உலகை குலுக்கிய பத்து நாட்களின் ஆசிரியர்

அமெரிக்க சோசலிச செய்தியாளர் ஜோன் ரீட் இறந்து 100 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் நடுப்பகுதி அமெரிக்க புரட்சிகர சோசலிச செய்தியாளர் ஜோன் ரீட் இன் அகால மரணத்தின் 100 வது ஆண்டு நிறைவைக் குறித்தது. ரஷ்ய புரட்சி பற்றி அற்புதமாக விபரித்த நூலான உலகை குலுக்கிய பத்து நாட்களின் எழுத்தாளர், ஜோன் ரீட் 1920 அக்டோபர் 17 அன்று அவரது 33 வது பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நச்சு காய்ச்சலினால் மாஸ்கோவில் காலமானார்.

ஜோன் ரீட்

உலகை குலுக்கிய பத்து நாட்கள் பற்றி, 1917 அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவரான வி.ஐ.லெனினால் 1919 இல் எழுதப்பட்ட ஒரு அறிமுகத்தில் கருத்து தெரிவிக்கையில், “உலகத் தொழிலாளர்களுக்கு இதை [ரீட் இன் புத்தகத்தை] தடையின்றி பரிந்துரைக்கிறேன். இந்நூல் மில்லியன் கணக்கான பிரதிகளில் வெளியிடப்பட்டு அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதை காண விரும்புகிறேன்”. இந்த நூலின் தோற்றத்திலிருந்தே வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களின் சிந்தனையிலும் மனதிலும் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இது இன்னும் தடையின்றி "பரிந்துரைக்கப்படலாம்.”

1981 ஆம் ஆண்டு வெளியான Reds திரைப்படத்திலிருந்து ஜோன் “ஜாக்” ரீட் என்ற பெயரை பலர் அறிந்திருக்கலாம். இதில் வாரன் பெயற்றி (Warren Beatty) அந்த துணிச்சலான மற்றும் கொள்கை ரீதியான செய்தியாளரை சித்தரித்தார். அதற்காக பெயற்றி சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருதையும் வென்றார்.

எவ்வாறாயினும், திரைப்படத்தால் வெளிப்படுத்த முடியாத ஏனைய விடயங்களைபோல், முக்கியமானது என்னவெனில் ரீட் எழுதுவதில் இருந்த அவரது காலத்திலும் பிற்கால தலைமுறையினருக்கும் மிகவும் செல்வாக்கு செலுத்திய முக்கிய, பலம்வாய்ந்த மற்றும் கலைத்துவ தரமாகும். அவரது தலைமுறையின் எந்தவொரு அமெரிக்க எழுத்தாளரை விடவும், அரசியல் நேர்மையுணர்வு கோரியதை, புரட்சிகர முடிவுகள்வரை பின்தொடர்ந்த மனிதனின் முழு சிக்கலான தன்மையை Reds மட்டுமே சுட்டிக்காட்டுகின்றது.

முதலாவது பதிப்பு, 1919

ஜோன் ரீட் 1887 அக்டோபர் 22 அன்று ஓரிகானின் போர்ட்லாந்தில் ஒரு உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயின் தந்தை, ஹென்றி டாட்ஜ் கிரீன், ஒரு பணக்கார போர்ட்லாண்ட் தொழிலதிபர் மற்றும் அவரது வீடு போர்ட்லாந்தின் உயர்தர சமூக சந்திப்புகளின் மையமாக இருந்தது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் முழுமையான வளர்ச்சியின் சகாப்தத்தில் ரீட் இளமைப்பருவத்தை அடைந்திருந்தார். உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில், அமெரிக்கா ஒரு நவீன தொழில்துறை சக்தியாக உருவெடுத்தது. அது பல தசாப்தங்களாக மதிப்பிழந்த கொள்ளையடிக்கும் முதலாளிகளின் செறிவூட்டலைக் கண்டதுடன், அமெரிக்கா 1898 இல் தனது முதல் ஏகாதிபத்தியப் போரை தொடங்கி ஸ்பெயின், பிலிப்பைன்ஸ் மற்றும் கியூபாவைக் கைப்பற்றியது.

இந்த காலகட்டத்தில் நகர்ப்புற மக்கள்தொகை பெருகியது. இது பெரிய அளவிலான குடியேற்றத்தின் காலமும், மேலும் தொழிலாள வர்க்கம் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக உருவெடுத்தது. தொடர்ச்சியான கசப்பான வேலைநிறுத்த போராட்டங்களில் சர்வவல்லமையுள்ள ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

ரீட்டின் தந்தை சி.ஜே. ரீட், ஒரு படைத்தளபதி என்ற திறமையை கொண்டு மரம் வெட்டுபவர்களின் நலன்களுக்கு எதிரான ஒரேகான் நகரில் ஒரு அரசியல் ஊழலுக்கு எதிராக போராடியவராவார். அவர், தான் உயர் கல்லூரிக்கு செல்லாததால், ஜாக் ஹார்வார்டில் கல்விகற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றபோது தனது மகனுக்காக பரிந்துரை செய்தார். ஜாக் இரண்டாவது முறையாக தேர்ச்சி பெற்றார். பல ஹார்வர்ட் வெளியீடுகளில் பணியாற்றுவதும் பங்களிப்பதன் மூலம் ரீட் தனது செய்தித்துறை மற்றும் திருத்திதொகுத்து வழங்கும் திறன்களை தீட்டிக்கொண்டார். அவர் ஒரு தொகை கவிதையை எழுதி வெளியிட்டதுடன், மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஹார்வர்ட் சோசலிச கழகத்தில் உறுப்பினரானார்.

1911 ஆம் ஆண்டில் கிரீன்விச் கிராமத்தில் தனது வாழ்க்கையை ஸ்தாபித்துக்கொண்ட ரீட், முதலாளித்துவ கலாச்சாரத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்ட அப்பகுதியின் துணைக்கலாச்சாரத்தின் (bohemian culture) மையத்தில் வாழ்ந்தார். கவிஞர் ஹார்ட் கிரேன், “scandalous” என்ற நாவலாசிரியர் ஹென்றி மில்லர் (அவர் இறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, Reds ல் ரீட்டின் சூழலை விவரிக்கிறார்) மற்றும் நாடக ஆசிரியர் ஒய்ஹேன் ஓ நீல் போன்ற நபர்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்திருந்தனர்.

The American (1906 இல் நிறுவப்பட்டது) இதழில் ஒரு எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும் வேலைசெய்யும்போதுதான், கருத்தாளமுள்ள கலை மூலம் வாடகையை செலுத்தாத சூழ்நிலையில் எவ்வாறு ஒரு வாழ்க்கைக்கு சம்பாதிப்பது என்ற சவாலை ரீட் புரிந்துகொண்டார். ரீட்டைப் பொறுத்தவரை, "கருத்தாளமுள்ள கலை" என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தாக்கத்தையும் ஏற்படுத்தாதிருந்த அவரது கவிதைகளைக் குறிக்கிறது. மேலும் சிறுகதைகளை விற்பதன் மூலம் The American டமிருந்து அவருக்கு கிடைத்த வருமானத்திற்கு மேலதிகமாக சிறிதளவு கிடைக்கின்றது. இக்கதைகள் சில சந்தர்ப்பங்களில் அக்காலத்தின் வாழ்க்கையின் இரசனையை வழங்குகின்றன.

எவ்வாறாயினும், ரீட் மன்ஹாட்டனின் அதன் அரண்மனைகள் மற்றும் மோசமான தன்மையை அறிந்தபோது, அமெரிக்க சமுதாயத்தில் ஏதோ அடிப்படையில் தவறு என்று அவர் உணர்ந்தார். அக்டோபர் புரட்சியைக் காண்பதற்கு காரணமான ரஷ்யாவுக்கு அவர் பயணம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், "கிட்டத்தட்ட முப்பது” (Almost Thirty) என்ற தலைப்பில், அவர் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வை பின்வருமாறு நினைவு கூருகின்றார்:

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், கருத்துக்கள் மட்டுமே எனக்கு அதிகம் போதுமானதாக இருக்கவில்லை. நான் கண்களால் பார்க்க வேண்டியிருந்தது. நகரங்களை நான் சுற்றித்திரிகையில், வறுமையின் அசிங்கத்தையும் அதன் தீமையின் தொடர்ச்சியையும், அதிகமான ‘மோட்டார் கார்களைக் கொண்ட பணக்காரர்களுக்கும், சாப்பிட போதுமானதாக இல்லாத ஏழை மக்களுக்கும் இடையிலான கொடூரமான சமத்துவமின்மையை கவனிக்க கூடியதாக இருந்ததே தவிர என்னால் உதவமுடியவில்லை. தொழிலாளர்கள் உலகின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்கின்றார்கள் என்பதும், அவை அவற்றை உழைக்காதவர்களுக்கு சென்றுசேர்கிறது என்பதையும் நான் புத்தகங்களிலிருந்து இருந்து அறிந்துகொள்ளவில்லை.

The Masses (1911 இல் நிறுவப்பட்டது) என்று அழைக்கப்படும் தீர்மானகரமான சோசலிச நோக்குநிலையுடன் ஒரு புதிய கலை மற்றும் அம்சங்கள் பற்றிய பத்திரிகையை அறிந்தவுடனேயே ரீட், பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கியின் பல படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அதனது ஆசிரியர் மக்ஸ் ஈஸ்ட்மனுக்கு தன்னை விரைவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பின்னர் அதன் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆகிய இரு பதவிகளையும் ஏற்றுக்கொண்டார்.

மக்கள் 1914, John Sloan இன் தலையங்க படத்துடன்

புதிய பத்திரிகையால் அவருக்கு சம்பளம் செலுத்த முடியாவிட்டாலும், இந்த முக்கியமான வெளியீட்டிற்கான தனது படைப்புக்களை ரீட் மிகவும் திருப்திகரமானதாக கண்டுகொண்டார். 1916 ஆம் ஆண்டில் ஷெர்வூட் ஆண்டர்சனின் முதல் கதைகளை The Masses வெளியிட்டது. பின்னர் ஓஹியோவின் வைன்ஸ்பேர்க்கில் சேகரிக்கப்பட்டது. இது ஜாக் லண்டன், நாவலாசிரியர் ஃபுளோய்ட் டெல் மற்றும் கவிஞர்களான கார்ல் சாண்ட்பேர்க் மற்றும் ஆமி லோவெல் (Jack London, Floyd Dell, Carl Sandburg, Amy Lowell) போன்றவர்களின் படைப்புகளை வெளியிட்டது. ஓவியர்கள் ஜோன் ஸ்லோன், ஜோர்ஜ் பெல்லோஸ் மற்றும் பப்லோ பிக்காசோ (John Sloan, George Bellows, Pablo Picasso) ஆகியோர் விளக்கப்படங்களை வழங்கினர்.

1913 வாக்கில், கிரீன்விச் வில்லேஜ் குடியிருப்பில் இடதுசாரி சிண்டிக்கலிச இயக்கமான உலக தொழில்துறை தொழிலாளர்கள் (Industrial Workers of the World - IWW) தலைவரான வில்லியம் “பிக் பில்” ஹேவூட்டை சந்தித்தபோது, ரீட் தன்னை ஒரு ஏற்றுக்கொள்ளும் பார்வையாளரைவிட மேலான ஒருவராக நிரூபித்தார். அருகிலுள்ள நியூ ஜேர்சியிலுள்ள பட்டர்சனில் வளர்ந்து வரும் நிலைமையை ஹேவுட் விவரிப்பதை ரீட் செவிமடுத்தார. அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பட்டுத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரீட், ஒருவேளை முதல்முறையாக, ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்லாமல், ஒரு போராளியாகவும் அந்த ஒரு பெரிய கதையை பற்றி வேலைநிறுத்தத்தை விளம்பரப்படுத்தவும் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலம் பதிலளித்தார்.

1913 பட்டர்சன் பட்டுத் தொழிலாளர் வேலைநிறுத்த தலைவர்களான Patrick L. Quinlan, Carlo Tresca, Elizabeth Gurley Flynn, Adolph Lessig, Bill Haywood

பட்டர்சனுக்கு வந்தவுடனேயே, இயற்கையாகவே இணங்கிப்போகாத ரீட், ஒரு மோதல்விரும்பும் பொலிஸ் அதிகாரியை தூண்டி தன்னை கைது செய்யச் செய்தார். கவுண்டி சிறையில், புலம்பெயர்ந்த வேலைநிறுத்தக்காரர்களால் நிரம்பியிருந்த அவர், “மென்மையான, எச்சரிக்கையான, தைரியமான மனிதர்கள், தங்களை விட பெரிய ஏதோ ஒன்றினை உள்ளடக்கியிருந்த” தொழிலாளர்களுடன் நட்பு கொண்டிருந்து மற்றும் அவர்களின் கதைகளை வரைந்தார். அந்த "பெரிய ஒன்று" வர்க்கப் போராட்டம் ("பேட்டர்சனில் போர்") பற்றி The Massesக்கு எழுதிய கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அது பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:

நியூ ஜேர்சியிலுள்ள பட்டர்சனில் போர் நடைபெறுகின்றது. ஆனால் இது ஒரு வினோதமான வகையான போர். அனைத்து வன்முறைகளும் ஒரு பக்கத்தில் அதாவது ஆலை உரிமையாளர்களிடம் இருந்து வருகின்றது. அவர்களின் ஊழியர்களான காவல்துறையினர் எதிர்த்து நிற்காத ஆண்களையும் பெண்களையும் தாக்கி சட்டத்தை மதிக்கும் கூட்டத்தின் மேல் குதிரையில் சவாரி செய்கிறார்கள். அவர்களின் ஊதியம் பெற்ற கூலிப்படையினர், ஆயுதம் தாங்கிய துப்பறியும் நபர்கள் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கின்றனர். அவர்களின் செய்தித்தாள்கள் ... வேலைநிறுத்தத் தலைவர்களுக்கு எதிரான வன்முறையை திரட்டுவதற்காக ஆத்திரமூட்டும் மற்றும் குற்றத்தைத் தூண்டும் அழைப்புகளை வெளியிடுகின்றன ... அவர்கள் முற்றிலும் பொலிஸ், செய்தித்துறைகள், நீதிமன்றங்களை கட்டுப்படுத்துகின்றனர்.

Madison Square Garden இல் நடைபெற்ற ஒரு வியத்தகு பேரணியை ஏற்பாடு செய்த பட்டுத் தொழிலாளர்களின் நிலைமையால் ரீட் ஈர்க்கப்பட்டார். அதில் உண்மையான தொழிலாளர்கள் தங்கள் கடுமையான வேலைகளையும், காவல்துறையினரின் கைகளில் வேலைநிறுத்தக்காரர்கள் நடத்தப்படும் விதத்தையும் எடுத்துக்காட்டினர்.

ரீட்டின் மிகச்சிறந்த படைப்பான உலகைகுலுக்கிய பத்து நாட்கள் (1919) தவிர, Insurgent Mexico (1914) என்ற நூலில் மெக்சிக்கன் புரட்சியில் பாஞ்சோ வில்லாவின் இராணுவத்துடன் சவாரி செய்த அனுபவங்ளை விபரிக்கும் மிகச்சிறந்த படைப்புகளை தயாரித்தார். La Tropa வில் வில்லாவின் இராணுவம் மற்றும் அதன் முகாமை பின்பற்றுபவர்களின் கடுமையான, வன்முறை வாழ்க்கை பற்றி, படைப்பு வாசகரை அதனுள் மூழ்கடிக்கும்.

1913 டிசம்பரில் பாஞ்சோ வில்லா (மத்தியில்), புரட்சிகர அரசியலமைப்பு இராணுவத்தின் அவரது பிரிவு del Norte சர்வாதிகாரி விக்டோரியானோ ஹூர்டாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது

பட்டர்சனில் நடந்ததைப் போலவே, ரீட் விவசாயப் புரட்சியாளர்களிடம் அரசியல்ரீதியாக அனுதாபம் காட்டியது மட்டுமல்லாமல், அவர்களைப் போற்றுவதற்கும் அவர்களுக்கு மரியாதையை கொடுக்கவும் வேண்டும் என்ற முடிவிற்கு விரைவாக வந்தார். இது பற்றி அவர் பெருமிதம் கொண்டார். Insurgent Mexico வில் ஒரு கட்டத்தில், லா ட்ரோபாவில் ஒரு போத்தல் சோட்டோல் மதுவைப் பற்றி ஆரம்பத்தில் எழுதுகிறார்:

"அதைக் குடியுங்கள்," என்று பார்க்க வந்தோர் அனைவரும் கூட்டமாக கத்தினர். நானும் அதை குடித்தேன். சிரிப்பும் கைதட்டலும் கூச்சலிட்டது. பெர்னாண்டோ சாய்ந்து என் கையைப் பிடித்தார். "உங்களுக்கு நல்லது, தோழரே!" அவர் மகிழ்ச்சியுடன் கத்தினார் ... கேப்டன் பெர்னாண்டோ சாய்ந்து என் கையைத் தட்டினார். "இப்போது நீங்கள் மனிதர்ளுடன் இருக்கிறீர்கள் (los hombres) நாம் புரட்சியை வெல்லும்போது அது மனிதர்களின் ஒரு அரசாங்கமாக இருக்கும், பணக்காரர்களுடையது அல்ல. நாங்கள் இந்த மனிதர்களின் நிலங்களுக்கு மேல் சவாரி செய்கிறோம். முன்னர் அவை பணக்காரர்களுக்கு சொந்தமானது. ஆனால் இப்போது அவை எனக்கும் தோழர்களுக்கும் (compañeros) சொந்தமானவை.”

ரீட் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பிய தகவல்கள் The Metropolitan பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இது அவரை அமெரிக்காவின் முன்னணி போர் நிருபராக நிறுவியது. அவரது எழுத்துக்கள் அழுத்தம்மிக்கதும், தெளிவான பார்வையும் கொண்ட, விளக்கமளிப்பவையாக மற்றும் வெளிப்படையானதாக இருந்தன.

1913-14 குளிர்காலத்தில் நீடித்த தெற்கு கொலராடோ (Colorado) நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டமான 1914 ஏப்ரல் லுட்லோ படுகொலையை (Ludlow Massacre) விட மிருகத்தனமான அடக்குமுறையின் தெளிவான உதாரணத்தை ரீட்டிற்கோ அல்லது உலகிற்கோ முன்வைக்க முடியாது. படுகொலையை படித்த ரீட் உடனடியாக லாஸ் அனிமாஸ் (Las Animas) பிராந்தியத்திற்கு புறப்பட்டார்.

1914 இல் கொலராடோ தேசிய காவல்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து கொலராடோவின் டிரினிடாட் அருகே லுட்லோ காலனியின் இடிபாடுகள்

படுகொலை நடந்த இடத்தை அவர் விரிவாகத் தேடினார். அதில் ஜோன் டி. ராக்ஃபெல்லரின் கொலராடோ எரிபொருள் மற்றும் இரும்பு நிறுவனத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்ட தேசிய காவல்படை ஆயுதக்குழுக்களால் 26 சுரங்கத் தொழிலாளர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். சிலர் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் வேலைநிறுத்தத்தின் போது சுரங்கத் தொழிலாளர்கள் வாழ்ந்த கூடாரங்களில் வேண்டுமென்றே எரிக்கப்பட்டனர்.

ஜூலை 1914 இல் The Metropolitan க்கு, "கொலராடோ போர்" க்காக ரீட் ஒரு நீண்ட, கடுமையாக கண்டிக்கும் கட்டுரையை எழுதினார். இது ராக்ஃபெல்லர் நலன்களின் கொலைகார வன்முறையை விவரித்தது. "லுட்லோவில் படுகொலை செய்யப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்னர் நான் டிரினிடாட் [லுட்லோவிலிருந்து 15 மைல் தொலைவில்] நுழைந்தேன்" என்று ரீட் எழுதினார். அவர் கட்டுரையில் பின்னர் விளக்கினார்:

மத்திய அரச துருப்புக்கள் நகரத்தினுள் வந்து ஆயுதக்குழுக்கள் வெளியேறுவதைக் காண, நான் அடுத்த நாள் லுட்லோவுக்குச் சென்றேன். கூடார குடியிருப்பு அல்லது கூடார குடியிருப்பு இருந்த இடம், கொடூரமான இடிபாடுகளின் ஒரு பெரிய பகுதியாக இருந்தது. அந்த பயங்கரமான காலையில் சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அடுப்புகள் மற்றும் இன்னும் பாதி நிரம்பியுள்ள பானைகள், குழந்தை வண்டிகள், அரைகுறையாக எரிந்த துணிகளின் குவியல்கள், அனைத்தும் தோட்டாக்களால் சிதைக்கப்பட்ட குழந்தைகளின் பொம்மைகள், கூடார பாதாளங்களின் எரிந்த நுழைவாய்கள், மற்றும் குழந்தைகள் பொம்மைகள் "மரணக் கிடங்கின்" அடிப்பகுதியில் காணப்படுகிறது. இவை அனைத்தும் தான் 1200 ஏழை மக்களின் எஞ்சியிருந்த கையிருப்புக்களாகும். இரயில் நிலையத்தில் 50 ஆயுதகுழுக்களை சேர்ந்தவர்கள் மூலைக்கடை சோம்பறிகளின் முட்டாள்த்தனமானதும் மூர்க்கமான முகத்துடன் இரயிலுக்காக காத்திருந்தனர். தமது அவர்களில் சிலர் மட்டுமே சீருடையில் இருந்தனர். ஏனென்றால் அவர்களில் பலர் அவசரமாக சுரங்க காவலாளிகளாக வேலைக்கு அழைக்கப்பட்டவர்களாகும். கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் இரயிலில் இருந்து வெளியேறும்போது ஒரு ஆயுதக்குழுவின் நபர் தனது அதிகாரியின் காதில் கேட்கக்கூடியவாறு சத்தமாக கூறினார்: “இந்த பாட்டாளிகள் ஒரு இராணுவத்தினரை கொன்றுவிடுவார்கள் என்று நம்புகிறேன். அப்படியானால் இராணுவத்தினர் உள்ளே சென்று இந்த முழு கும்பல்களையும் துடைத்தளித்துவிடுவார்கள். அந்த கூடார குடியிருப்பில் நாங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வேலை செய்துள்ளோம்.”

அந்த ஆண்டின் ஆகஸ்டில், நவீன காலங்களில் அந்தக் கட்டத்தின் மிகப்பெரிய எழுச்சியால் உலகம் தாக்கப்பட்டது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் வெடித்தது. The Metropolitan நிருபராக ரீட் இத்தாலிக்கு பயணம் செய்தார். அவர் பிரான்சுக்குச் சென்றார், அங்கு அவர் இரண்டு முறை போர்முனைக்கு செல்ல முயன்று, ஆனால் கைது செய்யப்பட்டு இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் அவர் லண்டனுக்கு சென்றார், அங்கு அவர் போர்க்காலத்தில் இங்கிலாந்து பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் தேசபக்தி மேல் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தது என்று காட்டினார். இந்த கட்டுரையை The Metropolitan நிராகரித்தது.

லண்டனில் இருந்து எழுதப்பட்டு செப்டம்பர் மாதம் The Masses ல் வெளியிடப்பட்ட “வர்த்தகர்களின் யுத்தம்” (The Traders War) என்ற கட்டுரையில், ரீட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஏகாதிபத்திய வணிகப் போட்டிகளின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டியதுடன், போரானது இந்த மோதல்களின் தொடர்ச்சியே தவிர வேறொன்றுமில்லை என எழுதியிருந்தார். (Reds ல் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியில், ரீட் [Beatty], ஓரிகனின் போர்ட்லாந்தில் நடந்த தாராளவாத கழகத்தின் கூட்டத்தில், “இந்த யுத்தம் பற்றி” என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டார். அதற்கு அவர் எழுந்து, “இலாபங்கள்” என்ற ஒரு வார்த்தையுடன் பதிலளித்தார்.)

ரீட் பிரான்சுக்குத் திரும்பி, டிசம்பரில் சுவிட்சர்லாந்து வழியாக ஜேர்மனிக்குச் சென்றார். பேர்லினில், ஜேர்மன் பாராளுமன்றத்தில் போருக்கு நிதியளிக்க வாக்களிக்க மறுத்துவிட்ட ஒரேயொரு புரட்சிகர சோசலிஸ்ட் கார்ல் லிப்க்னெக்டுடன் ஒரு நேர்காணலை நடத்த முடிந்தது. “உலகப் புரட்சியின் சாத்தியங்கள்” பற்றி ரீட் அவரிடம் கேட்டபோது, “‘என் சிந்தனையில் ’[லிப்க்னெக்ட்]‘ இந்தப் போரிலிருந்து வேறு எதுவும் உருவாக முடியாது.’” என அமைதியாக பதிலளித்தார்.

ரீட் மற்றும் பிற அமெரிக்க நிருபர்கள், நீண்ட கால தாமதங்களுக்குப் பின்னர், வடக்கு பிரான்சில் உள்ள ஜேர்மன் போர்முன்னணியைப் பார்வையிட அனுமதி பெற முடிந்தது. வழியில் அவர்கள் ஜேர்மன் அதிகாரிகளால் உணவளிக்கப்பட்டதுடன், அகழிப்போரின் கொடூரங்களைக் கண்டனர். அவர் 1915 ஜனவரியில் அமெரிக்காவிற்கு திரும்பியபோது The Metropolitan க்காக இந்த அனுபவங்களைப் பற்றி கட்டுரைகளை எழுதினார்.

1915 இல் ஜோன் ரீட்

ரீட் சில மாதங்கள் மட்டுமே அங்கு இருந்தார். மார்ச் மாதத்திற்குள், அவர் மீண்டும் பிரான்சுக்குச் செல்ல அனுமதி பெற முடியாததால், கிழக்கு ஐரோப்பாவில் நடந்த போர் குறித்து அறிக்கை அளிக்குமாறு The Metropolitan அவரிடம் கேட்டது. போர்ட்மன் ராபின்சன் என்ற கலைஞருடன், அவர் சேர்பியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார்.

அவர் எழுதிய ஏறக்குறைய பாதிக் கட்டுரைகள், அந்த நேரத்தில் ரீட் இதை அறிய முடியாவிட்டாலும், குடிபழக்கம், துஷ்பிரயோகம் மற்றும் படைகளுள் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல்கள் மிக்க ஜாரிச சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களைப் பற்றியதாகும். “ஒரு நம்பிக்கைகொண்ட யாத்திரை” (An Optimistic Pilgrimage) என்னும் ஒரு கட்டுரை, இப்போதும் 105 ஆண்டுகளுக்குப் பின்னால் வாசகரை கொண்டுசெல்கின்றது. ரீட் அப்போது உக்ரேனில் உள்ள ரோவ்னோவிற்கு அருகிலுள்ள ஒரு யூதக் கிராமத்தின் வழியாகச் சென்று, யூதர்களின் அசுத்தத்தையும் வறுமையையும் ரஷ்யர்களால் அவர்கள் அடக்குமுறைக்குள்ளாவதையும் கவனிக்கிறார். அவரது வழிகாட்டிகளில் ஒருவரான ரஷ்ய இராணுவ அதிகாரி யூதர்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு துரோகிகள் என்று புகார் கூறுகிறார்.

சேர்பியாவின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. 1914 இல் அதன் பேராயர் ஃபெர்டினாண்டின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய சாம்ராஜ்யத்தால் படையெடுக்கப்பட்ட முதல் நாடான சேர்பியா, நச்சுக்காய்ச்சல் தொற்றுநோய்க்கு நடுவே இருந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுள்ள ஒரு மருத்துவமனைக்கு ரீட் விஜயம் செய்தார்:

நாங்கள் ஒரு கூடாரத்தினுள் நுழைந்தோம். அதன் சுவர்கள் ஓரம் கட்டில்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன. இரண்டு விளக்குகளின் பலவீனமான ஒளியில் நோயாளிகள் தங்கள் அழுக்கு போர்வைகளுக்குள் ஐந்து மற்றும் ஆறு பேர் இரண்டு படுக்கைளில் கூட்டமாக இருப்பதைக் காண முடிந்தது. சிலர் எழுந்து உட்கார்ந்து, அக்கறையற்ற முறையில் சாப்பிடுகிறார்கள். மற்றவர்கள் இறந்தவர்களைப் போல கிடக்கின்றனர். இன்னும் சிலர் குறுகிய, முணுமுணுப்பு முனகல்களைக் வெளிப்படுத்தினர் அல்லது திடீரென மயக்கத்தின் பிடியில் கூச்சலிட்டனர்.

1917 இல் சேர்பிய குடிமக்களை ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய துப்பாக்கிச் சூட்டு படைகள் கொல்கின்றன

1915 இன் பிற்பகுதியில் ஐரோப்பாவிலிருந்து ரீட் திரும்பியபோது, அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அரசியல் சூழ்நிலை வலதுபுறம் நோக்கி திரும்பியிருந்தது. போருக்கு ஆதரவான “தயார்நிலை” பிரச்சாரம் நடந்து கொண்டிருந்ததுடன் நடுத்தர வர்க்க பொதுக்கருத்து ஜேர்மன் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருந்தது. அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ள பெண்ணுடன் கிரீன்விச் கிராமத்திற்கு திரும்பினார். ஓரிகானிலிருந்து பத்திரிகையாளர் லூயிஸ் பிரையன்ட்டும் உடன் சென்றிருந்தார். இந்த நேரத்தில் அவர் ஒய்கன் ஓ’நீல் (Eugene O’Neill) உடன் நட்பு கொண்டிருந்தார். ரீட், ஓ’நீல், பிரையன்ட் மற்றும் அவர்களுடன் சிலர் கோடையில் மாசசூசெட்ஸில் உள்ள மாநில தலைநகரில் நாடகங்களை எழுதி நிகழ்த்தினர்.

அவரது போருக்கு எதிரான கருத்துக்கள் காரணமாக அவரை ஐரோப்பாவிற்கு திருப்பி அனுப்ப The Metropolitan மறுத்துவிட்டது. ஆனால் 1917 வசந்த காலத்தில், உலகத்தை குலுக்கிய இரண்டு நிகழ்வுகள் நிகழ்ந்தன. மார்ச் மாதத்தில், ரஷ்ய ஜார் இரண்டாம் நிக்கோலஸ் தூக்கியெறியப்பட்டார், ஏப்ரல் மாதம் அமெரிக்கா உலகப் போரில் நுழைந்தது.

1917 வசந்த காலம் மற்றும் கோடை முழுவதும், ரீட் The Masses பத்திரிகைக்கு போர் எதிர்ப்பு கட்டுரைகளை எழுதினார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள், ரஷ்யாவில் நடந்த புரட்சியை, தானே பார்க்க வேண்டும் என்று அவர் முடிவு செய்திருந்தார். முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக ஜாரிச ஜெனரல் லாவர் கோர்னிலோவ் சதி முயற்சித்த பின்னர், செப்டம்பர் 13 அன்று ரீட் பெட்ரோகிராட்டிற்கு வந்தார். போல்ஷிவிக்குகள் தொழிலாளர்கள் மற்றும் படையினரை அணிதிரட்டியதால் ஆட்சி கவிழ்ப்பு மறைந்துபோனது.

வி. வோலோடார்ஸ்கி போன்ற போல்ஷிவிக்குகள் உட்பட நியூயோர்க்கில் உள்ள தொடர்புகள் மூலம், ரீட் அந்தக் கட்சியின் தலைவர்களுடன் பழகக்கூடியதாக இருந்தது. அவர்கள் அப்போது இடைக்கால அரசாங்கத்தை அகற்றுவதற்கும், அதனை சோவியத்துக்களின் ஒரு அரசாங்கத்தால் பிரதியீடுசெய்வதற்கும் தயாராகி வந்தனர்.

அவர் பெட்ரோகிராட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து சென்று, துண்டுப்பிரசுரங்களையும் பிரகடனங்களையும் சேமித்து ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடுகளையும் ஆவணப்படுத்தினார். அவர் பயந்துபோன முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களை பேட்டி கண்டார். லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் முன் உரையாற்றுவதையும் அவர் கண்டார். தொழிலாள வர்க்கத்தின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான வரலாற்றுப் பணியில் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொண்ட, எண்ணற்ற பிற போல்ஷிவிக் தலைவர்கள், தொழிலாளர்கள், வீரர்கள் மற்றும் மாலுமிகளுடன் ரீட் பேசினார்.

போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு அவர் ஒரு சாட்சியாக இருந்தார். மேலும் குளிர்கால அரண்மனையின் புகழ்பெற்ற முற்றுகையின் போதும், அதன் பின்னர் எதிர்ப்புரட்சிக்கு எதிரான புதிய சோவியத் அரசாங்கம் போராட்டத்தின்போதும் கலந்து கொண்டார்.

1917 நவம்பரில் பெட்ரோகிராட்டில் குளிர்கால அரண்மனை கைப்பற்றபட்ட பின்னர்

ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு ரீட புதிய சோவியத் ரஷ்யாவில் இருந்தார். அவர் வெளியுறவுத்துறைக்கான மக்கள் ஆணையத்தில் பணியாற்றிய பின் அமெரிக்காவிற்கு தூதராக நியமிக்கப்பட்டார். 1918 இன் ஆரம்பத்தில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியுடன் தனது முதல் நீண்ட விவாதங்களை மேற்கொண்டார். அவர் விரைவில் வீட்டிற்கு புறப்பட்டார், ஆனால் பின்லாந்தின் தேசியவாத அரசாங்கத்தால் ஏப்ரல் வரை தடுத்து வைக்கப்பட்டார்.

நியூயோர்க்கிற்கு திரும்பியபோது, அரசாங்க முகவர்களை அவர் கப்பல்துறையில் சந்தித்தார். அவர்கள் அவரது ஆவணங்களை கைப்பற்றி மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 1917 ஆம் ஆண்டு The Masses ல் வெளியிடப்பட்ட "உங்களது சிப்பாய் பையனுக்கு இறுகிய மருத்துவ உடையை தையுங்கள்" என்ற கட்டுரை எழுதியதற்காக உளவுச் சட்டத்தின் கீழ் ரீட் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் அதில் கையாண்ட பிரச்சனையை இப்போது நாம் போரிற்கு பிந்தைய மனஉளைச்சல் என்று அழைக்கிறோம்.

1918 இலையுதிர்காலத்தில் The Liberator (The Massesக்கு பின்னர் வெளிவந்தது) இல் வெளியிடப்பட்ட “சோவியத்துக்கள் செயலில்” மற்றும் “சோவியத் அரசின் கட்டமைப்பு” போன்ற கட்டுரைகளில் ஒரு அமெரிக்க பார்வையாளர்களுக்கு இந்த புரட்சியைக் காக்கும் பணியை ரீட் ஏற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில்தான், அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியின் இடதுபிரிவினரின் மத்தியில் லூயிஸ் ஃபிரைனா உடனும் The Revolutionary Age இதழின் ரஷ்ய புரட்சியின் பிற ஆதரவாளர்களுடனும் போல்ஷிவிசத்தின் கருத்துக்களுக்காக ஒரு போராட்டத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ரஷ்யாவிலிருந்து கொண்டுவந்த அவரது ஆவணங்கள் அவரிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டன. மேலும் அக்டோபர்-நவம்பர் 1917 இல் அவர் அனுபவித்த நிகழ்வுகளைப் பற்றிய விபரணத்திற்காக அவர் தீவிரமாக பணியாற்றினார். ஈஸ்ட்மன் பின்னர் ரீட் ஒரு குறிப்பிடத்தக்க குறுகிய காலத்தில் கிரீன்விச் கிராமத்தில் ஒரு அறையில் தனித்தனியாக இருந்து, யாரையும் பார்க்காமல் உணவுக்காக மட்டுமே வெளியே வந்து ஒரு புத்தகத்தை எழுதினார் எனக் குறிப்பிட்டார்.

மார்ச் 1919 இல், இந்த முயற்சியின் தயாரிப்பான உலகை குலுக்கிய பத்து நாட்கள் வெளியிடப்பட்டது. இது ஒரு செய்தியாளராக ரீட்டின் வளர்ச்சியின் உச்சகட்டமாக இருந்தது. அவர் தனது சொந்த அவதானிப்புகள் மற்றும் உரையாடல்களை, அவர் சேகரித்த புரட்சியின் ஆவணங்களை துல்லியமாக வெளியிடுவதோடு இணைத்தார்.

நவம்பர் 7, கிளர்ச்சி நாளில், ஜாரிச காலங்களில் (எட்டு மாதங்களுக்கு முன்பு!) முன்னர் உயர்தர பெண்கள் பாடசாலையாக இருந்து போல்ஷிவிக் தலைமையகமான ஸ்மோல்னி நிறுவனத்தை பற்றி ரீட் பின்வருமாறு விவரிக்கிறார்:

ஸ்மோல்னியின் பிரம்மாண்டமான முகப்பில் நாங்கள் உள்ளே சென்றபோது விளக்குகள் எரியும், ஒவ்வொரு தெருவில் இருந்தும் அங்கே விரைந்து வருபவர்கள் இருளின் மறைந்திவிடுகின்றனர். வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வந்து சென்றன; ஒரு பெரிய யானை நிற கவச வாகனம் சிறு கோபுரத்தில் பறக்கும் இரண்டு சிவப்புக் கொடிகளுடன் அலறல் எச்சரிக்கை ஒலியுடன் வெளியேறியது. அது குளிராக இருந்தது. வெளிப்புற வாயிலில் சிவப்பு காவலர்கள் தங்களைச் சுற்றி ஒரு நெருப்பை மூட்டியிருந்தனர். உள்வாயிலிலும், ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் காவல்காப்பவர்கள் மெதுவாக எங்கள் கடவுச்சீட்டுகளில் உள்ள பெயர்களை உச்சரித்து எங்களை மேலும் கீழும் பார்த்தனர். … ஒரு கூட்டம் மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்தனர். அவர்களில் பலர் கறுப்பு மேலாடைகள் மற்றும் வட்டமான கருப்பு மிருகத்தோலாலான தொப்பிகள் அணிந்த தொழிலாளர்களும், பலரின் தோள்களில் துப்பாக்கிகளுடன், கரடுமுரடான அழுக்கு நிற கோட் மற்றும் சாம்பல் நிற தட்டையான தொப்பிகள் அணிந்த வீரர்களும் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ரீட் போல்ஷிவிக் தலைவர் லெவ் காமெனேவை சந்திக்கின்றார். புதிய சோவியத் அரசாங்கத்தின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட முதல் பிரகடனத்தை, ரஷ்ய மொழியில் இருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்து காமெனேவ் அவருக்கு படித்துக்காட்டுகிறார்: "புதிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் உடனடியாக போர்விரும்பும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு நியாயமான மற்றும் ஜனநாயக சமாதானத்தை முன்வைக்கும் ... மேற்கு ஐரோப்பாவின் நாடுகளின் பாட்டாளி வர்க்கம் சோசலிசத்திற்கான பாதையை உண்மையான மற்றும் நீடித்த வெற்றிக்கு கொண்டு செல்ல எங்களுக்கு உதவும் என்று சோவியத் நம்புகிறது."

லெனின் பற்றிய ரீட் விளக்கம் பின்வருமாறு உள்ளது:

தாறுமாறான அளவில்லாத ஆடைகளை அணிந்து, அவரது கால்சட்டை அவருக்கு மிக நீண்டதாக இருந்தது. ஒரு கும்பலின் இலட்சிய மனிதர் என்று சொல்லமுடியாது, வரலாற்றில் சில தலைவர்களே இவ்வாறு நேசிக்கப்பட்டு மதிக்கப்படுபவர். புத்தியின் திறமையால் மட்டுமே தலைவரானவர்: குறிப்பிடத்தக்க அடையாளங்களற்ற, இறுக்கமான, சமரசமற்ற மற்றும் மற்றவற்றிலிருந்து அந்நியப்பட்ட, அழகிய தனித்துவங்கள் இல்லாமல் ஆழ்ந்த கருத்துக்களை எளிமையான சொற்களில் விளக்கும் ஆற்றலுடன், ஒரு உறுதியான சூழ்நிலையை பகுப்பாய்வு செய்யும் ஒரு விசித்திரமான மக்கள் தலைவர். புத்திசாலித்தனத்துடன் இணைந்து, மிகப்பெரிய புத்திஜீவித அறிவார்ந்த தைரியமும் கொண்ட ஒருவர்.

(லெனின் "குறிப்பிடத்தக்க அடையாளங்களற்றவர்" மற்றும் "இறுக்கமானவர்" என்று வகைப்படுத்தப்படுவதை விட வேறு ஏனைய நுண்ணறிவான விளக்கம் இருக்கமுடியாது!)

உலகை குலுக்கிய பத்து நாட்கள் ரஷ்ய புரட்சியின் மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் உலக இலக்கியங்களின் கலை சாதனைகளில் ஒன்றாகும். இது மற்றொரு சிறந்த படைப்பைத் தூண்டியது. இது சோவியத் திரைப்படத் தயாரிப்பாளர் சேர்ஜி ஐசென்ஸ்டீனின் அக்டோபர் (1928) படத்துக்கு, மனித கலாச்சாரத்தில் ஒரு தனித்துவமான இடத்தைத் தருகிறது.

ரீட், புரட்சியின் நாடகத்தை வர்க்கங்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சமூக குறிக்கோள்களை பின்தொடர்வதில் விரைவாகவும் தீவிரமாகவும் பிரதிபலித்ததில், ஆயுத பலத்தால் மட்டுமல்ல, மிக ஆழமான அரசியல் சிந்தனையினாலும் வெளிப்படுத்தப்பட்டதை அதன் சொந்த செயற்பாட்டில் கண்டுபிடித்தார். இதை அவர் கதைவடிவானதாகவும் மற்றும் வருணனையாகவும் மொழிபெயர்க்க முடிந்தது.

உலகை குலுக்கிய பத்து நாட்கள், புரட்சியை பற்றி உலகிற்கு முதல் முறை அதன் முழு சொற்திறனுடன் கூறப்பட்ட ஒன்றாகும். மேலே குறிப்பிட்டுள்ள தனது புகழ்பெற்ற முன்னுரையில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டார்: “மிகுந்த ஆர்வத்துடனும், ஒருபோதும் கவனத்தை சிதறாமலும் நான் ஜோன் ரீட்டின் புத்தகமான உலகை குலுக்கிய பத்து நாட்களை படித்தேன்.

பாட்டாளி வர்க்க புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் உண்மை மற்றும் தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. இந்த சிக்கல்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன, ஆனால் ஒருவர் இந்த யோசனைகளை ஏற்கவோ நிராகரிக்கவோ முன், அவர் தனது முடிவின் முழு முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படை பிரச்சினையான இந்த கேள்விக்கு விளக்கமளிக்க ஜோன் ரீட்டின் புத்தகம் சந்தேகத்திற்கு இடமின்றி உதவும்.”

1919 கோடையில், சந்தர்ப்பவாத சோசலிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்ததால், கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒன்றாக மே 1921 இல் நிறுவப்பட்டது) தொடங்க ரீட் உதவினார். அக்டோபரில் அவர் மீண்டும் சோவியத் ரஷ்யாவுக்குப் புறப்பட்டு 1920 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்ற கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கு அமெரிக்க பிரதிநிதியாகப் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ரீட் சோவியத் ஆஜர்பைஜான் இன் பாகு நகரில் கிழக்கு மக்களின் காங்கிரசில் கலந்து கொண்டார். கம்யூனிச அகிலம் ஒழுங்கு செய்த இம்மாநாட்டில் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து 1,900 பிரதிநிதிகளின் கூட்டம், செப்டம்பர் 1 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

கிரிகோரி சினோவியேவ் 1920 ஆம் ஆண்டு கிழக்கு மக்களின் காங்கிரசில் சிறப்புரையாற்றினார்

பிரெஞ்சு இடதுசாரி ஆல்பிரட் ரோஸ்மெரின்Moscow Under Lenin என்ற புத்தகத்தில், பெட்ரோலியத் தொழிலுக்கு புகழ் பெற்ற நகரமான பாகுவில், காங்கிரசில் ரீட் பேசுவதைப் பற்றி நன்கு அறியப்பட்ட விளக்கம் உள்ளது. ரீட் ரஷ்ய மொழியின் சில சொற்களைக் கற்றுக்கொண்டது, “ஒரு பெரிய வெற்றி என்று ரோஸ்மெர் குறிப்பிட்டார். அவர் தனது பார்வையாளர்களிடம் ஒரு கேள்வியை உரத்த குரலில் கேட்டார்: ‘பாகு அமெரிக்க மொழியில் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு எண்ணெய்! என உச்சரிக்கப்படும்’. அனைத்து இறுகிய முகங்களும் திடீரென்று சிரிப்பால் அதிர்ந்தன.”

செப்டம்பர் 15 ஆம் தேதி ரீட் மாஸ்கோவுக்கு திரும்பினார், நச்சுக் காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 17 அன்று இறந்தார். சோவியத் ரஷ்யாவிற்கு மருந்துகள் வழங்குவதில் அமெரிக்க அரசாங்கம் தடை விதித்திருக்காவிட்டால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரோஸ்மெர் தனது புத்தகத்தில் விளக்கினார், அவரும் மற்றவர்களும் மாஸ்கோவிலிருந்து திரும்பியபோது, “ஒரு சோகமான செய்தி எங்களை வரவேற்றது. எங்களுக்கு முன்கூட்டியே திரும்பி வந்த ஜோன் ரீட், நச்சுக் காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் வீணாகி சில நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்துவிட்டிருந்தார். அவரது உடல் தொழிற்சங்கங்களின் பெரிய மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இறுதிச் சடங்கின் நாளில், குளிர்காலம் ஏற்கனவே வந்துவிட்டது, பனி பெய்து கொண்டிருந்தது. நாம் துயரத்தில் மூழ்கியிருந்தோம்.

ரோஸ்மெர் தொடர்ந்தார், “கிரெம்ளின் சுவரின் அருகில், புரட்சிகரப் போரில் வீழ்ந்த வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவில் அவருக்கு ஒரு அடக்கம் செய்யும் இடம் ஒதுக்கப்பட்டது. பிரியாவிடை வார்த்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்காக [நிகோலாய்] புக்காரினாலும், செயற்குழுவின் அவரது தோழர்களுக்காக [அலெக்ஸாண்ட்ரா] கொலொன்தாய் மூலமாகவும் நிகழ்த்தப்பட்டன. அவர் இறப்பதையே காண வந்த லூயிஸ் பிரையன்ட், துக்கத்தால் முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டார். முழு காட்சியும் விவரிக்க முடியாத சோகமானதாக இருந்தது.”

ஜோன் ரீட் மாஸ்கோவில் புதைக்கப்பட்டுள்ளார் 1920

அவரது மரணத்திற்குப் பின்னர் ரீட்டின் மதிப்பு ரஷ்ய புரட்சியின் தலைவிதியுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. அடுத்த தசாப்தத்தில் சோவியத் அரசைக் கைப்பற்றிய ஸ்ராலினிச ஆட்சி, புரட்சி பற்றிய உண்மையையும், மேலும் ரீட் சித்தரித்தபடி அக்டோபர் 1917 இல் ட்ரொட்ஸ்கியின் பங்கினையும் சகித்துக்கொள்ள முடியவில்லை. புத்தகத்தில் ஸ்ராலினை ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறார். ஏனென்றால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அவர் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் பல தசாப்தங்களாக ஸ்ராலினின் வற்புறுத்தலின் பேரில் இந்த புத்தகம் தடைசெய்யப்பட்டது.

அதேபோல், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கம்யூனிச எதிர்ப்பு வர்ணனையாளர்கள் உலகை குலுக்கிய பத்து நாட்களை வெறும் இலக்கிய பணியாக மாற்ற முற்பட்டுள்ளனர். 1920 இல் கம்யூனிச தந்திரோபாயங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பின்னர், ரீட் மார்க்சிசத்தில் அவநம்பிகையடைந்தார் என்று சிலர் தவறாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ரீட் மற்றும் அவரது படைப்புகளைப் பற்றி ஸ்ராலினிச மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சுழ்ச்சிக்கையாளல்கள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உலகை குலுக்கிய பத்து நாட்கள் உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுக்கு இன்றியமையாத அறிமுகமாக உள்ளது. சோசலிசப் புரட்சி பற்றிய கேள்வி மில்லியன் கணக்கானவர்களின் முன் வைக்கப்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில், ஒரு புதிய தலைமுறை அவரது படைப்புகளைக் கண்டறிய வேண்டும்.

Loading