மியான்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டாட்மடோ (Tatmadaw) என்றும் அழைக்கப்படும் மியான்மரின் இராணுவம் நேற்று ஒரு சதித்திட்டத்தில் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதுடன், ஆங் சான் சூ கி உட்பட ஆளும் தேசிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் (NLD) முக்கிய தலைவர்களை கைது செய்தது. ஆயுதப்படைகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கி, ஒரு வருடம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் தலைமை தளபதியான, மூத்த இராணுவ தளபதி மின் ஆங் ஹ்லைங் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

ஊடகங்கள் மற்றும் தொலைத்தொடர்புகளை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. சில இணைய சேவைகளுடன், நாட்டின் நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக யாங்கோன் வணிக மையங்கள் மற்றும் பிற நகரங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்புகள் இராணுவத்தின் மியாவடி தொலைக்காட்சி சேனலுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துருப்புக்களும், கவச வாகனங்களும் ஏற்கனவே வீதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.

மியான்மாரின் தலைவர் ஆங் சான் சூ கி, டிசம்பர் 11, 2019, புதன்கிழமை நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உரையாற்றுகிறார் (AP Photo/Peter Dejong)

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான சாக்குப்போக்காக நவம்பர் 8 தேசிய தேர்தலில் நடந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிடப்பட்டது, இதில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 83 சதவீத வாக்குகளை வென்று, பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளின் மொத்தம் 476 இருக்கைகளில் 396 ஐ கைப்பற்றியுள்ளது. அதேவேளை, இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி (Union Solidarity and Development party) வெறும் 33 இருக்கைகளை மட்டுமே வென்றுள்ளது. புதிய பாராளுமன்றம் நேற்று கூட்டப்படவிருந்தது.

தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க இராணுவம் மறுத்துவிட்டது, ஜனவரி மாத நடுப்பகுதியில் 90,000 க்கும் மேற்பட்ட தேர்தல் மோசடிகள் நடந்ததாக புகார் கூறியது. இதற்கு பகிரங்கமான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம், இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஜா மின் துன் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால் சதித்திட்டம் குறித்து எச்சரித்தார். கடந்த வியாழக்கிழமை, முறைகேடுகள் பற்றிய கூற்றுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. சர்வதேச பார்வையாளர்களும் பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்டவை சதித்திட்டத்திற்கு எதிராக மியான்மரின் இராணுவத்தை எச்சரிக்கும் அறிக்கையை வெளியிட்டன. சனிக்கிழமையன்று பதிலளித்த அதன் தளபதி மின் ஆங் ஹ்லேங், இராணுவம் ஒரு சதித்திட்டத்தை திட்டமிடுவது பற்றி மறுக்கவில்லை, ஆனால் அது அரசியலமைப்பை மதிக்கும் என்று கூறினார்.

ஒரு இராணுவ செய்தித் தொடர்பாளர், தேர்தல் முடிவுகளில் “பெரும் முரண்பாடுகள்” இருந்ததுடன், “பயங்கரமான மோசடி” நிகழ்ந்துள்ளது என்றும், அவற்றை நாட்டின் தேர்தல் ஆணையம் “தீர்க்க தவறிவிட்டது” என்றும் வலியுறுத்தினார். இராணுவம் அரசியலமைப்பின் 417 வது பிரிவைச் செயல்படுத்தியது, இது “ஐக்கியத்தை சிதைக்க அல்லது தேசிய ஒற்றுமையை சிதைக்க” அச்சுறுத்தும் நிலைமைகள் ஏற்படுகையில் அவசரகால நிலையை அறிவிக்க அனுமதிக்கிறது. புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என்று இது அறிவித்தது, ஆனால் கால அட்டவணை எதுவும் வழங்கப்படவில்லை.

முந்தைய இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தின் முக்கிய பிடிகள் தொடர்ந்து கைக்குள் இருப்பதை உறுதி செய்ய 2008 அரசியலமைப்பை உருவாக்கியது. இரண்டு பாராளுமன்ற சபைகளிலும் கால் பகுதி இருக்கைகள் இராணுவ நியமனதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன, இது எந்தவொரு அரசியலமைப்பு திருத்தத்தையும் தடுக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அமைச்சகங்களின் எஜமானர்களாகவும் இராணுவம் தான் உள்ளது, எனவே எந்தவொரு குடிமக்களின் கட்டுப்பாட்டிலிருந்தும் அவை விலக்கப்படுகின்றன.

2010 ல் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சூகி மற்றும் அவரது NLD கட்சியும் இந்த அபத்தமான ஜனநாயகக் பாசாங்கை ஏற்றுக்கொண்டனர். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு ஆதரவாக சீனாவை இராணுவம் கைவிட்டதன் ஒரு பகுதியாகும். இராணுவ ஆதிக்கத்தை தங்கள் வணிக நலன்களுக்கு ஒரு தடையாக கருதும் நாட்டின் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை NLD பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்கள் ஆதரவுக்காக மேற்கு நோக்கி திரும்பினர். ஒபாமா நிர்வாகம், மியான்மாரின் வாஷிங்டனுக்கான மாற்றத்தை சீனாவுக்கு எதிரான "ஆசியாவிற்கான முன்னிலை" வெற்றிகளில் ஒன்றாகக் கருதியது. வாஷிங்டன், மியான்மரின் விலக்கப்பட்ட நிலையை (pariah status) முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், பொருளாதாரத் தடைகளை கைவிட்டு, நாட்டை "வளரும் ஜனநாயகம்" என்று அறிவித்தது.

NLD 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஒரு அரசாங்கத்தை அமைத்தது. "ஜனநாயகத்தின் சின்னம்" என்று அழைக்கப்படும் சூ கி, உண்மையில் இராணுவ ஆதரவுடைய ஆட்சிக்கான பயண தூதரானார். அவர் வெளிநாட்டு முதலீட்டை நாடினார் மற்றும் முஸ்லீம் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக கொலைகார நடவடிக்கைகளை செயல்படுத்தி நூறாயிரக்கணக்கானவர்களை நாட்டை விட்டு வெளியேற விரட்டிய இராணுவத்தின் மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதை பாதுகாத்தார்.

COVID-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் பின்னணியில், சர்வதேச அளவில் அரசாங்கங்கள் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதன் மூலம் நாட்டின் முழு கட்டுப்பாட்டையும் திரும்பப் பெறுவதற்கான இராணுவத்தின் முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. தேர்தல் மோசடி மற்றும் "திருடப்பட்ட தேர்தல்" பற்றிய பொய்களின் அடிப்படையில், ஜனவரி 6 ம் தேதி பாராளுமன்றத்தைத் தாக்கி ஒரு பாசிச சதித்திட்டத்தைத் உருவாக்க முயன்ற ட்ரம்பின் திட்டத்தை மியான்மர் இராணுவம் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து கோவிட்-19 நோய்தொற்றுக்கள் வெடித்து பரவியதன் விளைவாக மியான்மார் மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வரை மியான்மாரில் வெறும் 360 நோய்தொற்றுக்களும் 6 இறப்புக்களும் மட்டுமே பதிவாகியிருந்தன. இருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் தற்போது 140,000 நோய்தொற்றுக்கள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களுடன் கடுமையாக அதிகரித்துள்ளன, இது நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்பு முறைக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டின் (அக்டோபர் 1 முதல்) பொருளாதார வளர்ச்சி 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது, இது முன்னைய ஆண்டின் 6.8 சதவிகிதத்திலிருந்து கூர்மையான வீழ்ச்சியாக இருக்கும். 2020-21 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் வெறும் 0.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூட்டுதல் நடவடிக்கைகள் பாரிய வேலை இழப்புக்களுக்கும், அதிர்ச்சி தரும் வகையில் வறுமை கடுமையாக உயர்வதற்கும் பங்களித்தன. கடந்த செப்டம்பரில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) நடத்திய கருத்துக் கணிப்பு, நகர்ப்புற யாங்கோனில் கணக்கெடுக்கப்பட்ட 1000 வீடுகளில் 59 சதவிகித வீடுகளும், நாட்டின் கிராமப்புற வறண்ட மண்டலத்தில் கணக்கெடுக்கப்பட்ட 1,000 வீடுகளில் 66 சதவிகித வீடுகளும் நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டாலருக்கு குறைந்த வருமானத்தையே –கடும் வறுமையை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல்- கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தது. ஜனவரி 2020 இல் இதேபோன்ற கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 16 சதவிகிதம் பேர் மட்டுமே தீவிர வறுமையில் இருந்தனர்.

“இந்தளவிற்கான வறுமை நிலை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்புபட்ட பெரும் ஆபத்துக்களை விளைவிக்க அச்சுறுத்துகிறது” என்று ஆய்வின் முதன்மை எழுத்தாளர் டெரெக் ஹேடி (Derek Headey) கருத்து தெரிவித்தார். "வைரஸைக் கட்டுப்படுத்த அவசியமான அதே வேளையில், பூட்டுதல்கள் வறுமைக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன, கோவிட்-19 நோய்தொற்றின் இரண்டாவது எழுச்சியினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவை மியான்மார் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமானால், அது பெரிய மற்றும் சிறந்த இலக்கு பணப் பரிமாற்றங்களுடன் இருக்க வேண்டும். இந்த செப்டம்பர் கணக்கெடுப்பிலிருந்து, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி மோசமடைந்துள்ளது, இது கடுமையான சமூக பதட்டங்களைத் தூண்டுகிறது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மியான்மாரின் வரலாற்றசிரியர் தாந்த் மைன்ட்-யு (Thant Myint-U) இவ்வாறு எச்சரித்தார்: “கதவுகள் வேறுபட்ட, கிட்டத்தட்ட நிச்சயமாக இருண்ட எதிர்காலத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. மியான்மார் ஏற்கனவே தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு, ஆயுதங்களின் மிரட்டல்களைத் தாண்டி, வெளிப்படையாக மில்லியன் கணக்கானவர்கள் தங்களுக்கான உணவை ஈட்ட முடியாமல், மதம் மற்றும் இன அடிப்படையில் ஆழமாக பிளவுபட்டுள்ள நாடாகும்… அடுத்து நிகழவிருப்பதை எவராலும் கட்டுப்படுத்த முடியுமா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.”

புதிய பைடென் நிர்வாகம் முன்னரே மியான்மாரை நோக்கிய தனது கடுமையான போக்கிற்கு சமிக்ஞை செய்துள்ளது. உள்வரும் வெளியுறவு செயலர் அந்தோனி பிளிங்கன், காங்கிரஸின் உறுதிப்படுத்தல் விசாரணையின் போது, ரோஹிங்கியாக்களுக்கு எதிரான மியான்மாரின் அட்டூழியங்கள் இனப்படுகொலையா என்பதை தீர்மானிக்க அவர் ஒரு உள்-நிறுவன மதிப்பாய்வை மேற்பார்வையிடுவார் என்று தெரிவித்தார். மின் ஆங் ஹ்லைங் உட்பட, மியான்மாரின் உயர்மட்ட தளபதிகள், ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய, மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவர்களது விசாரணைகளை ஏற்கனவே எதிர்கொள்கின்றனர்.

நேற்றைய சதித்திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மியான்மார் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவிருப்பதாக பைடென் எச்சரித்தார். “ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றத்தின் அடிப்படையில் தான் கடந்த தசாப்தம் முழுவதும் பர்மா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியிருந்தது,” என்று மியான்மாரின் பாரம்பரிய பெயரைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்தார். “அந்த முன்னேற்றத்தில் காணும் பின்னடைவு, எங்களது பொருளாதாரத் தடை சட்டங்கள் மற்றும் அதிகாரங்களை உடனடி மதிப்பாய்வு செய்வதற்கும், அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இட்டுச் செல்லும்” என்றும் கூறினார்.

ஒபாமாவைப் போல, பைடெனும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தவித நேர்மையான ஆர்வத்தையும் காட்டவில்லை. மாறாக, வளர்ந்து வரும் சீன செல்வாக்கு பற்றிய புதுப்பிக்கப்பட்ட அக்கறையால் அமெரிக்கா உந்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் மியான்மாரின் தோல்வி, ரோஹிங்கியாவை அது நடத்துவது குறித்த சர்வதேச விமர்சனங்களுடன் கூட, சூ கி உம், அவரது அரசாங்கமும் மற்றும் இராணுவமும் நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளுக்காக பெய்ஜிங்கை நோக்கி பெரிதும் திரும்பும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இலவசமாக பெறுவது உட்பட, கோவிட்-19 பெருந் தொற்றுநோயின் பரபரப்பான தொடக்கத்தில் இருந்து மியான்மார் பெய்ஜிங்கை சார்ந்திருப்பது மேலும் ஆழமடைந்தது. தங்களது ஒரே இணைப்பு ஒரே பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative) திட்டத்திற்கு நெருக்கமாக ஒத்துழைப்பது பற்றி விவாதிக்க, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த மாதம் மியான்மாருக்கு விஜயம் செய்தார், இத்திட்டம் மியான்மார் வழியாக தென் சீனாவிற்கு செல்லும் மூலோபாய போக்குவரத்து வழிகளையும் மற்றும் குழாய்வழிகளையும் உள்ளடக்கியதாகும். பெய்ஜிங்கைப் பொறுத்தவரை, வாஷிங்டனுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களின் விநியோகத்தை உறுதிசெய்துகொள்ள, மலாக்கா ஜலசந்தி ஊடான அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள கடல்வழிகளுக்கு ஒரு மாற்று வழியாக இதை உருவாக்குவது முக்கியமாகவுள்ளது.

சதித்திட்டத்திற்கான சீனாவின் பதில் தீர்மானமாக முடக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இதை மட்டும் தெரிவித்தார்: “மியான்மாரின் அனைத்து தரப்பினரும் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பின் கீழ் தங்களது வேறுபாடுகளை சரியான முறையில் கையாள முடியும் என்றும், அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட “மனித உரிமைகள்” தாக்குதல் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கான எதிர்பார்ப்பு என்பது, சூ கி மற்றும் NLD இன் நம்பமுடியாத ஆதரவை நம்புவதை விட, மியான்மாரின் இராணுவத்தை நேரடியாக ஆட்சியை கைப்பற்றத் தூண்டுவதில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்திருக்கலாம். சூ கி தற்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது மிகவும் மங்கிப்போன ஜனநாயகத்திற்கான அடையாளம் ஒருபுறமிருக்க, ஆதரவை நாடி அவர் வாஷிங்டன் பக்கம் திரும்புவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Loading