இந்திய வெளியுறவு அமைச்சர் வளர்ந்து வரும் சீன செல்வாக்கை எதிர்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனாவிற்கு எதிரான புவி-மூலோபாய நகர்வுகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் முதலீட்டு திட்டங்களில் தாமதம் ஏற்படுவது பற்றி புதுதில்லியின் அதிருப்தியை தெரிவிக்க கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஜெய்சங்கர், ஜனவரி 7 அன்று முடிவடைந்த தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது, ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தனுடனும் அவர் கலந்துரையாடினார்.

மைக் பொம்பியோவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (Source Twitter: @SecPompeo)

சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான இராணுவ மூலோபாய கட்டமைப்பில் ஒரு முன்னணி அரசாக செயல்படும் இந்தியா, குறிப்பாக இராஜபக்ஷ அரசாங்கத்துடன் பெய்ஜிங் பொருளாதார உறவுகளை வளர்ப்பது குறித்து கவலை கொண்டுள்ளது.

கடந்த மாதம், இந்தியாவின் அமைச்சரவை தரவரிசை பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இலங்கைக்குச் சென்று ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் தலைவர்களைச் சந்தித்து, மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தீவில், இந்திய முதலீடுகளை ஊக்குவித்தார்.

ஊடகங்களின்படி, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், 15 திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் குறித்து பலமுறை கவலை தெரிவித்துள்ளது. அவற்றில் சில 2017 இல் கையெழுத்திடப்பட்வை. இவற்றில் கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தின் (ECT) இந்திய பாகம் மற்றும் வடக்கு பாலாலி விமான நிலையமும் அடங்கும். இலங்கை-இந்தியா-ஜப்பான் கூட்டு திட்டத்தின் ஆரம்ப ஒப்பந்தம் 2019 இல் கையெழுத்தானது. சீனாவிற்கு சொந்தமான கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையமானது கிழக்கு கொல்கலன் முனையத்தை ஒட்டியதாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோனெட் எல்.என்.ஜி. மற்றும் அதன் ஜப்பானிய பங்காளிகளான மிட்சுபிஷி மற்றும் சோஜிட்ஸ் உடன் இணைந்து கொழும்புக்கு அருகே ஒரு திரவ இயற்கை எரிவாயு முனையத்தை நிறுவுவதற்கான மற்றொரு திட்டமும் உள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் வர்த்தகத்தில் 80 சதவிகிதம் இந்திய இடைமாற்று ஏற்றுமதி சம்பந்தப்பட்டதாக உள்ள நிலையில், புது டெல்லி இலங்கையில் காலடி வைத்திருப்பது முக்கியமானதாக கருதுகிறது.

ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதியுடன், கிழக்கு முனையம் மற்றும் ஏனைய விடயங்களையும் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. எவ்வாறெனினும், கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான முந்தைய வாக்குறுதிக்கு மேலாக, வேறு எந்த ஒப்பந்தங்களும் இந்த பயணத்தின் போது கையெழுத்திடப்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு, கொழும்பு இந்தியாவின் ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்றத்தை கோரியது. இது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

உள்ளக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, கொழும்பை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை, “இந்திய திட்டங்களில் சீனாவின் ’செல்வாக்கு’ குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். 'கிழக்கு முனைய முன்முயற்சியை தடுக்கும் நோக்கத்துடன் அதைச் சூழ சீன புலனாய்வுத் துறையால் வாய்ச்சவடால்கள் ஊக்குவிக்கப்படுவது பற்றி புது தில்லி” கவலைகொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

செய்தித்தாள் மேலும் கூறியதாவது: 'திருகோணமலையில் உள்ள வசதியில் அதிக எண்ணெய் தாங்கிகளை உருவாக்கி இயக்குவதற்கான நீண்டகால வேண்டுகோள் உட்பட, இந்தியா தலைமையிலான அனைத்து முயற்சிகளையும் தாமதமாக்குவதில் அல்லது தடுத்து நிறுத்துவதில் சீன கை இருப்பதாக சந்தேகம் உள்ளது.' இது எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை மற்றும் அதன் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த எந்தவொரு நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், இந்த அறிக்கைகள் புது தில்லி மற்றும் கொழும்பு இடையே வளர்ந்து வரும் பதட்டங்களை சுட்டிக்காட்டுகின்றன.

ஜனவரி 13, ஜனாதிபதி இராஜபக்ஷ, 23 துறைமுக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, கிழக்கு முனையம் விற்கப்படாது, ஆனால் ஒரு கூட்டு முயற்சியாக நிறுவப்படும் என்று கூறினார். ஐம்பத்தொரு சதவிகிதம் இலங்கை துறைமுக அதிகாரசபையாலும் மீதமுள்ளவை இந்தியாவின் அதானி நிறுவனம் மற்றும் ஏனயை முதலீட்டாளர்களிடம் செல்லும்.

கொழும்பு துறைமுக வசதிகளை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிழக்கு கொள்கலன் முனையம் உள்ளது. அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சிகளாலும் பலவிதமாக கட்டுப்படுத்தப்படும் துறைமுக தொழிற்சங்கங்கள், தீவிர பௌத்த குழுக்களுடன் அணிசேர்ந்து, கொழும்பின் தனியார்மயமாக்கல் திட்டத்தை எதிர்த்துப் போராட விரும்பும் தொழிலாளர்களைத் திசைதிருப்புவதற்காக ஒரு பிற்போக்கு இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன.

இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், இந்தியா எப்போதும் 'நம்பகமான பங்காளியாகவும் நம்பகமான நண்பராகவும்' இருக்கும் என்றும் 'நல்லிணக்க செயல்முறைக்கு' ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார்.

'இலங்கையின் சொந்த நலனுக்காகவே, ஒரு ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துக்குமான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன' என்று அவர் தொடர்ந்தார்.

மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை ஜெய்சங்கர் குறிப்பாக சுட்டிக்காட்டவில்லை என்றாலும், “நல்லிணக்க செயல்முறை” என்று அழைக்கப்படுவது குறித்த அவரது கருத்து குறிப்பிடத்தக்கதாகும். இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கணிசமான பகுதியினர், இந்த திருத்தத்தை ஒழிக்க அழுத்தம் கொடுக்கின்றனர்.

13 வது திருத்தமானது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இரத்தக்களரிப் போரின்போது, 1987 இல் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். இது, உள்ளூர் தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கிய அதே வேளை, புலிகளை நிராயுதபாணியாக்க இலங்கைக்கு இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த உடன்படிக்கை மற்றும் திருத்தம் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நிவர்த்தி செய்வதில் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மாறாக இது புது தில்லியின் ஆதரவுடன் கொழும்பு மற்றும் தமிழ் முதலாளித்துவத்திற்கு இடையிலான அரசியல் ஏற்பாடாக இருந்தது. அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள், தமது மூலோபாய நலன்களுக்காக கொழும்பு ஆட்சியை நெருக்குவதன் பேரிலான ஒரு அரசியல் நெம்புகோலாக, இலங்கையின் தமிழ் முதலாளித்துவ தட்டைப் பயன்படுத்துகின்றன.

வெளியுறவு அமைச்சர் குணவர்தன, இலங்கை ஜனாதிபதி “சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஒவ்வொரு இலங்கையரினதும் நல்வாழ்வுக்கும் உறுதிபூண்டுள்ளார்” என்று தவிர்க்க முடியாமல் அறிவித்தார். எவ்வாறாயினும், தமிழ் உயரடுக்கிற்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கும் இராணுவ மற்றும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் தீவிர ஆதரவுடனேயே இராஜபக்ஷ நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது.

ஜெய்சங்கர் தனது சுருக்கமான வருகையின் போது, அவரைப் பாராட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சண்டே டைம்ஸ் பத்திரிகையிடம் பேசியபோது: '13 ஏ மற்றும் இலங்கை கடமைகளை அமல்படுத்துவதை மீண்டும் வலியுறுத்திய இந்திய அரசு, அதன் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யாமைக்கு நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தோம்,' என அறிவித்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீன்வளத்துறை அமைச்சரும், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.

கொரோனா வைரஸின் மோசமடைந்துவரும் தாக்கத்தால் பெரும் பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் இராஜபக்ஷ ஆட்சி, நிதி உதவிக்காக அதிகளவில் பெய்ஜிங் பக்கம் திரும்பி வருகின்றமை பற்றிய கவலையை வெளிப்படுத்திய ஜெய்சங்கரின் வருகை, கொழும்புக்கு மறைமுகமாக விடுக்கும் மெல்லிய எச்சரிக்கையாகத் தெரிகிறது.

கடந்த மாத டிப்ளோமட் பத்திரிகையின் ஒரு கட்டுரை, இந்திய திட்டங்களுக்கான தாமதங்களை, சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சியின் சமீபத்திய இலங்கை பயணத்துடன் ஒப்பிட்டது. அந்த பயணத்தைத் தொடர்ந்து, சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல் புதுப்பிக்கப்பட்டதுடன் ஹம்பந்தொட தொழில்துறை வலயம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தையும் பூர்த்தி செய்வதை துரிதமாக்குவது பற்றியும் பேசப்பட்டது.

கடந்த அக்டோபரில், சீனா, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு 500 மில்லியன் டொலர் மானியத்திற்கு மேலாக, இலங்கையின் கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் நீர் விநியோகத்தை அதிகரிக்க 90 மில்லியன் டொலர் உதவியை வழங்கியது. சீனாவின் சாண்டோங் ஹாஹுவா டயர் நிறுவனமும், இலங்கையில் 300 மில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு இராணுவ கட்டமைப்பை எதிர்ப்பதற்கு, இந்திய துணைக் கண்டத்தில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான பெய்ஜிங்கின் முயற்சிகளின் பாதையில் அமைந்துள்ளன.

புது தில்லியும் வாஷிங்டனும், இராஜபக்ஷ அரசாங்கம் ஊசலாடுவது குறித்து மேலும் மேலும் கவலை கொண்டுள்ளன. கடந்த அக்டோபரில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ கொழும்புக்கு விஜயம் செய்து, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர்வெறியுடன் இலங்கை முழுமையாக இணங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த மாதம், 480 மில்லியன் அமெரிக்க டொலர் மில்லேனியம் கோர்ப்பரேஷன் மானியம் திரும்பப் பெறப்பட்டமை, இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள உறவுகள் குறித்த வாஷிங்டனின் அதிருப்தியின் மற்றொரு அறிகுறியாகும்.

அமெரிக்கா 2015 ஜனவரியில், இந்திய ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவையும் அவரது நிர்வாகத்தையும் வெளியேற்ற ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போதைய இலங்கை ஜனாதிபதி அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.

Loading