தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வகுப்புவாதத்தை தூண்டுகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலைமையில், செந்தமிழன். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க) தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் (பாண்டிச்சேரி) 28 தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தி, தமிழ் நாட்டை தமிழர்களே ஆழவேண்டும் என்ற பிற்போக்கு தமிழ் வகுப்புவாத கருத்தியலை மையமாக வைத்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில், இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்துக்கு எதிராக, முன்னொருபோதும் இல்லாத வகையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட, நாடு தழுவிய போராட்டங்கள் மேலும் அபிவிருத்தியடைந்துவரும் ஒரு நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்தப் பிரச்சாரம் தொழிலாளர்களை இன ரீதியாக பிளவுபடுத்துகின்றது.

முகக் கவசம், சமூக இடைவெளி எதுவும் கடைப்பிடிக்கப்படாத நிலையில் நடைபெறும் சீமானின் 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

கோவிட்19 பெருந் தொற்றுநோய், இந்தியா உட்பட உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் மனித உயிர்களை விட பெரும் வணிக இலாபத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றன என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுடன், வர்க்கப் போராட்டங்களையும் மேலும் தூண்டி விட்டுள்ளது. இந்தியாவில் நடந்துவரும் போராட்டங்கள் இதன் பாகமாகும். ஆளும் தட்டுகளிடம் மரணத்தை விளைவிக்கும் இந்த தொற்றுக்களுடன் கூடி வாழுதல் என்ற சமூகப் படுகொலை கொள்கையை தவிர வேறெதுவும் கிடையாது என்பதை அண்மைய தேர்தல் நிகழ்வுகள் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தக் கொள்கையின் பாகமாக பள்ளிகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வணிக நிறுவனங்களை திறந்து வைத்து, ஆட்சியாளர்கள் நாட்டை இயல்பு நிலையில் வைத்திருக்கின்றார்கள். இந்தியாவில் மரணம் 163 396 யும் தாண்டிவிட்டது. எந்தவித அடிப்படையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் பின்பற்றாமல், தமது பொதுக்கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை லாரிகளில் ஏற்றி வந்து அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றார்கள்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகின்றன. சீர்திருத்தவாத அரசியலோடு ஆட்சிக்கு வந்த, பிராந்தியவாத கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மற்றும் அகில இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) சீரழிவை வலதுசாரித் தனமாக சுரண்டிக்கொள்ள முற்படும் நாம் தமிழர் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் அதே முதலாளித்துவ சார்பு தொழிலாள வர்க்க விரோத அரசியலையே தொடரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இது உள்ளது.

கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசிய முன்னோக்கை நோக்கி திரும்பாமல், தடம்புரளச் செய்வதை நோக்கமாக கொண்ட ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் அதன் தொழிற் சங்கங்களின் காட்டிக்கொடுப்பினால், நாம் தமிழர் கட்சி போன்ற வகுப்புவாத இயக்கங்கள் இன்று அரசியல் அரங்கத்துக்கு வந்திருக்கின்றன.

ஸ்ராலினிச கட்சிகளான, C.P.I மற்றும் C.P.I.M, பல தசாப்தங்களாக ‘’மத சார்பற்ற கூட்டணி’’ என்ற மோசடிப் பெயரில், அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க தலைமையிலான தேர்தல் கூட்டணியில் மாறி மாறி அங்கம் வகித்து, அவற்றை ஆட்சிக்கு கொண்டு வந்ததுடன், முதலாளித்துவ ஆட்சியின் தூண்களாக செயற்பட்டு வருகின்றன. 1999ல் அடெல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து, மூன்று முக்கிய மந்திரிப் பதவிகள் பெற்று டெல்லியில் ஆட்சி நடத்திய தி.மு.கவின் கூட்டணியில் தற்போது C.P.I மற்றும் C.P.I.M, ஐக்கியமாகியுள்ளன.

பெரு நிறுவனங்களின் கட்சிகளாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க மீது நம்பிக்கையிழந்த தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டுக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அணிதிரட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் அதனது சர்வதேச சமதரப்பினரைப்போலவே உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் கொத்தடிமைச் சுரண்டலை உறுதிப்படுத்தவும் சர்வாதிகார ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகின்றார்.

அவரின் “அன்பான சர்வாதிகாரத்துக்கு” சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவையும், “ஊழலற்ற ஆட்சிக்கு” டென்மார்க்கையும் சீமான் முன் உதாரணமாக கண்டுபிடித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் அணியில் உள்ள நாடுகளாகும்.

சிங்கப்பூரில் லீ குவான் யூ, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மூலதன முதலீடுகளை ஈர்ப்பதற்கு மலிவு கூலி நிலைமைகளை உருவாக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசிய தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலுக்கான வாயிலைத் திறந்ததோடு, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக போராட முயன்ற போதெல்லாம் அரசியல் ஒடுக்குமுறையை நாடினார். அத்தோடு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணையில் இருக்கும் சிங்கப்பூர், சீனாவுக்கு எதிராக அமெரிக்க கடற்படை கப்பல்கள் வந்து செல்வதற்கு ஒரு சிறப்பு துறைமுக நிலையத்தையும் (a special port facility) கட்டியெழுப்பியிருக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) இராணுவ அமைப்பில் இருக்கும் டென்மார்க், வாஷிங்டன் நடத்திய அனைத்து ஆக்கிரமிப்புப் போர்களிலும் பங்கெடுத்துள்ளதோடு, உள்நாட்டில் புலம் பெயர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக, "நகைச் சட்டம், கெட்டோ திட்டம், பூஜ்ஜிய புகலிடம் கோருவோர்" (Jewelry law, Ghetto plan, Zero asylum seekers) என்ற சட்டங்களை தயாரித்து ஒடுக்கியும் வருகின்றது. நாட்டின் செல்வத்தை பெரும் பணக்காரர்கள் அதிகம் கட்டுப்படுத்தும் இந்த நாட்டில், வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதுடன், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவற்றையெல்லாம் நன்கு அறிந்து வைத்துள்ள சீமான், இந்த ஒப்பீடுகளின் மூலம், சீனாவுக்கு எதிராக இந்தியாவை முன்னரங்க நாடாக மாற்றியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன வகையான அரசியலை பின்பற்றுவார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் தட்டுகளுக்கு தெளிவுபடுத்துகையில், கடந்த 2020 யூனில் இந்திய சீனா எல்லையில், சீன இராணுவத் தாக்குதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலியான சம்பவம் தொடர்பான அவருடைய கட்டுரையில், “1996 மற்றும் 2005ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படியே, இந்திய இராணுவ வீரர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை என விளக்கமளிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கர ஆயுதங்களோடு சீன இராணுவத்தினர் தாக்க வரும்போது ஆயுதமற்ற நிலையில் இருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் அவர்களை எதிர்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை அறியாதவரா? மரணித்துப் போன 20 குடும்பங்களின் உயிரிழப்புக்கும் ஒப்பந்தத்தையே காரணமாகக் காட்டப் போகிறாரா? இராணுவ வீரனின் உயிரைவிட ஒப்பந்தம் மேலானதா?” என வலதுசாரித் தனமாக மோடி அரசாங்கத்தை தாக்குவதோடு மேலும் பல ஆயிரக்கணக்கானவர்களை காவுகொள்ளக் கூடிய போர்வெறிக் கூச்சலிடுகிறார்.

பைடென் நிர்வாகம் பெய்ஜிங்கை நோக்கிய ஒரு ஆக்கிரோஷமான போர் வெறிக் கொள்கையை முன்னெடுத்து, உயர் தொழில் நுட்ப உற்பத்தி, விநியோக சங்கிலிகளை சீனாவிலிருந்து புதிய இடங்களுக்கு மாற்ற தூண்டுகிறது. இந்த மலிவுகூலி உற்பத்தி, விநியோகச் சங்கிலிகளை உள்வாங்க இந்திய ஆளும்தட்டு கணக்கிடுகிறது.

“அமெரிக்க-சீன பதட்டங்களுக்கு மத்தியில் ஆப்பிள், அமசன் மற்றும் சாம்சுங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றி வருவதால், இந்தியா அடுத்த உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாறக்கூடும்” என்று புளூம்பேர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் நாடுகடந்த தொழிற்துறை உற்பத்தி நிறுவனங்களை அதிகம் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது ஆகும்.

குறிப்பாக நாடுகடந்த கூட்டுநிறுவனங்கள் செறிவாக உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக விஜயம் செய்த சீமான், அந்தப் பகுதியில் கொத்தடிமைமுறை உழைப்பு, எந்த உத்திரவாதமும் அற்ற தற்காலிக வேலை முறை போன்றவற்றிற்கு எதிராக தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை பற்றி எதுவும் பேசவில்லை.

மாறாக, தொழிலாளர்கள் மத்தியில் தேசியவாதத்தை தூண்டி பிளவுபடுத்தும் பிற்போக்குத்தனமான முயற்சியில், தமிழ் நாட்டில் 70 வீதத்துக்கும் அதிகமான பெரும் நிறுவனங்களை வெளி மாநில முதலாளிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றார். தான் ஆட்சிக்கு வந்தால் “தற்சார்பு பொருளாதாரம், மண்ணும், மண்சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலமாக, தொழிற் துறையிலும், கல்வியிலும், மருத்துவத்திலும், பொருளாதாரத்திலும் உலகத்தின் தலை சிறந்த நாடாகவும், தமிழ் நாட்டை மாற்றுவேன்” என சீமான் கூறி வருகின்றார்.

இந்தியா தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டை சர்வதேச, உள்நாட்டு நிதியாளும் தட்டுகளுக்கு தெரிவிக்கையில், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பிரித்தெடுக்கப்பட்ட ‘’இந்திய ஐக்கிய அரசுகள் முறைதான் (United States of India) இந்தியாவுக்கு தேவை” எனக் கூறி, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’’ என்பதற்கு தனது ஆதரவை தெளிவுபடுத்துகிறார். மேலும், தமிழ் முதலாளி வர்க்கம், தமிழ்நாட்டு தொழிலாளர்களை சுரண்டி கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக, “என் இனத்துக்கு அதிகாரம் தேவை” என வலியுறுத்துகிறார்.

அந்தந்த மாநிலத்தில் உள்ள முதலாளி வர்க்கத்தின் இலாபத்துக்காக, மலிவு கூலி சுரண்டலுக்கான நிலைமைகளை உத்திரவாதம் செய்வதன் பேரில், நாடுகடந்த கூட்டு நிறுவனங்களுக்கு எதிரான இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களை இன, மத, மொழி அடிப்படையில் பிளவுபடுத்துவதே சீமானின் குறிக்கோளாகும்.

ஒன்றரைக் கோடி வெளி மாநிலத் தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழ் நாட்டுக்கு ஆபத்து என்று கூச்சலிடும் சீமான், தமிழ் நாட்டிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற் துறைகளை தொழிலாளர்களிடமிருந்து பாதுகாக்க, “பொலிஸ் துறையை மேலும் நவீன வசதிகளுடன் மேம்படுத்த” அழைப்பு விடுக்கிறார்.

தமிழ் நாட்டு பொலிஸ் படை ஏற்கெனவே ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதில் இழிபெயரெடுத்த வரலாற்றை கொண்டது. மேலும் அதை நவீனமயப்படுத்துவதற்கான சீமானின் அழைப்பு பொலிஸ் அரசு சர்வாதிகாரத்திற்கு வழியமைப்பதாகும். “படுக்கை அறை தவிர அனைத்து இடங்களிலும் கண்கானிப்புக் கமராவைப் பூட்டி” தமிழ் நாட்டை “ஒழுக்கமான நாடாக” ஆக்க சீமான் சபதமெடுத்துள்ளதன் உண்மையான அர்த்தம் இதுவே ஆகும்.

சீமானும், நாம் தமிழர் கட்சியினரும், இந்த பிற்போக்கு முயற்சிக்கு ஆதரவு பெறுவதற்காக, இலங்கையில் 2009 மே மாதம், இராஜபக்ஷவின் ஆட்சியாளர்களால் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக தமிழ் நாட்டில் இருந்துவரும் அனுதாபத்தை சுரண்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

தமிழ் நாட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் பேரில், இந்திய ஆளும் வர்க்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்து, புலி சந்தேகநபர்கள் எனப்படுவோரை கைது செய்வது மற்றும் தமிழ் நாட்டில் உள்ள இழிநிலையிலான முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளை கண்காணிப்பதையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

எனினும், புலி சின்னத்தை தனது கட்சிக் கொடியில் பதித்து, அதன் தலைவர் வே. பிரபாகரனின் ‘’வீரப் போராட்டத்தின்’’ தொடர்ச்சியாக தன்னை முன்னிறுத்துவதன் மூலம், புலி போராளிகள் மற்றும் பிரபாகரனதும் “வீரம்” மற்றும் “அர்ப்பணிப்பு” சம்பந்தமாக தமிழர்கள் மத்தியில் நிலவும் மாயையை சுரண்டிக்கொண்டு அரசியல் செய்வதற்கு சீமான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

பாரிய உயிரிழப்புக்களோடும் இரத்தக்களரியோடும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தவேளையில், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அந்த கொடூரமான நிகழ்வைப் பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகையில், “ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இலங்கையில் வடக்கு கிழக்கில் ஒரு குட்டி அரசை அமைக்க முயன்ற விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது, அதன் தேசிய, பிரிவினைவாத முன்னோக்கின் தோல்வியாகும்” என தெளிவுபடுத்தி இருந்தது.

தீவிலும் இந்திய உபகண்டத்திலும் சோசலிச குடியரசு ஒன்றியத்தை கட்டியெழுப்பும் முன்னோக்கை அடித்தளமாக கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு கட்சியை கட்டியெழுப்புவதே இன்று தெற்காசிய தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள கடமை என அது மேலும் விளக்கியது.

அத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது உலக ட்ரொட்ஸ்கிசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் மட்டுமே ஆகும்.

Loading