சாஹேலில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை ஜனாதிபதி மக்ரோன் நிராகரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை சாஹேல் ஜி5 நாடுகளின் காணொளி கூட்டத்தில் உரையாற்றினார், இது இந்த பிராந்தியத்தில் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் தலைமையிலான இராணுவ தலையீட்டில் பங்கேற்கும், மொரித்தேனியா, மாலி, நைஜர், புர்கினா ஃபாசோ மற்றும் சாட் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.

சாஹேலின் பிரெஞ்சு இராணுவ ஆக்கிரமிப்பை உடனடியாக திரும்பப் பெறுவது அல்லது குறைப்பது பற்றிய வதந்திகளை நிராகரிக்க மக்ரோன் இந்த உரையை பயன்படுத்தினார். “சாஹேலில் உள்ள எங்களது இராணுவப் படையில் உரிய நேரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவை உடனடியாக நடக்காது,” என்று அவர் கூறினார். மேலும், “ஏராளமான படையினரை குறைப்பது, பிரெஞ்சு படையை மீளப் பெறுவது, என்பவை ஒரு பிழையாக இருக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்” என்றும் தெரிவித்தார்.

மார்ச் 17, 2016 இல், 126 வது காலாட்படை படைப்பிரிவின் பிரெஞ்சு சிப்பாய்களும் மற்றும் மாலியன் சிப்பாய்களும் (Wikimedia Commons)

2011 ல் லிபியாவில் நடந்த நேட்டோ ஆட்சி மாற்ற போருக்குப் பின்னர் லிபியாவிலிருந்து மாலிக்குள் நுழைந்த பிரிவினைவாத மற்றும் இஸ்லாமிய சக்திகளுக்கு எதிராக, பிரான்ஸ் 2013 இல் மாலி மீது படையெடுத்தது. அநேகமாக எட்டு ஆண்டுகளாக 4,100 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு துருப்புக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன, இது ஓராண்டுக்கு முன்னர் மக்ரோனால் 5,100 ஆக அதிகரிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் உள்ளூர் மக்களைப் பாதுகாத்தல் என்ற இழிந்த பதாகையின் கீழ் பிரெஞ்சு இராணுவம் இந்நாட்டின் மீது போர் தொடுத்தது. உண்மையில், இது வளமிக்க மற்றும் புவி-மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிராந்தியத்தை அடிபணியச் செய்யும் நோக்கம் கொண்ட ஒரு மிருகத்தனமான நவ-காலனித்துவப் போராகும்.

சாஹேலில் யுரேனியப் படிவுகள் உள்ளன. இவை, பிரான்சின் எரிசக்தி உற்பத்திக்கும், அத்துடன் நைஜேரிலுள்ள பிரெஞ்சின் முக்கிய ட்ரோன் தளத்திற்கும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் இந்த பிராந்தியம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய தங்க படிவுகளைக் கொண்டுள்ள மேற்கு ஆபிரிக்காவின் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது, ஆனால் அங்கு சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராஜதந்திர செல்வாக்கைத் தடுக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் முயல்கிறது.

ஜனவரி 2 ஆம் தேதி சிப்பாய்களின் கார் மீது அதிக வலுவூட்டப்பட்ட வெடிமருந்து சாதனம் மோதியதால் மற்றொரு இரண்டு பிரெஞ்சு சிப்பாய்கள் இறந்து போனது உட்பட, சமீபத்திய மாதங்களில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் படைகளின் தொடர்ச்சியான இராணுவ பின்னடைவுகளால் போருக்கான சமிக்ஞை குறித்துக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கூட்டாக இயங்கும் மற்றும் திங்கட்கிழமை மாநாட்டில் பங்கேற்றிருந்த படையினரின் போர்க்குற்றங்கள் பற்றிய தொடர் அறிக்கைகள் பற்றி மக்ரோன் தனது உரையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கைகள், இஸ்லாமிய குழுக்களுடன் அடைக்கலமாகியிருந்த அனுதாபிகளை குற்றம்சாட்டிய ஒட்டுமொத்த நகரங்களுக்கு எதிரான கூட்டு பழிவாங்கும் நடவடிக்கைகள், மற்றும் பெரும்பான்மை முஸ்லீம், பியூல் (அல்லது ஃபுலானி) சமூகங்களுக்கு எதிரான இன குறுங்குழுவாத படுகொலைகளுக்கு உள்ள மறைமுக ஆதரவு ஆகியவை பற்றிய விபரங்களை உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று, மாலியன் இராணுவத்தின் போர்க்குற்றங்களை குற்றம்சாட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதிகளை AFP கசியவிட்டது. இந்த அறிக்கை பாதுகாப்பு கவுன்சிலால் அனுப்பப்பட்டது, ஆனால் உடனடியாக கைவிடப்பட்டது என்பதுடன் பிரெஞ்சு அரசாங்கம் அதுபற்றி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆவணம் கிட்டத்தட்ட 350 பக்கங்கள் நீளமானது. AFP அறிக்கையின் படி, மாலியன் இராணுவம் தான் “போர்க்குற்றங்களைச் செய்துள்ளன” என்பதை “நம்புவதற்கு நியாயமான காரணங்கள்” வேண்டும் என்று அதன் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது, 2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் மாலியன் இராணுவ துருப்புக்கள் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மேற்கோளிட்டுள்ளது.

“மே 2 அன்று சுமார் 4 மணி அளவில், பெரும்பாலானோர், முக்கியமாக பியூல் ஆண்கள்,” கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் ஆயுதமேந்திய தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த மாலியன் படையினர் அவர்கள் மீது கடுமையாக தடியடி நடத்தினர், அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்களை கொன்றுவிடவும் [துருப்புக்கள்] அச்சுறுத்துகின்றன.” சம்பவ இடத்தில் மூன்று ஆண்கள் கொல்லப்பட்டதாக இது கூறுகிறது.

இருப்பினும், ஆக்கிரமிப்பால் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் பற்றிய ஏராளமான அறிக்கைகளில் இது ஒன்றாகும்.

லியேபே நகரில், எட்டு நாட்களுக்கு முன்னர் ஒரு தனி கிராமத்தில் 24 பேரை மாலியன் இராணுவம் படுகொலை செய்ததாகக் கூறும் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிக்கையை Liberation நவம்பர் 1 அன்று பிரசுரித்தது.

“படுகொலைக்கு இராணுவம் தான் பொறுப்பாளி என்று பல சாட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்,” என்று அது கூறுகிறது. “15 மற்றும் 20 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் மாலியன் படைகளின் வாகனங்கள் காலையில் லியேபேக்கு வந்து சேர்ந்தன என்று [சாட்சிகள்] கூறுகின்றன. அப்போது படையினர் வேகமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பிழைத்தவர் ஒருவரின் கூற்றுப்படி, சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், ஆறு பாதிக்கப்பட்டவர்கள் கட்டிவைக்கப்பட்டனர், அவர்களின் கண்களும் கட்டப்பட்டன… இந்த முறையானது, கூட்டு மரணதண்டனைகளைக் குறிக்கிறது…” அதன் பின்னர் துருப்புக்கள் வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், நகர மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சாட்சிகள் கூறுகின்றனர். பலியானவர்களில் பாதிப் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஒரு வாரத்திற்கு முன்னர், லியேபே இலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோகுரா அருகே இஸ்லாமியப் படையினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் உள்ளது, இதில் 10 பொதுமக்களும் 11 சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூலை மாதம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் சொந்த அறிக்கையை வெளியிட்டது, இது மாலியின் எல்லையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நைஜரின் வடக்கேயுள்ள ஜிபோ என்ற ஊரைச் சேர்ந்த 23 பேரின் பேட்டியை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஆண்டு பல மாதங்களில் ஜிபோவில் 180 க்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, இவை அனைத்தும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட நபர்களினது கல்லறைகள் என்று நம்பப்படுகிறது.

ஆக்கிரமிப்பு துருப்புக்கள் உள்ளூர் குடிப்படைகளுடன், குறிப்பாக டோகோன் இனத்தைச் சேர்ந்த குழுக்களுடன் ஒத்துழைப்பதாக பரவலாக கூறப்படுகிறது. உள்ளூர் பாதுகாப்பு படையினர் டோகோன் ஆயுதப் படையினருக்காக ஆயுதமேந்தியதாகவும், அவர்களுக்கு ஆதரவளித்ததாகவும், மேலும் பியூல் இனங்களின் குறுங்குழுவாத படுகொலைகளுக்கு கண்மூடித்தனமாக திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் ஓகோசாகோ நகரில் டோகோன் குடிப்படைக் குழுக்களால் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உட்பட, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏராளமான கொடூரமான இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளன. பாரிஸைப் பொறுத்தவரை, இந்த தாக்குதல்கள் உள்ளூர் மக்களை மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்கும் மட்டும் நடத்தப்படவில்லை, மாறாக ஒரு நிரந்தர ஆக்கிரமிப்புப் படையை பராமரிப்பதற்கு மனித உரிமைகளை நியாயப்படுத்தும் விதமான நடவடிக்கைகளாக அவை உள்ளன.

கடந்த ஆகஸ்டில், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் மாலியன் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. இராணுவ அரசாங்கத்திற்கு உடனடியாக பாரிஸ் ஆதரவை வழங்கியதோடு, பிரெஞ்சு தலைமையிலான சர்வதேச அளவிலான நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு அவர்களது ஆதரவை தொடர்ந்து வழங்க மாலியன் துருப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அது அறிவித்தது.

Loading