பாரிஸில், உக்ரேனின் செலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியம்-ரஷ்யா-உக்ரேன் பேச்சுவார்த்தைகளை முன்மொழிகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கியேவ் மற்றும் ரஷ்யாவில் நேட்டோ ஆதரவு அரசாங்கத்திற்கு இடையே வெடிக்கும் பதட்டங்களுக்கு இடையே, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை சந்திக்க பயணம் செய்தார். ஜேர்மனிய சான்ஸ்சலர் அங்கேலா மேர்க்கெலும் ஒரு வீடியோ மாநாட்டு அழைப்பின் மூலம் கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கலந்து கொண்டார்.

Ukraine's President Volodymyr Zelensky [Credit: en.kremlin.ru]

ஜெலன்ஸ்கி பாரிசுக்கு வந்தபோது, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சரிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்தன. ரஷ்யா மீது பைடென் திணித்த கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, ரஷ்யாவிற்கான அமெரிக்கத் தூதர் ஜோன் சல்லிவன் உட்பட பத்து அமெரிக்க இராஜதந்திரிகளை ரஷ்யா வெளியேற்றியது, மற்றும் ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் இரண்டு போர்க் கப்பல்களை நிலைநிறுத்தும் அச்சுறுத்தல்களை வாஷிங்டன் கைவிட்ட பின்னர் இது நடந்தேறியது. கடந்த மாதம், ரஷ்யாவானது அமெரிக்காவிற்கான அதன் தூதரை திருப்பியழைத்தது, பொதுவாக போர் வெடிப்பதற்கு முந்தைய கடைசி இராஜதந்திர நடவடிக்கையாக புட்டினை ஒரு "கொலையாளி" என்று அழைத்த பைடனின் அசாதாரண கருத்து குறித்ததாக இருந்தது.

சமீபத்திய வாரங்களில் உக்ரேனில் நேட்டோ ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் வெடித்தன, அதில் வாஷிங்டனும் பேர்லினும் கியேவில் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை கவிழ்க்க அதிவலது படைகளை ஆதரித்தன. நாட்டின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் புதிய அதிவலது அரசாங்கத்தை எதிர்த்ததால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விரைவில் நாட்டை மொழி வழியில் பிளவுபடுத்தியது. கிரிமியா உக்ரேனிலிருந்து பிரிந்து ரஷ்யாவில் மீண்டும் சேர வாக்களித்தது, அதே நேரத்தில் மாஸ்கோ சார்பு பிரிவினைவாதிகள் கிழக்கு உக்ரேனில் டோன்பாஸ்ஸை (Donbass) எடுத்துக் கொண்டனர்.

பைடென் பதவியேற்றதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன, அதன் பின்னர் கியேவ் ஆட்சி கிரிமியாவிற்கு தண்ணீர் விநியோகத்தை துண்டித்து, செவஸ்டாபோலில் ஒரு முக்கிய ரஷ்ய கடற்படை தளத்தை நடத்தும் டோன்பாஸ் மற்றும் கிரிமியாவை இராணுவ ரீதியாக மீண்டும் கைப்பற்ற அழைப்பு விடுக்கும் ஒரு "கிரிமிய தளத்தை" ஏற்றுக்கொண்டது. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், ரஷ்யாவுடன் போருக்குச் செல்வதை தெளிவாக இன்றியமையாததாக்குகிறது. ரஷ்ய-உக்ரேனிய எல்லையில் துருப்புக்களை குவித்து, கருங்கடலின் சில பகுதிகளை மூடுவதாக அச்சுறுத்தி மாஸ்கோ பதிலடி கொடுத்தது.

நேற்று காலை, ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேர்லினிலும் பாரிஸிலும் கியேவை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அவர் கூறினார், "திரு. மக்ரோனும் திருமதி மேர்க்கெலும் திரு. ஜெலென்ஸ்கியுடன் இந்த வீடியோ மாநாட்டின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கிழக்கு உக்ரேனில் முன்னணியில் அனைத்து ஆத்திரமூட்டல்களையும் உறுதியாக நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவருக்கு விளக்கினால் அது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்".

மக்ரோனுடனான ஜெலன்ஸ்கியின் சந்திப்புக்குப் பின்னர், ஒரு "பணிக்கான மதிய விருந்தில்", ஜெலன்ஸ்கி ஒரு அறிக்கையை வெளியிட்டார், இது பேர்லினுக்கும் பாரிஸிற்கும் மத்தியஸ்தம் செய்யப்பட்ட மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தது. அவர் கூறினார், "நாங்கள் நான்கு பேரும் உக்ரேனின் கிழக்கில் பாதுகாப்பு நிலைமை குறித்து [விவாதிக்க] பங்கேற்கவும், எங்கள் பிராந்தியத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறேன்."

பேர்லின் மற்றும் பாரிஸ் இரண்டுமே பொதுவாக ஜெலென்ஸ்கியை ஆதரித்தும், பாசாங்குத்தனமாக ரஷ்யாவை மோதலுக்கு குற்றம் சாட்டியும் அறிக்கைகளை வெளியிட்டன. ஒரு அறிக்கையில், ஜேர்மனிய சான்ஸெல்லரி அதன் "உக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் அதிகரிப்பு குறித்து கவலையை" வலியுறுத்தியதுடன், "இந்த வலிமைப் பெருக்கங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், இதன் மூலம் நாம் விரிவாக்கத்தை தணிக்க முடியும்" என்றும் அழைப்பு விடுத்தது.

பாரிசில், எலிசே ஜனாதிபதி மாளிகையானது உக்ரேனிய இறையாண்மைக்கு அதன் "ஆதரவை" அறிவித்தது மற்றும் "வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது பங்கிற்கு விரிவாக்கத்தை நீக்குவதற்கான மிகத் தெளிவான விருப்பத்தை வெளிப்படுத்தினார்" என்று வலியுறுத்தியது. மேர்க்கெல், மக்ரோன் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தைகள் "நெருக்கடிக்கு ஒரு அரசியல் தீர்வுக்கான தேடல் மற்றும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவை மீண்டும் மேசைக்கு கொண்டு வருவதற்கான வழிவகைகளை" மையமாகக் கொண்டிருந்தன என்று அது மேலும் கூறியது. ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து அதிகாரிகள் "நார்மன்டி வடிவம்" (Normandy format) குறித்து ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை தயாரிப்பதற்காக சந்திப்பார்கள் என்று அது மேலும் கூறியது.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனை ஆயுதபாணியாக்குவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் அச்சுறுத்தலால் தூண்டப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில், "நார்மன்டி வடிவம்" என்று அழைக்கப்படும் பேச்சுவார்த்தைகள் 2015 இல் தொடங்கின; மேர்க்கெலும் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் போரை தவிர்க்கும் முயற்சியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று, பெஸ்கோவ் உச்சிமாநாட்டிற்கு விடையிறுக்கும் வகையில் ரஷ்ய துருப்புக்களை அனுப்புவது ஒரு அச்சுறுத்தல் என்பதை மறுத்தார் மற்றும் மாஸ்கோ ஒரு இராஜதந்திர தீர்மானத்தை கோருகிறது என்று வலியுறுத்தினார்: "ரஷ்யா மோதலுக்கான ஒரு தரப்பு அல்ல. இந்த மோதலைத் தீர்க்க ரஷ்யா தன்னால் இயன்றதைச் செய்து வருகிறது. அதை தெளிவுபடுத்த நாங்கள் எப்போதும் வேலை செய்வோம்."

பொதுவாக ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அறிக்கைகளின் சாதகமான தொனி ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு கொடுத்தபோதிலும், ரஷ்யாவிற்கு எதிராக அதிக ஐரோப்பிய ஆதரவு வேண்டும் என்ற உக்ரேனிய ஜனாதிபதியின் முறையீடுகள் செவிடன் காதில் ஊதிய சங்காக கேட்டது என்பது ஏறக்குறைய வெளிப்படையாகத் தெரிந்தது.

வியாழனன்று, பாரிசுக்கு வருவதற்கு முதல் நாள், ஜெலன்ஸ்கி வலதுசாரி பிரெஞ்சு நாளேடான லு ஃபிகாரோவிற்கு ஒரு முழுபக்க நேர்காணலை வழங்கினார், இது பேச்சுவார்த்தைகளுக்கான தனது நிகழ்ச்சி நிரலை முன்வைத்தது. சர்வதேச அளவில் ஆபத்தான இராணுவ பதட்டங்களை அவர் சுட்டிக் காட்டினார்: "ஜோ பைடென் பதவியேற்றதிலிருந்து, அனைவரும் பூமியைச் சுற்றி தங்கள் தசைகளை முறுக்கச் செய்து வருகின்றனர். தனிப்பட்ட முறையில், அது உக்ரைனின் செலவில் இருக்க நான் விரும்பவில்லை."

இந்த அடிப்படையில், 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் நேட்டோவிற்கு நெருக்கமான ஆதரவைக் கொடுத்த நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனிய அங்கத்துவத்தை ஆதரிக்குமாறு ஜெலன்ஸ்கி பிரான்சை கேட்டுக்கொண்டார்: "மனித உயிர்களைப் பொறுத்தவரையில் நமது நாடு பெரும் தியாகங்களை செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் காத்திருப்பு அறையில் நாம் காலவரையின்றி இருக்க முடியாது. ... நாம் பிச்சை எடுக்க விரும்பவில்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவிற்குள் நாம் அழைக்கப்பட வேண்டிய நேரம் இது."

பேர்லின், பாரிஸ், மாஸ்கோ மற்றும் கியேவ் இடையே "நார்மன்டி வடிவமைப்பு" பேச்சுவார்த்தைகளையும் ஜெலன்ஸ்கி நிராகரித்து, அவை இறந்துவிட்டதாக அறிவித்தார்: "இமானுவல் மக்ரோன் அவற்றை உயிராதரவு நிலையில் பராமரிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நேர்மையாக, அவர்களின் இதயத் துடிப்பு நிறுத்தமாக உள்ளன."

லு ஃபிகாரோன்பேட்டியாளர் வாஷிங்டனில் ஜெலன்ஸ்கிக்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளது என்பது பற்றிய கேள்விகளை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருவதற்கு முன்னர், பைடென் பதவியேற்ற பின்னர் நீண்ட காலம் காத்திருந்தாரா என்று கேட்கப்பட்டதற்கு, "மிக நீண்டது, என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஆனால் அமெரிக்கா ஒரு பெரிய நாடு. அவர்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன, மற்றும் உக்ரைன் அவர்களின் முதல் முன்னுரிமை அல்ல, நான் சொல்ல வருந்துகிறேன்."

நேற்று, அனைத்து கணக்குகளிலும், பாரிஸோ அல்லது பேர்லினோ ஐரோப்பிய ஒன்றியம் அல்லது நேட்டோவில் உக்ரேன் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் அழைப்புகளை ஆதரிக்கவில்லை. ஜூன் மாதம் நடைபெற விருக்கும் அடுத்த நேட்டோ உச்சிமாநாடு வரை நேட்டோவில் உக்ரேனிய அங்கத்துவம் பற்றி விவாதிக்க மக்ரோன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரெஞ்சு இளநிலை அமைச்சர் கிளெமென்ட் பியூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனிய அங்கத்துவம் யதார்த்தமற்றது என்று அறிவித்தார்: "நாங்கள் உக்ரேனை ஆதரிக்க முடியும் ... ஆனால் அது உறுப்பினர் என்று அர்த்தமல்ல, அது ஒரு தீவிர முன்னோக்கும் அல்ல."

ரஷ்யாவுடனான அசாதாரணமான கூர்மையான இராணுவ மற்றும் இராஜதந்திர பதட்டங்கள் குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் பீதியை சுட்டிக்காட்டி, மக்ரோன் "உதவிக்கான ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளில் இருந்து தப்பித்துவிட்டார்" என்று லு ஃபிகாரோ முடிவு செய்தது. அது எழுதியது, "இது ஒரு கூட்டம், அதன் முக்கியத்துவம் நிகழ்வுகளால் பெரிதாக்கப்பட்டது, அது பாரிஸில் சங்கடத்தை தூண்டியது."

ஒரு ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்: "உக்ரைன் அதன் அரசியல் தேவைகளை சுதந்திரமாக தேர்வு செய்ய முடியும். இருப்பினும், உறுப்பினர் பதவியை நோக்கிய கூடுதல் நடவடிக்கைகள் தற்போது எதிர்பார்க்கப்படவில்லை." Süddeutsche Zeitung பத்திரிகையானது, கியேவ் ஆயுதங்கள் மற்றும் நேட்டோ அங்கத்துவத்தை கேட்ட பின்னர் பேர்லின் "ஒரு கயிற்றில் நடந்து கொண்டிருக்கிறது" என்று எழுதியது, மேலும் கூறியது: "இந்த இரண்டு கோரிக்கைகளும் கூட்டாட்சி அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகின்றன. தீர்க்கப்படாத பிராந்திய மோதல்களைக் கருத்தில் கொண்டு நேட்டோ கூட்டணியில் உக்ரேன் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் அதன் உதவி உத்தரவாதத்தில் இருந்து பயனடையும் என்ற கருத்து பேர்லினில் அபத்தமானதாகக் கருதப்படுகிறது."

இறுதி பகுப்பாய்வில், பொறுப்பு பிற்போக்கு கியேவ் ஆட்சியிடம் மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் பொறுப்பற்ற, நீண்டகால இராணுவ விரிவாக்கக் கொள்கையுடனும் உள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச முறையில் கலைக்கப்பட்டதில் இருந்து மூன்று தசாப்தங்களில், அது படிப்படியாக கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியை நேட்டோ இராணுவக் கூட்டணிக்குள் ஒருங்கிணைத்தது. அதன் 2014 பிளவு ரஷ்யாவின் எல்லைகளில் Right Sector மற்றும் அசோவ் பட்டாலியன் (Azov Battalion) போன்ற விரோதகரமான அதிவலது போராளிகளை வைத்தது, மேலும் கியேவில் அவர்களுக்கு மகத்தான அரசியல் பலத்தைக் கொடுத்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில் நார்மன்டி வடிவமைப்பு பேச்சுவார்த்தைகள் நேட்டோவால் தூண்டிவிடப்பட்ட மோதலைத் தீர்க்கத் தவறிவிட்டன. கியேவில் ஒரு அதிவலது ஆட்சிக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவானது ரஷ்யாவை இராணுவ நடவடிக்கை மூலம் அச்சுறுத்துகிறது, இது உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு போரின் ஆபத்தை நிரந்தரமாக திறந்துவிடுகிறது, இது அனைத்து நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வெளிப்படையான முழுப் போராக விரிவடையச் செய்யும்.

Loading