முன்னோக்கு

பேஸ்புக் சோசலிச இடதுசாரிகள் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச இடதுசாரிகளை குறிவைத்து இணைய தணிக்கை செய்யும் தீவிர பிரச்சாரத்தில் பேஸ்புக் ஈடுபட்டுள்ளது. எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படாமலும், அதிலிருந்து பின்வாங்குவதை அனுமதிக்காமலும் முழு பேஸ்புக் பக்கங்களும் அகற்றப்பட்டு, தனிப்பட்டவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன.

தணிக்கைக்கான சமீபத்திய செயலாக, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் (IYSSE) உத்தியோகபூர்வ பக்கத்தை பேஸ்புக் நீக்கியது. சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பு 2007 முதல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வ பல்கலைக்கழக மாணவர் குழுவாக இருப்பதுடன், மேலும் அதன் பேஸ்புக் கணக்கு 2013 முதல் செயலில் உள்ளது.

குழுவின் தலைவர் மற்றும் துறையின் ஆலோசகர் இருவரினதும், மேலும் ஆறு நிர்வாகிகளின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23, 2019 இல், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் வாஷிங்டனில் உள்ள காங்கிரஸின் ஒரு நிதிச் சேவை குழு விசாரணைக்கு முன் சாட்சியமளிப்பதைக் இப்படம் காட்டுகிறது.

பேஸ்புக்கின் அரசியல் களையெடுப்பில் சேர்க்கப்பட்டவர்களில், மிச்சிகனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு கட்சியின் தலைமையகமும் உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரிய அலுவலகமும் அமைந்துள்ளது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் ஜெனெவீவ் லீ மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க நிர்வாக ஆசிரியர் நைல்ஸ் நீமுத் ஆகிய இருவரினதும் கணக்குகளையும் நீக்கியுள்ளனர். இருவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைமையின் உறுப்பினர்களாவர்.

இலக்கு வைக்கப்பட்ட பிற குழுக்களிடமிருந்து கூடுதல் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பேஸ்புக் பக்கங்களையும், அமெரிக்காவின் Struggle La Lucha மற்றும் சோசலிச ஐக்கிய கட்சியுடன் தொடர்புடைய ஒரு டஜன் தனிப்பட்டவர்களின் கணக்குகளையும் அகற்றியுள்ளது. கடந்த வாரத்தின் பிற்பகுதியில், இங்கிலாந்தில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய பக்கங்கள், அவற்றை நிர்வகிப்பவர்களின் தனிப்பட்ட கணக்குகளுடன் நீக்கப்பட்டன. பிரதான பக்கம் மீட்டெடுக்கப்பட்டாலும், உள்ளூர் கிளைகள் மற்றும் உறுப்பினர்களின் கணக்குகளின் பல பக்கங்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் ஒரு திட்டவட்டமான அரசியல் சூழலில் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 430,000 மக்களைக் கொன்ற ஒரு பொங்கி எழும் தொற்றுநோய், ஒரு தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் முழுக் கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் கோபம் ஆகிய ஒரு பாரிய மற்றும் தொடர்ச்சியான அரசியல் நெருக்கடி உள்ளது. கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைக் கண்டு ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் டி.சி.யில் ஒரு பாசிச கிளர்ச்சியைத் தூண்டினார். இது தேர்தல் முடிவுகளை மாற்றுவதையும் ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். கடந்த ஆண்டில் ட்ரம்ப்பின் பெருகிய முறையிலான வெறித்தனமான மற்றும் பாசிச அறிக்கைகளின் மைய இலக்குகளாக இருந்தவை "சோசலிசம்" மற்றும் "மார்க்சிசம்" ஆகும்.

ஜனநாயகக் கட்சியினர், தங்கள் பங்கிற்கு பைடென் நிர்வாகத்தின் கீழ் குடியரசுக் கட்சியுடன் "ஐக்கியத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளனர். பைடென் ஒரு "வலுவான" குடியரசுக் கட்சியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், மேலும் பாசிச எழுச்சிக்கு அரசின் உயர் மட்ட ஈடுபாடு மற்றும் ஆதரவு பற்றிய எந்தவொரு விசாரணையையும் அம்பலப்படுத்தலையும் எதிர்க்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டன் போஸ்ட், "காங்கிரஸ் மீதான தாக்குதல் உள்நாட்டு தீவிரவாதிகள் மீது பரந்த ஒடுக்குமுறையைத் தூண்டும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது வலதுசாரி வன்முறையை "நாட்டின் நரம்பு மண்டலத்தை பிடித்துள்ளதாகத் காணப்படும் ஒரு நோய்" என்று குறிப்பிடுகின்ற அதே வேளையில், பேஸ்புக்கின் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது என்னவென்றால், இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆளும் வர்க்கத்தினதும் அரசாங்கத்தினதும் பிரிவுகளிலிருந்து ஆதரவை நம்பியிருக்கக்கூடிய வலதுசாரிகள் பிரதான இலக்கு அல்ல என்பதை காட்டுகின்றது. "உள்நாட்டு தீவிரவாதம்" என்ற பரந்த பிரிவின் கீழ், தாக்குதல் இடதுசாரிகள் மீது கவனம் செலுத்தப்படும்.

தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை திசைதிருப்பவுதே இதன் நோக்கமாகும். உண்மையில், பேஸ்புக்கின் நடவடிக்கைகளுக்கு முன்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் கடைசி இடுகைகளான உலக சோசலிச வலைத் தளத்தின் இணையவழி கூட்டங்களான “அமெரிக்கா எங்கே செல்கிறது? ட்ரம்பின் சதி மற்றும் பாசிசத்தின் எழுச்சி ஆகியவற்றிற்கான இணைப்புகளையும், மற்றும் “தொற்றுநோய் மற்றும் ட்ரம்பின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி”, “குடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்”, “ட்ரம்பின் பாசிசவாத கும்பல் பணயக்கைதிகளை பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” ஆகிய உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் கொண்டிருந்தது.

பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படவில்லை. அவர்கள் அரசாங்கத்துடனும் குறிப்பாக ஜனநாயகக் கட்சியுடனும் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள். இது கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் எதிர்ப்பதுடன் மற்றும் மிகவும் கூர்மையாக கவனத்திற்கு எடுக்கின்றது.

2017 ஆம் ஆண்டு தொடங்கி, உலக சோசலிச வலைத் தளம் இடதுசாரி மற்றும் சோசலிசக் கருத்துக்களின் தணிக்கை மற்றும் கறுப்புப்பட்டியலிட்டதை அம்பலப்படுத்தி அவற்றிற்று எதிரான எதிர்ப்பை அணிதிரட்டியது. “தகுதியுடைய உள்ளடக்கத்தை” மேம்படுத்துவதற்கும் “மாற்றுக் கருத்துக்களின்” தரவரிசையை குறைப்பதற்கும் கூகுள் அதன் தேடல் வழிமுறைகளை மாற்றுவதற்கான நகர்வுகளுடன் இது ஆரம்பமானது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, உலக சோசலிச வலைத் தளம் குறிப்பாக குறிவைக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டார்.

கூகுளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், ரெடிட் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் சோசலிசக் கருத்துக்களை அணுகுவதைத் தடுப்பதுடன் மற்றும் தணிக்கை செய்கின்றன. இப்போது, முன்னோடியில்லாத நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் அதன் தணிக்கை பிரச்சாரத்தை அதிகரித்து வருகிறது. பேஸ்புக்கால் முதலில் குறிவைக்கப்பட்ட சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பக்கம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர்கள் மிச்சிகனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் பரவலாகத் தொடங்கியிருந்த நிலையில், மிச்சிகனில் உள்ள வாகனத் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு எதிராக தன்னிச்சையான வேலைநிறுத்தங்களைத் தொடங்கினர்.

வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்து உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், முதன்மையாக பேஸ்புக் மூலம் வாசிக்கப்பட்டன.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகள் மற்றும் தகவல்துறையினர் மத்தியில் எதிர்ப்பை பரவலாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தணிக்கை நோக்கிய உந்துதலை பின்வாங்கச்செய்ய முடியும்!

இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொருவரும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது:

1. பேஸ்புக்கின் நடவடிக்கைகளை உடனடியாக மாற்றியமைக்கக் கோரி அறிக்கைகளை info@support.facebook.com மற்றும் zuckerberg@fb.com இற்கு அனுப்பவும். உங்கள் கடிதங்களின் நகல்களை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட அவற்றை comments@wsws.org இற்கு அனுப்பவும்.

2. இந்த அறிக்கையை உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனும், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற தளங்கள் உட்பட சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரவும். #StopCensoringSocialism என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்துக்கொள்ளவும்.

3. இடதுசாரி தனிநபர்கள் மீதான பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடக நிறுவனங்களின் தணிக்கை குறித்து உங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்புங்கள். இதன் மூலம் இந்த தாக்குதல்களை நாங்கள் பகிரங்கப்படுத்தவும் எதிர்க்கவும் முடியும்.

Loading