ஃபோர்ட் நிறுவன மூடல்களைத் தொடர்ந்ததான பாரிய பணிநீக்கங்கள் குறித்த தொழிலாளர்கள் எதிர்ப்பை பிரேசில் தொழிற்சங்கங்கள் நசுக்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசிலில், ஃபோர்ட் நிறுவனம் அதன் எஞ்சிய மூன்று நிறுவனங்களையும் மூடுவதற்கு அறிவித்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், அதன் உற்பத்தி சங்கிலியுடன் இணைந்த ஏனைய நிறுவனங்கள் அவற்றின் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருவதானது, வாகனத் தொழில்துறையின் மிகவும் மாறுபட்ட துறைகளை பாதிக்கும் வகையில் பணிநீக்க அலைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. புள்ளிவிபரங்கள் மற்றும் சமூக பொருளாதார ஆய்வுகள் குறித்த உள்ஐக்கிய துறையின் (DIEESE) கருத்துப் படி, ஃபோர்ட் அறிவித்த 5,000 பணிநீக்கங்கள் மேலும் 118,864 வேலைகளை அழிக்கக்கூடும், அது ஆண்டு ஊதியத்தில் 2.5 பில்லியன் ரைஸ் (465 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை ஏற்படுத்தும்.

இந்த முன்னோக்கின் அடிப்படையில், பிரேசிலிய தொழிலாளர்கள் மத்தியிலான எதிர்ப்பு அலை குறித்து ஒருவர் முன்கணிக்க முடியும். ஜனவரி 26 அன்று, சாவோ பாலோவில் உள்ள ABC தொழில்துறை வளாகத்தில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனமான ஆர்டெப் (Arteb) இல் 200 பணிநீக்கங்களை எதிர்த்து 800 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 1934 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஆர்டெப் முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கான ஹெட்லைட்டுகள் மற்றும் ஹெட்லாம்ப்களை உற்பத்தி செய்கிறது, மேலும் பிரேசிலில் ஃபோர்ட் நிறுவன மூடல்கள் தொடர்பான பணிநீக்கங்களை இது குற்றம்சாட்டியது. தொழிலாளர்கள் மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் கட்சி (PT) கட்டுப்பாட்டிலுள்ள CUT கூட்டமைப்புடன் இணைந்த ABC உலோகத் தொழிலாளர்கள் சங்கம் (SMABC) இந்த வேலைநிறுத்தத்தை வழிநடத்தியது, அது வெறும் இரண்டு நாட்களில் முடிவடைந்தது. இந்த பிராந்தியத்தில் இதே நிலைமையை விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்காமல், வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த தொழிற்சங்கம் விரைந்து செயல்பட்டது. நிறுவனத்தின் முந்தைய நிதி சிக்கல்கள் மற்றும் தொழில் துறையில் ஏற்கனவே “இயல்பாக்கப்பட்டுள்ள” உயர் வேலையின்மை விகிதம் தொடர்புபட்ட பணிநீக்கங்களை காரணப்படுத்தி, SMABC இன் பொதுச் செயலர் மொய்சஸ் செலெர்ஜஸ் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிந்தார்.

Ford assembly. Photo by: Sam VarnHagen/Ford Media

“நிலைமை சிக்கலாக இருந்தது. இது ஆர்டெப் நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தொழில் துறையினதாகும். தொழில்துறை மூழ்கிவிட்டது, ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் வசம் தொழில்துறை கொள்கை எதுவும் இல்லை,” என்று செலெர்ஜஸ் தொழிலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். “ஆரம்பத்தில் நான் கூறியது போல, தொழிற்சங்கம் சாத்தியமுள்ள உடன்படிக்கைக்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தது. எனவே இதுதான் நாங்கள் எட்டிய சாத்தியமுள்ள ஒப்பந்தமாகும்” என்றும் தெரிவித்தார்.”

தொழிற்சங்கம் எட்டிய “சாத்தியமுள்ள” ஒப்பந்தம் 200 பணிநீக்கங்களை ஏற்றுக்கொண்டது. தொழிலாளர்களுக்கு இது தெளிவான தோல்வி தான் என்றாலும் கூட, செப்டம்பர் வரையிலான மருத்துவ நலன்களின் விரிவாக்கம் மற்றும் வேலைநிறுத்த நாட்களுக்கான கொடுப்பனவு உட்பட, பணிநீக்க ஊதியம் வழங்க பேச்சுவார்த்தை “உத்தரவாதம்” அளித்ததாக தொழிற்சங்கம் பெருமை பீற்றிக் கொள்ளவே இன்னும் முயன்றது.

ஜனவரி 21 ஆம் தேதிய SMABC வலைத் தளத்தின் அறிவிப்பு, “ஃபோர்ட் நிறுவன தாக்கத்தின்” பொதுவான இயல்பு பற்றி ஏற்கனவே எச்சரித்துள்ளது, வாகன உற்பத்தியாளர்களுக்கு வேலை செய்யும் இந்த பிராந்தியத்திலுள்ள ABC நிறுவன தொழிற்சாலைகளின் சமீபத்திய வேலை நேர குறைப்புக்கள் இதற்கு ஆதாரமாக உள்ளது.

“ஃபோர்ட் நிறுவன மூடல் அறிவிப்பு, இந்த பிராந்தியத்தின் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம், ஏனென்றால் வாகன உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளர்கள் உட்பட, பல நிறுவனங்கள் வாகன உற்பத்தியாளர்களுக்கு தமது தயாரிப்புகளை வழங்குகின்றன,” என்று மற்றொரு தொழிற்சங்க அதிகாரி ஜெனில்டோ டயஸ் பெரெய்ரா தெரிவித்தார். “சாவோ பெர்னார்டோவில் உள்ள பல நிறுவனங்களில், எடுத்துக்காட்டாக, சமோட், ஃபியாம், ராசினி, ZHS, மஹ்லே, செல்கோ போன்ற நிறுவனங்கள் உள்ளன. “முடிவுக்குப் பின்னர் ஏற்கனவே தனது Camacari ஆலையை (ஃபோர்ட் நிறுவனத்தின் ஒரு தொழிற்சாலை உள்ள பஹியா மாநிலத்தில்) மூடி வரும் ஆர்டெப் நிறுவனத்தைப் பற்றி குறிப்பிடவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை ஆர்டெப் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளினது பணிநீக்கங்களை SMABC ஏற்கனவே முன்நோக்கியதை வெளிப்படுத்துகிறது. வேலைநிறுத்தத்தின் போதான அவர்களது நடவடிக்கை இந்த செயல்பாட்டில் தொழிற்சங்கங்களின் தீர்க்கமான பங்கை அம்பலப்படுத்துகிறது: எதிர்ப்பின் எந்தவொரு தீப்பொறியும் விரைந்து அணைக்கப்பட வேண்டும், ஏனென்றால் அது தொழிலாள வர்க்கத்தின் பொதுவான இயக்கமாக பரவிவிடக் கூடாது என்பதே.

ABC பிராந்தியத்தில் CUT தனது பங்கை நிறைவேற்றும் அதேவேளை, சாவோ பாலோவின் கிராமப்புறங்களில் உள்ள Taubate நகரிலுள்ள அதன் கிளை, ஃபோர்டு ஆலைகளில் ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட 830 தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. தொழிற்சாலை மூடலுக்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஆலைகளிலிருந்து இயந்திரங்கள் அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒரு தொழிலாளர்கள் குழு ஆலைக்கு முன்னால் ஒரு நிரந்தர விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், Taubate உலோகத் தொழிலாளர்கள் சங்கம் (சிண்டிமெட்டாவ்), முதலாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு உறுதியான போராட்டத்திலிருந்தும் தொழிலாளர்களைத் திசைதிருப்ப வேலை செய்கிறது என்பதுடன், உண்மையில் அனைத்து “பூகோளமயப்பட்ட பிரச்சினைகளையும்” ஒதுக்கித் தள்ளுகிறது.

ஜனவரி 29 அன்று நடைபெற்ற மோட்டார் வாகன அணிவகுப்பில், சிண்டிமெட்டாவ் தொழிற்சங்க அதிகாரிகள் தொழிலாளர்களை ஒரு மதச்சடங்கு சார்ந்து வழிநடத்தி, சுமார் 300 கார்களை பிரேசிலின் அபாரெசிடாவில் உள்ள மிகப்பெரிய தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றனர். மோட்டார் வாகன அணிவகுப்பு பற்றி தொழிற்சங்கம் இவ்வாறு அறிவித்தது: “வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தில் ‘நாசரேத்தின் தொழிலாளி’ செய்திகள் இந்த வெள்ளிக்கிழமை அபாரெசிடாவின் தேசிய ஆலையத்தில் பெரும்திரளான மக்களை அணிதிரட்டி பலப்படுத்தியது.”

மத பிரசங்கங்கள் மற்றும் வானத்தில் தோன்றும் அதிசயத்தின் மீதான நம்பிக்கைகளையும் பயன்படுத்தி தொழிலாளர்களின் கோபத்தை அமைதிப்படுத்த இது முயற்சித்துக் கொண்டிருக்கையில், தொழிற்சங்கம் அதிகரித்தளவில் அவர்களது போராட்டத்தை நிராயுதபாணியாக்கி, அதை முற்றிலும் சட்ட மற்றும் பாராளுமன்ற வழிகளுக்கு திசைதிருப்ப முயற்சிக்கிறது.

ஃபோர்ட் அதன் உற்பத்தியை நிறுத்துகின்ற பிராந்தியங்களில் பொது தொழிலாளர் அமைச்சகத்தால் மூன்று சிவில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 5 அன்று, இரண்டு தொழிலாளர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கள், Taubate மற்றும் Camacari தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஃபோர்ட் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பை நிறுத்தி வைத்தன.

Taubate இன் இரண்டாவது தொழிலாளர் நீதிமன்றத்தின் தலைவரான ஆண்ட்ரியா டி ஒலிவேராவின் கூற்றுப்படி, “நிறுவனத்தின் அளவு, பாதிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளின் எண்ணிக்கை மற்றும் நாட்டிற்கு ஏற்பட்ட சமூக பாதிப்பு ஆகியவை வழக்கிற்கு எளிமையான தீர்வை அனுமதிக்காது. மறுபுறம், Camacari வழக்கை பகுப்பாய்வு செய்வதற்கு பொறுப்பாளியாகவுள்ள நீதிபதி, தொழிற்சங்கத்துக்கு தெரிவிக்கப்படாத மற்றும் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாத எந்தவொரு பாரிய பணிநீக்கங்களும் “தொழிலாளர்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக, தீர்க்கமுடியாத தீமைகளால் நிறைந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற தீர்ப்புக்கள் தற்காலிகமானவையே, அந்தந்த தொழிற்சங்கங்களுடனான பணிநீக்க ஊதியம் தொடர்புபட்ட பேச்சுவார்த்தையின் பேரில் பணிநீக்கங்கள் நிறுத்தி வைக்கப்படுவதை நிபந்தனைக்குட்படுத்துகின்றன.

UOL Cars வலைத் தள அறிக்கையின் படி, ஃபோர்ட் ஏற்கனவே பிரேசிலில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்காக 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில் பெரும்பகுதி நிறுவன ஒப்பந்தங்கள், ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை தொடர்புபட்ட இழப்பீடுகளை ஈடுசெய்யவும், அத்துடன் பிரேசிலிய அபிவிருத்தி வங்கிக்கு (BNDES) செலுத்த வேண்டிய நிலுவை கடன்களை வழங்கவும் செலவு செய்யப்படும்.

2019 ஆம் ஆண்டில் மூடப்பட்ட சாவோ பெர்னார்டோ டு காம்போ ஆலையில் எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ஒத்ததாக, தொழிற்சங்கங்களுக்கும் ஃபோர்ட் நிறுவனத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தகளின் பேரிலான ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்வார்கள் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகிறது. அந்த சமயத்தில் SMABC பயன்படுத்திய அதே அரசியல் வரைபடத்தை தொழிற்சங்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு பகுப்பாய்வு செய்தது:

“ஃபோர்ட் ஆலைகள் மூடல் தொடர்பான செய்திகள் வெளியான போது, 42 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நீக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் SMABC மேற்கொண்டது. ஆலையை ஆக்கிரமிப்பதற்கான அல்லது போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தொழிற்சங்கம் வலுவிழக்கச் செய்தது. மாறாக, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வீட்டில் முடங்கியிருந்து, பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கும் படி சொன்னது. மேலும் இது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது உதிரிபாகத் தொழிலில் பாதிக்கப்பட்ட 20,000 தொழிலாளர்கள் உடனான எந்தவொரு ஐக்கியப்பட்ட நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டது. கோவா நிறுவனத்துடனான [ஆலையை வாங்குவதற்கு முதலில் சமிக்ஞை செய்த நிறுவனம்] ஃபோர்டின் பேச்சுவார்த்தைகளில் ஒரு இடைத்தரகராக பணியாற்றவுள்ளதாக அறிவித்த சாவோ பாலோ அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து, நிர்வாக விதிமுறைகளை காரணமாக்கி இறுதியாக வேலைநிறுத்தத்தை நிறுத்தியது.”

இப்போது தெரியவருவது படி, வேறெந்த கார் உற்பத்தியாளரும் ஆலையை கையகப்படுத்தவில்லை என்ற நிலையில், அந்த பகுதி ஒரு தளவாட மையமாக அல்லது ஒரு பெரும் பல்பொருள் விற்பனை அங்காடியாக மாற்றப்படலாம். இருப்பினும், Camacari உலோகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரும், பிரேசிலின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCdoB) அதிகாரியுமான ஜூலியோ போன்ஃபிம், தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக, மற்றொரு கார் உற்பத்தியாளர் ஆலையின் உற்பத்தியை கையில் எடுத்துக்கொள்வார்கள் என்ற வாக்குறுதியை இப்போது பயன்படுத்துகிறார்.

வாகனத்துறை பூங்காவை இயக்க ஆர்வமாகவுள்ள நிறுவனங்களை குழு தேடுவது குறித்து PT கட்சியைச் சேர்ந்த பஹியா ஆளுநர், ரூய் கோஸ்டாவுடன் இணைந்து பணியாற்றும் அதேவேளை, போன்ஃபிம் பணிநீக்கங்களை ஏற்கனவே ஒத்துக் கொள்வதுடன், பணிநீக்க ஊதியம் வழங்குவதற்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். “ஃபோர்ட் அதன் நடவடிக்கைகளை நிறுத்தி, Camacari இல் தொடர்ந்து ஆலையை நடத்த வாய்ப்பில்லை என்றால், நியாயமான முறையில் பணிநீக்க ஊதியத்தை வழங்க அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தட்டும்,” என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் பாரிய வேலையின்மையின் பெரும் விளைவுகளை எந்தவொரு பணிநீக்க ஊதியமும் ஈடுசெய்ய முடியாது. இப்போது பிரேசிலில் ஃபோர்டில் வேலைசெய்யும் அண்ணளவான 6,000 தொழிலாளர்களில், 4,600 (75 சதவிகிதம்) பேர் Camacari இல் உள்ள ஃபோர்ட் வளாகத்தில் பணியாற்றுகிறார்கள். நகரத்தின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி தொழில்துறை வளாகத்தைச் சார்ந்துள்ளது. நகரின் மேயர், வரி வருவாயில் 10 சதவீத இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறைகளில் ஏற்கனவே வெட்டுக்களுக்கு அறிவித்துள்ளார், அதேவேளை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களுக்கான மருத்துவ சேவைகளை அவர்கள் இழப்பதால் இந்த சேவைகளுக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.

சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே அரசியல் சக்திகளுடன், இறுதியில் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடையவை என்றாலும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் தொழிலாளர்கள் மத்தியிலான எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டமும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆண்டு ABC இல் ஃபோர்ட் ஆலை மூடப்படுவதற்கு எதிரான போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது தொடர்புபட்ட படிப்பினைகளை தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் பொருள், அவர்களை மற்றொரு பேரழிவுகரமான தோல்விக்கு இட்டுச் செல்லும் தொழிற்சங்கத் தலைவர்களை முறித்துக் கொண்டு, பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

Loading