முன்னோக்கு

அமெரிக்க இராணுவத்தில் பாசிசவாத அச்சுறுத்தல் மீது பென்டகன் "ஒதுங்கி இருக்க" உத்தரவிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6 இல் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை நொறுக்கியதுடன் மேற்புறத்திற்கு வெடித்து வந்திருந்த அமெரிக்காவில் ஒரு பாசிச இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அச்சுறுத்தல் முடிந்துவிடவில்லை; அது இப்போது தான் தொடங்கி உள்ளது.

“இராணுவப் பதவிகளுக்குள் நிலவும் தீவிரவாத பிரச்சினையை விவாதிப்பது" தொடர்பாக, பாதுகாப்புத்துறை செயலர் லாய்ட் ஆஸ்டின், "ஒதுங்கி இருக்குமாறு" ஒட்டுமொத்த அமெரிக்க இராணுவம் மற்றும் அதன் 2.1 மில்லியன் சிப்பாய்களுக்கு வியாழக்கிழமை வழங்கிய அசாதாரண உத்தரவில் இருந்து ஒருவர் இந்த முக்கிய தீர்மானத்திற்கு தான் வர முடியும்.

Secretary of Defense Lloyd Austin visits National Guard troops deployed at the U.S. Capitol and its perimeter, Friday, Jan. 29, 2021 on Capitol Hill in Washington. (AP Photo/Manuel Balce Ceneta, Pool)

இந்த உத்தரவு, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் முன்னாள் கமாண்டரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான ஆஸ்டினுக்கும் படைத்துறைசாரா சேவை தலைவர்கள் மற்றும் சீருடையணிந்த முப்படைகளின் தலைமை தளபதிகளுக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து வந்தது, இராணுவத்திற்குள் பாசிசவாதம் மற்றும் வெள்ளை தேசியவாத சக்திகள் எந்தளவுக்குப் பரவியுள்ளனர் என்பதைக் குறித்தோ, அல்லது அவர்களை வேருடன் களைவதற்கான எந்தவொரு திட்டமிட்ட முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை குறித்தும் பென்டகன் உயரதிகாரிகளிடையே தெளிவான கருத்து இல்லை என்பதை அது தெளிவுபடுத்தியது.

அச்சந்திப்பைத் தொடர்ந்து, பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி பத்திரிகையாளர்களுக்குக் கூறுகையில் நாடாளுமன்ற கட்டிட ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி இராணுவத்திற்கு "விழிப்பொலி அழைப்பாக" இருந்தது என்றார். இராணுவத்தில் "தீவிரவாதம்" என்பது "ஒரு முக்கியத்துவமற்ற பிரச்சினை அல்ல" என்ற அவர், சம்பந்தப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கை "எவரும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு குறைவானதில்லை" என்றார்.

ஆஸ்டின் கூட்டிய உயர்மட்ட அதிகாரிகளின் அந்த கூட்டம், ஜோசப் பைடென் ஜனாதிபதியாக தேர்வானதையும் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் தோல்வியையும் காங்கிரஸ் சபை உத்தரவாதப்படுத்துவதில் இருந்து தடுப்பதற்கான ஒரு முயற்சியில் நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினரில் முன்னாள் இராணுவத்தினரும் இப்போது படைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினரும் உள்ளடங்கி இருந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினையைக் கையாள்வதற்கு மூத்த உயரதிகாரிகளிடம் எந்த ஒத்திசைவான திட்டமும் இல்லை என்பதே பென்டகன் பத்திரிகையாளர் கூட்டத்திலிருந்து தெளிவானது. “இதற்குப் பின்னர் இதை எப்படி அர்த்தமுள்ள வழியில், ஆக்கபூர்வமாக, உறுதியான விதத்தில் கையாளப் போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, இதற்காத்தான் இன்று இந்த கூட்டத்திற்கு அவர் அழைத்திருந்தார், நிச்சயமாக இதற்காகத்தான் அவர் ஒதுங்கி இருக்குமாறு இந்த உத்தரவை வெளியிட்டார்,” என்று கிர்பி தெரிவித்தார்.

இருப்பினும், அடுத்த 60 நாட்களில் பரந்து விரிந்த அமெரிக்க இராணுவத்தில் ஒழுங்கமைக்கப்பட உள்ள "ஒதுங்கி இருத்தல்" என்பது, கட்டளையக அதிகாரிகள் "தீவிரவாதத்திற்கு" பென்டகனின் எதிர்ப்பை உபதேசித்து அவர்களின் படைப்பிரிவுகளுக்குக் காரசாரமான உரைகளை வழங்க வேண்டும் என்பதற்கு கூடுதலாக எதுவும் உள்வாங்கப்பட்டதாக தெரியவில்லை.

எந்த அர்த்தத்திலும், தெளிவாக, இந்த "ஒதுங்கி இருத்தல்" என்பது உலகெங்கிலும் ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஏதேனும் குறைப்பை சமிக்ஞை செய்யுமா. இதற்கு எதிர்முரணாக, பைடென் நிர்வாகத்தின் முதல் வாரங்கள் கருங்கடலிலும் தாய்வான் ஜலசந்தியிலும் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆத்திரமூட்டல் நிலைநிறுத்தல்கள் செய்வதைக் கண்டுள்ளன, அதேவேளையில் அமெரிக்க B-52 குண்டுவீசிகள் தொடர்ந்து பாரசீக வளைகுடா மீது அச்சமூட்டும் விதத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.

ஜனவரி 6 சம்பவங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவத்தினர் வகித்த பாத்திரங்கள் கடந்த மாதம் நெடுகிலும் அதிகரித்தளவில் தெள்ளத்தெளிவாக வெளியாகி உள்ளன. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் கொல்லப்பட்டவர்களில் விமானப்படையின் மூத்த சிப்பாய் அஸ்லி பாப்பிட் இருந்தார், இப்பெண்மணி சபாநாயகரின் வட்டத்தை உடைத்து செல்ல முயன்ற போது பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஊகிக்கத்தக்க விதத்தில் காங்கிரஸ் சபை உறுப்பினர்களைப் பிணைக்கைதிகளாக பிடிப்பதற்குப் பயன்படுத்தும் உத்தேசத்துடன், செனட் சபை வளாகத்திலிருந்த பிணைப்பான்களைப் (zip ties) பிரித்தெடுத்த ஓர் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான லிப்டினென்ட் கர்னல் லேரி ரென்டால் பிரோக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் உள்ளடங்கி உள்ளார். இதற்கிடையே, பணியில் உள்ள ஆயுதப்படை கேப்டன் எமிலி ரெய்னெ வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் பிராக் பகுதியிலிருந்து ட்ரம்ப் பேரணிக்கு பேருந்துகளை ஒழுங்கமைத்ததற்காக விசாரணையின் கீழ் உள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தைத் தாக்கியதில், முன்னாள் சிப்பாய்கள் மற்றும் பணியிலிருக்கும் சிப்பாய்களை தங்கள் அமைப்பில் ஈடுபடுத்தும் மிக பிரபலமான Oath Keepers அமைப்பு உள்ளடங்கலாக ஆயுதக் குழுக்கள் அக்கட்டிட நுழைவாயில்களைக் கடந்து செல்ல இராணுவ-பாணியிலான படைப்பிரிவுகளை ஒழுங்கமைப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தன. “வெள்ளை மாளிகையைக் களவாடி உள்ள அரசுக்குள் அரசு செய்யும் துரோகிகளுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும்" போராட தனது ஆதரவாளர்களுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் Oath Keepers அமைப்பில் உள்ள முன்னாள் இராணுவத்தினர் மீது, Proud Boys அமைப்பின் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதைப் போலவே, சதியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன. இந்த Proud Boys அமைப்பு உறுப்பினர்களைத் தான் ட்ரம்ப் கேடுகெட்ட விதத்தில் "பின்புலத்தில் பக்கத்துணையாக நில்லுங்கள்" என்று கூறியிருந்தார்.

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் மிகவும் கண்கூடாக பங்கெடுத்த இராணுவத்தினர் மட்டுந்தான் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தாக்குவதில் நேரடியாக பங்குபற்றியவர்கள். ட்ரம்பின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற ஜெனரல் மிக்கெல் ஃபிளின், ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு களம் அமைத்த ஒரு திருடப்பட்ட தேர்தல் குறித்த இட்டுக்கட்டப்பட்ட வாதங்கள் அடிப்படையில் "திருட்டை நிறுத்துவோம்" பிரச்சாரத்தில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்திருந்தார். கிளர்ச்சி தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் தேர்தல் முடிவை மாற்றுவதற்காக இராணுவச் சட்டத்தை சுமத்துவதிலும் மற்றும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு நிகராக இருந்திருக்கக்கூடிய ஒன்றை ஸ்தாபிப்பதிலும் ட்ரம்புக்கு அவர் வாய்மொழி ஆலோசகராக இருந்தார்.

ஃபிளினின் தீவிர வலதுசாரி கொள்கைகள் சந்தேகத்திற்கிடமின்றி ஏனைய மூத்த சீருடை அதிகாரிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அவர் சகோதரர் லெப்டினென்ட் ஜெனரல் சார்லஸ் ஏ. ஃபிளின் வகித்த பாத்திரம் குறித்து பென்டகனால் இன்னமும் விவரிக்கப்படவில்லை, இவர் நாடாளுமன்றத்தில் குழப்பங்கள் எல்லாம் முடியும் வரையில் அங்கே இராணுவம் அதன் தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளை அனுப்புவதைத் தாமதிக்க இட்டுச் சென்ற கருத்துரையாடல்களில் பங்குபற்றியிருந்தார்.

ட்ரம்ப் இந்த தேர்தல் முடிவை மாற்றி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான அவர் முயற்சியில் தெளிவாக இராணுவத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தவும் மற்றும் ஏனையவர்களை செயலற்று நிறுத்தி வைக்கவும் ஒரு திட்டம் வைத்திருந்தார். கருத்துக்கணிப்புகளில் அவர் தோல்வியடைந்த பின்னர் உடனடியாக, அவர் பென்டகனின் உயர்மட்ட தலைமையை ஒட்டுமொத்தமாக நீக்கி, சிறப்புப்படைகளுக்கான முன்னாள் கர்னல் கிறிஸ்டோபர் மில்லர் தலைமையில், முக்கிய பதவிகளில் தீவிர வலதுசாரி விசுவாசிகளை நிறுவியிருந்தார்.

இந்த தேர்தலுக்கு அண்மித்து ஓராண்டுக்கு முன்னரே, கடற்படை SEAL பிரிவின் எட்வார்ட் கால்லகர் போன்ற தண்டிக்கப்பட்ட போர் குற்றவாளிகளுக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியும், மரியாதை அளித்தும் இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவினரின் அபிமானத்தைப் பெற முனைந்திருந்தார் என்பது கண்கூடாகவே எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.

ட்ரம்ப் நிர்வாகம் இராணுவத்திற்குள் தீவிர வலதின் வளர்ச்சியையும் மற்றும் முழுமையான பாசிச கூறுபாடுகளையும் விதைத்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதன் வேர்கள் இன்னும் ஆழமாக ஒடுகின்றன. அவை மிகவும் அடிப்படையாக பிரிக்கவியலாதபடிக்கு அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியுடன் பிணைந்துள்ளதுடன், ஜனநாயக ஆட்சி வடிவங்கள் நொறுங்கி சிதைந்து வருவதுடன் பொருந்தி உள்ளன.

அமெரிக்க முதலாளித்துவம் அதிகரித்தளவில் ஆயுத பலத்தைச் சார்ந்து அதன் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முனைந்துள்ளதால், இந்த நிகழ்வுபோக்கில் அமெரிக்க இராணுவவாதத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சி ஒரு முக்கிய கூறுபாடாக உள்ளது. இதன் விளைவு தான், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் வாஷிங்டன் தொடுத்த 30 ஆண்டு கால இடைவிடாத போர். இத்தகைய போர்களைத் தொடுக்க "அனைத்து சுய ஆர்வ" படைகளின் பயன்பாடு, இதில் பல விசயங்களில் பென்டகனின் போர்ப்படை தளபதிகளின் கரங்களில் அளப்பரிய அரசியல் அதிகாரத்தைக் குவித்தும், பல்வேறும் நிலைநிறுத்தல்களைச் செய்தும் செய்யப்பட்ட இது, படிப்படியாக இராணுவம் மீதான படைத்துறைசார கட்டுப்பாட்டின் அரசியலமைப்பு கோட்பாட்டை மீறியுள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கி, ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜிக்களது எழுச்சி குறித்து, “தேசிய சோசலிசம் என்றால் என்ன?” என்ற அவரின் சிறப்புமிக்க ஜூன் 1933 கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்:

“தேசிய சோசலிசம் என்ற பதாகை பழைய ஆயுதப்படையின் கீழ்நிலை மற்றும் நடுத்தர பதவியாளர்களிடம் இருந்து முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு மேலுயர்த்தப்பட்டது. சிறப்பார்ந்த சேவைகளுக்காக விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட, நியமனத்தில் இல்லாத மற்றும் நியமனத்தில் உள்ள அதிகாரிகளால், அவர்களின் வீரசாகசங்களும் தந்தை நாட்டுக்காக அவர்கள் ஏற்ற இன்னல்களும் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதை மட்டுமல்ல, மாறாக நன்றிகடனுக்காக கூட சிறப்பு உரிமைக்கோரல்கள் அவர்களுக்குக் கிடைக்காது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.”

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 2.7 மில்லியன் இராணுவத்தினர் மத்தியில், சந்தேகத்திற்கிடமின்றி, வாஷிங்டனின் அருவருக்கத்தக்க காலனித்துவ பாணியிலான போர்களில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் "ஒன்றுமில்லாமல் போய்விடும்" என்பதைக் குறித்து அவர்களில் பலரும் இதேபோன்ற உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சோசலிசமா அல்லது பாசிசமா என்று 1933 இல் முன்வைக்கப்பட்ட அதே மாற்றீடுகளைத் தான், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இப்போது தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.

இராணுவவாதம் மற்றும் பாசிசவாதத்தின் ஒருமித்த அச்சுறுத்தல் எந்த விதத்திலும் பிரத்யேக அமெரிக்க நிகழ்வுப்போக்கு அல்ல. ஜேர்மனியில் இருந்து பிரேசில், ஸ்பெயின் வரையில் மற்றும் உலகெங்கிலும், பாதுகாப்பு படைகளுக்குள் பாசிசவாத கூறுபாடுகளும் பாசிசவாத இயக்கங்களுக்காக இராணுவத்திற்குள் ஆதரவும் அதிகரித்துள்ளது.

இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவையோ, அதன் கட்சிகள் அல்லது அமைப்புகளையோ சார்ந்திருப்பதில் உள்ள பயனற்றத்தன்மை மற்றும் அபாயத்தையே, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பைடென் வகித்த பாத்திரம் எடுத்துக்காட்டியது.

ஊடங்கள் மற்றும் நடைமுறையளவில் ஒட்டுமொத்தமாக போலிஇடது ஆகியவை ஒன்றுசேர்ந்து, அவர்கள் ஜனவரி 6 சம்பவங்களில் இராணுவம் வகித்த பாத்திரம் மற்றும் உயர்மட்ட சதியை மூடிமறைக்க முனைந்துள்ளனர். வேறுவிதமாக, பைடெனோ அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு நேரடியாக உதவிய மற்றும் தூண்டிவிட்ட அவரின் குடியரசுக் கட்சி "சக நண்பர்களுடன்" நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுகிறார். அவர்கள் ஆளும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பொதுவாக பாதுகாப்பதிலும் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில் உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்தும் மனிதபடுகொலை கொள்கையைத் திணிப்பதிலும் ஒன்றுபட்டு உள்ளனர்.

வர்க்க போராட்ட அணுகுமுறைகள் மூலமாகவும் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்காக போராடுவதன் மூலமாகவும் மட்டுமே பாசிசவாதம் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலைத் தோற்கடித்து மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பைப் பெற முடியும்.

Loading