புக்களைத் தடுக்க “எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்கிறார் பைடென்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்ப் பதவி காலத்தின் கடைசி நாள், அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பைடென் பதவியேற்ற நாள் மற்றும் அவர் அலுவலகப் பணி மேற்கொண்ட முதல் நாள் ஆகிய மூன்று நாட்களில், கோவிட்-19 நோய்தொற்று ஏற்படுத்திய சிக்கலான நிலைமைகளால் 11,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாரம் கைமாறியுள்ளது, அதேவேளை துன்பம் அப்படியே உள்ளது.

ஜனவரி 21, 2021 அன்று, வாஷிங்டனில், வெள்ளை மாளிகையில் உள்ள அரசாங்க உணவு அறையில் நிறைவேற்று ஆணைகளில் கையெழுத்திட்டதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு ஜனாதிபதி ஜோ பைடென் பதிலளிக்கிறார் [Credit: AP Photo Alex Brandon, File]

தேசியளவிலான கோவிட்-19 இறப்புக்கள் அடுத்த மாத வாக்கில் அரை மில்லியனுக்கு மேலாக அதிகரிக்கும் என பைடென் முன்கணித்துள்ளார். தொடர்ந்து கடுமையாக பெருகிக் கொண்டிருக்கும் நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் தடுத்துநிறுத்த தேசியளவிலான பூட்டுதலைச் செயல்படுத்தக் கோரும் அழைப்பை நிராகரித்து, அவரும் அவரது நிர்வாகமும் இந்த துயரத்தின் கணிசமான பங்கிற்கு பொறுப்பாளிகளாகவுள்ளனர்.

பைடென், “அடுத்த பல மாதங்களில் கூட தொற்றுநோயின் போக்கை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று நேற்று அறிவித்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்பதுடன், டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலை அப்படியே உறுதிப்படுத்தும் ஒரு கூற்றாகும்.

தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான அவரது 200 பக்க மூலோபாயம் இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு வழி என்று கூறப்பட்டாலும், விஞ்ஞானம் மற்றும் கூட்டாட்சி அடிப்படையிலான முன்முயற்சிகளை பயன்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும், அதே நேரத்தில் முழு பொருளாதார நடவடிக்கைகளையும் மீட்டெடுக்க முடியும் என்ற கூற்றை முன்வைத்து பொதுமக்களை ஏமாற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இது சம்பந்தமாக, பள்ளிகளை மீண்டும் திறப்பது தான் அவர்களது திட்டநிரலில் முதன்மையானதாக உள்ளது.

உடனடி இலக்காக அடுத்த 100 நாட்களில் பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளை (K-8 schools) திறப்பது உள்ளது. மேலும் கூடுதலாக, பிறப்பிக்கப்பட்டுள்ள நிறைவேற்று ஆணை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளையும் முழுமையாக மீண்டும் திறப்பதற்கு தேவையான ஆதார வளங்களுடன் கூட்டாட்சி மற்றும் மாநில நிறுவனங்களுக்கு உதவ காங்கிரஸிடமிருந்து உரிய நிதியுதவியைப் பெற முற்படுகிறது.

பைடெனின் உயர்மட்ட அதிகாரிகள், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அவர்களது உந்துதல் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கும் சாத்தியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆளும் உயரடுக்கினர் தொற்றுநோயை விலை பேசும் வியாபாரமாகவே பார்க்கின்றனர். என்றாலும், சமூக பரவலுக்கான காரணிகளாக குழந்தைகளும் மாணவர்களும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை மிக சமீபத்திய விஞ்ஞானம் நிரூபிக்கிறது.

திட்டத்தின் நம்பிக்கையூட்டும் தொனி ஒருபுறமிருக்க, ஜனாதிபதி பைடென் தற்போதைய நிலைமை குறித்து தனது சொந்த நிதானமான மதிப்பீட்டை வழங்கியுள்ளார். “கொடூரமான உண்மை என்னவென்றால், பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்க எங்களுக்கு பல மாதங்கள் பிடிக்கும்,” என்று அவர் கூறினார், என்றாலும் கூட அவர் பதவியேற்று முதல் 100 நாட்களுக்குள் 100 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

புளூம்பேர்க் தடுப்பூசி கண்காணிப்பாளரின் கருத்துப்படி, அமெரிக்கா நாளொன்றுக்கு தோராயமாக 940,000 தடுப்பூசி குப்பிகளை வழங்கி வருகிறது, இதன் அர்த்தம் பைடென் தனது வாக்குறுதியை நிறைவேற்ற சற்று கூடுதலாக மட்டுமே செயலாற்ற வேண்டியுள்ளது.

மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பூசிகளில் வெறும் 49 சதவிகிதம் மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் கூட இந்தப் பணியை சீர்படுத்த பைடெனை பொறுப்பாக்குகிறது. “ஆனால் அது உண்மையில் குறைந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டது. மேலும், “இந்த காலகட்டத்தில், கிடைக்கக்கூடிய தடுப்புமருந்து அளவுகள் 200 மில்லியன் ஊசிகள் போடுவதற்கு போதுமானதாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தது.

இருப்பினும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உடனடி எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். டைம்ஸ் குறிப்பிட்டது போல, ஃபைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் உற்பத்தியை உள்நாட்டிலும் உலகளவிலும் அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (Defense Production Act) செயல்படுத்தியதன் பின்னர் கூட, “அதிக உற்பத்தியைப் பெறுவதற்கு சிறிதளவும் வழியில்லை.”

இந்த உயிர் காக்கும் சிகிச்சை முறைகளுக்கான உலகளாவிய தேவை, சர்வதேச ஒருங்கிணைப்பைத் தாண்டி, அவற்றை யார் பெற வேண்டும் எனத் தீர்மானிக்கும் தடுப்பூசி தேசியவாதமாக புவிசார் அரசியல் பதட்டங்களை மேலும் அதிகரித்து வருகிறது. தற்சமயம், அமெரிக்காவில் ஒவ்வொரு 100 பேருக்கு அண்ணளவாக 5.6 அளவுகள் வீதம் தடுப்புமருந்து வழங்கப்படுகின்றது. இருப்பினும், 100 பேருக்கு குறைவானவர்கள் தான் இரண்டு அளவு தடுப்பூசி முறையை பூர்த்தி செய்துள்ளனர். இஸ்ரேல், அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் மட்டுமே தடுப்பூசி விநியோகத்தில் ஓரளவு வெற்றியைக் கொண்டுள்ளன. ஐரோப்பாவின் முயற்சிகள் நத்தை வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன. தென்னாபிரிக்காவில், மருத்துவ பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டு, தடுப்பூசிகள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நோய்தொற்றை எதிர்கொள்ளும் முன்னேற்பாடுகள் குறித்து நிறைவேற்று சபையில் தான் வழங்கிய தொடக்கவுரையில், உலகம் “பேரழிவுகர தார்மீக தோல்வியின்” விளிம்பில் இருந்ததாக எச்சரித்தார். அவர், “இந்த தோல்வியின் விலை உலகின் மிக வறிய நாடுகளில் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பலி கொடுப்பதாக இருக்கும். மிக வறிய நாடுகளிலுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதற்கு முன்னர் பணக்கார நாடுகளைச் சேர்ந்த இளைய, ஆரோக்கியமான வயதுவந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது சரியல்ல” என்றும் தெரிவித்தார்.

வைரஸின் கட்டுப்பாடற்ற பரவும் தன்மை அதன் தொடர்ச்சியாக புதிய கவலையளிக்கும் பிறழ்வுகளைத் தூண்டுகிறது. ஏற்கனவே வைரஸின் கலிபோர்னிய திரிபுவகையான CAL.20C, லாஸ் ஏஞ்சல்ஸில் வரிசைப்படுத்தப்பட்ட வைரஸின் பாதியளவு சக்தியை கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையினதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தின் (Cedars-Sinai Medical Center) ஆராய்ச்சி விஞ்ஞானி ஜாஸ்மின் பிளம்மர், “ஐரோப்பாவிலிருந்து கடக்காத எங்களது சொந்த பிரச்சினை எங்களுக்கு இருந்தது. இது உண்மையில் இங்கு தான் தோன்றியது, மேலும் விடுமுறை நாட்களில் அது வெளிப்படுவதற்கும் வெடித்தெழுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று நியூயோர்க் டைம்ஸூக்கு தெரிவித்தார். பல நாடுகளில் SARS-CoV-2 வைரஸின் இன்னும் பல பரவக்கூடிய திரிபுவகைகளின் விரைவான மீள்எழுச்சி விஞ்ஞான சமூகங்களுக்கு மத்தியில் ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இன்னும் கூடுதலான சிக்கலுக்கு ஆதாரங்களாக இருந்துள்ள 501Y.v2 என்றழைக்கப்படும் வைரஸின் தென்னாபிரிக்க திரிபுவகை மற்றும் பிரேசிலின் மனாஸ் நகரில் P.1 என்று பெயரிடப்பட்ட திரிபுவகை போன்ற சில வைரஸ் பிறழ்வுகள், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்தொற்றுக்களால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாட்டை தவிர்க்கலாம்.

இந்த கண்டுபிடிப்புக்கள் முன்னேற்றங்கள் குறித்த நம்பிக்கையான திருப்பத்தை வழங்கிய போதிலும், தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூட அவற்றை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது, இது, அமெரிக்காவை வணிகத்திற்கு திறந்து வைப்பதற்கான பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளுக்கு அவர் உடன்படுவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

வைரஸின் இங்கிலாந்து திரிபுவகையான B.1.1.7 இன் கொடூரத் தன்மை குறித்து இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாசம் தொடர்புபட்ட வைரஸ் அச்சுறுத்தல்கள் ஆலோசனைக் குழு (New and Emerging Respirtory Virus Threats Advisory Group - NERVTAG) வெளியிட்ட சமீபத்திய ஆய்வு அறிக்கையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், அசல் வைரஸ் திரிபுவகையினால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த திரிபுவகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதை கண்டறிந்தன. 28 நாட்களுக்குள் இறக்கும் அபாயம் 1.35 ஆக இருந்தது, இது சராசரியாக 35 சதவிகித அதிகரித்தளவிலான இறக்கும் அபாயத்தைக் குறிக்கிறது.

கட்டுரை குறிபிட்டுவது போல, முழுமையாக இறக்கும் அபாயம் குறைவாக இருந்தாலும், “இந்த பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கவனத்தில் கொள்ளாத திரிபுவகை (non-variant of concern) நோய்தொற்றுடன் ஒப்பிடுகையில் B.1.1.7 திரிபுவகை வைரஸ் தொற்று அதிகப்படியான இறக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்ற யதார்த்தமான நிகழ்தகவு உள்ளது” என்று அவர்கள் குறிப்பிட்டனர். கடந்த வாரம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் B.1.1.7 திரிபுவகை வைரஸ் அமெரிக்காவில் தீவிர ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று குறிப்பிட்டது.

தொற்றுநோயை எதிர்கொள்வதில் மக்களை மழுங்கடிக்கும் வகையில் பைடென் நிர்வாகமும் ஊடகங்களும் வழங்கிய கருத்துக்களுக்கு மாறாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனரும், ஜனாதிபதி பைடெனுக்கு கொரோனா வைரஸ் விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவருமான மைக்கல் ஓஸ்டர்ஹோம், தனது கடுமையான மதிப்பீட்டை பின்வருமாறு வழங்கியுள்ளார்:

“ஐரோப்பாவில், குறிப்பாக, தென்னாபிரிக்காவில் நாம் கண்ட அனுபவத்தின் அடிப்படையில், இந்த திரிபுவகை வைரஸ் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்பாராத வகையில் நாமும் எதிர்கொள்ளவிருக்கிறோம். அடுத்த 6 முதல் 12 வாரங்களில், இதுவரை சந்தித்திராத ஒரு சூழ்நிலையை இந்த வைரஸ் பெருந்தொற்றால் நாம் எதிர்கொள்ளவிருப்பது குறித்து நான் தீவிரமாக கவலைப்படுகிறேன். பெரும்பாலான மக்கள் இன்னும் உணரவில்லை என்று நான் கருதாத ஒரு சவாலாக உண்மையில் அது இருக்கும்… உடனடியாகவா அல்லது பின்னர் தான் எதிர்வினையாற்றப் போகிறோமா என்பதில் தான் வித்தியாசம் இருக்கப் போகிறது. கேள்வி என்னவென்றால், எவ்வளவு விரைவில் நாம் அதைச் செய்வோம்? என்பதே. மரத்தில் கார் மோதிய பின்னர் தடுக்க முயற்சிக்கிறோமா, அல்லது அந்த மோதல் ஏற்படுவதற்கு முன்னரே காரை தடுக்க முயற்சிக்கிறோமா? அதுதான் சவால். இந்த விவாதத்தை இன்னும் நடத்த உண்மையில் நாம் தயாராக இருக்கிறோமா என்பது மட்டும் எனக்குத் தெரியாது.”

வைரஸ் பரவுவதைத் தடுக்க, அவரச நடவடிக்கைகளைச் செயல்படுத்த தொழிலாளர்கள் தலையிட வேண்டும். இது, அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமானம் வழங்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட, அனைத்து அத்தியாவசியமல்லாத உற்பத்திகளை நிறுத்திவைப்பதை உள்ளடக்கியது.

Loading