முன்னோக்கு

பங்களாதேஷ் அகதிகள் முகாமின் நரக நிலைமையும் புலம்பெயர்ந்தோர் மீதான முதலாளித்துவத்தின் பூகோள அளவிலான போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை பங்களாதேஷில் உள்ள மிகப்பெரிய காக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பங்களாதேஷ் அதிகாரிகளை மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமான ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசாங்கங்களை குற்றம்சாட்டுவதாக உள்ளது. தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரையிலான பெயரளவில் “இடது” அல்லது வெளிப்படையான வலதுசாரி அரசாங்கங்கள், அடக்குமுறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் நம்பிக்கையிழந்த மற்றும் நலிந்த மில்லியன் கணக்கான மக்களை காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்தலுக்குட்படுத்தியுள்ளன.

இந்த தீ, இதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, அண்டை நாடான மியான்மாரில் இராணுவத்தின் கொலைகார நடவடிக்கைகளிலிருந்து உயிர்தப்பி வந்த ஒரு மில்லியன் ரோஹிங்கியா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த மோசமான குடிசைகளை விரைந்து விழுங்கியது. அங்கிருந்த சுமார் 10,000 குடியிருப்புக்களும் மற்றும் சமூக மையங்களும், பள்ளிகளும் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களும் தீக்கிரையாகிய நிலையில், 60,000 பேர் வீடற்றுப்போனதுடன், உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருந்து போன்ற அடிப்படை தேவைகளுக்கு தவித்து நின்றனர்.

மார்ச் 22, 2021, திங்கட்கிழமை, தெற்கு பங்களாதேஷில், பாலுக்காளியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் நெருப்பில் மூழ்கியது. இந்நெருப்பு நூற்றுக்கணக்கான குடில்களை அழித்து ஆயிரக்கணக்கானவர்களை வீடற்றவர்களாக்கியுள்ளது (AP Photo / Shafiqur Rahman)

இது எழுதப்பட்டபோது, 15 பேர் உறுதியாக இறந்திருந்தனர், என்றாலும், பெரும்பாலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 400 பேரை இன்னும் காணவில்லை என்ற நிலையில், இந்த எண்ணிக்கை விரைந்து அதிகரிக்கக்கூடும். மேலும், மற்றொரு 560 பேர் காயமடைந்தனர்.

முகாமைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி மக்கள் தீயிலிருந்து தப்பியோடுவதை தடுத்து, இறப்பு எண்ணிக்கை கொடூரமாக அதிகரிக்க பங்களித்தன. தண்ணீர் பற்றாக்குறை, தீயை கட்டுப்பாடின்று பரவ வகை செய்ததால், தீயணைப்புப் படையினர் சுமார் ஆறு மணிநேரம் போராடியதன் பின்னரே இறுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

முள்வேலிகளை அகற்ற கோர சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து வந்த அழைப்புக்களை பங்களாதேஷின் அகதிகள் ஆணையர், “ரோஹிங்கியா மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவே” தாங்கள் வேலியை அமைத்துள்ளதாகக் கூறி நிராகரித்தார். யதார்த்தத்தில், முகாமைச் சுற்றி முள்வேலி போடப்பட்டு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை கூட அணுக முடியாமல் நூறாயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமைகளை வைத்து பார்த்தால் அதை ஒரு பெரிய வதை முகாமாக மட்டுமே வகைப்படுத்த முடியும்.

பங்களாதேஷ் அரசாங்கம் ரோஹிங்கியா அகதிகளை முற்றிலும் விரோதப் போக்குடன் நடத்தி வருகிறது, அவர்களை குற்றவாளிகளாகக் கருதி, நாட்டின் அத்தியாவசிய சேவைகள் இல்லாத நிலைமைக்கு அவர்களை பலிகடாக்களாக்குகிறது. அவர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றதன் பின்னர், காக்ஸ் பஜாரிலுள்ள அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைகளில் அவர்களை தடுத்து வைக்கிறது, இப்போது அவர்களை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட, நிலையற்ற, வெள்ளம் மற்றும் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண் பரப்பான பாசன் சார் தீவிற்கு நிரந்தரமாக தங்க அனுப்பிவைக்க முயல்கிறது, அல்லது அவர்களது பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி மியான்மாருக்கே திரும்பிச் செல்ல அவர்களை கட்டாயப்படுத்துகிறது.

மியான்மார் இராணுவம் முஸ்லீம் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்கள் மீது கொலை, கற்பழிப்பு, மற்றும் அவர்களது கிராமங்களை எரித்தல் உள்ளிட்ட திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதன் பின்னர் 2017 ஆம் ஆண்டில் மியான்மாரிலிருந்து தப்பியோடி வந்த 700,000 க்கும் அதிகமான அகதிகள் தற்போது பங்களாதேஷில் உள்ளனர். 2018 ஆம் ஆண்டில், மனித உரிமைகளுக்கான ஐ.நா. உதவி பொதுச் செயலாளரான ஆண்ட்ரூ கில்மோர், இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளை “இன அழிப்பு” என்று வகைப்படுத்தினார்.

மேற்கில் “ஜனநாயகத்தின் சின்னம்” என்று உலகளவில் புகழப்பட்ட, மற்றும் அந்த நேரத்தில் மியான்மாரின் அதிகாரப்பூர்வ அரசாங்கத் தலைவராக இருந்த ஆங் சான் சூ கி இராணுவத்தின் அட்டூழியங்களை பாதுகாத்தார், மேலும் அதன் மனித உரிமை மீறல்கள் தொடர்புபட்ட மறுக்கமுடியாத ஆதாரங்களை மறுக்க 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்திலும் ஆஜரானார். சூ கி யும் அவரது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியும், இராணுவத்தைப் போல, பர்மிய புத்திச பேரினவாதத்தில் மூழ்கியிருந்ததுடன், ரோஹிங்கியாக்கள் இதே நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருந்தாலும் கூட அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று முத்திரை குத்தினர்.

நாட்டின் ஏனைய இனக் குழுக்களைப் போலல்லாமல், ரோஹிங்கியாக்களுக்கு குடியுரிமை உரிமைகள் இல்லாத நிலையில், நாடற்ற சிறுபான்மையினராக அவர்களது நிலை தாழ்த்தப்பட்டு, மியான்மாரில் மட்டுமல்லாமல், பங்களாதேஷ் அல்லது உலகின் எந்த பகுதியிலும் அவர்கள் வரவேற்கப்படவில்லை.

இந்த வாரத்தின் பயங்கர தீ விபத்திற்கு பங்களாதேஷ் மற்றும் மியான்மார் நாடுகளின் ஆளும் உயரடுக்கினர் மட்டும் பொறுப்பல்ல, மாறாக புலம்பெயர்ந்தோரை நுழைய விடாமல் தங்கள் நாடுகளின் எல்லைகளை மூடி, அவர்களை இழிவுபடுத்திய உலகளவிலான ஒட்டுமொத்த ஆளும் வர்க்கங்களும் அதற்கு பொறுப்பாவர்.

காக்ஸ் பஜார் தடுப்பு முகாம்களில் பரவிய தீ பற்றி அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிடாமல் புறக்கணித்துள்ளது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்நிலையில், இந்த அகதிகளுக்கு மறுவாழ்வு, உணவு மற்றும் மருத்துவ சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய மேற்கத்திய அரசாங்கங்களிடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை.

மியான்மாரில் ரோஹிங்கியாக்கள் மிருகத்தனமாக நடத்தப்படுவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக அங்கீகரிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாகவும் கேவலமாகவும் நடத்தப்படுகின்றனர். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடிப் போனார்களானால், அங்கு அவர்கள் துப்பாக்கிகள், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்கள் போன்ற கொடூரமான நிலைமைகளை எதிர்கொள்கிறார்கள்.

உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்து வரும் நெருக்கடியால் உருவாகும் போர், அடக்குமுறை மற்றும் வறுமை போன்ற கொடிய நிலைமைகளிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்ட பெரும்பகுதி மனிதகுலத்தின் ஒரு பகுதியாக ரோஹிங்கியாக்கள் உள்ளனர். ஐ.நா. வின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2019 முதல், உலகம் முழுவதும் குறைந்தது 79.5 மில்லியன் நாடற்ற மக்கள் உள்ளனர், இவர்களில் பலர் பங்களாதேஷ் போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் கடுமையான, நெரிசலான அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கியாக்களை பங்களாதேஷ் அரசாங்கம் கடுமையாக நடத்தும் விதம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு இணையாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட சூறையாடல்களால் இலத்தீன் அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட அடக்குமுறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடி வரும் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் நுழைய விடாமல் ட்ரம்ப் நிர்வாகம் தடுத்ததை பைடென் நிர்வாகமும் பின்பற்ற விரும்புகிறது. ஆதரவற்ற சுமார் 15,000 குழந்தைகள் உட்பட, அவர்களது எல்லைகளை அடைந்த பலரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய சக்திகள் தங்களது நிலம் மற்றும் கடல் சார்ந்த எல்லைகளை காவல்காக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதானது, மத்தியதரைக் கடலில் ஏராளமானோர் மூழ்குவதற்கு வழிவகுக்கிறது.

கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழையும் அகதிகளை தடுக்க கடற்படையை பயன்படுத்துவதிலும், வெளிநாட்டு தடுப்பு மையங்களில் அவர்களை காலவரையின்றி சிறைப்பிடித்து வைப்பதிலும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் முன்னோடியாக இருக்கின்றன. அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு எந்தவித சாத்தியமும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் தொலைதூர பசிபிக் தீவுகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று முதலாளித்துவத்தின் பூகோள அளவிலான நெருக்கடியையும் அதன் அனைத்து முரண்பாடுகளையும் பெரிதும் தீவிரப்படுத்தியுள்ள சூழல், போருக்கான உந்துதல், பொலிஸ் அரசு நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்கள் ஏற்கப்படுவது, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மீதான இடைவிடாத தாக்குதல் ஆகியவற்றை முடுக்கிவிடுகிறது.

ஒவ்வொரு ஆளும் வர்க்கத்தினரால் தூண்டிவிடப்படும் தேசியவாதம் மற்றும் இனவெறியால் உருவான நச்சுப் புகைகள் வெடிப்புறும் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்ப நோக்கம் கொண்டவை, அதாவது உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிலரை “சட்டவிரோத வெளிநாட்டினர்” என்று கூறி பலிகடாவாக்குவதன் மூலம், அல்லது வெளிப்புற எதிரிக்கு எதிராக போர் முரசு கொட்டுவதன் மூலம் என ஏதோவொரு வகையில்.

புகலிடம் பெறுவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை அரசாங்கங்கள் அங்கீகரிக்கத் தவறியமை, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க எந்தவொரு நாட்டின் ஆளும் வட்டாரங்களிலும் எந்தவித அரசியலமைப்பும் இல்லை என்பதற்கான மற்றொரு நிரூபணமாகும்.

எவ்வாறாயினும், பூகோள அளவில் பரவி வரும் பெருந்தொற்று நோயால், பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற பணியிடங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய நிர்ப்பந்திக்க அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் எடுக்கும் முயற்சிகளையும், மற்றும் அவற்றின் இலாபங்களை பெருக்க அவர்களது வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களில் ஆழமாக அவை தலையிடுவதை ஏற்றுக் கொள்ளச் செய்வதையும் தொழிலாளர்கள் எதிர்க்கும் நிலையில், ஒரு வர்க்கப் போராட்ட எழுச்சி உருவாகிறது.

போர் மற்றும் பொருளாதார பேரழிவை நோக்கி உலகம் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள், தேசியவாதம் மற்றும் இனவெறி போன்ற நச்சுக்களை நிராகரிக்க வேண்டும், அவர்களது போராட்டங்களை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க வேண்டும், மேலும் பூகோள அளவில் துன்புறுத்தப்பட்டு வரும் மில்லியன் கணக்கான அகதிகள் உட்பட, உழைக்கும் மக்களின் ஒவ்வொரு பிரிவினதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

Loading