அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புக் குழுக்களையும் கட்டாய இராணுவப் பயிற்சியையும் எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பெப்ரவரி 7 அன்று, மஹரகம இளைஞர் அரங்கில் நடந்த விழாவில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கம் தனது பொலிஸ்-இராணுவ ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கியுள்ள பிரதானமான இரண்டு திட்டங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

முதலாவது, குறித்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்த, "ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதில்" பொலிசுக்கு உதவுவதற்காக, கிராம மட்டத்தில் பொது பாதுகாப்பு குழுக்களை செயல்படுத்துவது ஆகும். "கிராமத்தில் உள்ள பாதாள உலக குற்றவாளிகள், பெண்கள் மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், மிரட்டி பணம் பறிப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போன்ற குற்றவியல் கும்பல்களைப் பிடிப்பதற்காக பொலிசுக்கு தேவையான தகவல்களை கொடுப்பதற்கு, கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் அடங்கிய ஒரு பிரிவு" இது, என்று வீரசேகர விவரித்தார். கொழும்பு மாவட்டத்திற்கு இதுபோன்ற 666 குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இரண்டாவதாக, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, கட்டாய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாகும். ஜனவரி தொடக்கத்தில், இதுபோன்ற ஒரு திட்டம் குறித்த தனது கருத்துக்களை முதலில் வெளிப்படுத்திய வீரசேகர, இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட முன்மொழிவாக விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என மேற்கூறிய விழாவில் உறுதிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருப்பதால, இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. "ஒழுக்கமான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே" இதன் நோக்கம் என்று வீரசேகர மீண்டும் வலியுறுத்துகிறார்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் "ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கும்" எந்த தொடர்பும் இல்லை. பொது பாதுகாப்புக் குழுக்கள் எனப்படுபவை, குற்றங்களைத் தடுக்கும் பெயரில், அரசாங்கத்தின் எதிரிகளுக்கு, குறிப்பாக அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, பரந்தளவில் உளவுபார்ப்பதற்காக அபிவிருத்தி செய்யப்படும் ஒரு சிவில் படை ஆகும்.

கட்டாய இராணுவப் பயிற்சியின் நோக்கம், ஒழுக்கத்தின் பெயரில், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் இளம் போராளிகளை, இராணுவத்தின் அதிகாரத்திற்கு அடிபணியச் செய்வதற்காக, அவர்கள் மத்தியிலே ஒரு குழுவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக ஒழுங்கமைப்பதும் ஆகும் என, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மாணவர் மற்றும் இளைஞர் பிரிவான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சுட்டிக்காட்டுகிறது.

வீரசேகரவின் கருத்துப்படி, பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள், "ஜனாதிபதியின் நிலைப்பாட்டின் படியே" செயல்படுத்தப்படுகின்றன. இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதும், வீரசேகரவின் வெறும் தனிப்பட்ட பிரேரனை அன்றி, இராஜபக்ஷவின் எதிர் புரட்சிகர திட்டநிரலுக்கு மிகவும் பொருத்தமானது ஆகும்.

இராஜபக்ஷ, கடந்த டிசம்பரில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கி, அதை வீரசேகரவிடம் ஒப்படைத்து, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டமைக்கும் நிச்சயமான பணியில் ஈடுபட்டுள்ளார். பொலிசை "மறுசீரமைப்பது" அல்லது தொழிலாள வர்க்கத்தின் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதற்காக அவர்களை இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பயிற்றுவிப்பதே முதன்மை பணிகளில் ஒன்றாகும்.

பொலிஸ் "ஜனாதிபதியின் நோக்கங்களை" நன்கு நிறைவேற்றி வருவதாகவும், மக்களின் ஆதரவின் மூலம் மிகவும் பலம்வாய்ந்த முறையில் செயற்படுவதற்கு அவர்களால் முடியும் என்று வீரசேகர அந்த விழாவில் கூறினார். பொதுமக்களுக்கு தங்கள் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் வரவிருக்கும் குற்றங்கள் குறித்து தகவல்களை பொலிசுக்கு வழங்குவதே பொது மக்கள் பாதுகாப்புக் குழுக்களின் முக்கிய பணியாகும் என அவர் தெரிவித்தார். வீரசேகர நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், அரசாங்கம், தனது தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களையே இந்த "குற்றங்களில்" முன்னணியில் வைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இராஜபக்ஷ அரசாங்கம், ஏனைய உலகளாவிய முதலாளித்துவ தலைவர்களுடன் சேர்ந்து, கொவிட்-19 தொற்றுநோயால் மேலும் உக்கிரமாக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணித்துவருகிறது. அரசாங்கத் துறையிலும், மற்றும் அரசாங்க ஒப்புதலுடன் தனியார் துறையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களது ஊதியங்கள் வெட்டப்பட்டு, தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு, சுரண்டல் மேலும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் பிரமாண்டமான அளவில் உயிர்களைக் காவுகொள்ளும் தொற்றுநோய், இலங்கையில் அழிவை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக மக்களுக்கு உள்ள எரியும் தேவையை அரசாங்கம் குற்றவியல் முறையில் புறக்கணித்துள்ளது. ஒரு பேரழிவு தொற்றுநோயை எதிர்கொண்டு, சுகாதாரத் துறையில் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டியிருந்த நிலையிலும், அரசாங்கம் அதன் பாதீட்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டுக்கான சுகாதாரத்திற்கான செலவினங்களை 28 பில்லியன் ரூபாய் வெட்டித்தள்ளியுள்ளது.

மேலும், பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வகையில், அத்தியாவசியமற்ற உற்பத்திகளை முன்னெடுப்பதும் பாடசாலைகளை திறந்துவிடுவதுமே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது. பெரிய முதலாளிகளுக்கு பிரமாண்டமான வரிச்சலுகைகளை அளிக்கும் அதே வேளை, நுகர்வோர் பொருட்களின் மீது பெரும் வரி விதிப்பதன் காரணமாக, பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த அனைத்து பகுதிகளிலுமான சமூக அதிருப்தி, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பல்வேறு போராட்டங்களின் வடிவத்தில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. துறைமுகத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், ஆடை மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட பல பிதான துறைகளில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்த போராட்டங்கள் போலவே, அவற்றில் மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் காட்டிய போர்க்குணம் குறித்தும் அரசாங்கம் மிகவும் விழிப்புடன் உள்ளது. கட்டாய இராணுவப் பயிற்சி என்பது இளைஞர்களின் இத்தகைய தீவிரமயமாதலை முன்கூட்டியே தடுப்பதற்கான ஒரு எதிர்ப் புரட்சிகர திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உத்தேச இராணுவப் பயிற்சியானது இராணுவ முகாம்களில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் வீரசேகர, இந்த பயிற்சியின் போது, நாட்டின் சட்டம் என்ன என்பதையும், சட்டத்தை மீறினால் தண்டனைகள் என்ன என்பதையும் இளைஞர்களுக்கு விளக்கி, அவர்களை "ஒழுக்கப்படுத்த" வேண்டும் என்றும் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது, இளைஞர்கள் முதலாளித்துவ அரசின் சட்டங்களையும் விதிகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனக் கூறுவதாகும்.

2012 முதல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் மாணவர்களுக்கு, இராணுவ முகாம்களில் “தலைமைப் பயிற்சி” வழங்குவதற்காக, அப்போதைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முன்முயற்சியை பற்றிய விமர்சனங்களை அலட்சியம் செய்து அதை நடைமுறைப்டுத்தியதைப் போலவே, கட்டாய இராணுவ சேவை பற்றிய விமர்சத்தையும் அலட்சியம் செய்து, அது முன்னெடுக்கப்படும், என்று கூறிய வீரசேகர, அரசாங்கத்தின் சர்வாதிகார தன்மையை நிரூபித்தார்.

“ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை” உருவாக்குவது கோடாபய இராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்தது. இதில், முன்னர் வரையறுக்கப்பட்ட அரச நிர்வாகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக விதிமுறைகளை, சர்வாதிகார ஆட்சி வழிமுறைகள் மூலம் மீற்றீடு செய்வதே இராஜபக்ஷவின் குறிக்கோள் ஆகும். அதன்படி, அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்நகர்த்தியுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்களாக, ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதோடு, கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஜனாதிபதி செயலணியின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை அதன் உயர்ந்த வெளிப்பாடாகும். அதே போல் கடந்த ஜூன் மாதத்தில், சிவில் நிர்வாக அதிகாரிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான ஜனாதிபதி பணிக்குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் கட்டியெழுப்புகின்ற சர்வாதிகார கட்டமைப்பிற்குள் மக்கள் மத்தியில் வேரூன்றிக்கொண்டுள்ள ஒரு உளவு பொறிமுறையை உருவாக்கும் நோக்கத்துடன், இராஜபக்ஷ, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் போர்வையில், இராணுவத்தின் கீழ் செயற்படும் ஒரு “பல்தேவை மேம்பாட்டு செயலணியை” அமைத்தார். பொது மக்கள் பாதுகாப்பு குழுக்கள் அந்த வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதாகும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் வேறு எந்தப் பிரிவும், இந்த விஷமத்தனமான வழிமுறை சம்பந்தமாக கொள்கை ரீதியான ஆட்சேபனை எதையு தெரிவித்திருக்காத அதே வேளை, அவர்களுக்கு இது பற்றி தந்திரோபாய முரண்பாடுகளைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஏராளமான மக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது நடைமுறை சாத்தியமற்ற காரணத்தால், "தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு" மட்டும் முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முதலாளித்துவ மக்கள் விடுதலை முன்னிணயின் (ஜே.வி.பி) இளைஞர் பிரிவான சோசலிச இளைஞர் சங்கமானது, இளைஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளிப்பது குறித்து வீரசேகர ஆரம்பத்தில் தெரிவித்த போது, அது பற்றி கருத்து தெரிவிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டியது. அதில், அதன் தேசிய அமைப்பாளரான எரங்க குணசேகர, "இராணுவம் ஒன்று இருக்கின்றது என்பதற்காக, அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது" என்று கூறி, அந்த தீர்மானத்தின் அடக்குமுறை தன்மையை மூடி மறைத்தார்.

ஜே.வி.பி.யின் இந்த மூடிமறைப்பு தற்செயலானது அல்ல. ஏனெனில் அவர்களுக்கு இராணுவ அடிப்படையிலான ஆட்சி சம்பந்தமாக நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மீண்டும் தொடங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், 2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஜே.வி.பி., இராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் முன்னெடுக்கப்பட்ட இரத்தக்களரிப் போரில் ஒரு முன்னணி ஊதுகுழலாக இருந்தது. ஜே.வி.பி. இன் செஞ்சேனை எனப்படுவது, இராணுவத்திற்கான யுத்த பங்கர்களை தோண்டுவதற்கு உதவியதோடு, இராணுவ உளவுத்துறையுடன் நெருக்கமாக செயற்பட்டு, சிங்கள மக்களிடையே போருக்கு எதிராக இருந்தவர்களை வேட்டையாடுவதற்கு தகவல்களை வழங்கியது.

இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், இது வேடமிட்டு செயற்படும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் (மு.சோ.க.) இராணுவத்துடன் மிகவும் பிற்போக்கான உறவு உள்ளது. ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலை சுரண்டுவதன் மூலம் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் அரச அடக்குமுறையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்த போது, மு.சோ.க. தலைமையிலான பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் இராணுவத் தலைமையிலான “தேடல் நடவடிக்கைகளின்” போது இராணுவத்துடன் இணைந்து பணியாற்றினர்.

அனைத்து முதலாளித்துவ பிரிவுகள் மற்றும் அவர்களின் போலி-இடது கூட்டாளிகளுக்கும் எதிராக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., முதலாளித்துவ அரசினதும் முதலாளித்துவத்தினதும் பாதுகாவலர்களாக உங்களை ஆக்குகின்ற பொது மக்கள் பாதுகாப்புக் குழு மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கின்றது.

அந்த எதிர்போக்கு நோக்கங்களை தோற்கடிப்பதானது முதலாளித்துவ அரசையும் முதலாளித்துவ அமைப்பையும் தூக்கியெறிந்து அனைத்துலக சோசலிசத்தை வெற்றிபெறச் செய்வதற்கான போராட்டத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக தலைமைத்துவம் வழங்குகின்ற, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இயக்கத்தை கட்டியெழுப்ப முன்வருங்கள்.

Loading