இலங்கை அரசாங்கம் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளையும் திறந்துவிடுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொவிட் -19 தொற்றுநோயின் தேசிய மையமான மேற்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில், இதுவரை நடைமுறையில் இருந்த முறையான ஒரு சில தர மாணவர்களை மட்டுமே பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறையை கைவிட்டு, அனைத்து தர பாடசாலைகளையும் அரசாங்கம் இன்று மீண்டும் திறந்துவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் அதிக காலம் மேல் மாகாணத்தில் உள்ள கம்பாஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டதுடன், அந்த மாவட்டங்களில் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மட்டுமே இந்த ஆண்டு மார்ச் 15 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகளின்படி, தீவின் முழு பாடசாலை அமைப்பின் அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் இன்று முதல் பாடசாலைக்கு வர வேண்டும்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் நெருக்கமாக கூடியுள்ளனர் (Photo: WSWS media)

நாட்டில் தொற்றுநோய் 'கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்ற அரசாங்கத்தின் கட்டுக்கதையின் அடிப்படையிலேயே கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், உண்மை இந்த கட்டுக் கதைக்கு முற்றிலும் வேறுபட்டதாகும்: நோயின் பேரழிவு பரவலை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் தினசரி பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 5,000 அளவுக்கு குறைத்துள்ள நிலைமையிலும் கூட, தீவின் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 300 தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

கம்பஹாவில் உள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், கடந்த வாரம் சுமார் 500 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதை ஆராய்ந்த, இலங்கையின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரான, சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் ரவி ரன்னன்-எலிய, 'இது, வைரஸ் தொடர்ந்தும் மற்றும் விரிவாகவும் பரவுகிறது என்பதற்கான சான்று' என தெரிவித்தார். அதே நேரம், இது தினசரி செய்யப்படும் பரிசோதனைகள் எந்தளவுக்கு 'பற்றாக்குறையானவை' என்பதை பிரதிபலிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைவிட அப்பட்டமான விடயம் என்னவென்றால், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து தரங்களும் திறக்கப்பட்ட அதே நாளில், யாழ்ப்பாண கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட நேர்ந்தது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 18 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாண வாராந்திர சந்தையும் பல நகர்ப்புறங்களும் மூடப்பட்டன. இதற்கு சமாந்தரமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நோய்த்தொற்றுகள் பரவுவது சம்பந்தமான செய்திகள் தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் வெளிவருகின்றன. ஊடக அறிக்கையின்படி,

* லுனுகம்வேர, அகுனகொலவெவ ஆரம்ப பாடசாலையின் ஆறு மாணவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* பாதிக்கப்பட்ட 15 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வீரகெட்டியவில் நகரை அன்டிய நான்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

* கடந்த வாரம் காலி பகுதியில் இரண்டு அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

* பெருந்தோட்டப் பகுதியிலும் பாடசாலைகள் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், தலாவ பிரதேச சபையின் 8 உறுப்பினர்கள் உட்பட 28 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக தலாவ சுகாதார வைத்திய அதிகாரி, கபில திசாநாயக்க கூறியதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக சபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம், மேற்கண்ட இடங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று காலை நாட்டில் மொத்த நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையே 92,088 மற்றும் 5.61 ஆகும்.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காண்பிப்பதை விட உண்மை நிலைமை மோசமானது என்பதையே மேற்கண்ட செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த தொற்றுநோய் நாடு முழுவதும் பரவுகின்ற நிலைமையிலும், வைரஸின் புதிய விகாரங்கள் காரணமாகவும் தொற்றுநோயின் உலகளாவிய பரவல் துரிதமடைந்துள்ள நிலைமையிலுமே இராஜபக்ஷ அரசாங்கம் இன்று அனைத்து பள்ளிகளையும் திறந்துவிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 பேர் மரணிக்கின்ற அதேவேளை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஏழு நாட்களில் சராசரியாக அரை மில்லியனை நெருங்குகிறது. இது முந்தைய மாதத்தை விட 40 சதவீதம் அதிகரிப்பாகும். இப்போது பேரழிவின் மையமாக விளங்கும் பிரேசிலில் நாளொன்றுக்கு 3,000 பேர் மரணிக்கின்றனர்.

வைரஸின் புதிய விகாரங்கள் காரணமாக, நகர்ப்புற குடிசைவாசிகளிடையே இறப்பு மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ பதிவுகளில் சேர்க்கப்படாத அயல் நாடான இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த புதிய வகைகள் ஏற்கனவே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மற்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தொடர்புடைய பாடசாலைகளைத் திறப்பது தொற்றுநோய் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொற்றுநோய் பரவல் விரைவாக உயர்வதற்கு பாடசாலைகள் திறக்கப்படுவது ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், பாடசாலைகளையும், அத்தியாவசியமற்ற பொருட்களின் உற்பத்தியையும் மூடுவது தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கட்டாய நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த உண்மைகள் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், உலகின் செல்வந்த நாடான அமெரிக்கா முதல் இலங்கை வரையிலான அனைத்து நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இந்த உண்மைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து பாடசாலைகளையும் அத்தியாவசியமற்ற பொருட்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பது ஏன்?

பதில் எளிதானது: முதலாளித்துவ சமுதாயத்தில் மனித வாழ்க்கை அன்றி இலாபமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும் முதலாளிகளின் இலாப சுரண்டல் தொடர வேண்டுமானால் அத்தியாவசியமற்ற பொருள் உற்பத்திகள் தொடர வேண்டும். சிறுவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதன் காரணமாக, தொழிலுக்குச் செல்வதில் ஏற்படும் பாதிப்பை நீக்கி, அவர்களை வேலைக்கு வரவைக்கும் குற்றவியல் நோக்கத்திற்காகவே பாடசாலைகள் திறந்து வைக்கப்படுகின்றன.

மறுபுறம், தொற்றுநோய்க்கு மத்தியில், அனைத்து சமூக-பொருளாதார நடவடிக்கைகளையும் பராமரிக்கும் 'புதிய வழமை' கொள்கையை உறுதிப்படுத்த பாடசாலைகளை திறந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் இருந்தே, இராஜபக்சே அரசாங்கம் தொற்றுநோயின் பேரழிவு பரவலை பொதுமக்களிடமிருந்து மூடிமறைக்கவும், முதலாளித்துவ ஆதாயத்திற்காக பொருளாதாரத்தை திறந்து வைக்கவும் முயன்றது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அதன் பரவல் பற்றிய விரிவான விளக்கப்படம் அவசியம் என்றும், பெரிய அளவிலான பி.சி.ஆர். சோதனை கட்டாய அங்கமாக இருக்க வேண்டும் என்றும், உலக சுகாதார அமைப்பு (WHO) மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆரம்பத்தில், அதை குற்றவயில் முறையில் மறுத்த அரசாங்கம், கடந்த அக்டோபரில் “பிரன்டிக்ஸ் கொத்தணி” வெடித்ததைத் தொடர்ந்தே, தினசரி ஆய்வுகளின் எண்ணிக்கையை மிகக் குறைந்த 10,000 ஆக உயர்த்தியது.

'பி.சி.ஆர். சோதனைகளுக்கு ஏற்ப இலங்கையில் குறைவடைந்து வரும் கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை: இரண்டு வரைபுகளின் கதை' என்ற தலைப்பில் எகொனொமி நெக்ஸ்ட் வலைத்தளத்தில் 2021 மார்ச் 26 வெளியான இதழில் உள்ள விளக்கப்படம்,” சோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றது என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது. சோதனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வாறு ஊசலாடுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பெரும்பாலான சோதனைகள், முதல் வரிசை தொடர்பாளர்களிடமே முன்னெடுக்கப்பட்டது என்றும், சோதனைகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் 'முதல் வரிசை தொற்றாளர்கள் குறைவாக' இருப்பதே, என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது இரண்டு முக்கியமான விஷயங்களை வெளிப்படுகின்றது. முதலாவது, உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பெரிய அளவிலான எழுமாறான சோதனை முறையை ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் முற்றிலும் புறக்கணித்து வந்துள்ளது. தொடர்பாளர்கள் குறைவென்றால், அதன் மூலம் கிடைக்கின்ற சாதகத்தை எழுமாறான பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு பயன்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை, என்பது மற்றைய விடயமாகும்.

வேண்டுமென்றே பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், தொற்றுநோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கமும் முதலாளித்துவ ஊடகங்களும் முன்னெடுக்கும் பொய் பிரச்சாரத்தின் விளைவாக, அதிகரித்துவரும் பேரழிவு நிலைமை பற்றி வெகுஜனங்கள் மத்தியில் வளர்ந்து வரும் அலட்சியப் போக்கின் விளைவாக, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிறுவர்களின் வருகை இன்று கணிசமானளவு எண்ணிக்கையை கொண்டிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தலைமை கொடுக்கும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை குழு, வளர்ந்து வரும் இந்த ஆபத்தான நிலைமைக்கு எதிராக, தொற்றுநோய் உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரச்சினைகளை வெல்வதற்கு, ஒரு சுயாதீனமான அரசியல் கொள்கைக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி, பல பகுதிகளிலும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியது.

பாடசாலைகள், “அனைத்து சுகாதார பாதுகாப்பின் கீழேயே தொடங்குகின்றன” என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியதற்கு மாறாக, மேல் மாகாணத்தில் ஒருவித வளங்களைக் கொண்ட ஒரு சில பாடசாலைகளைத் தவிர, பெரும்பாலான பாடசாலைகளில் சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதல் போன்ற எந்த முறைகளும் இல்லை என்று பல ஆசிரியர்கள் கூறினார்கள். சில பாடசாலை அதிபர்கள், தங்கள் சொந்த செலவில் கிருமிநாசினிகளை வாங்க மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்று அவர்கள் கூறினர்.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மேல் மாகாணத்தில், மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் நெரிசலான பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருப்பதனால் இந்த 'சுகாதார காப்பீட்டு' முறைகள் எதுவும் நடைமுறையில் பின்பற்றப்பட முடியாது.

மேல் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையின் துணை அதிபர், பாடசாலைகளை திறப்பது ஒரு பெரிய ஆபத்து என்றும், அந்த சூழ்நிலையில் பாடசாலைகள் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் WSWS இடம் கூறினார். 'இவ்வாறு போனால் மக்கள் மரணிப்பார்கள். இது கண்களை கட்டி ஒரு பள்ளத்தில் தள்ளுவது போன்றது. புதிய இயல்பை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

சுமார் 6,000 மாணவர்களைக் கொண்ட கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தேசியப் பள்ளியின் ஆசிரியரான ஜானகி, 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். 'அமெரிக்கா போன்ற நாடுகளில் செய்யப்படுவதையே இப்போது இங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் சம்பளத்தை வெட்டுவார்கள், கொடுப்பனவுகளை குறைப்பார்கள், இப்போது அந்த தாக்குதல்களோடு சேர்த்து, இப்போது நமது உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.'

இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் 'புதிய இயல்புக்கு' ஆசிரியர்களை அடிபணியவைக்க முழுமையாக ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்: ஊடகங்களுக்கு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளை மீண்டும் திறப்பதை எதிர்க்கவில்லை என்று கூறினார். இந்த பேரழிவிற்கு ஆதரவளிக்கும் அதே வேளை, ஒவ்வொரு மாணவருக்கும் தரப்படுத்தப்பட்ட முகமூடிகளை வழங்குமாறு, ஸ்டாலின் அரசாங்கத்திடம் போலி கோரிக்கையையும் விடுத்தார்.”

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய சுற்றறிக்கையின் படி, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்தி, குழு குழுவாக அழைப்பது, மற்றும் பாடசாலைக்கு அருகில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது சம்பந்தமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து மற்றொரு ஆசிரியர் கூறியதாவது: “45 சிறுவர்களைக் கொண்ட ஒரு வகுப்பை மூன்றாக பிரித்து, ஒரு வாரத்திற்கு ஒரு பிரிவாக அழைத்து கற்பிப்பது எப்படி? மாணவர்களும் ஆசிரியரும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையே சந்திப்பார்கள்.”

தொற்றுநோய் பூரணமாக கட்டுப்படுத்தப்படும் வரை பாடசாலைகளை மூடுவதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக இணையம் மற்றும் கணினி வசதிகளை உடனடியாக வழங்குவதன் மூலம் ஆன்லைன் கல்வியை மேம்படுத்துவதற்கும் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளம் முன்வைக்கும் திட்டத்திற்கு அவர் முழு ஆதரவை வெளிப்படுத்தினார்.

கூட்டுத்தாபன இலாபம், தேசியவாதம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக, திட்டமிடப்படாத முறையில் முன்நகர்த்தப்படும் தடுப்பூசி ஏற்றல், தொற்றுநோய் பரவும் வேகத்தை விட மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், தனது பிற்போக்கு அரசியல் நகிழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு விஞ்ஞானத்தைக் கூட திரிபுபடுத்தி, அமெரிக்காவில் உள்ள பைடன் நிர்வாகம் பாடசாலைகளை திறப்பதில் முன்னிலை வகித்து வருவதாகவும் நடவடிக்கை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அமெரிக்காவில் பைடென், பிரேசிலில் பொன்செனாரோ, பிரிட்டனில் ஜோன்சன் மற்றும் இந்தியாவில் மோடி வரை ஆளும் வர்க்கங்களைப் பின்பற்றி, மக்களை தொற்றுநோய்க்கு தியாகம் செய்வதன் மூலம் முதலாளித்துவ இலாபங்களைப் பாதுகாக்கும் 'புதிய வழமை' என்ற கொடிய கொள்கையை இராஜபக்ஷ அரசாங்கமும் பின்பற்றுகிறது. இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும், முதலாளித்துவ ஊடகங்கள், போலி இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடனேயே இந்த படுகொலை கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன.

Loading