தொற்றுநோயால் வாழ்க்கை நிலைமை மோசமாகி வருவது குறித்து இலங்கை பெருந்தோட்ட இளைஞர்கள் பேசுகிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களில் அநேகமானோர் தோட்டப்புற நகரங்களிலும் பெரும்பாலானோர் கொழும்பில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். சிலர் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதுடன் ஏனையோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். பொதுவாக இவர்கள் அனைவருமே அதிகமான உழைப்புச் சுரண்டல் நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

1990 களில் அரச தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், கம்பனிகள் இளைஞர் யுவதிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்ள்வது படிப்படியாக குறைந்தமையினாலும் தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு போதுமான ஊதியம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்காமையினாலும் இளைஞர்களும் யுவதிகளும் படிப்படியாக வேலை தேடுவதற்காக தோட்டங்களை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் ஊதியப் போராட்டத்திற்கு ஆதரவாக 2018இல் கொழும்பில் காலி முகத் திடலில் பெருந்தோட்ட இளைஞர்கள் நடத்திய போராட்டம் (Photo: WSWS media)

ஒரு ஊடக அறிக்கையின்படி, “தனியார்மயமாக்கலுக்குப் பிறகு 14-33 வயதுடையவர்களில் வேலையின்மை வேகமாக வளர்ந்து வருவதால் நுவரெலியா மாவட்டத்தில் வேலையின்மை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டளவில் வேலைக்குச் சேர்ந்த குடும்பத்தவர்களின் எண்ணிக்கை 1.7 சதவீதமாக இருந்ததோடு அவர்களை சார்ந்து நிற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் உள்ளது.

கொரோனா தொற்றுநோயால் இளம் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை எவ்வாறு மோசமடைந்துள்ளது என்பதை நகரத்தின் இளம் வர்த்தக நிலைய சேவையாளர் தினேஷ் குமாரி உலக சோசலிச வலைத் தளத்திற்கு விவரித்தார். அவரது கருத்துக்கள் பொதுவாக தோட்டத் துறையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய தெளிவான விவரங்களை வழங்குகிறது.

'கொரோனாவின் முதல் அலை வந்தபோது, நாங்கள் திடீரென்று எங்கள் வேலைகளை இழந்தோம். எங்களுக்கு ஊதியத்தைத் தவிர வேறு வருமான ஆதாரங்கள் இல்லை. கொழும்பில் பணிபுரிந்தவர்களும், வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர்களும் வெறுங்கையுடன் வீட்டிற்கு வந்தார்கள். எனவே வாழ்வது மிகவும் சிக்கலாக இருந்தது. அரசாங்கம் ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபாய் கொடுத்தது. அந்தப் பணம் வீட்டுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. வீடுகள் இல்லாததால், திருமணமான பின்னரும் பிள்ளைகளது குடும்பங்களுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றன. ஒரு குடும்பத்தில் மூன்று பேர் என எடுத்துக்கொண்டாலும் ஒரு வீட்டில் ஒன்பது பேர் உள்ளனர். வசிக்க தனி வீடுகள் இருந்தால், இந்த மூன்று குடும்பங்களும் இந்த பிரச்சனையின் போது உதவி பெறுவார்கள். ஆனால் அவ்வளவு பேரும் 5,000 ரூபாயில் வாழ்வது எப்படி?” என குமாரி கேள்வி எழுப்பினார்.

தான் வேலை செய்த நிறுவனம் மூடியிருந்த காலத்தில் தனக்கு 5,000 ரூபாய் கடன் கொடுத்ததாகவும் ஆனால் மீண்டும் வேலையைத் தொடங்கியபோது அந்தப் பணம் தனது முதல் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் பணிபுரிந்த இளைஞர்கள் மீண்டும் வேலைக்கு சென்றபோதிலும் பலர் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருக்கிறது. தொற்றுநோய் எப்போது முடிவடையும் என்று சொல்ல முடியாததால் நிலைமை மோசமடையும் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் வேலை இழந்த தனது சகோதரர் இப்போது பண்டாரவலையில் உள்ள ஒரு சிகை அலங்கார கடையில் வேலை செய்வதாகவும், தொற்றுநோய் காரணமாக வருமானம் குறைவாக இருப்பதால் மிகக் குறைந்த சம்பளமே கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே துன்பப்பட்டவர்கள். தோட்டத்தில் எங்கள் பெற்றோர் வேலைசெய்து சம்பாதித்த பணத்தில்தான் குடும்பமே மிகவும் கடினமாக வாழ்க்கையை நடத்தியது. நான் உயர்தரம் தேர்ச்சி பெற்றேன். ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அப்படி ஒன்று கிடைக்கும் வரை காத்திருந்து பெற்றோருக்கு தொந்தரவு செய்யக் கூடாது என்று ஒரு கடையில் விற்பனைப் பெண்ணாக வேலைக்குச் சென்றேன்.”

தான் உயர்தரம் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெரும்பாலோர் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பாடசாலையை விட்டு வெளியேறி, கடைகளில் ஒரு சிறிய சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள், என் அவர் தெரிவித்தார்.

2018 அக்டோபரில் சர்வதேச சமூகவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இதழ் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி, தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 17-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 13 சதவீதமானவர்கள் 1-5 ஆன் தரத்துடன் தங்கள் கல்வியை முடித்துக்கொண்டுள்ளனர். 25 சதவிகிதத்தினருக்கு மட்டுமே 6-11 தரங்களில் கற்க முடிந்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை படித்த மாணவர்கள் நூற்றுக்கு 16 சதவீதத்தினராக இருக்கும் அதே வேளை, அதிலும் 19 சதவீதமானவரே தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்தர தேர்ச்சி 11 சதவீதமாக உள்ளதுடன் பட்டதாரிகள் 2 சதவீதமாகவே இருக்கின்றனர். 3 சதவீதம் பேர் ஒருபோதும் பாடசாலைக்குச் செல்லவில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் பெறும் குறைந்த ஊதியம் பெருந்தோட்ட இளைஞர்களின் குறைந்த கல்வி நிலைக்கும் வேலையின்மைக்கும் ஒரு முக்கிய காரணமாகும் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான வசதிகள் இல்லாதது தோட்டப்புற சிறுவர்களின் கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு தடைகளாகும். தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இந்த நிலைமை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனித்துவ காலம் முதல் இன்றுவரை முதலாளித்துவ சமூக அமைப்பினால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டின் விளைவாகும்.

மற்றொரு விற்பனையாளர், கடை தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்றதாகக் கூறினார்: “நாங்கள் நாளொன்றுக்கு சுமார் 350, 400 அல்லது 450 ரூபாய் சம்பாதிக்கிறோம். மாத சம்பளம் அப்படித்தான் கணக்கிடப்படுகிறது. ஆனால் அரிதாக சில பெரிய கடைகளில் நாளொன்றுக்கு சுமார் 700 முதல் 800 ரூபா வரை சம்பாதிக்கும் நபர்கள் உள்ளனர். சிலரின் வருமானத்தில் முழு குடும்பமும் தங்கியிருக்கின்றன. சில பெற்றோர்கள் உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்வதில்லை. என் பெற்றோரும் அப்படித்தான். பயணச் செலவுகள், உணவு மற்றும் மருந்துகள் என்று வரும்போது ஒரு உடுப்பு கூட வாங்க சம்பளத்தில் மிச்சம் இருக்காது.”

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இலாபத்தை மிச்சப்படுத்த கடைக்காரர்கள் எவ்வாறு வேலை நேரத்தை அதிகரித்தார்கள் என்பதை அவர் விவரித்தார். “கொரோனாவுக்கு முன்பு, எங்கள் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 6.30 மணியளவில் முடிந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறைகள் இருந்தன. இப்போது நான் காலை 8 மணிக்கு வேலையைத் தொடங்க வேண்டும், மாலை 7 மணி வரை வேலை செய்ய வேண்டும். விடுமுறை இல்லை. நான் வாரத்தில் ஏழு நாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும்.”

நகரத்தின் கடைகளில் பல தொழிலாளர்களுக்கு சுகாதார மற்றும் உணவு வசதிகள் இல்லை என்று அவர் கூறினார்: “எல்லா கடைகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை. பெரும்பாலான மக்கள் நகரத்தில் உள்ள பொது கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். சில பெண்கள் காலையில் கழிப்பறை சென்று தங்கள் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வீடு திரும்பும் வரை தாங்கிக்கொள்கின்றனர். அதற்காக குடிக்கும் நீரின் அளவைக் குறைத்தனர். முன்பு, தண்ணீர் இல்லை. இப்போது கைகளை கழுவவேண்டும் என்பதால் கடைகளில் தண்ணீர் எடுத்துள்ளனர்.”

கடினமான வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக இந்த தொழிலாளர்கள் இடம்பெயர்வது பொதுவானது என்று அவர் குறிப்பிட்டார். “நான் பல கடைகளில் வேலை செய்தேன். நான் சில மாதங்கள் வேலை செய்யும் போது அதிக வேலை மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக வேறு எங்காவது போகவேண்டும் என உணர்கிறேன். நல்ல சம்பளத்துடன் வேலை கடினமாக இல்லாவிட்டால் நாங்கள் இடத்திற்கு இடம் மாறமாட்டோம். இதன் காரணமாக நாங்கள் ஊழியர் சேமலாப நிதியைப் பெறுவதில்லை. எங்கள் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று எங்களுக்குத் தெரியாது.'

பெருந்தோட்ட நிறுவனங்களில் வேலை வெட்டுக்களின் விளைவாக உருவாகியுள்ள இந்த நிலைமை, தோட்டத் தொழிற்சங்கங்களால் மூடி மறைக்கப்பட்டு வருகிறது, அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்காகப் போராட முற்றிலும் மறுத்துவிட்டனர்.

Loading