கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த புதிய பூட்டுதலை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை மாலை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒரு பூட்டுதலை அறிவிக்கக்கூடும் என ஒரு வாரமான பத்திரிகை அறிக்கைகளுக்குப் பின்னர், பூட்டுதல் இருக்காது என தொலைக்காட்சியில் அறிவிக்க மக்ரோன் பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸை அனுப்பினார். ஆனால் மிக மோசமான பிரிட்டிஷ் மாறுபாட்டின் பரவல் துரிதப்படுத்தப்படுவதாக சுகாதார அதிகாரிகள் பிடிவாதமாக உள்ளனர், மேலும் ஒரு பூட்டுதலால் மட்டுமே பாரிய அலை போன்ற மரணங்களைத் தடுக்க முடியும் என்கின்றனர்.

மக்ரோன் அரசாங்கமும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தை அதிகரிப்பதற்காக பாரியளவிலான உயிர்களை தியாகம் செய்யும் அரசியல் ரீதியாக குற்றவியல் தேர்வை மேற்கொண்டு வருகிறது. இந்த வார இறுதியில், ஐரோப்பாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 700,000 ஐ தாண்டியுள்ளது. இந்த இறப்புகளில் 76,000 க்கும் அதிகமானவை பிரான்சில் நிகழ்ந்துள்ளன, அதே நேரத்தில் ஐரோப்பாவில் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் 100,000 க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

மனித உயிர் இழப்பு குறித்து அப்பட்டமான அலட்சியத்துடன், காஸ்டெக்ஸ் 15 நிமிட உரையை நிகழ்த்தினார்: அதில் அவர், "ஒரு புதிய பூட்டுதலைத் தவிர்ப்பதற்கு முடிந்த அனைத்தையும் செய்வதே எங்கள் கடமை, அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும்." ஒரு பூட்டுதல் பற்றிய கேள்வி “சட்டபூர்வமாக எழுப்பப்படுகிறது” என்று காஸ்டெக்ஸ் அறிவித்தார், ஆனால் “எல்லா முனைகளிலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு அதன் மிகப் பெரிய தாக்கத்தை” கருத்தில் கொண்டு அதை நிராகரித்தார்.

தெற்கு பிரான்சின் Arles இல் உள்ள Joseph Imbert மருத்துவமனை மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு கோவிட்-19 நோயாளி தனது குடும்பத்தினருடன் பேசும் போது ஒரு செவிலியர் தொலைபேசியை வைத்திருக்கிறார். அக்டோபர் 28, 2020 [AP Photo/Daniel Cole]

மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட, அரசாங்கத்தின் சுகாதார மூலோபாயம் அடிப்படையில் மாறாமல் இருக்க, கூடுதல் நடவடிக்கைகளை அவர் விவரித்தார். ஊரடங்கு உத்தரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வது அல்லது உள்வருவது தடை, தேசிய எல்லைகளில் சோதனைகளை நடத்துவது, 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பெரிய வணிக மையங்களை மூடுவது மற்றும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையினரால் ரோந்தை அதிகரிப்பது ஆகியவையாகும்.

பிரிட்டிஷ் மாறுபாடு தன்னை ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பே, பிரான்சில் ஒரு நாளைக்கு சுமார் 23,000 புதிய தொற்றுக்கள் மற்றும் 500 புதிய COVID-19 இறப்புகளின் மத்தியில் இந்த நடவடிக்கைகள் பரவலான தொற்றுநோயைத் தடுக்கப் போவதில்லை.

உத்தியோகபூர்வ அரசாங்க அறிக்கைகள் கூட அதன் கொள்கை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்துகிறது. "ஊரடங்கு உத்தரவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்த மாறுபாடுகளின் முன்னால் போதுமானதாக இல்லை" என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஜனவரி 28 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், காஸ்டெக்ஸின் பேச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறினார். மூன்றில் இரண்டு பங்கு கொத்துகளைக் கொண்ட பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் பரவுதல் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்: “ஒரு மாசுபடுவதைத் தவிர்ப்பது கடினம், குடும்பத்தில் மாசுபாடு, தொழில்முறை நடைமுறையுடன் இணைக்கப்பட்ட மாசுபாடு உள்ளன."

காஸ்டெக்ஸ் அறிவித்த கொள்கையை மருத்துவர்கள் கண்டித்துள்ளனர். "சுகாதார நிலைமையை மீட்டெடுக்க இது உதவாது என்பது வெளிப்படையானது" என்று Garches இல் உள்ள Poincaré மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் Djillali Annane கூறினார். "பள்ளிக்கூட விடுமுறை காலப்பகுதியுடன், 10 நாட்களில் தொற்றுநோயை மீண்டும் கட்டுப்படுத்த இந்த அளவையும், எல்லைகளை ஓரளவு மூடுவதையும் மட்டுமே நாங்கள் எண்ணினால், அது மிகவும் ஆபத்தான மற்றும் தைரியமான பந்தயம்" ஆக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

இதேபோல், தொற்று நோய் பேராசிரியை Anne-Claude Crémieux கூறினார்: “அதிகரிப்பு மிக விரைவாக இருக்கும் தருணம் நெருங்குகிறது. எனவே கட்டுப்படுத்துதல் இன்னும் அதிகமாக தேவையாக உள்ளது. "வியட்நாம், தைவான் மற்றும் சீனா போன்ற "வைரஸை கிட்டத்தட்ட அகற்றிய" சில நாடுகளை குறிப்பிட்டு, இதற்கு "பொருளாதார தியாகங்களின் விலையில் வைரஸை அகற்ற" ஒரு முடிவு தேவை என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், பிரான்சிலும் ஐரோப்பாவிலும், அரசியல் சக்தி வைரஸ் பரவ அனுமதிக்க, நேரெதிர் தேர்வு செய்துள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

வைரஸைத் தடுக்க, பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்: "முதலில் ஒரு கடுமையான மற்றும் நீண்ட கட்டுப்பாட்டை விதிக்க வேண்டியது அவசியம், பின்னர் அதை நிறுவுவதற்கு ஒரு தனிமைப்படுத்துதல் மற்றும் மாசுபடுத்தும் ஆதாரங்களைத் தேடுவது மிகவும் பயனுள்ள கொள்கை. ஆனால் இந்தத் துறையில் பொது சுகாதார நிபுணர்களின் படை எங்களுக்குத் தேவைப்படும், அது எங்களிடம் இல்லை, அதை மீண்டும் கட்டியெழுப்ப மாதங்களும் வளங்களும் தேவைப்படும்" என பேராசிரியை தெரிவித்தார்.

மக்ரோன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் வைரஸுக்கு எதிரான ஒரு தீவிரமான போராட்டத்திற்கு விரோதமாக இருப்பதன் மூலம், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சாத்தியமான மூலோபாயமும் இல்லை என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த எண்ணிக்கையினருக்கு தெளிவாகத் தெரிகிறது. தடுப்பூசி விநியோகங்களில் பெரும் தாமதங்கள் உள்ளன, புதிய திரிபுகளுக்கு எதிரான செயல்திறன் இப்போது தெரியவில்லை, முன்பை விட கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். ஆனால் உயிர்களைப் பாதுகாக்கும் கொள்கை முதலாளித்துவ அமைப்பு மற்றும் மக்ரோன் பாதுகாக்கும் சிறு நிதி பிரபுத்துவத்தின் வர்க்க நலன்களுடன் பொருந்தாது.

சிறு வணிகங்களுக்கு உதவ, அத்தியாவசியமற்ற பொருளாதாரச் செயல்பாடு உயிரிழப்பில் தொடர வேண்டும் என்ற அவரது வாதங்கள் முட்டாள்தனமானவை. தீவிர சிகிச்சை பிரிவுகள் செயலிழப்பதை தவிர்ப்பதற்காக காப்பி அருந்துமிடங்கள், உணவகங்கள், விளையாட்டு அரங்குகள், இசை அரங்குகள் போன்ற பெரும்பாலான வணிகங்களை அவர் மூடினார். அத்தியாவசியமற்ற வேலைகளையும் நேருக்கு நேர் பள்ளிப்படிப்பையும் பராமரித்து வருகிறார், ஆனால் வங்கிகளுக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் இலாபங்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விவரிக்க முடியாத ஒரே முக்கியமான கருத்தாக நிதிச் செல்வம் என்று ஒருவர் எடுத்துக் கொண்டாலும், மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைமையிலான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கையை விட கடுமையான சுகாதாரக் கொள்கை கூட்டாக அதிக இலாபம் தரும். பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.2 மில்லியன் தொற்றுக்கள், 76,000 இறப்புக்களுடன் 2020 ஆம் ஆண்டில் 8.3 சதவீதமும், ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2 மில்லியன் தொற்றுக்கள், 58,000 இறப்புக்களுடன் 5 சதவீதமும் குறைந்துள்ளது. தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 911 தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் 2.5 சதவீதமும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 89,522 தொற்றுக்கள், 4,636 இறப்புக்களுடன் 2.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மக்ரோனின் குறிக்கோள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதல்ல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட 2,000 பில்லியனுக்கும் அதிகமான யூரோக்களின் மீட்பு திட்டங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதியப் பிரபுத்துவத்திற்கு செல்வத்தை தொடர்ந்து மாற்றுவதாகும். ஒரே முக்கியமான பிரச்சினை, அரசாங்கத்தின் பார்வையில், இது பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்களில் ஏற்படுத்தும் தாக்கமாகும்.

மக்ரோனின் அறிவிப்புக்காக நேற்று தனது செய்தியை அர்ப்பணித்த Journal du dimanche பத்திரிகை குறிப்பிட்டது: அரசாங்கத்தின் முடிவில் "ஒரு கடைசி வாதம் பெரிதும் எடைபோட்டது": "ஒன்றரை மாதம் பூட்டப்பட்டதால் பொருளாதார சேவைக்கு செலுத்தப்பட்ட பணம், நிதி அமைச்சகத்தால் 25 பில்லியன் யூரோக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ‘நாங்கள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்,’ என்று பொருளாதார அமைச்சர் புருனோ லு மேர் மக்ரோனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரெஞ்சு முதலாளிகள் சங்கத்தின் (MEDEF) தலைவர் Geoffroy Roux de Bézieux, லு மேரின் வேண்டுகோளை MEDEF தானே முன்வைத்ததை உறுதிப்படுத்தினார். "நாங்கள் தொடர்ந்து புருனோ லு மேர் மற்றும் அவரது அணிகளுடன் பரிமாறிக்கொண்டோம். சுகாதார நெருக்கடிக்கு ஒரு எளிய தீர்வு இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மார்ச் மாதத்திற்கு ஒத்த ஒரு தீர்வைத் திரும்பப் பெறுவதில் வணிகர்கள் கோபப்படுவார்கள், ”அதாவது, வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தனிப்பட்ட முறையில் பள்ளிப்படிப்பு மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தும் ஒரு பூட்டுதல்.

இந்த விஷயத்தில் MEDEF தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது, அவை பொருளாதார பிணை எடுப்புத் திட்டங்களை ஆதரிக்கின்றன மற்றும் பல்கலைக்கழகங்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க அழைப்பு விடுக்கின்றன.

எவ்வாறாயினும், ஒரு பூட்டுதலுக்கு நிதியளிக்க 25 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும், 2020 ஆம் ஆண்டில் மட்டும் பேர்னார் அர்னோல்ட் தனது செல்வத்தில் சேர்க்க முடிந்த இலாபத்தை விட குறைவாகவே பிரதிபலிக்கிறது. அவரது செல்வம் 73 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலருக்கு (121 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது, உழைக்கும் மக்களின் இழப்பில் நிதியளிக்கப்பட்ட அரசாங்க பிணை எடுப்புகளுக்கு நன்றி.

தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தொழிலாளர் இறப்புகளின் மூலம் தங்கள் செல்வத்தை வளர்த்துக் கொள்ளும் கோடீஸ்வர ஒட்டுண்ணிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாகும். இதற்கு பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அடிமட்ட மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது, முதலாளித்துவ அரசுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக இருப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்கான போராட்டம் ஆகியவை தேவையாக உள்ளது.

Loading