மியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமையன்று மாண்டலேயில் இரண்டு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திங்களன்று எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வடிவில் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக் குழுவுக்கு எதிரான போராட்டங்கள் மியான்மரில் தொடர்கின்றன. நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுக்கள் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய தூதரகங்களுக்கு வெளியே கூடியிருந்தனர், அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு இன சிறுபான்மையினரின் குழுக்கள் யாங்கோனின் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 24, 2021 புதன்கிழமையன்று, மியான்மாரின் யாங்கோனில் Tin Htut Hein இன் இறுதிச் சடங்கின் போது மக்கள் மூன்று விரல்களின் மூலம் தலைவணங்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை அச்சத்தை பரப்புவதற்கும், வன்முறைச் செயல்களை செய்வதற்கும் அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாக நிறுவப்பட்ட அண்டைய குடியிருப்பு கண்காணிப்புக் குழுவின் தன்னார்வ காவலராக செயற்பட்ட Tin Htut Hein சனிக்கிழமையன்று பிப்ரவரி 20, 2021, தெளிவற்ற சூழ்நிலையில் கொல்லப்பட்டார். (AP Photo)

திங்களன்று தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தமானது பெப்ருவரி 1 அன்று இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு அரசியல் எதிர்ப்பின் வீச்சையும் ஆழத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டியது. பல செய்தி ஆதாரங்களுடன், எதிர்ப்புத் தலைமையானது —சிவில் ஒத்துழையாமை இயக்கம் (CDM) என்று அழைக்கப்படும் தளர்வான ஒழுங்கமைக்கப்பட்ட குழு— அதன் ட்டுவிட்டர் கணக்கில், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் வேலை நிறுத்தங்களிலும் பங்கு பெற்றனர் என்று தெரிவித்தது.

இராணுவ ஆட்சிக் குழுவினால் கட்டுப்படுத்தப்பட்ட கடுமையான ஊடக தணிக்கையின் காரணமாக, வேலைநிறுத்தங்களின் சரியான அளவு மற்றும் ஒழுங்கமைப்பு தெளிவாக இல்லை. எவ்வாறிருந்த போதினும், "22222 [அல்லது ஐந்து இரண்டு] மக்கள் எழுச்சி" என்று பெயரிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள், அது நடந்த திகதியை குறிப்பிட்டு, ஆட்சி சதிக்குப் பின்னர் மிகப் பெரியதாக இருந்தது என்பது தெளிவாகிறது.

தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதும் இல்லாத பரந்த பிரிவுகள் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிரான போராட்டத்தில், மருத்துவர்கள், அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் முதல் பல்பொருள் அங்காடி தொழிலாளர்கள் மற்றும் எண்ணெய் துளையிடுவதை இயக்குபவர்கள் வரை இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையன்று மாண்டலேயில் வேலைநிறுத்தம் செய்த கப்பல் கட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு இரத்தக்களரியான அரசு ஒடுக்குமுறையை அடுத்து இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் மற்றும் இராணுவப் படைகள் எதிர்ப்பாளர்கள் கூட்டத்தின் மீது நேரடியாக துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூடுகளில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

திங்களன்று வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக அதிகாரிகள் மியான்மாரின் நகரங்களில் மூலோபாய இடங்களில் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்தனர், வெளிநாட்டு தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கும் சில எதிர்ப்பாளர்களுக்கு தூதரகங்கள் போன்ற இடங்களாக அவைகள் உள்ளன. தெருக்களில் கவச வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மற்றும் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடும் படையினர் நகர்புற கூரைகளின் உச்சியில் நிலையெடுத்து இருந்தனர்.

நகர மற்றும் பிராந்திய மையங்கள் முழுவதிலுமுள்ள வணிக நிறுவனங்கள் சந்தைகள், உணவகங்கள், கடைகள் மற்றும் சாலையோர விற்பனையாளர்கள் உட்பட மூடல்களை அறிவித்தனர். இந்த மூடலானது KFC மற்றும் விநியோக சேவை Foodpanda போன்ற சர்வதேச சங்கிலி நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தென்கிழக்கு ஆசிய இணையவழி போக்குவரத்து நிறுவனமான Grab அதன் விநியோக சேவைகளை நிறுத்தியது.

நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில், CDM இயக்கத்தால் வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கிப் போயுள்ளன, Sule, Hledan மற்றும் Myaynigone பகுதிகளில் பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது என்று Frontier Myanmarபத்திரிகைதெரிவித்தது. "அலுவலகத்திற்குப் போகாதீர்கள், கலைந்து போங்கள்" என்று மக்கள் கோஷமிட்டனர்.

இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயும் வேலைநிறுத்தங்களின் பரந்த அளவுகளால் ஸ்தம்பித்துப் போய்விட்டது. ஏனெனில் நூறாயிரக்கணக்கானவர்கள் வேலைத் துறைகளில் அணிதிரட்டப்பட்டனர். இதேபோல் Myitkina, Hpaan, Pyinmana, Dawei மற்றும் Bhamo ஆகிய சிறிய நகரங்களில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சுகாதார ஊழியர்கள் CDM இல் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவை அதன் தோற்றம் முதல் கொண்டிருந்தனர், கிட்டத்தட்ட மியன்மாரின் பொது மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு செயல்படவில்லை. செவ்வாயன்று வரை, யாங்கோன் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, நகரத்தின் சிறந்த மருத்துவ வசதியானது முற்றிலும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொது வைத்தியசாலைகளுக்கு பதிலாக, நாடு முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சைகளை ஸ்தாபிக்கும் வகையில் இந்த இயக்கத்துடன் வைத்தியர்களும் தாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

நாள் முழுவதும் போலீஸின் விடையிறுப்பு ஒப்பீட்டளவில் பெரும் மக்கள் கூட்டம் எதிர்நிலையில் அமைதியாக இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் வன்முறை கூட்டங்களைக் கலைக்க பயன்படுத்தப்பட்டது. யங்கோனின் எதிர்ப்புக்களை உடைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளாக ஷ்வேடகன் பகோடாவிற்கு அருகே ஒரு பாரிய ஊர்வலத்தின் மீது கலகத்தை அடக்கும் கவசத்தில் ஒரு நீண்ட வரிசையாக போலீசார் அணிவகுத்துச் செல்லுவதில் ஈடுபட்டனர். எதிர்ப்பாளர்கள் பின்வாங்கியபோது, அருகில் இருந்த பயணிகள் உதவிக்கு வந்து, தங்கள் கார்களுடன் ஒரு முற்றுகையை ஏற்படுத்தினர், இதனால் போலீசார் முன்னேறுவதை தடுத்தனர்.

தலைநகர் Naypyidaw இல் நடைபெற்ற மக்கள் பேரணிகள் மீதான ஒடுக்குமுறை, குறிப்பாக வன்முறையாக இருந்தது. சமூக ஊடகங்களிலுள்ள காணொளிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, அண்டை நகரங்களான Zabuthiri மற்றும் Pyinmana வில் ஆர்ப்பாட்டக்காரர்களை தரையில் வீழ்த்தி, அவர்களை தலைநகருக்குள் அணிவகுப்பதை தடுக்கும் ஒரு முயற்சியாக செய்தனர். மத்திய அரசாங்க கட்டிடங்களில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணிவகுப்பிற்கு வார இறுதியில் அழைப்புவிடப்பட்ட பின்னர், Naypyidaw இன் முக்கிய நுழைவு இடங்களில் இராணுவப் படைகளால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து சாட்சிகள் Irrawaddy பத்திரிகையிடம் பேசினர். சம்பவ இடத்திலிருந்து தப்பிய ஒரு நிருபர், படையினரும் போலீசாரும் பத்திரிகையாளர்களிடமிருந்து கேமராக்களைப் பறிமுதல் செய்ய முயன்றதாகவும், அவர்களை கைது செய்ய இலக்கு வைத்ததாகவும் கூறினார். போராட்டத்தில் இணைந்த ஒரு பொறியியல் மாணவர் கூறினார்: “அவர்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்தை உடைக்க முயன்றபோது அவர்கள் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனது இரண்டு நண்பர்களும் அடித்து அழைத்துச் செல்லப்பட்டனர். நான் ஓட முடிந்தது ... அவர்கள் இளைஞர்களை குறிவைத்தனர்."

இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நீண்ட தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள வீடுகள் மற்றும் துறவுமடங்களில் ஒளிந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். Naypyidaw பேரணிகளுடன் தொடர்புடைய 193 இளம் எதிர்ப்பாளர்கள் பின்னர் கைது செய்யப்பட்டு, தலைநகருக்கு வெளியேயுள்ள இராணுவ வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திங்களன்று இந்த ஆர்ப்பாட்டங்களானது வன்முறை இராணுவ ஆட்சிக் குழுவிடமிருந்து அச்சுறுத்தலுக்கு இடையே தொடர்ந்தன. ஞாயிறன்று பிற்பகுதியில், அரச தொலைக்காட்சியான MRTV ஆனது ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது: "பிப்ரவரி 22 அன்று எதிர்ப்பாளர்கள் கலவரம் மற்றும் அராஜக கும்பல்களை அவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்கள் இப்பொழுது மக்களை, குறிப்பாக உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்களை ஒரு மோதல் பாதைக்குத் தூண்டி விட்டுக்கொண்டுள்ளனர், அங்கு அவர்கள் உயிர் இழப்புக்களால் பாதிக்கப்படுவார்கள்."

"சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள், அமைதியின்மை மற்றும் வன்முறையைத் தூண்டினாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலவரங்களை சமாளிப்பதற்கு குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மிகுந்த நிதானத்தை பயன்படுத்துகின்றனர்" என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு இயக்கம் வளர்ந்து வரும் நிலையில், இராணுவமானது இந்த எதிர்ப்புக்கள் "இழிபுகழ் பெற்ற முன்னாள் கிரிமினல்" போராட்டக்காரர்களின் வேலை என்று வலியுறுத்தி, பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பாளர்களை குற்றம் சாட்டின. மியான்மாரின் பெரும்பான்மை மக்கள் ஆட்சி கவிழ்ப்பை ஆதரித்தனர் என்று அதன் அமைச்சகங்களும் உத்தியோகபூர்வ வெளியீடுகளும் பொய்யாகக் கூறின. ஆங் சான் சூகி மற்றும் அவரது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (NLD) அரசாங்கம் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வெளியேற்றியது.

திங்களன்று ஒரு இராணுவத் தாக்குதல்களினால் காயம் அல்லது இறப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்து, எதிர்ப்பாளர்கள் தங்களின் இரத்த வகை மற்றும் அவசர தொடர்பு எண்களை தங்களுடைய கைகளில் தகவல்களாக எழுதியிருந்தனர்.

பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர், இராணுவ ஆட்சியானது இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில் அதன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை விரிவாக்கியுள்ளது. இதுவரை 684 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 600 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் தொழிலாளர்களின் திறனை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, ஞாயிறன்று இரவு இணையமானது பரந்த சேவைத் தடைகளையும் இடையூறுகளையும் சந்தித்தது, NetBlocks அமைப்பானது வழக்கமான இணைய பயன்பாடு அளவுகளில் இருந்து 13 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஊடக சுதந்திரமும், எதிர்ப்புக்கள் பற்றிய தகவல்களை வெளியிடவும், ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல்களையும் இராணுவம் வெளியிட்டுள்ளது. இப்போது வெளியீடுகள் இராணுவ "ஆட்சி" அல்லது "இராணுவ ஆட்சிக்குழு" என்று குறிப்பிடுவதற்காக வெளியீட்டு உரிமங்களை இழக்கநேரிடும்.

ஆட்சி கவிழ்ப்பு தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் திங்களன்று கூறுகையில், "பத்திரிகை நெறிமுறைகளுக்கு ஏற்ப பத்திரிகைகளை ஒழுங்குபடுத்துவதற்கு" நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார், அதே நேரத்தில் தகவல் அமைச்சகம் இந்த வாரம் மியான்மார் ஊடக கவுன்சிலுக்கு புதிய உத்தரவுகளை அனுப்பியது, "பொது அமைதியின்மையை தூண்டுவதை" தவிர்க்க பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

Loading