நோய்த்தொற்றுகள் பெருகும்போது, இலங்கையில் கோவிட்-19 வைரஸின் தீவிர தொற்றும் தன்மையுள்ள வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் தினமும் கிட்டத்தட்ட 1,000 நோய்த்தொற்றுகள் பதிவாகிவருகின்ற நிலையில், கொழும்பு உட்பட பல நகர்ப்புறங்களில் கொவிட்-19 இன் உயர்ந்த தொற்றுந்தன்மை உள்ள பிரிட்டிஷ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை, நோய்த்தொற்று உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் வேகமாக பரவ காரணமாக அமைந்துள்ளது. இலங்கை ஆய்வாளர்களின் படி, இது நாட்டில் பரவுவதற்கான வீதத்தை 50 சதவீதம் அதிகரிக்கும்.

திங்களன்று நிலவரப்படி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் குறைத்துக் காட்டப்படும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், மொத்தம் 390 மரணங்களையும் 75,209 நோய்த்தொற்றுகளையும் காட்டுகின்றன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை 10 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்று பெருமை பேச அரசாங்கமும் ஊடகங்களும் இந்த ஒப்பீட்டளவில் குறைந்த புள்ளிவிவரங்களைப் பற்றிக்கொண்டுள்ள போதிலும், நாட்டில் கொவிட்-19 பரிசோதனை விகிதங்கள் குறைவாகவே உள்ளன.

கொட்டாவையில் பஸ்ஸில் இருக்கை பிடிக்க தொழிலாளர்கள் முண்டியடிக்கின்றனர் (Credit: WSWS)

போதிய சுகாதார வசதிகள் மற்றும் தொற்றுநோய் பரவலின் துரிதத்தின் காரணமாக நாடு சுகாதார பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார கொள்கைக்கான நிறுவனத்தின் (Institute for Health Policy-IHP) நிர்வாக இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரன்னன்-எலிய, "இலங்கை அதன் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும்" என எகொனமி நெக்ஸ்ட் இடம் கூறியுள்ளார். "பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 12,000 முதல் 14,400 வரை குறைந்துள்ளதுடன், எங்களுக்கு நாளொன்றுக்கு 60,000 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுக்கு பரிசோதனைகளை பாரியளவு அதிகரிப்பது அவசியமாகும்." சோதனைகளை விரிவாக்குவதை அரசாங்கம் ஏறத்தாழ கைவிட்டுவிட்டுள்ளது.

பெப்ரவரி 9 அன்று ஊடகங்களுடன் பேசிய அரசாங்க சார்பு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஆசிரியர் வைத்தியர் ஹரித அளுத்கே, அசாதாரண எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், ஒவ்வொரு மாகாணத்திலும் அபாயங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

கொவிட்-19 நோய்த்தொற்றின் விகிதம் ஜனவரி மாதத்திற்கு முன்பு 3 சதவீதமாக இருந்த போதிலும், ஜனவரி மாதத்தில் இது 6 சதவீதத்தையும் சமீபத்திய நாட்களில் 7 சதவீதத்தையும் எட்டியதாக அலுத்கே கூறினார். "இப்போது, ஒவ்வொரு 100 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கும் 7-8 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன" என்று அவர் கூறினார். ஜனவரியில் 112 பேர் மரணித்திருந்த நிலையில், பெப்ரவரி முதல் வாரத்தில் சுமார் 50 மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்று விகிதங்கள் அதிகரிப்பதற்கான ஒரு காரணம், பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாகுவது ஆகும், என்று அலுத்கே கூறினார்.

பெப்ரவரி 10 அன்று, மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், ஏற்கனவே 6,000 பி.சி.ஆர். மாதிரிகள் முடிவுகள் வெளியிடப்படாமல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (எம்.ஆர்.ஐ.) சிக்கியுள்ளதாக தெரிவித்தார். "அவர்கள் முன்பு செய்ததைப் போல் அல்லாமல், பி.சி.ஆர். பரிசோதனையை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது," என்று அவர் எகொனமி நெக்ஸ்ட் இடம் கூறினார். “அவர்கள் மற்ற விடயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்துவதற்கான ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.”

விரிவாக பேசிய குமுதேஷ் கூறியதாவது: “இப்போது சுமார் இரண்டு மாதங்களாக, பி.சி.ஆர். பரிசோதனைக்குத் தேவையான வினையூக்கி ஆய்வுப் பொருள்கள் முல்லேரியா ஆய்வகத்திற்கு வழங்கப்படுவதில்லை. இதன் விளைவாக, அந்த ஆய்வகம் இப்போது இயங்குவதில்லை. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பரிசதோனை மாதிரி பிரித்தெடுக்கும் இயந்திரமும் பயன்படுத்தப்படவில்லை, இது அங்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு பெரிய அடியாகும்.”

இந்த ஆபத்தான நிலைமை, வைரஸ் பரவினாலும், பொருளாதாரம் திறக்கப்பட்டு, மக்கள் “புதிய வழமையின்” கீழ் வாழ வேண்டும் என்று வெகுஜனங்களுக்கு ஆணையிடுகின்ற அரசாங்கத்தின் கொள்கைகளின் நேரடி விளைவாகும். தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பரிசோதனைகளை மேற்கொள்ள பி.சி.ஆர். இயந்திரங்கள் இல்லாததால், பதுளை பொது மருத்துவமனையில் 800 உயிர் மாதிரிகள் குவிந்துள்ளதாக, லங்காதீப பத்திரிகை பெப்ரவரி 9 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு இயந்திரத்தில் இருந்து பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வெளியிட மூன்று நாட்கள் தாமதம் ஏற்படுவதாக அந்த மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ஷாந்த கமகெதர தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். பதுளை மாவட்டத்தின் பொது மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டிருக்கும் மாதிரிகளில், மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான ரிதீமலியத்த பிரதேசத்தில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்களது மாதிரிகளும் உள்ளன.

மேல் மாகாணத்தைத் தவிர, தீவின் எல்லா மாகாணங்களிலும் நவம்பர் 23 அன்று அரசாங்கம் பாடசாலைகளைத் திறந்துவிட்டது. நாடு முழுவதும் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாலும், மேல் மாகாணத்தின் நிலைமை மோசமடைந்து வருவதாலும், அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் மார்ச் 15 அன்று சில விதிவிலக்குகளுடன் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பெப்ரவரி 10 அன்று அறிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பாடசாலைகள் திறக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஜனவரி 11 அன்று மீண்டும் பாடசாலை காலம் தொடங்கியபோது, 55 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகை தந்தனர். அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் பிரச்சாரத்தின் பின்னரே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை அதிகரித்தது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறக்க ஆசிரியர் சங்கங்களும் மௌனமாக ஆதரவளிக்கின்றன.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலைகள், தொற்றுநோயின் மையமாக மாறிவிட்டன. ஆடை தொழிற்சாலைகளில் தொற்றுநோய் பரவுவதாக தினமும் செய்திகள் வெளியாகின்ற போதிலும், இவை ஊடகங்களில் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. வட மாகாணத்தின் கிளிநொச்சியில் உள்ள வனவில் எம்.ஏ.எஸ். ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுநோய் பரவி வருவதாக தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத்தளத்திடம் தெரிவித்தனர். ஆனாலும் நிறுவனம் இன்னும் தொழிற்சாலையை மூடத் தயாராக இல்லை.

தொழிற்சாலை உரிமையாளர்களின் கவலை தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் உயிர்வாழ்வு அல்ல, மாறாக ஏற்றுமதி இலக்குகள் மற்றும் இலாபங்களே ஆகும்.

கூட்டு ஆடை தொழிற்துறை சங்கத்தின் தலைவர் ஏ. சுகுமாரன், சமீபத்தில் ஒரு குழு விவாதத்தில் கூறியதாவது: “ஆடைகளுக்கு உலகளாவிய கேள்வி உள்ள போதிலும், இலங்கை காலக்கெடுவை எட்டுவது குறைவாகவே உள்ளதுடன், முக்கியமான வாடிக்கையாளர்கள் எந்தவொரு தாமதமும் இல்லாமல் உற்பத்திகளை வழங்கும் போட்டியாளர்களை நோக்கி நகர்கின்றனர்.”

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கொள்கைகள், உற்பத்தி மற்றும் இலாபங்களை பராமரிக்க வேண்டும் என்ற பெரும் வணிகங்களின் கோரிக்கைகளால் கட்டளையிடப்படுகின்றன.

தங்களது வருமானத்தை இழப்பவர்களுக்கு முழு நட்டஈட்டுடன் அத்தியாவசியமற்ற சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு தொழிலாள வர்க்கம் போராட வேண்டும். சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில், வைரஸிலிருந்து முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட வேண்டும். கொவிட்-19 தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

கொவிட்-19 தொற்றுநோயின் ஒரு ஆண்டு அனுபவம், முதலாளித்துவ அமைப்பின் முற்றிலும் வங்குரோத்தை நிரூபிக்கிறது. தேவையற்ற மரணம் மற்றும் நோயை உருவாக்குவதோடு, உழைக்கும் மக்களின் முதுகில் புதிய சுமைகளை சுமத்த ஆளும் வர்க்கம் தொற்றுநோயை சுரண்டிக்கொண்டுள்ளது. தடுப்பூசி வழங்குவது கூட பெரிய நிறுவனங்களின் இலாப நலன்களுக்கும் முதலாளித்துவ ஆட்சிகளின் தேவைகளுக்கும் கீழ்படியச் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலாப நோக்கமற்ற, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துகின்ற ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகப் போராடுவதே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே தீர்வாகும்.

Loading