வைரஸ் பரவுகையில் பள்ளிகளை திறந்து வைத்திருக்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸின் கூடிய தொற்றுதல் தன்மை மற்றும் ஆபத்தான வகைகளின் பரவல் பிரெஞ்சு மருத்துவமனைகளை திணறடிக்கையில், பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கான அதன் முயற்சிகளை மக்ரோன் அரசாங்கம் இரட்டிப்பாக்குகிறது. அவரது கொள்கை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களால் இயக்கப்படுவதுடன், இது குழந்தைகளை பள்ளிகளில் அடைத்து வைத்திருப்பதற்காக அவற்றை திறந்து வைத்திருப்பதன் மூலம் அவர்களின் பெற்றோர் தொடர்ந்தும் வேலைக்கு செல்ல முடியும்.

திங்கள்கிழமை இரவு, கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேர், அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவைப் பெறும் முயற்சியாக LCI இற்கு ஒரு நேர்காணலை வழங்கினார். 2018 உயர்நிலைப் பள்ளி சீர்திருத்தங்களில் பள்ளி நிதி மீதான தாக்குதல்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டில் 2,650 பொதுப் பள்ளி பதவிகளை நீக்கியது போன்றவற்றை அவர் மேற்பார்வை செய்தபோதிலும், பள்ளி மூடல்கள் மூலம் குழந்தைகளின் உளவியல் ஆரோக்கியம் பாதிப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

"பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது" என்று அவர் கூறினார். "பள்ளிக்கூடம் இல்லாதிருப்பது கல்வி இழப்பு, கல்வி, சமூக, உளவியல் மற்றும் சுகாதார மட்டங்களில் கூட குழந்தைகளுக்கு மிகவும் தீவிரமான பாதிப்பாக இருக்கும்." இந்தக் கொள்கையின் விளைவாக ஏற்பட்ட இறப்புகளை நிராகரித்த அவர், “2020 ஆம் ஆண்டில் அதிக பள்ளி நாட்களை கொண்டிருந்த நாடு பிரான்ஸ்” என்று பெருமையாகக் கூறினார்.

ஒரு குடும்பம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொலைக்காட்சி உரையை 2020 ஏப்ரல் 13 திங்கள் மத்திய பிரான்சின் லியோனில் பார்க்கிறது.(AP Photo/Laurent Cipriani)

புளோங்கேர் பின்வருமாறு கூறினார், "இப்போதுள்ள நிலைமையில் பள்ளிகளை மூடுவது என்ற இந்த தீர்வு தொற்றுதலைக் குறைக்கும் என்று நான் நம்பவில்லை." இது முற்றுமுழுதான பொய் மட்டுமல்லாது, இது சர்வதேச விஞ்ஞான ஆய்வுகளுக்கு முரணானது. இந்த ஆய்வுகள் பள்ளிகள் வைரஸ்களை பரப்பும் கடத்திகளாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறன. முன்னதாக திங்களன்று, பாரிஸில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையின் தொற்று நோய்களின் தலைவரான எரிக் கொம் RMC இல் கூறியதாவது, “இது பள்ளிகளில் பரப்பப்படுகின்றது. பள்ளிகளில் பரப்பப்படாத ஒரே நாடாக பிரான்ஸ் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை ... இதற்கான விலையை நாங்கள் செலுத்த வேண்டி உள்ளது."

பின்னர் புளோங்கேரின் நேர்காணலில், அவர் தனது அரசாங்கத்தின் கொலைகார “சமூகநோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையிலிருந்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் மீது பழியை மாற்ற முயன்றார். பெப்ரவரி விடுமுறையை நீட்டிப்பதற்கான பரிந்துரைகளை நிராகரித்த அவர், "பள்ளிக் காலங்களை விட விடுமுறை காலங்களில் தொற்றுதல் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.

நேற்று, பிரான்சில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 3,041 நபர்கள் கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் அவசர முதலுதவிப்பிரிவில் கவனிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டுவது இதுவே முதல் முறை. திங்களன்று, மேலும் 445 பேர் இந்த வைரஸால் இறந்தனர். மேலும் புதிய நோய்த்தொற்றுகளுக்கான ஏழு நாள் சராசரி இரண்டு வார உயர்வான 20,447 ஐ எட்டியது. செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்பட்டதிலிருந்து, பிரான்சில் 40,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர்.

முன்னர் ஆதிக்கம் செலுத்திய திரிபுகளை விட இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க வகைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இன்னும் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கடந்த மாதம் இம்பீரியல் கல்லூரி லண்டன் நச்சுயிரியலாளரான வெண்டி பார்க்லே, இது "குழந்தைகளை அதேயளவிலான ஆபத்தில் வைக்கக்கூடும்" என்று பரிந்துரைத்தார். இஸ்ரேலில், இங்கிலாந்து வகையிலான திரிபின் 40 சதவீத நேர்மறையான தொற்றுக்கள் பள்ளி வயது குழந்தைகளிடையே உள்ளன. கடந்த வாரம் ஜெருசலேமில் உள்ள Hadassah மருத்துவமனை “மிகவும் நோய்வாய்ப்பட்ட” குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு குழந்தை கோவிட்-19 அவசர முதலுதவிப்பிரிவைத் திறந்தது. திங்களன்று ஒரு நேர்காணலில், ஒரு தென்னாபிரிக்க சுகாதாரப் பணியாளர் LCI இடம், “இந்த தென்னாபிரிக்க திரிபுவகை தீவிரமானது. நிறைய பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள் கூட இப்போது இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

இரண்டு வகைகளும் பிரான்சில் உள்ளதுடன், பரவுகின்றன. கடந்த வாரம் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை, “பெப்ரவரி இறுதியிலிருந்து மார்ச் நடுப்பகுதிக்குள்” இங்கிலாந்து வகை திரிபு பிரான்சில் “ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறியுள்ளது. கலிஃபோர்னியா மற்றும் பிரேசிலில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட வகைகளின் தற்போது அறியப்படாத விளைவுகள் பிரான்சிலும் கண்டறியப்பட்டுள்ளன. திங்களன்று, அரசாங்கத்தின் விஞ்ஞான ஆணைக்குழுவின் தலைவர் Jean-Francois Delfraissy பின்வருமாறு எச்சரித்தார், “இந்த வகைகள் இரண்டாவது தொற்றுநோய்க்கு சமமானவை. நான் என் வார்த்தைகளை கவனமாக கூறுகின்றேன்."

பள்ளிகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பணியிடங்களையும் உடனடியாக மூடுவது பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய கேள்வியாகும். மக்ரோன் அரசாங்கம் ஒரு கொள்கையை பின்பற்றுகிறது, அது பாரிய மரணங்களை ஏற்படுத்துவதுடன், அதை ஏற்படுத்தும் என்று தெரியும். ஜனவரி 22 ஆம் தேதி RTL கட்டுரை, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோனின் அறிக்கைகளை மேற்கோளிட்டு, புதிய வைரஸினால் மூழ்கடிக்கப்படுவதிலிருந்து "நாங்கள் தப்பிக்க மாட்டோம்" என்று கூறினார். ஆயினும்கூட, அதன் பரவலைத் தடுக்க எந்தவொரு தீவிர நடவடிக்கைகளையும் அரசாங்கம் மறுத்துவிட்டது.

பள்ளிகளில் தொற்று வெடித்ததன் உண்மையான அளவை மறைத்த அரசாங்கத்தின் குற்றவியல் தந்திரோபாயங்களின் விரிவாக்கம் மட்டுமே புளோங்கேரின் பொய்களாகும். தொற்றுதலின் வெடிப்பு மத்தியில் திறந்த நிலையில் உள்ள பள்ளிகளில் நாடு முழுவதும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் தொற்றுகள் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜனவரி 18 அன்று, மாணவர்களிடையே தொற்று வெடித்ததைத் தொடர்ந்து 26 நேர்மறையான தொற்றுக்களை பதிவு செய்த போதிலும், Oise இல் ஒரு பள்ளி திறந்திருந்தது. ஜனவரி 25 அன்று, Roise-en-Brie இல் உள்ள ஒரு பள்ளி 12 நேர்மறையான சோதனை முடிவுகளைப் பெற்றது, ஆயினும்கூட திறந்த நிலையில் இருந்தது. ஒரு மோசமான நிகழ்வில், Cherbourg-en-Contentin இல் உள்ள Jean-Zay மழலையர் பள்ளியில் தொற்று அதன் முழு ஊழியர்களையும் பாதித்தது. ஆனால் விரைவில் ஜனவரி 18 ஆம் தேதி முழு ஊழியர்களும் மாற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த புதிய குழுவையும் பின்னர் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளிடமிருந்து மறைமுகமாக வைரஸ் உடனடியாக பாதித்து, மழலையர் பள்ளியை மீண்டும் மூட கட்டாயப்படுத்தியது.

இன்று மாலை ஏதேனும் ஒரு வகையான கட்டுப்பாடுகளை அறிவிக்கவிருந்த மக்ரோன், குறைந்தபட்சம் சனிக்கிழமை வரை உரையாற்றமாட்டார் என்று நேற்று அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கத்தின் கொள்கை, மக்களின் உணர்வுக்கு எதிராக இயங்குகிறது. ஜனவரி 13 அன்று, BFMTV கணக்கெடுப்பில் 75 சதவீதம் பேர் புதிய பூட்டுதலுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

மக்ரோனின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கும் மற்றும் வைரஸின் கொடிய பரவலைத் தடுக்க எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்ததற்கும் பெரும் கோபம் இருந்தபோதிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” அரசியல் கட்சிகள் ஆசிரியர்களையும் தொழிலாளர்களையும் அரசாங்கத்தின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைக்கு எதிராக அணிதிரட்ட மறுத்துவிட்டன. செவ்வாயன்று, கல்வி தொழிற்சங்கங்கள் கல்வி நிதிக்காக ஒரு நாள் வேலைநிறுத்தத்தை அழைத்தன. ஆனால் வைரஸுக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிகளை மூடுவது பற்றி எதுவும் அதில் குறிப்பிடவில்லை.

மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்படுவதைத் தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் பரந்த தொழிலாள வர்க்கத்தின் பாரிய நடவடிக்கை தேவை. இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 4 ம் தேதி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பாரியளவில் பகிஸ்கரித்ததன் காரணமாக மட்டுமே இங்கிலாந்து அரசாங்கம் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இந்த நடவடிக்கை தொழிற்சங்க அமைப்பினால் அல்லாது சாமானிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்முயற்சியால் எடுக்கப்பட்டதாகும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் பணியிடங்களிலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இவை பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை முழுமையாக மூடுவதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதற்கான அடித்தளத்தை வழங்கும். நெருக்கடிகாலம் முழுவதும் முழு மக்களுக்கும் முழு வருமானம் வழங்கப்பட வேண்டும் மற்றும் சிறு வணிகங்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

Loading