முன்னோக்கு

அமசனில் RWDSU தொழிற்சங்கத்தின் தோல்வி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமசனின் அலபாமா, பெஸ்மர் ஆலையில் சில்லறை விற்பனை, சரக்கு பண்டகசாலை மற்றும் பெருஅங்காடி தொழிற்சங்கத்தின் (RWDSU) படுமோசமான தோல்வியானது பெருநிறுவன-சார்பு தொழிற்சங்களில் இருந்து தொழிலாளர்கள் எந்தளவுக்கு அன்னியப்பட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்துகிறது.

5,800 தொழிலாளர்களை கொண்ட ஓர் ஆலையில், 738 பேர் (13 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்) மட்டுமே தொழிற்சங்கத்திற்கு சார்பாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு தோராயமாக 50 சதவிகிதம் இருந்தது, மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளே RWDSU சங்கத்திற்கு இடப்பட்டிருந்தன. RWDSU தொழிற்சங்கம் மேற்கொண்ட பிரச்சாரம் தொழிலாளர்களைச் சென்றடையவில்லை, அவர்கள் விரோதமாக இருந்தனர் அல்லது அலட்சியப்படுத்தி இருந்தனர்.

அனுமானித்தவாறே, RWDSU அதன் தோல்வியை, நிறுவன மிரட்டலை மேற்கோள் காட்டி, விவரிக்க முயன்று வருகிறது. RWDSU தலைவர் ஸ்ருவார்ட் அப்பெல்பாம் அறிவிக்கையில், "தொழிற்சங்கத்திற்கு வாக்களித்தால் தங்கள் வேலைகளை இழக்க நேரிடுமோ" என்று தொழிலாளர்கள் பயந்துவிட்டதாக தெரிவித்தார். வாக்குகளை சேகரிக்க அமசன் “அவர்கள் இடத்தில் மிகவும் விசித்திரமான வாக்குப்பெட்டியை வைப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தது” என்றவர் தெரிவித்தார், வாக்களிப்பதற்கான காலக்கெடு உண்மையில் எப்போதும் இருப்பதை விட முன்கூட்டி இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.

அப்பெல்பாமின் விளக்கம் வெளிப்படையாகவே அபத்தமாக உள்ளது. முதலாவதாக, எந்தவொரு உண்மையான தொழிலாளர் அமைப்பும் அதன் முயற்சிகளுக்கு நிறுவனத்தின் ஆதரவு இருக்குமென எதிர்பார்ப்பதில்லை. கிளர்ச்சிகரமான தொழிலாளர்களை தோற்கடிக்க முதலாளிமார்கள், Ku Klux Klan குழு, Pinkertons குழு மற்றும் சட்டத்தை தம் கைகளில் எடுக்கும் ஏனைய குழுக்கள் மூலமாக படுகொலைகளில் இறங்கிய நிலைமைகளின் கீழ் அமெரிக்காவில் தொழில்துறை தொழிற்சங்கங்கள் பாரிய அமைப்புகளாக கட்டமைக்கப்பட்டன. அலபாமாவே கூட, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் உறுதியான எதிர்ப்பிற்கு எதிரான வன்முறையான வர்க்க மோதல் காட்சிகளின் இடமாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்ட நிலைமைகளுடன் ஒப்பிட்டால், பெஸ்மர் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிருந்த நிலைமைகள் நடைமுறையளவில் சுமூகமாகவே இருந்தன. RWDSU மீதான வாக்கெடுப்புக்கு, டஜன் கணக்கான காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அரசு எந்திரத்தின் மற்றும் ஊடங்கங்களின் மேலோங்கிய பிரிவுகளது ஆதரவும் இருந்தது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வெளிப்படையாகவே ஒப்புதல் வழங்கியிருந்தார்.

அதற்கும் மேலாக, அமசன் அவர்களின் ஆலையில் ஒரு "விசித்திரமான வாக்குப்பெட்டியை" வைத்ததால் தான் தொழிற்சங்க பிரச்சாரத்திற்கு ஆதரவாக RWDSU ஆல் தொழிலாளர்களின் வெறும் 13 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது என்ற அப்பெல்பாமின் வாதம், தொழிலாள வர்க்கம் மற்றும் வர்க்க போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லாத செல்வசெழிப்பான நிர்வாகிகளால் மட்டுமே கூற முடியும். வாக்களிக்கும் காலக்கெடுக்கு முன்னரே வாக்களிக்கச் செய்ய அமசன் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தியது என்ற வலியுறுத்தலைப் பொறுத்த வரையில், இதைக் கொண்டு படுமோசமாக வெறும் 50 சதவீத வாக்குகளே பதிவு செய்யப்பட்டிருந்ததை விளக்க முடியாது. அவ்வாறு ஏதாவது இருந்திருந்தால், அது எதிர்விதமான முடிவைத் தான் கொண்டு வந்திருக்கும்.

தோல்விக்கான உண்மையான காரணங்கள் தான் என்ன? 1981 இல் ரீகன் நிர்வாகம் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறித்ததற்கு எதிராக தொழிற்சங்கங்கள் அவர்களைப் பாதுகாக்க மறுத்த அப்போதிருந்து, AFL-CIO இன் நாற்பதாண்டு கால முடிவில்லாத காட்டிக்கொடுப்புகளை; கூலிகள் மற்றும் சலுகைகளில் வெட்டுக்கள் மற்றும் வேலைவெட்டுக்களை தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்ட முடிவில்லா பல விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களை; தொழிற்சங்கங்களே பெருநிறுவன நிர்வாகத்தின் கருவிகளாக, தொழிலாளர்கள் மீதான பொலிஸ் படையாக மாறியிருந்ததை; 344,464 டாலர் வருமானம் பெறும் அப்பெல்பாம் அவரே உள்ளடங்கலாக மிக அதிகளவில் சம்பளம் பெறும் நிர்வாகிகள் பணியமர்த்தப்பட்டு அவர்களால் சங்கங்கள் வழிநடத்தப்படுவது என இவற்றை எல்லாம் அவர் திரும்பிப் பார்க்க வேண்டுமென நாம் அப்பெல்பாமுக்கு அறிவுறுத்தமுடியும்.

அமசனில் RWDSU ஐ நிறுவுவதற்கான செயல்பாடு அடிமட்டத்திலிருந்து தொழிலாளர்களின் ஓர் இயக்கத்திலிருந்து எழவில்லை. மாறாக, அது AFL-CIO, ஆளும் வர்க்கம் மற்றும் மேலிருந்து அரசின் செயல்பாடாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களுக்குள்ளேயே நடப்பிலுள்ள அந்த அரசு பாதுகாவலின் கீழ் நிறுத்தி வைத்திருப்பதன் மூலமாக அதை சிறப்பாக கட்டுப்படுத்தி வைக்கலாமென ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளுக்குள் நிலவும் கணக்கீடுகளையே ஜனநாயகக் கட்சி மற்றும் பைடெனின் தலையீடு பிரதிபலிக்கிறது.

இழப்பீடு அல்லது வேலை நிலைமைகள் தொடர்பான எந்தவொரு கோரிக்கைகளையும் தொழிற்சங்கம் முன்வைக்கவில்லை. எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைப்பதென்பது, மார்ச்சில் தொழிற்சங்கமயப்படுத்தும் முனைவை ஆமோதித்த புளோரிடாவின் பாசிசவாத செனட்டர் மார்கோ ரூபியோ போன்ற குடியரசுக் கட்சியின் பிரிவுகளோடு சேர்ந்து, ஜனநாயகக் கட்சியின் ஆதரவையும் இழப்பதை அர்த்தப்படுத்தும் என்பதால் அது அவ்வாறு செய்யவில்லை. RWDSU ஐ தொழிலாளர்கள் கொண்டு வருவதன் ஒரே உறுதியான விளைவு என்னவாக இருந்திருக்கும் என்றால், அவர்களின் வறுமை மட்டத்திலான சம்பளங்களில் இருந்து கூடுதலாக தொழிற்சங்க சந்தா தொகைகள் கழிவதாக இருந்திருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ள RWDSU அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்தது. அது இந்த தேர்தலில் வென்றிருந்தால், தொழிலாளர்களைத் தேசிய தொழிலாளர் உறவு வாரியம் மற்றும் விளங்காத அமெரிக்க தொழிலாளர் சட்டத்திற்குள் அவர்களைக் கட்டிப்போட்டு வாயடைக்க செய்வதாக இருந்திருக்கும், அத்துடன் அது ஏற்கனவே அதன் பின்புலத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முன் நகர்த்தி இருக்கும்.

Jacobin மற்றும் Left Voice போன்ற பிரசுரங்களில் வெளியிடப்பட்டவாறு, RWDSU பிரச்சாரம் அமசன் தொழிலாளர்களிடையே வரவேற்பை பெற்றதை விட, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளுக்குள் அதிக உற்சாகத்தை உருவாக்கியது. பங்குச் சந்தை அதிகரிப்புகளோடு சேர்ந்து இப்போதிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் சிறிய சீர்திருத்தங்களுக்கான அவர்களின் விருப்பங்களுக்கு விட்டுக்கொடுத்து, "தொழிலாளர் அமைதி" அடைய செய்வதற்காக தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஓர் இயங்குமுறையை வழங்குகிறது.

இத்தகைய போலி-இடது அமைப்புகள் இப்போது வாக்கு முடிவுகளைக் குறித்து புலம்பி வருகின்றன. அவை, கறுப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே (Black Lives Matter) அமைப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்கமும் பிரதானமாக இனரீதியில் அந்த பிரச்சாரத்தை முன்வைக்கவும் உதவியுள்ளன.

ஆனால் இந்த இனவாத முறையீடு பெருவாரியான ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர் சக்தியின் காதில் விழவில்லை. உண்மையில் தங்களின் அவல நிலையை முற்றிலும் இன அடிப்படையில் முன்வைக்கும் முயற்சியை எதிர்க்கும் அமசன் தொழிலாளர்களுடனான பத்திரிகை பேட்டிகள், அந்த முயற்சியே கூட திருப்பி தாக்கியிருக்குமோ என்று ஊகிக்க செய்கிறது. எல்லா இனத்தவர்களும் வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்களும் உள்ள உலகளவில் 1.2 மில்லியன் தொழிலாளர் சக்தியைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் அத்தகைய ஒரு முன்னோக்கு அவர்களைப் பிரிப்பதற்கு மட்டுமே சேவையாற்றும் என்று பல தொழிலாளர்களும் கருதினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பெஸ்மர் வாக்குகள் வெறுமனே RWDSU மற்றும் AFL-CIO இக்கு ஒரு படுதோல்வி என்பது மட்டுமல்ல, அது ஜனநாயகக் கட்சிக்கும் அதைச் சுற்றியுள்ள அனைத்து நடுத்தர வர்க்க அமைப்புகளுக்கும் ஒரு படுதோல்வியாகும். அந்த வாக்கெடுப்பில் பைடெனின் நேரடியான தலையீடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது RWDSU க்கு ஆதரவுக் குறைவதற்கே இட்டுச் சென்றது என்ற உண்மை, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எந்தளவுக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாள வர்க்கத்தில் மிகப்பெரியளவில் சமூக எதிர்ப்பு உள்ளது மற்றும் அதிகரித்தும் வருகிறது. அமசன் தொழிலாளர்கள் மத்தியில், அதீத சுரண்டல் நிலைமைகளுக்கு பாரிய விரோதப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 570,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்றுள்ள இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்க விடையிறுப்பின் பாதிப்பு, இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் பகுத்தறிவற்ற இயல்பை அம்பலப்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் ஒட்டுமொத்த தலைமுறையின் நனவில் நீண்டகாலத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெஸ்மர் வாக்கெடுப்பின் போதே கூட, அந்நாடெங்கிலும் பட்டதாரி மாணவர்கள், செவிலியர்கள், எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும், அலபாமாவின் பெஸ்மரிலிருந்து சில மைல் தொலைவில் மட்டுமே அமைந்துள்ள சுரங்கங்களிலும் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் தொடங்கி இருந்தன. இந்த ஒவ்வொரு இடத்திலும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அபிலாஷைகளைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க செயல்பட்டுள்ளன. அலபாமாவில் Warrior Met சுரங்கத் தொழிலாளர்கள், விற்றுத்தள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ஐக்கிய சுரங்கத்துறை தொழிலாளர்களின் சங்கம் நிறைவேற்றுவதற்கு முட்டிமோதிய நிலையில், 1006 க்கு 45 என்ற வாக்கு வித்தியாசத்தில் பெருவாரியாக வாக்களித்து அதை நிராகரித்தனர்.

பெஸ்மர் வாக்குகள் என்ன எடுத்துக்காட்டுகின்றன என்றால் தொழிலாளர்கள் அவர்களின் நலன்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களை அவர்களின் கருவிகளாக பார்க்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. “தொழிற்சங்கங்கள்" என்று அழைக்கப்படுபவை தொழிலாள வர்க்க அமைப்புகள் இல்லை. அவை ஒட்டுமொத்தமாக நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அரசுடன் பிணைந்த, உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளாகும்.

தொழிலாளர்கள் இந்த அனுபவத்திலிருந்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, RWDSU ஐ நிராகரித்தமை, ஓர் அதிகாரத்துவக் கூட்டம் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் இல்லாமல் தொழிலாளர்களின் தேவைகளுக்கு உண்மையாக ஜனநாயகரீதியில் விடையிறுக்கும் விதத்தில், இந்த பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு மாற்றீட்டு அமைப்புகள் தொழிலாளர்களுக்கு அவசியப்படுகின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய அமைப்புகள் ஏற்கனவே உள்ளன. அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும், தொழிற்சாலைகளிலும், பள்ளிகள் மற்றும் அமசன் சரக்கு கிடங்குகளிலும் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்குவதில் உலக சோசலிச வலைத் தளம் அவர்களுக்கு உதவி வருகிறது. அவை பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான நயவஞ்சகக் கூட்டை அம்பலப்படுத்தி போராடுவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்து வருகின்றன.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை அபிவிருத்தி செய்வது, ஆளும் வர்க்கம் மற்றும் இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்வதில் முக்கியமானதாகும்.

உங்கள் வேலையிடத்தில் இத்தகைய ஒரு குழுவை உருவாக்குவதற்கான உதவிக்கு, wsws.org/workerஎன்ற படிவத்தை நிரப்பி உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளவும்.

Loading