முன்னோக்கு

பேஸ்புக் இடதுசாரிப் பக்கங்களையும் தனிநபர்களையும் அகற்றுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேஸ்புக் வெள்ளிக்கிழமை, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கான பக்கங்கள் மற்றும் கணக்குகளை அகற்றியது. பேஸ்புக் கணக்குகள் ஏன் முடக்கப்பட்டன என்பதற்கு விளக்கமளிக்காததுடன், நீக்குதல் நிகழ்ந்ததாக பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் இல்லை.

பேஸ்புக்கின் முடக்கப்பட்ட கணக்கு அறிவிப்பின் திரைப்பதிவு

சோசலிச சமத்துவக் கட்சியின் குறைந்தது அரை டஜன் முன்னணி உறுப்பினர்களின் பேஸ்புக் கணக்குகளை நிரந்தரமாக முடக்கியுள்ளனர். இதில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் (International Youth and Students for Social Equality) தேசிய செயலரான ஜெனெவீவ் லீ இன் பொதுக் கணக்கு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க நிர்வாக ஆசிரியர் நைல்ஸ் நீமுத்தின் தனிப்பட்ட கணக்கு ஆகியவையும் அடங்கும். 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நீமுத் நின்றிருந்தார்.

பேருந்து சாரதிகள் மத்தியிலான எதிர்ப்பை ஒழுங்கமைக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரித்தானிய) ஆதரவோடு அமைக்கப்பட்ட இலண்டன் பஸ் ஓட்டுநர்கள் சாமானிய தொழிலாளர் குழுவின் பேஸ்புக் பக்கத்தையும் பேஸ்புக் முடக்கியது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக அடிப்படை பாதுகாப்பைக் கோருவதற்காக பேருந்து சாரதிகள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று பரவலாக விவாதிக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

கணக்குகள் முடக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் பேஸ்புக்கின் கொள்கைகளை மீறவில்லை. தங்கள் கணக்கு முடக்கத்தை நீக்க முறையீடு செய்ய முயன்றபோது, "உங்கள் கணக்கை முடக்குவதற்கான முடிவை எங்களால் மதிப்பாய்வு செய்ய முடியாது" என்று ஒரு செய்தி வந்தது.

எந்த விளக்கமும் எச்சரிக்கையும் இல்லாமல், பேஸ்புக், தான் குறிவைத்தவர்களின் அறிவுசார் சொத்துக்களை உண்மையில் பறிமுதல் செய்து, வருடக்கணக்கான அவர்களின் புகைப்படங்கள், எழுத்துக்கள் மற்றும் இணைய விவாதங்களில் இருந்து அவற்றைத் துண்டித்துவிட்டது.

இங்கிலாந்தில் சோசலிச தொழிலாளர் கட்சியும் (SWP) இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய தேசிய பேஸ்புக் கணக்கு ஏறத்தாழ 20,000 பின்தொடர்பவர்களுடன் முடக்கப்பட்டது. அத்துடன் அதன் மாணவர் குழுவான சோசலிச தொழிலாளர் மாணவர் சங்கம் சுமார் 5,000 பின்தொடர்பவர்களும், அதன் வருடாந்திர மார்க்சிச விழாவும் 12,000 பின்தொடர்பவர்களுடன் முடக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, குறிப்பாக ஸ்காட்லாந்தில் அமைப்பின் முழு கிளைகளும் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களின் பேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று சோசலிச தொழிலாளர் கட்சிப் பிரதிநிதி லூயிஸ் நீல்சன் தெரிவித்துள்ளார். "இது எங்கள் மீது ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலாக உள்ளது" என நீல்சன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவலான எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பேஸ்புக், சோசலிச தொழிலாளர் கட்சியின் பிரதான பக்கத்தின் தடையை பின்வாங்கியது. இருப்பினும் பல உள்ளூர் கிளைகள் மற்றும் உறுப்பினர்களின் பக்கங்கள் அணுகமுடியாது உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிற இடதுசாரி அமைப்புகளின் முன்னணி உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், தமக்கான எதிர்ப்பை மௌனமாக்குவதற்கு அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் உத்தரவின் பேரில், நன்கு திட்டமிடப்பட்ட தணிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தணிக்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு நீண்டகால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இத்தகைய தணிக்கை செயல்கள் சமத்துவமின்மை, சமூக துயரங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மனித உயிர்களின் பாதுகாப்பிற்கு மேலாக இலாபங்களை முன்வைத்த ஆளும் வர்க்கத்தின் பேரழிவுகரமான பிரதிபலிப்பு ஆகியவற்றிற்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பிற்கு அவர்கள் காட்டும் அவலமான பிரதிபலிப்பாகும்.

உலக சோசலிச வலைத் தளம் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் ஆகியவற்றால் இடதுசாரி அரசியல் அமைப்புகள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவது குறித்து பல ஆண்டுகளாக எச்சரித்துள்ளது.

2016 தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் "போலிச் செய்திகளை" எதிர்த்துப் போரிடுவதன் பெயரில், இணைய தணிக்கை செய்வதற்கு ஆதரவாக வாதிட்டன. இந்த நடவடிக்கைகள் தீவிர வலதுசாரி சதி கோட்பாடுகளை குறிவைப்பதாக கூறப்பட்டாலும், அவை உண்மையில் விகிதாசாரரீதியாக இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் சோசலிச அமைப்புகளை கூடுதலாக பாதித்துள்ளன.

2017 ஆம் ஆண்டில் கூகுள் “மாற்றுக் கண்ணோட்டங்கள்” மீது “அதிகாரபூர்வ” செய்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதாக அறிவித்தது. இது இடதுசாரி தளங்களுக்கான தேடல் போக்குவரத்தில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் சோசலிச, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கான தளங்களின் தணிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 25, 2017 அன்று கூகுளுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டார். அதில், "இந்த அளவிலான தணிக்கை அரசியல் கறுப்புப்பட்டியலிடல்" என்று நோர்த் எழுதினார். “கூகுளின் தணிக்கை வழிமுறையின் வெளிப்படையான நோக்கம் உங்களது நிறுவனம் அறிவிக்க விரும்பாத செய்திகளை தடுப்பதும் மற்றும் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்களை ஒடுக்குவதாகும்” என குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில் நடந்த காங்கிரசின் முன்னரான அவரின் சாட்சியத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இடம், “நீங்கள் தணிக்கை செய்த தாராளவாத சித்தாந்தத்திலிருந்து ஒரு உயர்மட்ட நபர் அல்லது நிறுவனத்தை எமக்கு பெயரிட முடியுமா” என்று கேட்கப்பட்டபோது, உலக சோசலிச வலைத் தளம் “முறைப்பாடு செய்ததிருந்ததை” அவர் ஒப்புக் கொண்டார்.

கூகுளின் உதாரணத்தைப் பின்பற்றி, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட இடதுசாரி கணக்குகளையும் பக்கங்களையும் நீக்குகின்றன. இந்த பிரச்சாரத்தில், வெள்ளிக்கிழமை ஒரு புதிய மைல்கல்லாக இருந்தது. பேஸ்புக், ஒரு இடதுசாரி அமைப்பின் முழு சமூக ஊடக பிரசன்னத்தை திட்டமிட்டு நீக்கியது. அதே நாளில் டஜன் கணக்கான பிற கணக்குகளை அழித்துவிட்டது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் 2020 ஜூலை 29 புதன்கிழமை வாஷிங்டனில் காங்கிரஸில் நம்பிக்கையின்மை மீதான அதன் நீதித்துறை துணைக்குழு விசாரணையின் போது தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளித்தார். [நன்றி: Mandel Ngan Pool via AP]

சோசலிச தொழிலாளர் கட்சியுடனான எங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சமூக ஊடகங்களை தடையின்றி அணுகுவதற்கான அதன் உரிமையையும் அதன் உறுப்பினர்களின் உரிமையையும் நாங்கள் நிபந்தனையின்றி பாதுகாக்கிறோம். மேலும் அவர்களின் அனைத்து கணக்குகளையும் உடனடியாக மீட்டெடுக்கக் கோருகிறோம்.

அனைத்து இடதுசாரி அமைப்புகளும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை தெளிவுபடுத்துவதற்கு தங்களை பற்றி சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை உருவாக்க அனுமதிப்பதற்கும் இது அவசியமாகும்.

இந்தவகை தணிக்கைக்கு எதிராக அனைத்து இடதுசாரி அமைப்புகளினதும் ஒன்றிணைந்த பிரதிபலிப்பு இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் துல்லியமாக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று முழக்கமான: "ஒருவருக்கு பாதிப்பு என்பது அனைவருக்கும் பாதிப்பு!" என்பதை முன்வைக்கவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் தனது அனைத்து ஆதரவாளர்களையும், குறிவைக்கப்பட்டுள்ள அனைவரையும் பாதுகாக்க பேஸ்புக்கை கடுமையாக எதிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களின் தணிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒவ்வொரு தளத்திலும் பொது அறிக்கைகளை வெளியிடுமாறு எங்கள் வாசகர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பேஸ்புக் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறும் தடையை பின்வாங்க வேண்டும் என்று கோரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னோக்கி கொண்டு செல்ல, தொழிலாளர்கள் தடையின்றி தகவல்களை அணுக வேண்டும். நிறுவனங்களுக்கும் அவர்கள் சேவை செய்யும் நிதிய தன்னலக்குழுவுக்கும் எதிரான போராட்டத்தில் அவர்கள் நுழையும்போது, தொழிலாளர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான கோரிக்கையையும் இணைய தணிக்கைக்கான எதிர்ப்பையும் முன்னெடுக்க வேண்டும்.

Loading