பைடென் வரவு-செலவுத் திட்டம் அணுவாயுதங்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகள் உள்ளிட்ட பெரும் இராணுவ செலவுக்கு அழைப்பு விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், பைடென் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது, அதாவது 753 பில்லியன் டாலர் நிதியை, அல்லது அடுத்த 10 மிகப்பெரிய இராணுவங்களின் கூட்டு வருடாந்திர இராணுவச் செலவை விட அதிகமான நிதியைக் கோருகிறது.

வரவு-செலவுத் திட்டம், நாட்டின் அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பற்படையை மேம்படுத்துவது உள்ளிட்ட கூடுதல் அணுவாயுத செலவினங்களுக்கும், மற்றும் ரஷ்யா அல்லது சீனாவுடன் ஒரு பெரிய போரை நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு அவசியம் என்று இராணுவத் திட்டமியற்றுபவர்கள் கூறுவதான ஒரு புதிய, தொலைதூர தாக்குதலுக்கான ஆயுதங்களின் அபிவிருத்திக்கும் அழைப்பு விடுக்கிறது.

பைடென் ஜனாதிபதிக்காலம், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவவாதம் மற்றும் போர்வெறியிலிருந்து விலகிவிடும் என்று கூறிய பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்சாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் உட்பட, ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவின் வெற்று வாக்குறுதிகளை இந்த வரவு-செலவுத் திட்டம் அம்பலப்படுத்துகிறது.

The Pentagon (Wikimedia Commons) [Photo by Touch of Light / CC BY 4.0]

மாறாக, பைடென் ஜனாதிபதியாக பதவியேற்று சில மாதங்களில், அவரது நிர்வாகம் பூகோள அளவிலான வெடிப்புப் புள்ளிகளை மேலும் எரியூட்டியுள்ளமை, 2014 கிரிமிய இணைப்புக்கு பின்னராக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலும், மற்றும் 1970 களிலிருந்து சீனாவுக்கு இடையிலும் மிகப்பெரிய அளவிலான பதட்டங்களை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம் உக்ரேனிலுள்ள அமெரிக்க பினாமி ஆட்சி ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை இராணுவ ரீதியாக மீட்டெடுக்கும் திட்டத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான உறவு மயிர் மெய்சிலிர்க்க வைப்பதாகவுள்ளது. வெள்ளிக்கிழமை, கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்த அதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் ஒரு “முற்றுமுழுதான” போர் வெடிப்பது பற்றி எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், பைடென் நிர்வாகம் சீனாவைச் சுற்றியுள்ள தீவுகளில் தாக்குதல் ஆயுதங்களை ஆயத்தப்படுத்த முன்னேறியுள்ளது என்பதுடன், தைவானுடனான ஒரு இராணுவ கூட்டணிக்கும் விவாதித்து வருகிறது, இது தைவானின் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடல் இரண்டிலும் ஒரு மோதலை உருவாக்குகிறது.

ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்டு, ட்ரம்பின் கீழ் தொடர்ந்ததான பல டிரில்லியன் டாலர் அணுசக்தி கட்டமைப்பை பைடென் வரவு-செலவுத் திட்டமும் தொடர்வதுடன், அதனை துரிதப்படுத்துகிறது, இது சிறிய, அதிகம் “பயன்படுத்தக்கூடிய” அணுவாயுதங்கள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட கப்பல் ஏவுகணைகளின் அபிவிருத்தியை உள்ளடக்கியது.

வரவு-செலவுத் திட்ட கோரிக்கையின் உரை, இது “நாட்டின் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கான வலுவான, நம்பகமான அணுசக்தி தடுப்பை” பராமரிக்கும் என்று கூறியதுடன், “சமயோசிதமான இந்த கோரிக்கை தற்போது நடைமுறையிலுள்ள அணுசக்தி நவீனமயமாக்கல் திட்டங்களை ஆதரிக்கிறது” என்றும் தெரிவிக்கிறது.

வரவு-செலவுத் திட்ட பிரேரணை சீனாவையும் ரஷ்யாவையும் உறுதியாக குறிவைக்கிறது, ஏனென்றால், இது “துறையின் முதல் சவாலான சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் ரஷ்யாவின் ஸ்திரமற்ற நடத்தையை தடுக்கவும் துறை முயற்சிக்கும்” என்று அறிவிக்கிறது.

இதைச் செயல்படுத்த, இந்த வரவு-செலவுத் திட்டம் “பசிபிக் தடுப்பு முன்முயற்சி,” என்றழைக்கப்படும் திட்டத்தை வெளிப்படையாக அங்கீகரிக்கிறது, இது மத்தியதூர அணுவாயுத சக்தி (Intermediate-Range Nuclear Forces-INF) உடன்படிக்கையின் கீழ் முன்னர் தடைசெய்யப்பட்டதான தாக்குதல், தரைவழி ஏவுகணைத் தாக்குதல் கொண்டு சீனாவை சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“பசிபிக் தடுப்பு முன்முயற்சியை துரிதப்படுத்தியும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பிலும் உள்ள நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றியும், இந்த சவால்களை எதிர்கொள்ள தேவையான கருத்துக்கள், திறன்கள் மற்றும் தோற்றப்பாங்கை அமெரிக்கா கட்டமைப்பதை DOD உறுதிப்படுத்தும்.

மேலும், முன்னர் தடைசெய்யப்பட்ட தாக்குதல் ஆயுதங்களின் புதிய வடிவங்களின் அபிவிருத்திக்கு கூடுதலாக, அணுசக்தி வெடிகுண்டுகளை கொண்டு சேர்ப்பதற்கான பாதுகாப்புக்களை தவிர்க்கக்கூடிய வகையில், “அதிவேக தாக்குதல் திறன்களை” மேம்படுத்துவதற்கு வரவு-செலவுத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.

வரவு-செலவுத் திட்டம், “அமெரிக்கா கடற்படை சக்தியை பராமரிப்பது என்பது, கூட்டணி நாடுகளுக்கு உறுதியளிப்பதற்கும், சாத்தியமுள்ள எதிரிகளுக்கு அமெரிக்காவின் தீர்மானத்தை சமிக்ஞை செய்வதற்கும் முக்கியமாக உள்ளது,” என்று அறிவிக்கிறது, அத்துடன், “சமயோசிதமான இந்த கோரிக்கை தேசத்தின் மூலோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பற்படை மீதான மறுமூலதனத்தை தொடர்கிறது, மேலும், தொலைதூரத்திற்கு இயக்கப்படும் மற்றும் தன்னாட்சி அமைப்புக்களிலும் மற்றும் அடுத்த தலைமுறை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திலும் முதலீடு செய்கிறது” என்றும் கூறுகிறது.

பென்டகனின் வரவு-செலவுத் திட்டத்தை ட்ரம்ப் அதிகரித்த தொடர்ச்சியான நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்துள்ள பைடென் இராணுவ செலவினங்களை மாற்றாமல் வைத்திருப்பார் அல்லது குறைப்பார் என்று இராணுவ அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர். இதேபோல, ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவிலுள்ள பைடெனின் பாதுகாவலர்களும், பைடென் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை சுருக்குவார் என்ற நம்பிக்கையை ஊக்குவித்தனர். அதற்கு மாறாக, பைடென் பென்டகன் வரவு-செலவுத் திட்டத்தின் பெரும் பணவீக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் என்பது, சீனாவை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு செலவினங்களின் பாரிய அதிகரிப்பின் ஒரு கூறாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பெய்ஜிங்குடனான “மூலோபாய போட்டியை” இலக்காகக் கொண்ட 2 டிரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவிற்கு பைடென் அறிவித்தார்.

மசோதா பற்றி விவரித்து, பைடென், சீனா “தொழில்நுட்பம், ஒட்டுமொத்த கணினி பயன்பாடு உள்ளிட்ட எதிர்காலத்தை தனக்கு சொந்தமாக்க முயற்சிக்கிறது,” என்று தெரிவித்தார். “அது தான் ஒரு நாட்டின் உள்கட்டமைப்பாகும்.”

“சீனா தனது இலத்திரனியல் உள்கட்டமைப்பில் அல்லது அது தொடர்புபட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்ய காத்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன், அவர்கள் அதற்கு காத்திருக்கவில்லை. மாறாக, அமெரிக்க ஜனநாயகம் மிகவும் மெதுவானதாக, மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக, மற்றும் வேகத்தைக் கட்டுப்படுத்த மிகவும் பிளவுபட்டதாக இருக்க வேண்டும் என்று தான் அவர்கள் கணக்கிடுகிறார்கள்.”

இந்த வாரம், செனட் வெளியுறவுக் குழுவின் உறுப்பினர்கள் “2021 மூலோபாய போட்டிச் சட்டத்தை” வெளியிட்டனர். இந்த மசோதா “நமது தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு சீனா முன்வைக்கும் சவால்களை உண்மையாக எதிர்கொள்ள நம் தேசத்தை அனுமதிக்கும், இந்தோ-பசிபிக் மூலோபாயத்திற்கான அமெரிக்காவின் அனைத்து மூலோபாய, பொருளாதார மற்றும் இராஜதந்திர கருவிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்நிகழ்ந்திராத இருகட்சி முயற்சியாக இருக்கும்,” என்று செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் போப் மெனண்டெஸ் (Bob Menendez) கூறினார்.

மேலும் அவர், “2021 ஆம் ஆண்டின் மூலோபாய போட்டிச் சட்டம் என்பது, அமெரிக்க தலைமையை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த, மூலோபாய பதிலை இந்த தருணம் கோருகிறது என்பதற்கான அங்கீகாரமாகும்,” என்றும் “சீனாவை விஞ்சி போட்டியிடும் நமது திறனில் அது முதலீடு செய்யும்” என்றும் சேர்த்துக் கூறினார்.

உலகம் கட்டுப்பாட்டை மீறிய தொற்றுநோயின் பிடியிலுள்ள நிலையில், பொறுப்பற்ற மற்றும் அழிவுகரமான போர்களைத் தயார் செய்ய சமூகத்தின் வளங்களை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது இரட்டிப்பு குற்றமாகும். அதேவேளை, முதலாளித்துவ அரசாங்கங்கள் மக்கள் கோவிட்-19 “உடன் வாழ்ந்தாக” வேண்டும் என்று அறிவிக்கின்றன, ஏனென்றால் அதனை கட்டுப்படுத்த அதிகம் செலவு செய்ய வேண்டும், அத்துடன் பில்லியன் கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய போர்களுக்கு திட்டமிடவும் தயாரிக்கவும் வரம்பற்ற வளங்கள் கிடைக்கின்றன.

சீனா மற்றும் ரஷ்யாவுடனான அமெரிக்க மோதலின் விரைவான விரிவாக்கம் பெரும் ஆபத்துக்களை எழுப்புகிறது. உள்நாட்டில் பெரும் சமூக நெருக்கடியையும், வெடித்து பரவும் பெருந்தொற்றையும் எதிர்கொள்ளும் நிலையில், உள் பதட்டங்களை வெளிநோக்கி திசைதிருப்ப அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது.

என்றாலும் இந்த போர் திட்டங்களைப் பற்றியது தவிர்க்க முடியாதது. முதலாளிமார்களின் இந்த பொறுப்பற்ற போர் முனைவைத் தடுக்க, ஒரு பொதுவான, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும். இந்த வளர்ச்சிக்கான முக்கியமான முன்நிலைமையாக, ஜனநாயகக் கட்சி மற்றும் இது பற்றிய மாயைகளை ஊக்குவித்த அனைவரது தீர்மானகரமான நிராகரிப்பு உள்ளது.