13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு நான்கு வருடங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2017, மார்ச் 18 அன்று மாருதி சுசூகியின் 13அப்பாவி தொழிலாளர்களுக்கு கோடூரமான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதன் நான்காவது நிறைவு நாளை வியாழக்கிழமை குறித்துநிற்கிறது. ஜப்பானுக்கு சொந்தமான பன்னாட்டு வாகன உற்பத்தியாளருக்கு எதிராக சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களுக்காக இரக்கமின்றி சுரண்டப்பட்டு வந்த தொழிலாளர்களின் போராட்டத்தை வழிநடத்திய ஒரே "குற்றத்திற்காக" அவர்கள் மீது ஒரு அவதூறு வேட்டை மற்றும் காவல்துறையினால் சட்டபூர்வமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கங்கள் மற்றும் நீதிமன்றங்கள் தொடுத்து வந்ததன் உச்சக்கட்டமே இந்த பழிவாங்கும் தீர்ப்பாகும்.

ஜோடிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை காவலர்கள் அழைத்து செல்கின்றனர்

தண்டனை பெற்றிருக்கும் 13 தொழிலாளர்களில் 12 பேர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union – MSWU) மொத்த தலைமை உறுப்பினர்களாவர். ஊழல் நிறைந்த மற்றும் நிறுவனத்திற்கு சார்பான, அரசாங்க ஆதரவுடன் இயங்கும் தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தில் தொழிலாளர்களால் இந்த தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

ஒரு பாரபட்சமான மாநில நீதிமன்றத்தால் இந்த கொடூரமான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையால் குரூரமாக ஜோடிக்கப்பட்ட “ஆதாரங்களை” தலைமை நீதிபதி வெட்கமின்றி புறக்கணித்தார், மேலும் வழக்கு விசாரணையின்போது வாதங்களிலுள்ள பெரும் இடைவெளிகளையும் புறக்கணித்தார். நிறுவனத்திற்கு ஆதரவான ஒரு தீர்ப்பில், நீதிபதி விசாரணையின் போது தொழிலாளர்களிடமிருந்து எந்தவொரு வாக்கு மூலமும் இல்லாததை நியாயப்படுத்தினார், அதாவது அவர்கள் MSWU இன் வழியை மட்டுமே பின்பற்றியிருப்பார்கள் அதனால் மிரட்டப்பட்டிருப்பார்கள் என்று கூறினார்.

இதற்கிடையில், மாருதி சுசூகியின் மேலாளர்கள் சாட்சியங்களுக்காக அனுமதிக்கப்பட்டார்கள் மற்றும் அவர்கள் ஒப்புவித்த சம்பவங்களின் பதிப்பு உண்மையான வேத வாக்காக கருதப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் நீதிமன்ற வழக்கை பகுப்பாய்வு செய்த அதன் விரிவான ஐந்து பகுதித் தொடரில் குறிப்பிட்டதன்படி, “நீதிபதி கோயலின் தீர்ப்பு உண்மையான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக, அது ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்டிருந்தது - அந்த முடிவு இந்தியாவின் ஆளும் உயரடுக்கினால் கோரப்பட்டதாகும்.”

ராம் மெஹர், சந்தீப் தில்லான், ராம் பிலாஸ், சரப்ஜீத் சிங், பவன் குமார், சோஹன் குமார், அஜ்மீர் சிங், சுரேஷ் குமார், அமர்ஜீத், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ் மற்றும் ஜியாலால் ஆகிய 13 தொழிலாளர்கள் மானேசரில் மாருதி சுசூகி வாகன தயாரிப்பு ஆலையில் நிறுவனத்தால் திணிக்கப்பட்ட கைக்கருவியான தொழிற்சங்கத்திற்கு எதிராக அவர்களுடைய சொந்த சுயாதீனமான தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்காக 2011 இல் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்கும் மேலான போராட்டத்தில் முக்கிய தலைமை வகித்தனர். அவர்கள் யூலை 2012 இல் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆலையில் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ஆத்திரமூட்டலைத் தொடர்ந்து முதலில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கடந்த வசந்த காலத்தில் ஏற்பட்ட கோவிட்-19 கொடிய தொற்றுநோய் பரவியநேரத்தில், ஹரியானவில் பல்வேறு சிறைகளிலிருந்த 2,300 கைதிகள் தற்காலிகமாக பரோலில் விடப்பட்டு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாருதி சுசூகி 13 தொழிலாளர்களும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருந்தனர், ஆனால் கொடிய தொற்றுநோய் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று கூறி தற்போது கைதிகளை அவர்களுடைய சிறை செல்களுக்கு திரும்புமாறு மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில், கடந்த வாரத்திலிருந்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதிதாக 25,000 க்கும் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தால் தொடர்புகொள்ளப்பட்ட முன்னாள் மாருதி சுசூகி தொழிலாளகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் விசாரணைகள் மற்றும் இன்னல்கள் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

தொழிலாளர்களின் ஒருவரான பவன் குமார் அவருடைய சொந்த ஊரில் பரோலில் இருந்த நேரத்தில் மின்சாரம் தாக்கி துன்பகரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். மற்ற இருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் MSWU இன் சட்ட ஆலோசகராக இருந்த அஜ்மீர் புற்றுநோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார், மேலும் “குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான உறுப்பினர்” ஜியாலால் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

பழி வாங்கப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்கள்

அந்த இளம் தொழிலாளர்களின் சம்பாத்தியத்தில் மட்டுமே பலருடைய குடும்பங்கள் இருக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் ஆதரவாக ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான ரூபாயை திரட்டி முன்னாள் மற்றும் தற்போதைய மாருதி சுசுகி தொழிலாளர்கள் கொடுப்பதே ஒற்றுமையின் வலுவைக் கானக்கூடியதாக இருக்கிறது.

கைது செய்யப்பட்டதற்கும் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதற்கும் மற்றும் மார்ச் 18, 2017 இல் மாருதி சுசுகி தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டதற்கும் இடையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில், இந்திய அரசாங்கமும், ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி முதல்வர் உட்பட நீதித்துறை அதிகாரிகளும், முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர். தேசிய அளவில் 2014 ல் ஆட்சிக்கு வந்த இந்து-மேலாதிக்கவாத பாஜக அரசாங்கம், முந்தைய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தைப் போலவே தொழிலாளர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குவதற்கான முயற்சி கடுமையாக இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தொழிலாளர்களை விடுதலை செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிம் மற்றும் பழைய ஆனால் சிறிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் தொழிற்சங்க கருவிகளான ஸ்ராலினிச தலைமையிலான சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் ஏஐடியுசி கூட்டமைப்புகள் எந்தவித அர்த்தமுள்ள மற்றும் நீட்டித்த நடவடிக்கையை எடுப்பதற்கு மறுத்துவிட்டன.

மாருதி சுசூகி ஆலை அமைந்திருக்கும் பகுதியான குர்கான்-மானேசர் உற்பத்தி பிரிவுகளில் ஒரு கணிசமான அளவுக்கு தொழிலாளர்கள் இருந்தபோதிலும், இத்தகைய தைரியம் நிறைந்த தொழிலாளர்களை விடுவிப்பதற்கு எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு இந்த தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. சிறைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2017 இல் கடைசியாக அவர்கள் ஒரு பொது நடவடிகைகையை மேற்கொண்டிருந்தனர். மேலும் அது போர்க்குணமிக்க ஆலைத் தொழிலாளர்கள் கண்களில் அனைத்து மதிப்புகளையும் இழந்துவிடுவோம் என்ற அவர்களின் பயத்தின் காரணத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டது.

இன்று, ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் அல்லது அவர்களுடைய தாய் கட்சிகளோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாருதி சுசூகி தொழிலாளர்களின் அவலநிலைபற்றி குறிப்பிடுவதற்கு கூட அக்கறை காட்டவில்லை. ஆயினும்கூட, சிபிஎம் இன் ஆங்கில மொழி நாளேடான, மக்களின் ஜனநாயகம் (People’s Democracy), இந்த தொழிலாளர்களின் தலைவிதியை மற்ற முதலாளிகள் தங்கள் சொந்த தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த சமயத்தில், 13 தொழிலாளர்களுக்கும் இரக்கமின்றி மரண தண்டனை வழங்குவதற்கு அரசு வழக்கறிஞர் அனுராக் ஹூடா நீதிபதியிடம் கேட்டிருந்தார். ஒரு நீதித்துறை அதிகாரி என்பதைவிட சர்வதேச மூலதனத்தின் ஒரு வெட்கமற்ற முகவராக அதிகமாகவே செயல்பட்ட ஹூடா வெளிப்படையாக கூறியது என்னவென்றால் சர்வதேச மூலதனத்திற்கான ஒரு மலிவு கூலி புகலிடமாக இந்தியாவின் நற்பெயரை பராமரிப்பதற்கு எந்த ஒரு தொழிலாளியின் எதிர்ப்பும் மூர்க்கமாக முறையில் அடக்கப்படவேண்டும் என்பது தான்.

ஹூடா கூறினார், “எங்களுடைய தொழிற்துறை வளர்ச்சி இறங்கியுள்ளது. வெளிநாட்டு நேரடி மூதலீடு வற்றியுள்ளது”. மேலும் அவர் தொடர்ந்தார், “இந்தியாவில் வந்து உற்பத்தியில் ஈடுபடுங்கள் (Make in India) என்பதற்காக பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைத்துக்கொண்டிருக்கிறார், ஆனால் இதைப்போன்ற சம்பவங்கள் எங்களுடைய விம்பத்தில் கறையாக இருக்கிறது”

இறுதியாக நீதிபதி மரணதண்டனை வழங்குவதற்கு மறுத்த அதேவேளை அதற்குப் பதிலாக ஆயுள் தண்டனையை திணித்தார். இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தொழிலாளர்களை தூக்கிலிடுவதற்கான முயற்சியில் மாநில அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

வாகன ஆலையில் மோசமான குறைபாடுகள் மற்றும் வேலைக்கான மிகக்குறைந்தளவு ஊதியங்கள், ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் நிர்வாகத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களினால் ஏற்பட்ட வெறுப்புகளிலிருந்து 2011 இல் மாருதி சுசூகி தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சியடைந்தன. வேலைநிறுத்தப் போராட்டங்கள், ஆலை உள்ளிருப்புகள் மற்றும் வன்முறையான காவல்துறையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உற்சாகமான எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகள் அடுத்தடுத்து பரவலான கிளர்ச்சிகளாக சேர்ந்து நடந்தன.

இறுதியாக, மார்ச் 2012 இல் ஆலையில் தொழிலாளர்களின் ஒரே நியாயமான பிரதிநிதியாக மாருதி சுசூகி தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (Maruti Suzuki Workers Union – MSWU) க்கு முறையான அங்கீகாரம் வழங்குவதற்கு நிறுவனத்தையும் மாநில அரசாங்கத்தையும் தொழிலாளர்கள் வெற்றிகரமாக நிர்ப்பந்தித்தார்கள்.

அதற்குப் பின்னர் விரைவில், வெறுக்கப்பட்ட ஒப்பந்தமுறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் முறையை முழுமையாக நீக்கவேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஒரு தொகை கோரிக்கைகளை MSWUநிர்வாகத்திடம் சமர்ப்பித்தது. அதற்கு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது.

பின்னர், 2012, யூலை 18 அன்று, கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களின் இடைவிடாத எதிர்ப்பை இன்னும் தைரியமாக எதிர் கொண்டு வந்த நிலையில் ஆலைக்குள் ஒரு சர்ச்சையைத் தூண்டிவிட்டது. ஒரு மேற்பார்வையாளர், ஒரு தலித் (இதற்கு முன்னர் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட) தொழிலாளியான ஜியலாலை சாதி அடிப்படையில் மிகவும் மோசமான முறையில் திட்டியுள்ளார். இந்த ஆத்திரமூட்டலால் ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த தீயினால் ஏற்பட்ட புகை அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மனிதவள மேலாளர் அவனிஷ் குமார் தேவ் இன் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது.

அவனிஸ் தேவ் இன் மரணத்தை பற்றிக்கொண்ட நிர்வாகம், காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டது மேலும் பின்னர் பல மாதங்களாக கொடுமையான அவதூறு வேட்டையை அரங்கேற்றியது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டனர், மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட நிர்வாகம் 546 நிரந்தரத் தொழிலாளர்களையும், சுமார் 1800 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்தது. தடுத்துவைக்கப்பட்டவர்களில் 148 தொழிலாளர்கள், அவர்கள் எந்த குற்றநடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள், அவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதுடன் மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கினர்.

இந்த மோசமான அவதூறு வேட்டைக்கு சட்டபூர்வமான அடிப்படை ஏதும் அற்ற நிலையில் ஒரு மறைமுகமாக ஒப்புக்கொண்டவாறாக 117 தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் நிர்பந்திக்கப்படிருந்தது. அதற்கு காரணம் அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை அல்லது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட வரிசையின்படி அவர்கள் கைது செய்யபட்டிருக்கலாம். இப்படியான நிரபராதிகளுக்கு எதிராக மாநில அரசாங்கம் மேல்முறையீடு செய்து வருகிறது, இந்த விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.

இறுதியில் 13 தொழிலாளர்கள் கொலை குற்றம் சுமத்தப்பட்டார்கள் மற்றும் மற்ற 18 பேர் குறைவான குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டார்கள்.

அவனிஷ் தேவ் நிறுவனத்தின் ஒரு மூத்த மேலாளராக மட்டுமல்லாது, தொழிலாளர்கள் மீது அவர் அனுதாபம் காட்டி வந்ததால் மற்ற மேலாளார்களின் அதிகமான மனக்கசப்புக்குள்ளானவராக இருந்தார். அவர் 2012 இன் கடைசியில் ஹரியானா அரசாங்க நிர்வாகத்தில் தொழிலாளர்களின் புதிதாக உருவாக்கப்பட்ட MSWU சங்கத்தை பதிவு செய்வதற்கு அவர்களுக்கு உதவியிருந்தார்.

இத்தகைய தைரியமுள்ள தொழிலாளர்களின் தோல்விக்கும் மற்றும் அவர்களின் தனிமைப்படுத்தலுக்கும் பெரும் பொறுப்பாளிகளாக ஸ்ராலினிச கட்சிகள் இருக்கின்றன. இந்திய முதலாளித்துவத்தின் “அரசியலமைப்பு ஒழுங்கின்” கடுமையான பாதுகாவலன் என்ற நிலையில் சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும் இப்போது தங்களை கருதுகின்றன மேலும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த அரசியல் சாக்கடையில் பங்குபற்றுகின்றன.

முதலாளித்துவ காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதரவை வழங்கும்படி அவர்கள் பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன, இந்திய தொழிலாள வர்க்கத்தின் இந்த கொடிய எதிரியை சர்வாதிகார பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்து மேலாதிக்கவாத பாஜக அரசாங்கத்திற்கு ஒரு முற்போக்கான மாற்றாக முன்னிறுத்துகின்றன.

மாருதி சுசூகி தொழிலாளர்களின் தலைவிதி காங்கிரஸ் கட்சி ஒரு "முற்போக்கான" மாற்று அல்ல என்பதற்கு சாட்சியமளிக்கிறது, ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில அரசாங்கமே MSWU வை வன்முறையில் அடித்து நொறுக்குவதற்கும் அதன் தலைவர்களை அவதூறு வேட்டையாடுவதற்கும் முன்னிலை வகித்துள்ளது.

மார்ச் 2017 இல் தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International - ICFI)) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் (World Socialist Web Site - WSWS) 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கின.

சமீபத்திய மாதங்களில் இந்தியாவிலும் உலகளவிலும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் இருக்கும் சமயத்தில் நான்கு ஆண்டுகளாகியள்ள நிலையில் இந்த பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்கான புறநிலை நிலைமைகள் சாதகமாக உள்ளன. தொழிலாளர் சட்டங்களை முற்றிலும் நீக்குதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களின் புதிய அலைக்கு முகங்கொடுக்கும் நிலையில், பெங்களூருவுக்கு அருகிலுள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (Toyota Kirloskar Motors - TMK) ஆலையில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்திய மூன்று மாத வேலைநிறுத்தம் போன்று வாகனத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் பிற பிரிவுகளின் தொடர்ச்சியான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தியாவிலும் உலகெங்கிலும், கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கினரும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் காட்டிய குற்றவியல் அலட்சியத்திற்கு பதிலளிக்கும் விதமாக அனைத்துப் பிரிவு தொழிலாளர்களிடமும் எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன.

அரசு அடக்குமுறை அச்சுறுத்தலைத் தகர்த்து, சரியான ஊதியம், பாதுகாப்பான வேலைகள் மற்றும் ஆபத்தினின்று பாதுகாப்பான பணியிடங்களுக்காகப் போராடுவது, மற்றும் மாருதி சுசூகி போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் பெருநிறுவன இலாபங்களுக்கான தீராத உந்துதலுக்கு எதிராக ஒரு போராட்டத்தை மேற்கொள்வது என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் போராட்டத்திற்குள் நுழையும் தொழிலாளர்கள் எஞ்சியிருக்கும் மாருதி சுசூகி வர்க்கப் போர் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும்!

Loading