மியான்மரில் இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மியான்மாரில், பிப்ரவரி 1 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராக பெருகிவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் இறுதியில், பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதுமாக எழுந்த ஆர்ப்பாட்டங்கள், திங்கட்கிழமையும் தொடர்ந்தது, பொலிசார் சரீர பலம் கொண்டு தாக்கியும், இராணுவம் வன்முறைக்கு அச்சுறுத்தியும் கூட போராட்டங்கள் தொடர்ந்தன.

திங்கட்கிழமையன்று, Myanmar Now செய்தித்தாள், எதிர்க்கட்சி ஆர்வலர் ஈ தின்சார் மாங் (Ei Thinzar Maung), “இராணுவ சர்வாதிகாரத்தை கிழித்தெறியும்” ஒரு முயற்சியாக அரசாங்க ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய வலியுறுத்தியதை மேற்கோள் காட்டியது.

பிப்ரவரி 8, 2021 அன்று, மியான்மர், மாண்டலேயில் ஆர்ப்பாட்டம் செய்கையில் எதிர்ப்பாளர்கள் கூட்டம் வீதிகளையும் பாலத்தையும் நிரப்புகிறது (AP Photo)

அரசு மருத்துமனையின் செவிலியரான ஐ மிசன், “அனைத்து அரசு ஊழியர்களையும் வேலைநிறுத்தம் செய்ய வலியுறுத்தும் இந்த பிரச்சாரத்தில் சுகாதார ஊழியர்களான நாங்கள் முன்நிற்கிறோம்” என்றும், “பொதுமக்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், இந்த இராணுவ ஆட்சியை முற்றிலும் ஒழிப்பதே எங்கள் நோக்கம் என்பதுடன், எங்களது விதிக்காக நாங்கள் போராடத்தான் வேண்டும்” என்றும் ராய்ட்டர்ஸூக்கு தெரிவித்தார்.

நேற்று வேலைநிறுத்தம் செய்தவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் அதைச் செய்ததும், முக்கியமாக அரசு ஊழியர்களும், தொழில் வல்லுநர்களும் அதில் ஈடுபட்டிருந்ததும் தெரிகிறது. ஒரு மருத்துவர், “இன்று, தொழில் வல்லுநர்களான –குறிப்பாக மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அரசு துறை வல்லுநர்கள்- நாங்கள் அனைவரும் இதில் ஒன்றுபட்டுள்ளோம் என்பதைக் காட்ட வீதிகளில் இறங்கியுள்ளோம். எங்கள் நோக்கம் ஒன்றுதான், அது சர்வாதிகாரத்தை வீழ்த்துவது மட்டுமே” என்று பிபிசி க்கு தெரிவித்தார்.

என்றாலும், தொழில்துறை தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். ஒரு ஆர்ப்பாட்டக்காரரான 28 வயது ஆடை தொழிற்சாலை தொழிலாளியான Hnin Thazin, “இன்று வேலை நாள், எங்களது ஊதியம் குறைக்கப்பட்டாலும் கூட நாங்கள் வேலை செய்யப் போவதில்லை,” என்று AFP க்கு தெரிவித்தார்.

சமூக அமைதியின்மைக்கு எதிராக ஒரு செயற்கையான கோட்டையாக இராணுவத்தால் உருவாக்கப்பட்ட நாட்டின் தலைநகரான நைபிடாவில் (Naypyitaw) சுமார் 1,000 பேர் வரை நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர், இங்கு அரசாங்க அலுவலகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தலைநகருக்கு செல்லும் ஒரு நெடுஞ்சாலையில் கூடியிருந்த கூட்டத்தை கலைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தண்ணீர் பீரங்கி தாக்குதலை நடத்தினர்.

Australian Associated Press இவ்வாறு செய்தி வெளியிட்டது: “ஊடகங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புக்களின் படி, எதிர்ப்பாளர்கள் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிரான சுலோகங்களை முழங்கிக் கொண்டும், பொலிசாரிடம் நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், இராணுவத்திற்கு அல்ல என உரக்க கூறியும் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கலவரத்தை தடுக்க ஒரு சாலையின் குறுக்கே மூன்று வரிசைகளில் பொலிசார் நின்றிருந்ததை காண முடிந்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்றாவது வரிசை அதிகாரிகளை மீறுவார்களானால் அவர்கள் மீது வெடிமருந்துகள் பயன்படுத்தப்படக்கூடும் என்ற ஒரு எச்சரிக்கை அடையாளத்தையும் பொலிசார் சாலை மீது வைத்திருந்தனர்.”

ஆட்சிக்கவிழ்ப்பின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆங் சான் சூ கி மற்றும் ஜனாதிபதி வின் மின்ட் உள்ளிட்ட உயர்மட்ட பொதுமக்கள் தலைவர்கள் நைபிடாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஐ.நா. ஊழியருக்கான ஒரு உள்நாட்டு குறிப்பு, மியான்மாரின் மிகப்பெரிய நகரமும், முன்னாள் தலைநகரமுமான யாங்கோனில், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரி சுமார் 60,000 பேர் வரை வீதிகளில் இறங்கி போராடியதாக மதிப்பிட்டுள்ளது. செவிலியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் துறவிகள் என அனைவரும், “சர்வாதிகாரம் வேண்டாம் என்று சொல்லுங்கள்”, “எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்” என்பது போன்ற கோஷங்களை கைகளில் ஏந்தியவாறு பேரணிகளில் இணைந்து கொண்டனர். மேலும் மற்றொரு அடையாளம், “எங்கள் தலைவர்களை விடுதலை செய், எங்கள் வாக்குகளுக்கு மதிப்புக் கொடு, இராணுவ சதித்திட்டத்தை கைவிடு” என்று தெரிவித்தது.

இராணுவ சதித்திட்டத்திற்கான சாக்குப்போக்காக கடந்த நவம்பரில் நடைபெற்ற தேசிய தேர்தல்களின் தேர்தல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இந்த தேர்தலில், சூ கி இன் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (National League for Democracy - NLD) 83 சதவிகித பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளின் மொத்தம் 476 இருக்கைகளில் 396 ஐ பெற்றுக்கொண்டது. அதேவேளை, இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி (Union Solidarity and Development party), வெறும் 33 இருக்கைகளை மட்டுமே வென்றது.

ஆட்சி மாற்றத்திற்கு சதி செய்த வாரத்தில், தேர்தல் மோசடி கோரிக்கைகளை நிராகரித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு இராணுவம் சவால் விடுத்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றம் முதல் முறையாக கூடவிருந்த சமயம் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, மூத்த இராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹலேங் ஐ நாட்டின் தலைவராக நியமித்ததோடல்லாமல், அவசரகால நிலையை அறிவித்து, உயர்மட்ட NLD பிரமுகர்களை தடுப்புக் காவலில் வைத்தது.

அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு தெரிவித்தபடி, 165 பேர், பெரும்பாலும் அரசியல்வாதிகள், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 13 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், NLD தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வந்த ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல் (Sean Turnell) கூட கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மாண்டலேயிலும் (Mandalay) மற்றும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் கூட ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. தெற்கு நகரமான டாவி (Dawei) மற்றும் மைட்கினாவிலும் (Myitkyina), வடக்கில் மாநில தலைநகரம் கச்சினிலும் (Kachin) ஆயிரகணக்கானவர்கள் அணிவகுத்ததாக கூறப்படுகிறது. தாய்லாந்தின் மியான்மரின் கிழக்கு எல்லையாகவுள்ள, மியாவடி (Myawaddy) நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிசார் வானில் சுட்டனர்.

யாங்கோனில், ஒரு சிறு கடையின் முதலாளியான 58 வயது Kyaw என்பவர் சதித்திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தது பற்றி கார்டியன் சுட்டிக்காட்டியது. அவர், “இங்கே கல்வியறிவு பெற்ற இளம் தலைமுறையினர் ஏராளமானோர் உள்ளனர், இது புதிய தலைமுறையினரின் புரட்சியாகும்,” என்று தெரிவித்துள்ளார். இவர், 1988 ஆம் ஆண்டில் இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் பாரிய போராட்டங்களாக மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்கமாக எழுச்சி கண்ட போராட்டத்தில் பங்கேற்றவராவார்.

இராணுவம் ஒரு புதிய அடக்குமுறைக்கு தயாராகி வருகிறது. அரசு நடத்தும் MRTV ஊடகத்தில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, “ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சாக்குப்போக்காக பயன்படுத்தும்” குழுக்கள் இங்கு சட்டத்தை மீறுவதுடன், அச்சுறுத்தல்கள் விடுக்கின்றன என்று அறிவித்தது. “நாட்டின் ஸ்திரத்தன்மை, பொது பாதுகாப்பு மற்றும் சட்ட விதி ஆகியவற்றை சீர்குலைக்கும், தடுக்கும் மற்றும் அழிக்கும் குற்றங்களுக்கு எதிராக” குறிப்பிடப்படாத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. யாங்கோன் மற்றும் மாண்டலே பகுதிகளில், ஆட்சிக்குழு முழு பொதுமுடக்கத்திற்கு அறிவித்து, ஐந்துக்கு மேற்பட்ட மக்கள் கூடும் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

1988 ஆம் ஆண்டைப் போல, இப்போது கூட, மியான்மாரில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத் தலையீடு அவசியமாக உள்ளது. எவ்வாறாயினும், அத்தகையதொரு இயக்கம், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த துருப்புக்களின் இரத்தக்களரியான அடக்குமுறையில் சென்று முடிவடைந்ததான 1988 நிகழ்வுகளிலிருந்து தேவையான அரசியல் படிப்பினைகளை பெற வேண்டியது முக்கியம்.

1988 ஆம் ஆண்டு வேலைநிறுத்த இயக்கம் இராணுவத்தை அதன் காலடியில் கொண்டு வந்தது. 1990 ஆம் ஆண்டில் ஒரு தேர்தலின் போதான போலியான வாக்குறுதிகள் மீதான போராட்டங்களை நிறுத்த, இராணுவத்தைப் போலவே தொழிலாள வர்க்கத்தையிட்டு பீதியுற்றிருந்த சூகி தலைமையிலான முதலாளித்துவ எதிர்ப்பை அது நம்பியிருந்தது. சூ கி இன் தலையீடு, இராணுவம், துப்பாக்கிகளை தொழிலாளர்கள் மீது திரும்புவதற்கு இட்டுச் சென்றது. நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இராணுவ ஆட்சிக் குழு தேர்தலை நடத்துவதாக அளித்த வாக்குறுதியை புறக்கணித்தடன் சூ கி யையும் வீட்டுக் காவலில் வைத்தது.

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான உறவை இராணுவம் சரிசெய்ய முயன்றபோது மீண்டும் சூ கி பக்கம் திரும்பியது. அது 2010 ஆம் ஆண்டில் அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தது, மற்றும் புதிய அரசியலமைப்பின் கீழ் தடைசெய்யப்பட்ட தேர்தல்களை அனுமதித்தது, இது அமெரிக்கா அதன் பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 2016 இல் மியான்மாருக்கு விஜயம் செய்வதற்கும் வழிவகுத்தது. மேலும், சூ கி யும் NLD யும் 2016 தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் கூட அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அதிகாரத்தின் முக்கிய பிடிகள் தொடர்ந்து ஆயுதப்படைகளின் வசம்தான் இருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூ கி இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வந்துள்ளார், வெளிநாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்த உலக சுற்றுப்பயணம் செய்தார், மேலும் முஸ்லீம் ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிரான அதன் அட்டூழியங்களுக்கு முதன்மை மன்னிப்பாளராகவும் செயல்படுகிறார். இராணுவத்தைப் போலவே, அவரது NLD யும் ரோஹிங்கியா எதிர்ப்பு பேரினவாதத்திற்கு ஆழ்ந்த ஊக்கமளித்தது என்பதுடன், அவர்களுக்கு சிவில் உரிமைகள் முற்றிலும் இல்லாததை நியாயப்படுத்த அவர்களை “சட்டவிரோதமாக குடியேறிவர்கள்” என்றும் முத்திரை குத்துகிறது.

இராணுவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்க்கும் முதலாளித்துவ வர்க்க அடுக்குகளை NLD பிரதிநிதித்துவப்படுத்துகிறது, என்றாலும் அதற்கு சமமாக சமூக அமைதியின்மை குறித்து, குறிப்பாக தொழிலாள வர்க்கம் குறித்து அவர்கள் பீதியுற்றுள்ளார்கள். அவர் முன்பைப் போலவே, உழைக்கும் மக்களின் இழப்பில் இராணுவத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஆட்சிக்குழுவுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தை சுரண்ட முனைவார்.

இந்நிலையில், சூ கி மற்றும் NLD ஆகியோரிடமிருந்து அரசியல் ரீதியாக முறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், மேலும் ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தங்களது சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக போராடவும் முடியும்.

Loading