முன்னோக்கு

பேஸ்புக் சோசலிச பக்கங்களுக்கான சேவையை மீட்டெடுத்து, பக்கங்களை அழித்தது ஒரு "தானியங்கிமுறை தவறு" என்று கூறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, பரவலான எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பேஸ்புக் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) பக்கத்தை, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) முன்னணி உறுப்பினர்களின் கணக்குகளுடன் மீட்டெடுத்தது.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் இன் கேள்விகளுக்கு பதிலளித்த பேஸ்புக், நீக்குதல்கள் ஒரு “தானியங்குமறை தவறின்” விளைவு எனக்கூறி, மேலும் “தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.” எனப் பதிலளித்தது.

உலக சோசலிச வலைத் தளத்தின் பேஸ்புக்கின் தணிக்கை குறித்து பைனான்சியல் டைம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது

எந்தவொரு விளக்கமும் இல்லாமல், அதனை மீள் அமைக்கமுடியாமல் செய்த பின்னர் பேஸ்புக் இந்த பக்கங்களை முடக்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் சேவையை மீட்டெடுத்தது. நீக்கப்பட்ட தனிப்பட்டவர்களின் பக்கங்களில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் தேசிய செயலாளர் ஜெனெவீவ் லீ மற்றும் உலக சோசலிச வலைத் தள (WSWS) அமெரிக்க நிர்வாக ஆசிரியர் நைல்ஸ் நீமுத் ஆகியோரினதும் அடங்கும்.

அரசியல் களையெடுப்பை கண்டிக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கைகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஒரு தொகை ஆதரவான அறிக்கைகளும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டன.

"சோசலிச பக்கங்களை மூடியபின் பேஸ்புக் கோபத்தைத் தூண்டுகிறது" என்ற தலைப்பில் ஒரு முதல் பக்க கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் இந்த சர்ச்சையை அறிவித்தது. செய்தித்தாள் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இங்கிலாந்து) தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் ஆகிய இருவரையும் பேட்டி கண்டது.

"இந்த குறிப்பிட்ட தடை பின்வாங்க செய்யப்பட்டிருந்தாலும், இது அடுத்து என்ன வரக்கூடும் என்று எங்களுக்குத் தெரியாத ஒரு எச்சரிக்கையாகும்" என்று நோர்த் தெரிவித்ததாக கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. "சமூக ஊடகங்கள் ... தனியாருக்குச் சொந்தமானவை, ஆனால் உண்மையில் பொதுவாக இது சந்தைப்படுத்தும் இடமாக பயன்படுகிறது" என்றும் "அவர்கள் தங்கள் சக்தியை முற்றிலும் ஜனநாயக விரோதமான முறையில் பயன்படுத்துகிறார்கள்" என்றும் மார்ஸ்டன் கூறினார்.

கணக்குகளை முடக்குவது என்பது ஒரு தொழில்நுட்ப தடுமாற்றத்தின் விளைவு என்ற பேஸ்புக்கின் கூற்று எந்தவொரு நம்பகத்தன்மையையும் இல்லாததுடன், அது பகிரங்கமாக நேர்மையற்றது. சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னணி உறுப்பினர்களை அடையாளம் காண சமூக ஊடக நிறுவனம் நேரத்தையும் வளங்களையும் தெளிவாக முதலீடு செய்திருந்தது.

காங்கிரஸின் விசாரணைகள் மற்றும் இராணுவ பார்வையாளர்களுக்கு முன்பாக பேஸ்புக் வேண்டுமென்றே "தீவிரமான" அரசியல் கண்ணோட்டங்கள் என்று அழைப்பதை எதிர்த்துப் போராட முற்படுகிறது என்பதை ஒத்துக்கொண்ட அறிக்கைகளால் இந்த கூற்று பொய்யானது என்பது நிரூபிக்கப்படுகின்றது.

2018 இல் நேட்டோ மாநாட்டில் ஜெனரல்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பார்வையாளர்களுக்கு முன்பாக பேசிய பேஸ்புக் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ், “ஒட்டுமொத்தமாக நமது சமூகங்கள், அனைத்து தகவல்களும் சமமாக உருவாக்கப்படவில்லை என்ற கருத்தை ஏற்க தயாராக இருக்க வேண்டும்” என்று அறிவித்தார். மில்லியன் கணக்கான மக்கள் "தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அல்லது ஒடுக்கப்பட்டதாக உணரும்போது" பேஸ்புக்கை "தீவிரவாத அரசியலை முன்தள்ள" பயன்படுத்துகிறார்கள் என்று அவர் எச்சரித்தார். அவர் இந்த நபர்களையும் அமைப்புகளையும் "உள்நாட்டு செல்வாக்கு செலுத்துபவர்கள்" என்று அழைத்தார்.

அதன் தளத்தின் பேச்சுக்களை கண்காணிப்பதற்காக, பேஸ்புக் தனது பாதுகாப்பு மற்றும் அமுலாக்கக் குழுவிற்கு 20,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்களில் பலர் பொலிஸ் மற்றும் உளவுத்துறை பின்னணியைக் கொண்டுள்ளனர் அல்லது ஸ்டாமோஸைப் போலவே உளவுத்துறையுடன் தொடர்புபட்ட சிந்தனைக் குழாம்களில் பணிபுரிகின்றனர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் கணக்குகளையும் முன்னணி சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் கணக்குகளையும் நிறுவனம் ஏன் அகற்றியது என்பதை பேஸ்புக் விளக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் கோருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் பக்கங்களை அகற்ற இந்த முடிவை எடுப்பதில் யார் ஈடுபட்டனர்? பேஸ்புக்கின் முடிவில் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களின் ஈடுபாடு என்ன? பேஸ்புக் எப்போதாவது சோசலிச சமத்துவக் கட்சி அல்லது அதன் உறுப்பினர்களின் நடவடிக்கை பற்றி அமெரிக்க அரசாங்கத்துடன் விவாதித்ததா? சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பேஸ்புக் இற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

அத்தகைய விளக்கம் இல்லாமல், மேலும் தன்னிச்சையான மற்றும் அரசியல்ரீதியாக நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதில் எந்தவிதமான உத்தரவாதமும் இருக்க முடியாது. அது மீண்டும் இவ்வாறு செய்யாது என்று உத்தரவாதம் அளிக்குவரை பேஸ்புக்கின் மன்னிப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக பேஸ்புக்கின் தணிக்கைச் செயலை விளம்பரப்படுத்திய மற்றும் அதை முறியடிக்க உதவிய பல வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கொள்கை ரீதியான பத்திரிகையாளர்களுக்கு உலக சோசலிச வலைத் தளம் நன்றி தெரிவிக்கிறது. ஆனால் இம்மோதல் இன்னும் முடியவில்லை.

எங்கள் வாசகர்களை பின்வருபவற்றை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்:

1. பேஸ்புக்கின் நடவடிக்கைகளை உடனடியாக மாற்றியமைக்கக் கோரி அறிக்கைகளை info@support.facebook.com மற்றும் zuckerberg@fb.com இற்கு அனுப்பவும். உங்கள் கடிதங்களின் நகல்களை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட அவற்றை comments@wsws.org இற்கு அனுப்பவும்.

2. இந்த அறிக்கையை உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனும், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற தளங்கள் உட்பட சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரவும். #StopCensoringSocialism என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்துக்கொள்ளவும்.

3. இடதுசாரி தனிநபர்கள் மீதான பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடக நிறுவனங்களின் தணிக்கை குறித்து உங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்புங்கள். இதன் மூலம் இந்த தாக்குதல்களை நாங்கள் பகிரங்கப்படுத்தவும் எதிர்க்கவும் முடியும்.

Loading