தைவானுடனான தொடர்புக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா ஆத்திரமூட்டும் வகையில் நீக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் அமெரிக்க மற்றும் தைவானிய அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புக்கான கட்டுப்பாடுகளை கணிசமாக தளர்த்தியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளமை, 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் சீனாவும் அவற்றுக்கிடையே முறையான இராஜதந்திர உறவுகளை வகுத்துக் கொண்டதிலிருந்து நடைமுறையிலுள்ள நெறிமுறைகளை தீவிரமாக தகர்த்தெறிந்துள்ளது. இந்த நகர்வு, அந்த நேரத்தில் அமெரிக்கா ஏற்றுக் கொண்டதான “ஒரே சீனா” கொள்கையை கீழறுப்பதற்கான முக்கியமான படியாகவுள்ளது, இது தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கான சட்டபூர்வ அரசாங்கமாக பெய்ஜிங்கை திறம்பட அங்கீகரித்தது.

ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவிற்கான முன்னிலை” திட்டத்தில் தொடங்கி, ட்ரம்பின் கீழ் முடுக்கிவிடப்பட்டதான, இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் இராணுவம் என அனைத்து ரீதியிலுமான சீனாவுடனான அமெரிக்காவின் ஆக்கிரோஷமான மோதலை இன்னும் தீவிரப்படுத்தவே பைடென் நிர்வாகமும் விரும்புகிறது என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. ஆயுத விற்பனையை அதிகரித்தது உட்பட, தைவானுடனான அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியான பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் அது, பதவிக் காலத்தின் இறுதி நாட்களில், தைவானிய அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் இராணுவம் உடனான தொடர்புக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை மதிப்பாய்வு செய்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஒரு சுருக்கச் செய்தி வெளியீடு, புதிய வழிகாட்டுதல்கள் தைவானுடனான அமெரிக்க ஈடுபாட்டை ஊக்குவிக்கும் என்பதுடன், “எங்களது உத்தியோகபூர்வமற்ற உறவு ஆழப்படுவதை” அது பிரதிபலித்தது என்று கூறி, தைவான் “சர்வதேச சமூகத்தில் நன்மைக்கானதொரு சக்தி” என்று அதனைப் புகழ்ந்தது. “ஒரே சீனா” கொள்கைக்கு இது உதட்டளவிலான சேவையை வழங்கும் அதேவேளை புதிய நெறிமுறைகள் பெரும்பாலும் மிக நெருக்கமான உறவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பது தெளிவாகிறது.

தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், மையம், மே 20, 2020 புதன்கிழமை தைவானிலுள்ள தைப்பேயில் தனது தொடக்க விழாவிற்கு செல்கிறார் (Taiwan Presidential Office via AP)

புதிய ஏற்பாடுகள் குறித்த விபரங்களை வெளியுறவுத்துறை வெளியீட்டில் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அனைத்து வகையிலும் குறைந்த சர்ச்சைக்குரிய சில தகவல்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டன. பைனான்சியல் டைம்ஸின் கருத்துப்படி, அமெரிக்க அதிகாரிகள், மத்திய அரசு கட்டிடங்களில் தைவானிய அதிகாரிகளுக்கு வாடிக்கையாக விருந்தளிக்க முடியும் என்பதுடன், நடைமுறையில் தூதரகங்கள் மற்றும் இணைத் தூதரகங்களாக செயல்படும் தைவானின் பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலங்களில் தங்களது சகாக்களை சந்திக்க முடியும். தைவானுக்குச் சொந்தமான மற்றும் பயன்பாட்டிலுள்ள 17 ஏக்கர் தோட்டமான ட்வின் ஓக்ஸில் (Twin Oaks) நடைபெறும் நிகழ்வுகளில் அமெரிக்க அதிகாரிகளும் கலந்துகொள்ள முடியும். அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது தைவானிய கொடி பறப்பது உட்பட, சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

“சீன ஆக்கிரமிப்பு” குற்றச்சாட்டுக்களையும் மற்றும் தைவான் மீது படையெடுக்க பெய்ஜிங் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படும் ஆதாரமற்ற கூற்றுக்களையும் பெரிதுபடுத்தி தைவானுடனான தனது நெருக்கமான உறவுகளை பைடென் நிர்வாகம் நியாயப்படுத்துகிறது. அமைதியாக தன்னுடன் மீண்டும் ஒன்றிணைத்துக் கொள்ள முயற்சிக்கும் பெய்ஜிங், தைவானை “துரோகி மாகாணமாக” கருதுகிறது, என்றாலும் சுதந்திரம் குறித்து ஏதேனும் ஒருதலைப்பட்ச அறிவிப்பை தைபேய் விடுத்தால், அதற்கு இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கப்படும் என்று பெய்ஜிங் பலமுறை எச்சரித்துள்ளது.

நேற்று NBC இன் “Meet the Press” நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கன், “எங்களது உண்மையான கவலை என்னவென்றால், தைவானை நோக்கி பெய்ஜிங்கிலுள்ள அரசாங்கம் அதிகரித்தளவில் எடுத்து வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஜலசந்திகளில் பதட்டங்களை அதிகரிக்கின்றன என்பதே” என்று தெரிவித்தார். மேலும், மேற்கு பசிபிக்கின் நிலையை வலுக்கட்டாயமாக மாற்ற எவரும் முயற்சித்தால், அது “கடுமையான தவறாக” இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

உண்மையில், கடந்த 40 ஆண்டுகளாக தைவான் ஜலசந்தியில் ஒரு முறிந்துபோகக்கூடிய அமைதியை பராமரித்து வந்துள்ள அமெரிக்க-சீன உறவுகளின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், அங்கு நிலைமையை மோசமாக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக தான் ஒப்புக்கொண்ட தைவானுடனான தனது உறவை வாஷிங்டன் தற்போது வலுப்படுத்தி வருவதுடன், சீனாவின் ஆட்சேபனைகளை புறக்கணிக்கிறது. தைவானுடனான தனது அதிக ஒத்துழைப்பை நியாயப்படுத்த “சீன ஆக்கிரமிப்பு” குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா இழிந்த முறையில் பயன்படுத்தி வருகின்றது, இந்த நகர்வுகள் சீனாவின் பதிலைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அமைச்சரவை மட்டத்திலான அமெரிக்க அதிகாரியான சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தைவானுக்கு விஜயம் செய்தது உட்பட, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக தைவானை அமெரிக்கா மாற்றும் என்பது குறித்தும், சீனாவின் Huawei நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் சிப்களை விற்பதை நிறுத்தும்படி உயர் தொழில்நுட்ப பெரிய நிறுவனமான Taiwan Semiconductor Manufacturing Company க்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது குறித்தும்தான் பெய்ஜிங் பயப்படுகிறது. இந்த கவலைகள் தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியால் (Democratic Progressive Party) அதிகரிக்கப்பட்டுள்ளன, இது தைவானுக்கான அதிக சுதந்திரத்தை ஆதரிக்கிறது.

பைடென் நிர்வாகம் தைவானுடனான உறவுகளை விரைவாக வலுப்படுத்தும் நோக்கத்தை குறிக்கும் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அவற்றில் பின்வருவன அடங்கும்:

* தனது ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வாஷிங்டனுக்கான தைவானிய தூதருக்கு அழைப்பு விடுத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை பைடென் பெற்றார். அதன்படி, ஜனவரி மாதம் பதவியேற்பு விழாவில் ஹ்சியாவோ பி-கிம் (Hsiao Bi-Khim) கலந்து கொண்டார்.

* மார்ச் மாதத்தில் ஜப்பானுக்கான அமெரிக்க தூதரான ஜோசப் யங் தனது டோக்கியோ இல்லத்திற்கு தைவானிய சமதரப்பை வரவேற்றதுடன், அவரது வருகை பற்றி ட்விட்டரிலும் பதிவிட்டார்.

* மேலும் கடந்த மாதம் கூட, பலாவுக்கான அமெரிக்க தூதர், பலாவின் ஜனாதிபதியுடன் சேர்ந்து தைவானுக்கு விஜயம் செய்து, 1979 க்குப் பின்னர் தைவானுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க தூதரானார். பெய்ஜிங்கை விட தைபேயுடன் முறையான இராஜதந்திர உறவுகளைப் பேணுகின்ற உலகெங்கிலுமுள்ள 15 நாடுகளில் பலாவும் ஒன்றாகும்.

* மார்ச் 30 அன்று, தைபேயில் உத்தியோகபூர்வமற்ற வகையில் இயங்கும் அமெரிக்க தூதரகமான தைவானிலுள்ள அமெரிக்க நிறுவனம், தைபேய் பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகத்துடன் சேர்ந்து, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அரங்குகளில் தைவானின் பங்கேற்பை விஸ்தரிப்பது பற்றி விவாதிக்க உயர்மட்ட அமெரிக்க மற்றும் தைவானிய அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தை நடத்தியமை, பெய்ஜிங் தீவிரமாக எதிர்ப்பதற்கான நகர்வாக இருந்தது.

* மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தை சேர்ந்த போனி கிளாசர் (Bonnie Glaser) கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸூக்கு தெரிவித்தபடி, வெளியுறவுச் செயலர் பிளிங்கன் சமீபத்தில் பராகுவே ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசி தைவானுடனான தனது நாட்டின் முறையான இராஜதந்திர உறவுகளைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் நிர்வாகம் தைவானுடனான உறவுகளை தீவிரமாக மேம்படுத்துவதன் மூலம் ஒரே சீன கொள்கையை நேரடியாக எதிர்க்கிறது.

* மிகவும் ஆத்திரமூட்டும் வகையில், தைவானின் வெளியுறவு விவகார அமைச்சகம், அவர்களது கடலோர காவலர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அது தயாராகி வருவதாக கடந்த மாதம் அறிவித்தது. கடலோர காவல்படை கடற்படையிலிருந்து வேறுபட்டது என்றாலும், இந்த குறிப்பாணை இராணுவத்தையொத்த தன்மையை கொண்டுள்ளதுடன், குறிப்பாக சீனாவுக்கு எதிராக இயக்கப்படுகிறது.

இந்த வெளிப்படையான சிறிய முயற்சிகள், ஆசியாவில் மிகுந்த வெடிப்பு புள்ளியாகவுள்ள பகுதியில் எதிர்ப்பையும் மோதலையும் தடுக்க 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நீண்டகால நெறிமுறைகளை உண்மையில் கணிசமாக மீறுவதாக உள்ளது. மேலும், திரைக்குப் பின்னால், தைவானுடன் மிகுந்த வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், சீனாவுடனான உறவுகளை கீழறுப்பதற்கும் வாஷிங்டனில் இராணுவ மற்றும் மூலோபாய வட்டாரங்களுக்குள் ஒரு உந்துதல் உள்ளது.

1979 ஆம் ஆண்டில், கார்ட்டர் நிர்வாகம் ஒரே சீனா கொள்கையை ஆதரித்து, சீனாவுடனான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், காங்கிரஸ் தைவான் உறவுகள் சட்டத்தை நிறைவேற்றியது, இந்த சட்டத்தில் கார்ட்டர் கையெழுத்திட்டார். இந்த சட்டம், தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்கள் விற்கப்படுவதை அனுமதித்ததுடன், சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமானால் தைவானுக்கு உதவுவது குறித்து தெளிவற்ற உத்தரவாதத்தை வழங்கியது.

தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள், “மூலோபாய தெளிவின்மை” என்று அறிவிக்கப்பட்டதை பராமரிப்பதன் மூலம் வட்டத்தை சதுரமாக்க முயன்றன, அதாவது போர் ஏற்பட்டால் அமெரிக்கா தைவானை ஆதரிக்குமா இல்லையா என்பதை சீனாவால் அறியமுடியவில்லை, அதே நேரத்தில் சுதந்திரத்தை அறிவிக்க வேண்டாம் என்றும், போரைத் தூண்ட வேண்டாம் என்றும் தைபேய்க்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுத்தது. இப்போது “மூலோபாய தெளிவுக்காக” அதாவது சீனாவுடனான மோதலில் தைவானுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக ஒரு ஆரவாரம் எழுந்துள்ளது.

உதாரணமாக, வெளிநாட்டு உறவுகள் குறித்த செல்வாக்குமிக்க கவுன்சிலின் தலைவர் ரிச்சார்ட் ஹாஸ் (Richard Haass), கடந்த செப்டம்பரில் Foreign Affairs இதழில் வெளியான ஒரு கட்டுரையில், மூலோபாய தெளிவின்மை “அதன் போக்கை காட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இவ்வாறு தெரிவித்தார்: “மூலோபாய தெளிவுக்கான கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: அதாவது, தைவானுக்கு எதிரான சீனாவின் எந்தவொரு படையெடுப்புக்கும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்பது மட்டும் வெளிப்படையாக கூறப்பட வேண்டும்.”

பைடென் நிர்வாகம் அத்தகைய சூத்திரத்தை முறையாக ஏற்கவில்லை. தைவானுக்கு எதிரான சீன நடவடிக்கைக்கு அமெரிக்கா இராணுவ ரீதியாக பதிலளிக்குமா என்று நேற்று NBC இல் கேட்கப்பட்டபோது, பிளிங்கன் அந்த கேள்வியை தவிர்த்து, வெறுமனே இவ்வாறு தெரிவித்தார்: “தைவான் தன்னை தற்காத்துக் கொள்வது தொடர்பாக தீவிர பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் என்னால் கூற முடியும்.” பைடென் பதவியேற்புக்குப் பின்னர், தைவானுக்கு உதவுவதில் “மலை போன்ற” உறுதிப்பாட்டை தான் கொண்டுள்ளது பற்றி அறிவித்து, பைடென் நிர்வாகம் ஏற்கனவே உண்மையில் அந்த திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஹாஸ் வாதிட்டது போல, சீனா குறித்து தைவானுடனான ஒரு போருக்கான அபாயங்களை குறைப்பதற்கு பதிலாக, அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பு, பதட்டங்களையும் மோதலுக்கான அபாயங்களையும் மட்டுமே அதிகரிக்கிறது. துல்லியமாக குறிப்பிடுவதானால், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் குறிப்பாக தைவான் உட்பட, சீனாவைச் சுற்றியுள்ள “முதல் சுற்று தீவு சங்கிலி” பகுதிக்குள் மத்தியதூர தாக்குதல் ஏவுகணைகளை நிலைநிறுத்துவது உட்பட, சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்பில் இந்தோ-பசிபிக்கில் இராணுவ செலவினங்களை பெரியளவில் அதிகரிக்க பென்டகன் தயாராகி வருகிறது.

Loading