அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்த்து, சீனாவும் ஈரானும் 25 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வார இறுதியில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி தெஹ்ரானுக்கு பயணம் செய்து, ஈரானிய சமதரப்பான ஜாவத் சரிஃப் உடன் 25 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் அமெரிக்க செய்தி வெளியீடுகள், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நியூ யோர்க் டைம்ஸிற்கு காட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் முந்தைய வரைவு, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு ஈடாக ஈரானில் சீன முதலீடுகளில் 400 பில்லியன் டாலர்களையும், அத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியையும் கொண்டதாகும் என்று குறிப்பிட்டது.

ஈரானில் சனிக்கிழமை, மார்ச் 27, 2021 அன்று ஈரானிய வெளியுறவு மந்திரி முகம்மது ஜாவத் சரீஃப், வலது, மற்றும் அவரது சீன சமதரப்பான வாங் யி, ஆவணங்கள் கையெழுத்திடும் நிகழ்விற்குப் பின்னர் புகைப்படங்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே பொருளாதாரப் பிரச்சினைகளை கையாள்வதில் ஈரானும் சீனாவும் சனிக்கிழமையன்று 25 வருட மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது (AP Photo/Ebrahim Noroozi)

2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை 2018 இல் ஒருதலைப்பட்சமாக நீக்கிய பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகளை பெய்ஜிங் மீறிவருகிறது, மேலும் உள்வந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இன்னும் அதை அகற்றவில்லை. பெப்ருவரி மாதம், பைடென் திடீரென சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற ஒரு குடிப்படை மீது குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 17 பேராவது கொல்லப்பட்டனர்.

தெஹ்ரானுடன் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட பெய்ஜிங் எடுத்த முடிவு, இந்த மாத தொடக்கத்தில் அலாஸ்காவில் பேரழிவுகரமான அமெரிக்க-சீனா உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நடந்தது. உச்சிமாநாடு நடவடிக்கைகள் கூட தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன், வாஷிங்டன் அமைத்திருக்கும் "விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை" சீனா ஏற்க வேண்டும் அல்லது "இன்னும் வன்முறையான மற்றும் ஸ்திரமற்ற உலகத்தை" எதிர்கொள்ள வேண்டும் என வாங்க்கு பகிரங்கமாக உரை நிகழ்த்தினார். பின்னர், அமெரிக்க பசிபிக் கப்பற்படை தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ, தைவான் மீதான சீனாவுடனான அமெரிக்க போர் "பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட நமக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது" என்று அச்சுறுத்தினார்.

பெய்ஜிங், தெஹ்ரானுடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலம், பைடென் நிர்வாகத்திற்கு எதிராக தன்னுடைய சொந்த தயாரிப்புக்களை செய்ய வேண்டும் என்று தான் முடிவு செய்துவிட்டதாக அடையாளம் காட்டியுள்ளது. அது ஆக்கிரோஷமான, இரக்கமற்ற விரோதப் போக்கைக் கொண்டிருக்கும். COVID-19 வைரஸானது சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாக விஞ்ஞானிகளால் மறுக்கப்பட்டதை குற்றம்சாட்டி அமெரிக்க அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான, ஆதாரமற்ற போர் பிரச்சாரங்களால், இந்தப் பார்வையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கரோஜ் மாநாட்டில், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையுடன் சர்வதேச சட்டத்திற்கான சீனாவின் உறுதிப்பாட்டை ஒப்பிட்டு பிளிங்கனுக்கு வாங் பதிலளித்தார். அதாவது "படைப் பயன்பாட்டையோ அல்லது பல்வேறு வழிகளில் மற்றய ஆட்சிகளை கவிழ்ப்பதையோ அல்லது பிற நாடுகளின் மக்களை படுகொலை செய்வதையோ நாங்கள் நம்பவில்லை, ஏனெனில் அவை அனைத்தும் இந்த உலகில் கொந்தளிப்பையும் ஸ்திரமின்மையையும் மட்டுமே ஏற்படுத்தும். நாளின் முடிவில், அவை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு நன்றாக சேவை செய்யாது."

தெஹ்ரானுக்கு பயணம் செய்வதற்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ஒரு "மனித ஆன்மா" இல்லாத ஒரு "கொலையாளி" என்று பைடென் ஆத்திரமூட்டும் வகையில் கண்டனம் செய்த சிறிது காலத்திற்குப் பின்னர், சீன நகரமான கில்லினில் பேச்சுவார்த்தைகளுக்காக தனது ரஷ்ய சமதரப்பான சேர்ஜி லாவ்ரோவை வாங் வரவேற்றார்.

இந்த வார இறுதியில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டபோது, ஈரானிய மற்றும் சீன அதிகாரிகள் வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் குறித்து கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். சரிஃப் சீனாவை "கடினமான நாட்களின் நண்பன்" என்று அழைத்தார், மேலும், "ஒடுக்குமுறை பொருளாதாரத் தடைகளின்போது சீனாவின் நிலைப்பாட்டுக்கு நாங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என சேர்த்துக் கொண்டார்.

வாங் பதிலளித்தார், "எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்போது ஒரு மூலோபாய மட்டத்தை எட்டியுள்ளன, மேலும் ஈரானிய இஸ்லாமிய குடியரசுடன் உள்ளடக்கிய உறவுகளை மேம்படுத்த சீனா முயன்று வருகிறது. ... இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பிற்கான பாதை வரைபடத்தில் கையெழுத்திடுவது, சாத்தியமான மிக உயர்ந்த மட்டத்திற்கு உறவுகளை மேம்படுத்துவதற்கான பெய்ஜிங்கின் உறுதியை காட்டுகிறது" என்றார்.

சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் படி, வாங் ஈரானிய அதிகாரிகளிடம் கூறினார், "மேலாதிக்கத்தையும், மிரட்டுதலையும் எதிர்க்கவும், சர்வதேச நீதியையும் நியாயத்தையும் பாதுகாக்கவும், அத்துடன் ஈரான் மற்றும் பிற நாடுகளின் மக்களுடன் சேர்ந்து சர்வதேச விதிமுறைகளை நிலைநிறுத்தவும் சீனா தயாராக உள்ளது."

2016 இல் ஈரானிய அதியுயர் வழிகாட்டி அலி காமேனிக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையே முதலில் கலந்துரையாடப்பட்ட இந்த உடன்படிக்கை, பெய்ஜிங் அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை (Belt and Road) முன்முயற்சி உள்கட்டமைப்புத் திட்டத்துடன் அபிவிருத்தி செய்ய முயன்ற மத்திய கிழக்குடனான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துகிறது. சீனாவிற்கான ஈரானிய தூதர் முகம்மது கேஷவர்ஸ்-சடேவை மேற்கோளிட்டு தெஹ்ரான் டைம்ஸ், இந்த உடன்படிக்கை "ஈரானுக்கும் சீனாவிற்கும் இடையே குறிப்பாக தொழில்நுட்பம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான திறன்களை குறிப்பிடுகிறது" என்று தெரிவித்தது. சீன நிறுவனங்கள் ஈரானில் பாரிய போக்குவரத்து அமைப்புகள், இரயில் பாதைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பை கட்டியுள்ளன.

ஈரான்-சீனா உடன்படிக்கை குறித்து வாஷிங்டன் இன்னும் பகிரங்கமாக விடையிறுக்காத அதேவேளை, அமெரிக்க அதிகாரிகள் முன்னர் அதை வாஷிங்டனின் நலன்களுக்கு ஒரு அடிப்படை சவாலாக கண்டனம் செய்துள்ளனர், "பயங்கரவாதத்தின் மீதான போர்" பிரச்சாரத்துடன் பனிப்போர் கம்யூனிசத்திற்கு எதிரான முயற்சிகளை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சிகளுடன் இணைந்துள்ளது.

கடந்த டிசம்பரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற ஊகங்களுக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத் துறையின் கொள்கை திட்டமிடல் பணியாளர் பீட்டர் பெர்கோவிட்ஸ் அல் அராபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டால் அது "சுதந்திர உலகிற்கு மிகவும் மோசமான செய்தி" என்று அவர் கூறினார்: "ஈரான் பிராந்தியம் முழுவதும் பயங்கரவாதம், மரணம் மற்றும் அழிவைத்தான் ஏற்படுத்துகிறது. சீன மக்கள் குடியரசுக்கு அதிகாரம் அளிப்பது அச்சுறுத்தலை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்."

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான வளைகுடாப் போர் மற்றும் 1991ல் ஸ்ராலினிச ஆட்சியானது சோவியத் ஒன்றியத்தை கலைத்ததிலிருந்து மூன்று தசாப்தங்கள் இத்தகைய சொல்லாட்சிகளை அம்பலப்படுத்தியுள்ளன. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு முக்கிய இராணுவ எதிர் பலமான சோவியத் ஒன்றியத்தை அகற்றுவது சமாதானத்திற்கு இட்டுச் செல்லவில்லை, அல்லது "இறப்பு மற்றும் அழிவுக்கு" ஈரான் முக்கிய ஆதாரமாக இருக்கவில்லை. மூன்று தசாப்தங்களாக, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய நட்பு நாடுகளும் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. "பேரழிவு ஆயுதங்களை" ஈராக் மறைத்து வருகிறது என்ற பொய்களின் அடிப்படையில் மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளனர்.

ஈரான் மற்றும் சீனா பற்றிய Berkowitz இன் கண்டனங்கள், வாஷிங்டனில் அதனுடைய போர்களின் தோல்விகள், அதன் மங்கிவரும் தொழிற்துறை மற்றும் பொருளாதார எடை, மற்றும் இப்பொழுது பேரழிவுகரமான முறையில் பெருந்தொற்றைக் கையாளுதல் ஆகியவற்றால் வாஷிங்டனில் அதன் உலகளாவிய மேலாதிக்க நிலையை இழக்கக்கூடும் என்ற பெருகிய கவலையுடன் பிணைந்துள்ளது.

நேட்டோ சக்திகள் 2011ல் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரைத் தொடங்கியதிலிருந்து, முதலில் இஸ்லாமியவாதிகளை, பின்னர் குர்திஷ் தேசியவாத போராளிகளை ஆதரித்தது. ஈரான், ரஷ்யா மற்றும் பெருகிய முறையில் சீனா ஆகியவை சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை ஊக்குவிப்பதற்கு தலையீடு செய்து வருகின்றன. சீனா-ஈரான் உடன்பாட்டின்படி, இந்த நேட்டோ போர்கள் 20ஆம் நூற்றாண்டில் உலக சந்தைகளின் கட்டுப்பாடு மற்றும் மூலோபாய வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய மோதலின் விதைகளை அவர்களிடம் கொண்டு செல்கின்றன என்பது இப்போது தெளிவாகிறது.

ஆசியாவிலும் குறிப்பாக சீனாவிலும் அதிகரித்துவரும் தொழில்துறை எடை, நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கான ஒரு பட்டறையாக இந்த புவிசார் அரசியல் மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்குடன் சீனாவின் வர்த்தகம் 2019 இல் 294.4 பில்லியன் டாலராக உயர்ந்து, 2010 இல் மத்திய கிழக்குடனான அமெரிக்க வர்த்தகத்தை விஞ்சிவிட்டது. பெய்ஜிங், தெஹ்ரானின் முன்னணி வர்த்தகப் பங்காளியாக உள்ளதுடன், பாக்கிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி மூலம் சீனாவை அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சியின் கீழ் ஐரோப்பாவில் அதன் முக்கிய ஏற்றுமதி சந்தைகளுடன் இணைக்கும் உள்கட்டமைப்பை மேலும் அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.

சீனா-ஈரான் ஒப்பந்தத்தின் தலைவிதி மிகவும் நிச்சயமற்றது. நிச்சயமாக, அது ஈரானுக்குள்ளாக சக்திவாய்ந்த உள்நாட்டு எதிர்ப்பை முகங்கொடுக்கிறது, அங்கு ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு ஐரோப்பாவுடன் உறவுகளை அபிவிருத்தி செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளன. ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அகாதினேஜாட், "ஈரான் மற்றும் சீனா இடையே ஒரு புதிய, இரகசிய 25 ஆண்டு கால ஒப்பந்தத்தை ஈரானிய நாடு அங்கீகரிக்காது" என்று உறுதியளித்தார்.

இந்த ஒப்பந்தம் வாஷிங்டனை குறிவைத்து விட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீன ஊடகங்கள் மறுத்தன. குளோபல் டைம்ஸ் சீனா-ஈரான் ஒப்பந்தம் "சில மேற்கத்திய ஊடகங்களால் புவிசார் அரசியல் போட்டி முன்னோக்கில் இருந்து விளக்கப்பட்டுள்ளது... சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையே பொதுவாக ஆழமடைந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு சவாலாக சித்தரிக்கிறது."

பெய்ஜிங் மற்றும் தெஹ்ரான் வாஷிங்டனுடன் போரை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலாக அது காண்கிற எவரையும் குண்டு வீசவோ அல்லது தாக்கவோ உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதற்கும், மீறுவதற்கும் இடையே ஊசலாடும் சீன மற்றும் ஈரானிய ஆட்சிகள், இறுதியில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலையில் வேரூன்றிய, வளர்ந்து வரும் இந்த போர் அபாயத்திற்கு எந்த முற்போக்கான தீர்வையும் கொண்டிருக்கவில்லை. இறுதி ஆய்வில், போரைத் தவிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டியதே அவசியமாகவுள்ளது.

சீனா-ஈரான் உடன்படிக்கையானது பொருளாதார மற்றும் தொழிற்துறை எடையின் பூகோள மறுபங்கீடு சர்வதேச கூட்டணிகளையும் பூகோள அரசியல் கூட்டணிகளையும் எப்படி கீழறுக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் மார்க்சிசவாதிகள் உலகப் போருக்கு — உலகப் பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான உந்துசக்தியாக அடையாளம் காணப்பட்ட முரண்பாடு— மீண்டும் பாரிய சக்தியுடன் வெளிப்படுகிறது. எழும் முக்கியமான கேள்வி, போருக்கு எதிராக ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும்.

Loading