முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியினரின் குற்றவிசாரணை மூடிமறைப்பு சதிகார ட்ரம்பை துணிவு பெறச் செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6, 2021 இல் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி சம்பந்தமாக, "கிளர்ச்சியை தூண்டிய" குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடுவிக்குமாறு அமெரிக்க செனட் சபை சனிக்கிழமை வாக்களித்தது.

இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. அதிகாரப் பகிர்வைத் தூக்கியெறிந்து, ஒரு ஜனாதிபதி தன்னை ஒரு சர்வாதிகாரியாக நியமிக்க முனைந்தார், அவரைக் கணக்கில் கொண்டு வருவதற்கான மிகவும் அடிப்படை நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் சபை மறுத்துவிட்டது.

In this Jan. 6, 2021, file photo rioters try to break through a police barrier at the Capitol in Washington. (AP Photo/John Minchillo, File)

43 குடியரசுக் கட்சி செனட்டர்கள், விடுவிப்பதற்கு வாக்களித்ததன் மூலமாக, ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கி இருந்தனர். ட்ரம்ப் வென்றிருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதை அவர்கள் வாக்குகள் எடுத்துக்காட்டின: அவர்கள் அரசியலமைப்பைத் தூக்கியெறிவதை ஆமோதித்து ஆதரித்திருப்பார்கள்.

அவரின் கிளர்ச்சி பொலிஸ் வன்முறைக்கு எதிரான இடதுசாரி ஆர்ப்பாட்டங்களின் விளைவாகும் அல்லது அவற்றுக்குப் பொருத்தமான விடையிறுப்பாகும் என்ற பாசிசவாத வாதத்தை ஒப்புக் கொண்டு, ட்ரம்புக்கான "சட்டபூர்வ" பாதுகாப்பானது, தகுதியற்ற குதர்க்கவாதம் மற்றும் விஷமத்தனமான பிதற்றல்களின் ஒரு கலவையாக இருந்தது. நாடாளுமன்ற கலகம் "விளிம்போர இடது" குழுக்களால் "முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததாக" ட்ரம்ப் வழக்குரைஞர் மைக்கென் வன் டெர் வீன் அறிவித்தார்.

இந்த குற்றவிசாரணை வழக்கிலிருந்து துணிவு பெற்று வெளிவந்துள்ள ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் தலைவராக அவர் பதவியில் பாதுகாப்பாக நிற்கிறார். “டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் மிகவும் உத்வேகமான உறுப்பினர்,” என்று ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்செ கிரஹாம் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் செய்திகளுக்கு குரூரத் திருப்தியுடன் கூறினார். “ட்ரம்ப் இயக்கம் உயிர்ப்புடன் நலமாக இருக்கிறது,” என்றார்.

இந்த தீர்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் உதவி இருந்தனர், அவர்கள் ட்ரம்ப் மீதான வழக்கை வீணடித்திருந்தனர். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சக சதிகாரர்களை வேண்டுமென்றே பாதுகாத்தனர். “சீர்குலைக்கப்பட்ட" தேர்தல் என்ற குற்றச்சாட்டுக்களுடன் ஜனவரி 6 கிளர்ச்சிக்கு அரசியல் கட்டமைப்பு வழங்கியவர்களுடன் சேர்ந்து, ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியை அங்கீகரிப்பதற்கு எதிராக வாக்களித்த பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் 147 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இதில் உள்ளடங்குவர். ஜனவரி 6 இல் மத்திய படைகளை ஒதுங்கி இருக்க ஏற்பாடு செய்து ட்ரம்புடன் இரகசியமாக செயலாற்றிய அரசுக்குள் இருந்த சக்திகளும் இதில் உள்ளடங்கும்.

ஜனநாயகக் கட்சியினர், இந்த வழக்கு நெடுகிலும், தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்ப் முனைவில் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய அந்த குடியரசுக் கட்சியினரிடமே கெஞ்சி முறையிட்டு வந்தனர்.

ஜனநாயகக் கட்சியின் குற்றவிசாரணை நிர்வாகிகள், இந்த கிளர்ச்சிக்குப் பின்னாலிருக்கும் அரசியல் மூலோபாயத்தை விவரிக்க அமெரிக்க மக்கள் முன்வந்து ஒருமுறை கூட உரையாற்றி இருக்கவில்லை அல்லது அதற்கு முயற்சிக்கவும் இல்லை. ட்ரம்ப் அந்த கும்பலைத் தூண்டிவிட்டு கொண்டிருந்த போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைக் குறித்து அவர்கள் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை—ஏழு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் தோல்வி அடைந்த ஒரு தேர்தலில் மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு காங்கிரஸ் சபை உறுப்பினர் மற்றும் செனட்டர் ஒருவர் மாற்றி ஒருவர் ஆட்சேபணைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஜனநாயகக் கட்சி குற்றவிசாரணை நிர்வாகிகள் செனட் உறுப்பினர்களின் மேசைகளைக் கலகக்காரர்கள் சூறையாடியதைக் காட்டும் ஒரு காணொளியை வெளியிட்டது மட்டுந்தான், அந்த ஒட்டுமொத்த விசாரணை நெடுகிலும் குடியரசுக் கட்சியினரின் ஆட்சேபனைகளுக்கான ஒரே குறிப்பாக இருந்தது, தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளை குடியரசுக் கட்சி செனட்டர் டெட் க்ரூஸ் ஆதரித்ததால், அவர் "எங்களுடன்" இருக்கிறார் என்று அந்த காணொளியில் கிளர்ச்சியாளர்களில் ஒருவர் அறிவித்தார்.

வாஷிங்டனுக்கு உள்ளேயும் சற்று வெளியேயும் நிலைநிறுத்தப்பட்டிருந்த பத்தாயிரக் கணக்கான தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மத்திய இராணுவப் படைகளிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் அந்த கலகக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தைக் கைப்பற்ற ஏன் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற எந்தவொரு விவாதத்தையும் ஜனநாயகக் கட்சியினர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார்கள். அந்த கலகத்திற்கு அடுத்த நாள், மேரிலாந்து ஆளுநர் லேரி ஹோகன் கூறுகையில், நாடாளுமன்ற பொலிஸிற்கு உதவியாக வாஷிங்டனில் மேரிலாந்து தேசிய பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதற்கான அவர் முறையீடு இடைக்கால பாதுகாப்புச் செயலரால், இவர் நவம்பர் 3 தேர்தலுக்குப் பின்னர் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவர், 90 நிமிடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். ஆயுதப்படை செயலர் தான் பாதுகாப்புப் படைகளை விடுவிக்க அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

இராணுவக் கட்டளைச் சங்கிலியில் எந்த கூறுபாடுகள் ஒதுங்கி இருப்பதற்கு ஒத்துழைத்தன, அது ட்ரம்ப் உத்தரவுகளால் செய்யப்பட்டதாக என்பதைக் குறித்து அங்கே எந்த விசாரணையும் இல்லை.

அவர்களின் வழக்கை அவர்கள் ட்ரம்ப் நடவடிக்கைகளோடு மட்டுமே மட்டுப்படுத்தி இருந்த போதினும், அந்த குற்றவிசாரணை நிர்வாகிகள் அவர்கள் அமைத்திருந்த குற்றவிசாரணைக்கான முற்றிலும் மட்டுபடுத்தப்பட்ட, சட்டபூர்வ அடித்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களைக் கூட முடமாக்கி இருந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு, ஒரு குடியரசுக் கட்சியாளர், வாஷிங்டன் பிரதிநிதி ஜேம் ஹரெரா பௌட்லர், பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி சிறுபான்மை அணி தலைவர் கெவின் மெக்கார்த்தி உடனான ஒரு தொலைபேசி உரையாடலில் கிளர்ச்சியாளர்களை ட்ரம்ப் செயலூக்கத்துடன் ஆதரித்ததைத் தெளிவுபடுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். ஹரெரா பௌட்லர் கருத்துப்படி, மெக்கார்தி அந்த தாக்குதலை நிறுத்த ட்ரம்பிடம் முறையிட்ட போது, “சரி, கெவின், தேர்தலைக் குறித்து இவர்கள் உங்களை விட அதிகமாக நிலைகுலைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று கூறி ட்ரம்ப் பகிரங்கமாகவே கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இருந்தார்.

செனட் சபை ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள போதும், ஹரெரா பௌட்லரை மட்டுமல்ல, மாறாக தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்ப் முயற்சி குறித்தும் மத்திய படைகள் ஒதுங்கி இருக்கும் என்பதைக் குறித்தும் முன்கூட்டிய நன்கறிந்த டஜன் கணக்கானவர்களை விசாரணைக்கு அழைத்திருக்கலாம், உறுதிமொழியின் கீழ் சாட்சி வழங்கவும் நிர்பந்தித்திருக்கலாம்.

ஆனால் சாட்சி கூற ஹரெரா பௌட்லரையும் ஏனைய சாட்சியங்களாக இருக்கக்கூடியவர்களையும் அழைத்து வருவதற்கான வாக்குகளைப் பெற்ற போதினும், ஜனநாயகக் கட்சியினர் திடீரென தீர்வு கண்டு, ஹரெரா பௌட்லர் அறிக்கைக்கு 24 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் அந்த விசாரணை வேகவேகமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

வெளியுறவு கொள்கை சம்பந்தமாக ஜனநாயகக் கட்சியினரின் ட்ரம்ப் உடனான கருத்துவேறுபாடுகளைச் சுற்றி மையமிட்டிருந்த, ட்ரம்ப் மீதான முதல் பதவிநீக்க குற்றவிசாரணை ஆவணங்கள் ஆயிரக் கணக்கில் நீண்டிருந்தன. அந்த குற்றவிசாரணை நிகழ்முறை மூன்று மாதகாலம் கட்டவிழ்ந்தது, குற்றச்சாட்டுக்களைப் பரிசீலித்து பிரதிநிதிகள் சபை குழுக்களுக்கு முன்னால் பல சாட்சியங்கள் அழைக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் உள்ளடங்கும்.

ஆனால் நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பு அரசு மீதான மிகப்பெரும் தாக்குதலுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினர், இந்த குற்றவிசாரணை வழக்கானது ஏனைய சட்டமன்ற முன்னுரிமைகளில் இருந்து கவனத்தைச் சிதறடிக்கிறது என்ற அடித்தளத்தில், ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் இந்த செனட் சபை வழக்கை முடித்து வைக்க வாக்களித்தனர். அந்த குற்றவிசாரணை வழக்கு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து உடனடியாக செனட் சபை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு, செனட்டர்கள் ஓய்வுக்காக நகரை விட்டு வெளியேறிய போது இந்த வாதம் முற்றிலும் பொய் என்பது நிரூபணமானது.

ட்ரம்ப் மீதான இரண்டாவது பதவிநீக்கக் குற்றவிசாரணை நடத்தப்பட்ட விதத்தை நிக்சன் நிர்வாகத்தின் வாட்டர்கேட் ஊழல் விசாரணையுடன் ஒப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். ஜனநாயகக் கட்சி செனட்டர் சாம் எர்வின் தலைமையில் பெப்ரவரி 1973 இல் தொடங்கிய செனட் சபை விசாரணை, நடைமுறையளவில் நம்பகமான குற்றச்சாட்டுக்களின் முன்னால் நிக்சன் இராஜினாமா செய்ய மட்டும் நிர்பந்திக்கவில்லை, மாறாக FBI மற்றும் CIA சம்பந்தப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தவும் மற்றும் அண்மித்து இரண்டு டஜன் பேர் குற்றவியல் தண்டனை பெறவும் இட்டுச் சென்றது. அவை அனைத்தும் ஐந்து நபர்களால் நடத்தப்பட்ட ஒரேயொரு கொள்ளை நடவடிக்கையால் தூண்டிவிடப்பட்டிருந்தது, அதில் யாருமே கொல்லப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, யாரொருவரும் காயப்படவும் கூட இல்லை.

1987 இல் ஈரான்-கொன்ட்ராஸ் விசாரணைகளும் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டிருந்தன. நிக்கரகுவா கான்ட்ராஸிற்கு அமெரிக்க அரசு உதவியை நிறுத்துவதற்காக காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட போலாண்ட் உடன்படிக்கையை ரீகன் நிர்வாகம் அப்பட்டமாக மீறியது என்பதை அந்த விசாரணை வெளிப்படுத்தியது. அது "நிலைகுலைக்கும்" கூறுபாடுகளைப் பாரியளவில் கைது செய்வதற்காக ரெக்ஸ் 84 திட்டம் இருந்ததையும் அம்பலப்படுத்தியது.

ட்ரம்ப் மீதான இந்த இரண்டாவது பதவிநீக்க குற்றவிசாரணையில் ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் சொந்த வழக்கை வேண்டுமென்றே நாசப்படுத்தியதைச் சட்ட கண்காணிப்பாளர்கள் பரந்தளவில் குறிப்பிட்டிருந்தனர். “சபை குற்றம் சுமத்துவதாக இருந்திருந்தால், அது விடுவிப்பதிலிருந்து எந்தளவுக்குச் சாத்தியமோ அந்தளவுக்கு சபையில் அந்த வழக்கை சிக்கலாக கட்டமைத்திருக்க வேண்டும்,” என்று ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் அரசியலமைப்பு பிரிவு பேராசிரியர் மிக்கெல் டபிள்யூ. மெக்கொன்னல் எழுதினார்.

ட்ரம்ப் "திரு. பைடென் தேர்வாவதைத் தடுக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் மற்ற அதிகாரிகளை மிரட்ட முனைந்தார், மேலும் வன்முறை தொடங்கி விட்டது என்றாலும் அதை முடிவுக்குக் கொண்டு வர அவர் என்ன செய்திருக்க வேண்டுமோ அந்த கடமையையும் அவர் செய்யத் தவறினார். தண்டிப்பதற்கு அவையே போதுமான அடித்தளங்களாகும்,” என்பது "முற்றிலும் தெளிவாக உள்ளது,” என்றவர் குறிப்பிட்டார்.

ஆனால் தேர்தல் முடிவை மாற்றுவதற்குக் குடியரசு கட்சியினரின் முயற்சிகள் மற்றும் மத்திய படைகள் ஒதுங்கி இருந்தமை ஆகியவற்றின் மீதான எந்தவொரு விசாரணையும், பாதுகாக்க வேண்டுமென ஜனநாயகக் கட்சியினர் மிகவும் அக்கறை கொண்டிருந்த அந்த சக்திகளைத் துல்லியமாக உடந்தையாக்கி இருக்கும்.

இந்த குற்றவிசாரணை வாக்கெடுப்புக்குப் பின்னர், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நான்சி பெலோசி, குடியரசுக் கட்சியிலுள்ள ட்ரம்பின் சக-சதிகாரர்களைப் பாதுகாக்கும் ஜனநாயகக் கட்சியினரின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தினர். பைடென் முன்னரே பிரகடனப்படுத்தியதை எதிரொலித்து, “நமக்கு ஒரு பலமான குடியரசுக் கட்சி வேண்டும்,” என்று பெலோசி அறிவித்தார்.

அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு முன்னால், இரண்டு கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் வலதுசாரி வியாபார-சார்பு கொள்கைகளுக்கு ஒரு ஆதரவுத் தளமாக, ஜனநாயகக் கட்சியினருக்கு, இந்த ஈனத்தனமான பாசிசவாதிகளின் கும்பல் தேவைப்படுவதால் தான் அவர்கள் குடியரசுக் கட்சியிலுள்ள ட்ரம்பின் சக-சதிகாரர்களைப் பாதுகாக்கிறார்கள்.

ஆளும் உயரடுக்கின் நலன்கள் மற்றும் அரசின் ஜனநாயக வடிவங்கள் இவற்றுக்கு இடையே ஏதோவொன்றைத் தேர்ந்தெடுப்பதில், ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு நேரமும் அமெரிக்காவின் செல்வந்த ஆட்சியின் தேவைகள் பக்கமே தரப்பெடுப்பார்கள். அமெரிக்காவில் அரசின் அரசியலமைப்பு வடிவங்களைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளனர். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பை, முதலாளித்துவ-விரோத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே பாதுகாக்க வேண்டும், அவ்வாறு மட்டுமே பாதுகாக்க முடியும்.

Loading