இந்திய பட்டாசு தொழிற்சாலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்தியாவில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பில் ஒரு குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண் உட்பட 20 தொழிலாளர்கள் இறந்ததன் மூலம் தொழிலாளர்களின் உயிர்கள் குறித்து இந்திய ஆளும் வர்க்கத்தின் குற்றவியல்தனமான அலட்சியத்தன்மையை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் இந்தியாவின் பட்டாசு தலைநகரமாக அறியப்படும் விருதுநகர் மாவட்டத்தில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளையை எடுக்கவிருந்தபோது, மதியம் 1.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது.

பேரழிவில் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறார் (படம்: தினசரி தமிழ் செய்திகள்)

மூன்று உடல்கள் பிரேதபரிசோதனை இல்லாமல் எரிக்கப்பட்டன. தீவெடிப்பில் இருந்து அதிகமான தீக்காயங்களுடன் குறைந்தது 35 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும்.

தொழிற்சாலைக்குள் இரசாயனங்கள் வெடித்துக்கொண்டிருந்ததால் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தொழிலாளர்கள் உடனடியாக வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை. சுமார் நான்கு மணி நேரங்களுக்குப் பிறகுதான் 50 க்கும் மேற்பட்ட இறந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டனர்.

வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், உள்ளூர் தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்பட்டாசு தயாரிக்க இரசாயனங்கள் கலக்கப்படும்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்றார். "இரசாயனங்கள் கலக்கும்போது ஏற்படும் உராய்வு வெடிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.

தொழிற்சாலை வளாகம், 18 ஏக்கர் நிலப்பரப்பில், "ஆடம்பரமான வகை பட்டாசுகளை" தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. இது மொத்தம் 60 அறைகளை உள்ளடக்கியது மற்றும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 15 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இவை அனைத்தும் தரையில் எரிந்துகிடந்தன.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ (நன்றி: செய்தி அலை)

15 அறைகள் நான்கு தனித்தனி உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. ஆபத்தான தொழிற்துறையின் அடிப்படை பாதுகாப்புத் தேவைகள் மற்றும் தற்போதைய COVID-19 தொற்றுநோயை முற்றிலுமாக அலட்சியப்படுத்தும்விதமாக, அதிக நெரிசலை உருவாக்கும் அதிகமான தொழிலாளர்களை அவர்கள் பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த தொழிற்சாலை பிரிவு நாக்பூரிலிருந்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) உரிமத்தின் கீழ் இயங்குகிறது.

பொதுமக்கள் கோபத்தை எதிர்கொண்ட நிலையில், இறந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் 200,000 ரூபாய் (2,700 அமெரிக்க டாலர்) இழப்பீடு மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதே போன்ற உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார்., இந்திய அரசாங்கங்களான மாநில மற்றும் மத்திய அரசாங்கம் துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பண உதவிகளை வழக்கமாக வழங்குகின்றன, இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தான நிலைமைகளை கண்மூடித்தனமாக திசைதிருப்பிவிடுகின்றன.

சமீபத்திய வெடிப்பு பல தசாப்தங்களாக தொழில்துறையில் இருந்து வரும் ஒரு முறையை பின்பற்றுவதாக உள்ளது. இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன, இதனால் பல சந்தர்ப்பங்களில் நிரந்தர குறைபாடுகள் ஏற்படுகின்றன என்று பட்டாசுத் துறையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெடிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பேரியம் நைட்ரேட், அலுமினிய கலவைகள் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட பட்டாசுகளை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புகள் குறைந்தது 12 தொழிலாளர்களைக் கொன்றன. முன்னதாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், ஒரே பிராந்தியத்தில் இரண்டு தனித்தனி தொழிற்சாலை குண்டுவெடிப்பில் 11 தொழிலாளர்கள் இறந்தனர். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இப்பகுதியில் சுமார் 150 வெடிப்புகளில் குறைந்தது 250 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில், முதலிப்பட்டியில் 2012 செப்டம்பர் மாதம் ஒரு பட்டாசு பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர். ஜூலை 2009 இல், நமஸ்கரிச்சன்பட்டியில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பட்டாசுத் தொழிலை இந்தியா கொண்டுள்ளது, பெரும்பாலும் விருதுநகர் மாவட்டத்தில் செறிவாக குவிந்துள்ளது, இதில் 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரிவுகள் உள்ளன, அங்கே ஒரு மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர் என மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் திருமணங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு பைரோடெக்னிக்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதால் இந்தத் தொழில் ஒரு செழிப்பான வணிகமாகக் கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலைகள் இந்திய இராணுவத்தின் வெடிமருந்து மற்றும் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகளையும் பூர்த்தி செய்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இழப்பில் சிறப்பான இலாபத்தை ஈட்டுகிறார்கள்.

பெரும்பாலான தொழிலாளர்கள் தலித் சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் முன்னர் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர், இது பிற்போக்கு இந்து சாதி படிநிலையில் "கீழானது". இந்த தொழிலாளர்களின் மரணங்கள் ஊடகங்களால் விரைவில் மறைக்கப்படுகின்றன. வறுமை மற்றும் கல்வியின் பற்றாக்குறையுள்ள நிலையில் ஒரு வாழ்வாதாரத்துக்காக இந்த ஆபத்தான வேலைகளை எடுக்க பலரை தூண்டுகிறது. இந்த தொழிற்சாலைகளில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணிபுரிகின்றனர்.

பல பட்டாசு தொழிலாளர்கள் தற்காலிக தொழிற்சாலை பிரிவுகளில் உழைக்கிறார்கள், அவை வெப்பமான, ஈரப்பதமான மற்றும் தசைப்பிடிப்பானவை. ஒவ்வொரு அறைக்கும் நான்கு தொழிலாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டாலும், அந்த எண்ணிக்கையை விட மூன்று மடங்குக்கும் அதிகமானவை பெரும்பாலும் ஒரு அறைக்கு ஒதுக்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மட்டுமல்லாமல், குறைந்த ஊதியம் அடிப்படை தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததால் தங்கள் குழந்தைகளை கூட வேலைக்கு அழைத்து வருகிறார்கள். எந்தவொரு முன்னெச்சரிக்கை பயிற்சியும் இல்லாமல் கிட்டதட்ட மரண பொறிகளில் ஆபத்தான வெடிபொருட்களை அவர்கள் கையாள வேண்டும்

முந்தைய வெடிப்புகள் சில, பயிற்சியற்ற மற்றும் திறமையற்ற தொழிலாளர்களால் ரசாயனங்களைக் கையாளுதல், நிரப்புதல் செயல்பாட்டின் போது ரசாயனங்கள் கசிவு அல்லது அதிக சுமை, மற்றும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வேலை செய்வது உள்ளிட்ட நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டன. தீப்பொறிகளுக்கான சாத்தியக்கூறு காரணமாக இரும்பு கருவிகள் அல்லது கீல்களைப் பயன்படுத்துவதற்கான தடை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

அதிகாரிகள் நிர்ணயித்த குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கூட கண்காணிக்க ஆய்வாளர்கள் இல்லாததால் ஒரு பகுதியாக கண்டிப்பாக கண்காணிக்கப்படுவதில்லை. உரிமம் பெறாத குடிசை அலகுகளுக்கு சட்டவிரோதமாக துணை குத்தகைக்கு விடப்பட்ட போதிலும் பாதுகாப்பு மீறல்கள் மீதான நடவடிக்கை அரிதாகவே நிகழ்கிறது. விபத்துக்களுக்கு மேற்கோள் காட்டப்பட்ட பொதுவான காரணங்கள் வெடிபொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் அதிகப்படியான சேமிப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும்.

இந்திய தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான பட்டாசு தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்கள் குற்றவியல் பொறுப்பாக இருக்கின்றன.

Loading