கோவிட்-19 நோய்தொற்றுக்களின் நாளாந்த எண்ணிக்கை 100,000 க்கு அதிகமாக இருப்பதற்கு மத்தியில் இந்திய மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 5 முதல், இந்தியா நாளாந்தம் 100,000 க்கு அதிகமாக கோவிட்-19 நோய்தொற்றுக்களைக் கொண்டுள்ளமை, மில்லியன் கணக்கானோரின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துவதுடன், மொத்தமாகவே குறை நிதி ஒதுக்கீடு கொண்ட நாட்டின் பொது சுகாதார அமைப்புமுறையை முறிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது.

இந்த பேரழிவு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நேரடி விளைவாகவுள்ளது, ஏனென்றால் அது பாதுகாப்பற்ற நிலைமைகளில் தொழிற்சாலைகளை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதுடன், மனித உயிரை விட பெருநிறுவன இலாபங்களுக்கே முன்னுரிமையளிக்கிறது. இந்த படுமோசமான நிலைமைக்கு இந்தியாவின் மாநில அரசாங்கங்களும் பொறுப்பாளிகளாகவுள்ளன.

ஏப்ரல் 14, 2021, புதன்கிழமை, இந்தியாவில், மும்பையிலுள்ள லோகமான்ய திலக் முனையப் பகுதியில் இரயில் ஏற வரிசையில் காத்திருக்கும் மக்கள் கொரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்துள்ளனர். இந்தியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பணக்கார மாநிலமான மகாராஷ்ட்ரா, மருத்துவமனைகளின் நிலைமையை சீர்குலைக்க அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதன்கிழமை முதல் 15 நாட்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. (AP Photo/Rafiq Maqbool)

திங்கட்கிழமை, இந்தியா உச்சபட்சமாக 168,912 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை பதிவு செய்து, உலகிலேயே இரண்டாவது மிகவும் பாதிக்கப்பட்ட நாடான பிரேசிலின் இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் குறைமதிப்பீட்டு புள்ளிவிபரங்களின் படி, நாட்டின் ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தற்போது 13.7 மில்லியன் என்பதுடன், இறப்பு எண்ணிக்கை 171,000 ஐ கடந்துள்ளது.

ஏப்ரல் 5 முதல் 11 வரையிலான கடந்த ஏழு நாட்களில், இந்தியா 937,000 க்கு அதிகமான நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளது, இது முன்னைய ஏழு நாட்களிலிருந்து 70 சதவிகித அதிகரிப்பாகும், அதேபோல இறப்பு எண்ணிக்கையும் முன்னைய வாரத்தை விட 70 சதவிகித அதிகரிப்புடன் 5,057 ஆக உயர்ந்துள்ளது. கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியலுக்கான ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மையத்தின் தரவு மதிப்பீட்டின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி கூறியுள்ளது.

ஆசியாவின் கோவிட்-19 பெருந்தொற்றின் தற்போதைய மையப்பகுதியாகவுள்ள இந்தியாவில் இப்போது 12.01 மில்லியன் செயலிலுள்ள நோய்தொற்றுக்கள் இருப்பதால், மருத்துவமனைகளும், அவற்றின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் மற்றும் பிராணவாயு கலன் வசதி கொண்ட படுக்கைகளும் நிரம்பிவழிகின்றன.

நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கைகளை விரைந்து அதிகரிக்கச் செய்வதில் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய காரணியாகவுள்ள, ஒரு புதிய “இரட்டை விகார திரிபு வகை” மற்றும் மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட இங்கிலாந்து திரிபு வகை உள்ளிட்ட பல புதிய கோவிட்-19 வைரஸ் வகைகள் பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு மாநிலமான மகாராஷ்ட்ராவும் மற்றும் இந்தியாவின் நிதி முதலீட்டு மையமான மும்பையும், இந்தியாவின் புதிய நோய்தொற்றுக்களில் பாதிக்கு அதிகமானவற்றைக் கொண்டுள்ளன. திங்களன்று, மகாராஷ்ட்ரா 63,000 க்கு அதிகமான புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களையும் மற்றும் 349 இறப்புக்களையும் பதிவு செய்தது.

அடுத்த நாள், மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் நடமாட்டத்தை தடைசெய்து ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 8 மணி முதல் மே 1 வரையிலும் (அதாவது இதை முழு முடக்கம் என்று அழைக்காமல்) “மக்கள் ஊரடங்குக்கு” அறிவித்தார். மேலும், சட்டப் பிரிவு 144 இன் கீழும் மாநில அரசு தடையுத்தரவுகளை விதித்தது, இது ஒரே நேரத்தில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கூட்டம் கூடுவதை தடை செய்கிறது.

எவ்வாறாயினும், கட்டுமானப் பணிகளும் தொழில்துறை உற்பத்தியும் வழமை போல் தொடர்வதானது முதலாளிமார்கள் தடையின்றி தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், இலாபங்களை பெருக்குவதையும் உறுதி செய்கிறது. பூட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு கூறியது, என்றாலும் சிறு வணிகர்களும் வர்த்தகர்களும் தங்களது கடைகளை 15 நாட்கள் மூடியதற்கு ஈடாக எந்தவித மானியமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர்.

இறப்புக்களிலும் நோய்தொற்றுக்களிலும் பாரிய அதிகரிப்பு நிகழ்ந்து வந்தாலும், மோடி அரசாங்கம் தேசியளவிலான முழு அடைப்பை நிராகரித்துள்ளது. இது, பல்வேறு பிராந்திய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஏப்ரல் 8 காணொளி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

கோவிட்-19 நோய்தொற்று புள்ளிவிபரங்கள் “சில மாநிலங்களில் மிகவும் அச்சுறுத்துவதாக” உள்ளதால், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மீண்டும் “போர்க்கால அடிப்படையில் பணிகள்” முடுக்கிவிடப்பட வேண்டும் என்று மோடி அறிவித்தார். இருப்பினும், அவர் குறிப்பிடும் போர்க்கால அடிப்படை நடவடிக்கைகள் என்பது தேசியளவிலான முழு முடக்கமல்ல, மாறாக இரவு 9 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரையிலான “கொரோனா ஊரடங்கு” என்பதுடன், அவையும் “சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களில்” மட்டுமே அமலில் இருக்கும் என்பதாகும்.

மோடி பின்வரும் மூர்க்கத்தனமான மற்றும் குற்றவியல் ரீதியான பொறுப்பற்ற கருத்தை தெரிவிக்கிறார்: “ஆறு மாடி கட்டிடத்தில் இரண்டு குடியிருப்புக்களில் நோய்தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பகுதி சார்ந்த முழு வட்டாரத்தையும் ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்ற வேண்டாம். மேலும் அருகிலுள்ள கட்டிடங்களையும் மூட வேண்டாம்.”

இத்தகைய நடவடிக்கைகள் மும்பை, சென்னை மற்றும் புது டெல்லி போன்ற நாட்டின் பிரதான நகரங்களில் தொடர்ந்து நோய்தொற்றுக்கள் விரைந்து பரவுவதை உறுதிப்படுத்துகின்றது, இந்த நகரங்களிலெல்லாம் மில்லியன் கணக்கான ஏழை மக்கள் நெரிசல் மிகுந்த, சுகாதாரமில்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்பதுடன், சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிப்பதும் சாத்தியமற்றதாக உள்ளது.

நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் அதிகரித்து வருவது குறித்து மோடி மீண்டும் மக்களை குறை கூற முயன்றார். “பிரச்சினையின் மூல காரணம் என்னவென்றால், இதை ஒரு சாதாரண நோயாகக் கருதி வழமை போல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் தங்களது முழு குடும்பத்திற்கும் நோயைப் பரப்புகிறார்கள்,” என்று அவர் கடுமையாக அறிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றை பரிசோதிப்புக்கு வழியின்றி நாடு முழுவதும் வெடித்து பரவ அனுமதிப்பதான பேரழிவுகர “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை செயல்படுத்தும் ஒரு சிறியளவிலான பெரும் செல்வந்த உயரடுக்கின் சார்பாக செயல்படும் பிரதமர் இவ்வாறு அறிவிக்கிறார். ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட முக்கிய இந்திய தொழில்கள், கடந்த ஆண்டின் முழு அடைப்பின் போதான சில கட்டுப்பாடுகளை மட்டும் கொண்ட குறுகிய கால பூட்டுதலைத் தவிர, அவர்களது தொழில்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை.

மோடி அரசாங்கம் மற்றும் அதன் மாநில சமதரப்பினரின் அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறை, மக்கள்தொகையில் பரந்த அடுக்குகளுக்கு மத்தியில் தவறான பாதுகாப்புணர்வை உருவாக்கியுள்ளது.

இரண்டு மாத காலம் நீடித்த கும்ப மேளா மத விழாவின் ஒரு பகுதியாக ஏராளமான இந்து பக்தர்கள் கங்கை நதியில் நீராடியதாக ஏப்ரல் 12 அன்று BBC செய்தி வெளியிட்டது. ஆனால் இதுபற்றி அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், ஏற்கனவே 2.1 மில்லியன் பக்தர்கள் நதியில் நீராடிவிட்டிருந்த நிலையில், “பலர் வழக்கை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது” என்றனர்.

BBC செய்தி பின்வருமாறு சரியாக எச்சரித்தது: “திங்களன்று மக்கள் நதி நீராடியது பக்தர்களிடையே நோய்தொற்று விரைந்து பரவுவதை ஏதுவாக்கிய நிலையில், அவர்களில் சிலர் வைரஸை தங்களது நகரங்களுக்கும் நாட்டின் பிற கிராமப்புறங்களுக்கும் எடுத்துச் சென்றிருக்கலாம்.”

அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டி, “கோவிட்-19 நோய்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டுமே இந்த விழாவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சமூக இடைவெளி போன்ற கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்றும் முன்னரே அரசாங்கம் அறிவித்துள்ளது, மேலும் உயர்மட்ட துறவிகள் உட்பட, ஏராளமானவர்களுக்கு ஏற்கனவே நோய்தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டிருந்தது,” என்று இது செய்தி வெளியிட்டது.

ஏப்ரல் 8 காணொளி கூட்டத்தின்போது, நாளாந்தம் நான்கு மில்லியன் அளவிற்கு தடுப்பூசிகள் போடப்படுவதாக மோடி பெருமையடித்துக் கொண்டார். இருப்பினும், ஏப்ரல் 12 ஆம் தேதிய ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, இந்தியாவின் 1.4 பில்லியன் பெரும் மக்கள்தொகையில் 4 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், “இந்த நிலைமை சீரடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று நிபுணர்கள் கூறுவதாக” செய்தி நிறுவனம் கூறியது.

அனைத்து வயதினருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதற்கு மோடி அரசாங்கம் மறுத்துவிட்டது, தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கிடையில், மகாராஷ்ட்ரா உட்பட குறைந்தது அரை டசின் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 12 ஆம் தேதி, BBC, உள்ளூர் அரசாங்க அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி, மாநிலத்தின் தற்போதைய 1.5 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று கூறியது. மேலும், தடுப்பூசி விநியோக பற்றாக்குறையால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போது மோடி, “இன்று, நம்மிடம் போதுமான வாய்ப்பு வசதிகள் உள்ளன” என்பதால், “இந்த உச்சத்தை மிக வேகமாக நாம் குறைக்க முடியும் என்பதுடன் அதை மேலும் உயர அனுமதிக்க போவதில்லை” என்று தவறாக அறிவித்தார். என்றாலும், யதார்த்தத்தில் பேரழிவுகர நிலைமை தான் உள்ளது.

மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் தலைநகரம் ராய்ப்பூரிலுள்ள டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனை, கோவிட்-19 காரணமாக இறந்துபோன ஏராளமானோரின் உடல்களை பாதுகாக்க இடமில்லாமல் சிரமத்திற்குள்ளானது. சடலங்கள் “தற்காலிக சவ வண்டிகளில் குவிக்கப்பட்டன, தரைகளில் கிடத்தி வைக்கப்பட்டன, மேலும் வெயில் படும்படி வெளியே கிடத்தி வைக்கப்பட்டன” என்று ஏப்ரல் 12 அன்று NDTV செய்தி தெரிவித்தது.

இத்தகைய “மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்,” “இந்தியாவில் கோவிட்-19 இன் இரண்டாவது அலைக்கு பெரும் மனித விலை கொடுப்பு நிகழ்வதை எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் முறிந்துபோகும் நிலையிலுள்ள சுகாதார அமைப்புமுறை முறிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுவதையும் காட்டுகின்றன” என்றும் இச் செய்தி தெரிவித்தது.

Loading