அதிகரித்து வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மொசாம்பிக் நாட்டிற்குள் அமெரிக்க சிறப்புப் படைகள் அனுப்பப்பட்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மொசாம்பிக் நாட்டில் ஆயுத மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பென்டகன் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புக்களை ஆபிரிக்காவின் தெற்கு பகுதி நாட்டிற்குள் அனுப்பியுள்ளது. "பயிற்சியாளர்கள்" மற்றும் "ஆலோசகர்கள்" என்று விவரிக்கப்பட்ட மற்றும் முடிவற்ற "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்ட இந்த துருப்புக்களை நிலைநிறுத்துவது, ஆபிரிக்க கண்டம் உட்பட பைடென் நிர்வாகத்தின் உலகளாவிய அமெரிக்க இராணுவவாத விரிவாக்கத்தில் புதிய உறுதிப்படுத்தலை வழங்குகிறது.

கடந்த மாத மத்தியில் அறிவிக்கப்பட்ட, மொசாம்பிக் நாட்டின் வடக்கு-முக்கியமான மாகாணமான கபோ டெல்காடோவில் (Cabo Delgado) உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க நிலைநிறுத்தல் வந்துள்ளது, அங்கு மொசாம்பிக் அரசாங்கம் அந்த பிராந்தியத்தின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களிடையே ஒரு எழுச்சியை எதிர்கொள்கிறது.

மார்ச் 15 அன்று மொசாம்பிக் கடற்படையினரை நோக்கி அமெரிக்க சிறப்புப் படைகளின் தளபதி உரையாற்றுகிறார் (US Embassy Mozambique)

சமீபத்திய சண்டை நாட்டின் இயற்கை எரிவாயு வயல்களை பயன்படுத்துவதற்கான மையமாக இருக்கும் பால்மா (Palma) நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது, இது கடந்த மாத இறுதியில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது, இது இந்தியப் பெருங்கடலிலுள்ள துறைமுக நகரமான பெம்பாவிற்கு (Pemba) 11,000 மக்கள் தப்பிச் செல்ல அனுப்பியது. ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2017 இல் இப்பகுதியில் சண்டை தொடங்கியதிலிருந்து சுமார் 670,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களிடமிருந்து பால்மாவை மீண்டும் கைப்பற்ற அனுப்பப்பட்ட அரசாங்கப் படைகளின் தலைவரான கமாண்டர் சோங்கோ விடிகல் ஞாயிறன்று செய்தி ஊடகத்திடம் அந்த பகுதி இப்போது "பாதுகாப்பாக" உள்ளது என்று கூறினார். எவ்வாறெனினும், செய்தியாளர்களை சம்பவ இடத்திற்கு கொண்டு வரும் முந்தைய முயற்சி, அவர்களை நகரத்திற்கு ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தீப்பிடித்ததையடுத்து கைவிடப்பட்டது.

இராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பிரெஞ்சு எரிசக்தி பெருநிறுவனமான டோட்டல் (Total) ஆல் தொடங்கப்பட்ட 60 பில்லியன் டாலர்கள் பெறுமதியான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்டத்தின் இடத்தைப் பாதுகாப்பதாக இருந்தது, அது அதன் தொடர்ச்சியான இருப்புக்கு ஒரு நிபந்தனையாக 15 மைல் பாதுகாப்பான சுற்றளவை கோரியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து அதன் வசதிகளை மூடிய பின்னர் மார்ச் 24 அன்றுதான் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கிய டோட்டல், அதன் ஊழியர்கள் அனைவரையும் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் மூடியுள்ளது. பிரான்ஸை தளமாகக் கொண்ட நாடுகடந்த எரிசக்தி நிறுவனமான டோட்டல் தவிர, இத்தாலியின் ஈ.என்.ஐ (ENI) மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட எக்ஸான்மொபில் (ExxonMobil) ஆகியவையும் மொசாம்பிக்கின் இயற்கை எரிவாயு இருப்புக்களில் நலன்களைக் கொண்டுள்ளன, அவை இந்த கிரகத்தில் மிகப் பெரியவை என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க சிறப்புப் படைகள் அனுப்பப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், மார்ச் 11 அன்று, வாஷிங்டனானது "ஐஎஸ்ஐஎஸ்-மொசாம்பிக்" (“ISIS-Mozambique”) ஐ ஒரு "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" என்று அறிவித்தது, இது அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்தது. மாபுட்டோவிலுள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டன் "பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம் பரவுவதைத் தடுக்கவும் பன்முக மற்றும் முழுமையான அணுகுமுறையுடன் மொசாம்பிக்கிற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது" என்று கூறியது.

"ஐஎஸ்ஐஎஸ்-மொசாம்பிக்" முத்திரையானது அமெரிக்க வெளியுறவுத்துறையின் கண்டுபிடிப்பு ஆகும். உள்நாட்டில், கிளர்ச்சியாளர்கள் அல்-ஷபாப் (al-Shabab) என்றும் அரபு மொழியில் "இளைஞர்கள்" என்று அழைக்கப்படுகிறனர், அதே பெயரில் இருக்கும் சோமாலியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மொசாம்பிக் கிளர்ச்சித் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் இஸ்லாமிய அரசு (Islamic State) என்று பொய்யாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டாலும், ஐ.எஸ்.ஐ.எஸ் க்கும் வடக்கு மொசாம்பிக் கிளர்ச்சிக்கும் இடையே செயல்பாட்டுத் தொடர்புகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதில் மிகக் குறைவாகவே சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.

மொசாம்பிக்கின் தெற்கு தலைநகரான மாபுட்டோவிலுள்ள ஜனாதிபதி பிலிப் நியுசியின் (Filipe Nyusi) அரசாங்கம் "பயங்கரவாதம்" என்ற முத்திரையை குத்தியுள்ளது, மேலும் வாஷிங்டன் அதை ஆவலுடன் தழுவிக் கொண்டுள்ளது. மோதலின் சிக்கலான அரசியல் மற்றும் சமூக வேர்களை மூடிமறைப்பதும், ஆளும் தேசிய தன்னலக்குழு, நாடுகடந்த எரிசக்தி பெருநிறுவனங்கள் மற்றும் உலக நிதிய மூலதனம் ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கிளர்ச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதும் அவர்களின் நோக்கமாகும்.

கபோ டெல்காடோவில் எழுச்சியின் வேர்களானது மொசாம்பிக் குணாம்சப்படுத்தும் அப்பட்டமான சமத்துவமின்மை நிலைமைகளில் உள்ளன, அங்கு கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் முழுமையான வறுமை நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர். ஆளும் ஃப்ரெலிமோ (FRELIMO - மொசாம்பிக் விடுதலைக்கான முன்னணி) கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு சிறிய ஆளும் உயரடுக்கினால் செல்வம் ஏகபோகமாக உள்ளது மற்றும் மாபுடோவில் குவிந்துள்ளது.

நாட்டின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்றான கபோ டெல்காடோ, இயற்கை எரிவாயு திட்டங்கள் மற்றும் ரூபி சுரங்கத் திட்டங்களின் வளர்ச்சியுடன் அதன் மண்ணுக்கு அடியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் செல்வத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த செல்வம் எதுவும் வறிய மக்களுக்கு பயனடையவில்லை. மொசாம்பிக் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள், மாகாணத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் ஆவார்கள். எவ்வாறெனினும், மாகாணத்தின் அரசியல் மேலாதிக்கம், பிரதானமாக கத்தோலிக்க மகோண்டே இனக்குழுவினால் (Catholic Makonde ethnic group) ஏகபோகமாக்கப்பட்டுள்ளது, இதில் ஜனாதிபதி நியுசி உறுப்பினராக உள்ளார்.

2017 ல், அரசாங்கம் முஸ்லீம் இளைஞர்களின் ஒரு அடுக்கினை நசுக்க முயன்ற பின்னர், அவர்களில் சிலர் சவூதி அரேபியாவில் கல்வி கற்றனர், அவர்கள் ஒரு கடுமையான இஸ்லாமிய வடிவத்தை அறிமுகப்படுத்த முயன்றனர் மற்றும் ஃப்ரெலிமோ ஆட்சியுடன் உறவுகளைக் கொண்ட பழைய முஸ்லீம் மதகுருமார்களுக்கு சவால் விட்டனர்.

அந்த நேரத்தில் மிகவும் தீவிரமான ஆபிரிக்க தேசியவாத இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஃப்ரெலிமோ, போர்த்துகீசிய காலனித்துவத்திற்கு எதிரான 10 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் 1975 இல் அதிகாரத்திற்கு வந்தது. 1974ல் போர்த்துக்கலின் சலாசர் (Salazar) சர்வாதிகாரம் தூக்கியெறியப்பட்ட பின்னர் சுதந்திரம் அடைந்தது. எவ்வாறெனினும், 15 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி, ரொடீசியாவில் (Rhodesia) வெள்ளை சிறுபான்மை ஆட்சி மற்றும் அமெரிக்க மத்திய உளவுத்துறை முகமை ஆகியவை ஒரு மில்லியன் உயிர்களை பலிகொள்ளும் இரத்தம் தோய்ந்த மோதலில் ரெனமோ (RENAMO - மொசாம்பிக் தேசிய எதிர்ப்பு) என்று அழைக்கப்படும் ஒரு எதிர்ப்புரட்சிகர இயக்கத்தை ஆதரித்தன.

இன்றைய ஜனாதிபதி நியுசியின் ஃப்ரெலிமோ (FRELIMO) ஆட்சி, ஒரு எழுச்சியை நசுக்குவதற்கு உதவுவதற்காக சுதந்திரப் போராட்டத்தில் போராடிய அதே சக்திகளுக்கு அழைப்பு விடுக்கிறது என்பது, வெளிநாட்டு மேலாதிக்கம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆபிரிக்க வெகுஜனங்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் இயல்பான இயலாமை குறித்து நிறையப் பேசுகிறது. தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் ஆபிரிக்க கண்டத்தின் பிற நாடுகளைப் போலவே, மொசாம்பிக்கின் முன்னாள் "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" மற்றும் சுய பாணியிலான மார்க்சிசவாதிகள் தங்களை ஊழல் மில்லியனர் அரசியல்வாதிகள் மற்றும் தரகு முதலாளித்துவக் குழுவாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

மொசாம்பிக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புக்களுக்கு மேலதிகமாக, நாட்டின் பழைய காலனித்துவ எஜமானரான போர்த்துக்கல், குறைந்தபட்சம் 60 சிறப்புப் படை "பயிற்சியாளர்களை" அனுப்புவதாக அறிவித்துள்ளது.

மொசாம்பிக் பாதுகாப்புப் படைகள் தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் இராணுவ ஒப்பந்தக்காரரான டைக் ஆலோசனைக் குழுவையும் (அல்லது DAG- Dyck Advisory Group) பெரிதும் நம்பியுள்ளன, இதில் ரோடீசிய இராணுவத்தில் முன்னாள் கேர்னலான லியோனல் டைக் (Lionel Dyck) தலைமையிலான தென்னாபிரிக்க கூலிப்படையினர் அடங்கியுள்ளனர். பீப்பாய் குண்டுகள் என்று அழைக்கப்படும் மக்கள் தொகை மையங்கள் மீது குண்டுகளை வீசியது, ஹெலிகாப்டர்களில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகளினால் மக்கள் கூட்டத்திற்குள் சுட்டது மற்றும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்குவது உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையால் DAG ஐ குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

"பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கில் அமெரிக்க துருப்புக்கள் மொசாம்பிக் சென்றிருந்தாலும், ஜனாதிபதி ஜோ பைடெனின் கீழ் பென்டகன், 2018 தொடக்கத்தில் ட்ரம்பின் கீழ் இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தால் அமைக்கப்பட்ட அதே வழிகாட்டுதல்களின் கீழ் செயற்படுகிறது, இது "பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிதான் -பயங்கரவாதம் அல்ல- இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மை கவனம்" என்று வலியுறுத்தியது.

பைடென் நிர்வாகத்தின் கீழ் ஒரு கூர்மையான விரிவாக்கத்திற்கு உட்பட்டு வரும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான "பெரும் சக்திப் போட்டியில்" ஆபிரிக்காவானது ஒரு முக்கிய போர்க் களமாக உள்ளது. சீனாவானது கண்டத்தின் முதல் வர்த்தக பங்காளியாகவும் கடனளிப்பவராகவும் அமெரிக்காவை விஞ்சிவிட்டது, அதே நேரத்தில் அதன் "ஒரே இணைப்பு மற்றும் ஒரே பாதை" (“Belt and Road”) முன்முயற்சியின் கீழ் பரந்த உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சந்தை மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரத்திலிருந்து முடக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் அஞ்சுகிறது மற்றும் மற்றய இடங்களைப் போலவே, இராணுவத் தலையீட்டையும் ஈடுசெய்ய முயன்று வருகிறது, அதற்கு ஆபிரிக்க மக்கள் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.

Loading