ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் கொலை செய்த அனைத்து குற்றச்சாட்டிலும் டெரெக் சோவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மினியாபோலிஸ், மினசோட்டா காவல்துறையினரின் கைகளில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிட்டத்தட்ட பதினொரு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிகாரி டெரெக் சோவன் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை படுகொலை ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

அப்போது 17 வயதான டார்னெல்லா ஃப்ரேஷியர் (Darnella Frazier), அந்த அதிகாரி தனது முழங்காலை ஃபுளோய்ட்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக அழுத்திய, அமெரிக்காவில் பொலிஸ் வன்முறையின் மிருகத்தனமான யதார்த்தத்தை அம்பலப்படுத்திய ஒரு பயங்கரமான காட்சியை முழு உலகமும் பார்க்க கூடியதாக்க தனது தொலைபேசியை பதிவு செய்ய பயன்படுத்தியதால்தான் அத்தண்டனை சாத்தியமானது. இந்த இழிபெயர்பெற்ற பரவலாக பகிரப்பட்ட ஒளிப்பதிவு இந்த கொலையை மிக விரிவாக பிடிக்கவில்லை என்றால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நிகழ்வதுபோல் ஃபுளோய்ட்டின் மரணம் பொலிஸால் மூடிமறைக்கப்பட்டு, அரச விசாரணையாளர்களால் நியாயப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

இந்த மறுக்கமுடியாத ஆதாரத்தின் அடிப்படையில், டெரெக் சோவனின் நடவடிக்கைகள் கொலை என்று நடுவர் மன்றம் சரியாக தீர்ப்பளித்தது.

2021 ஏப்ரல் 20, செவ்வாயன்று, மினசோட்டாவின் மினியாபோலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் மரணத்திற்காக முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் சோவனின் விசாரணையில் ஒரு குற்றவாளித் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர் (AP Photo/Morry Gash)

ஃபுளோய்ட் கொல்லப்பட்டதால் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் திகிலடைந்தனர். இது அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று பேரின் உயிரைக் எடுக்கும் பொலிஸ் பயங்கரவாத ஆட்சியின் உருவகமாகக் கருதப்படுகிறது.

ஆனால் பிரதான ஊடகங்களும் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரும் இந்த தீர்ப்பிற்கு பதிலளித்தனர், ஃபுளோய்ட்டின் கொலையை முற்றிலும் இன அடிப்படையின் உள்ளடக்கத்தினுள் வைக்க முயன்றனர். ஃபுளோய்ட்டின் கொலை “திட்டமிட்ட இனவெறியைக் காண உலகம் முழுவதற்கும் இருந்த கண்மூடிகளை களைத்தெறிந்தது”, அமெரிக்க இனவெறி “நமது தேசத்தின் ஆன்மாவுக்கு ஒரு கறை” என்று என்று பைடென் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கறுப்பினமக்களின் வாழ்க்கையும் மதிப்புமிக்கது (Black Lives Matter) அமைப்பின் உலக அறக்கட்டளை வலைப்பின்னல் பின்வரும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “இந்த குற்றத்தீர்ப்பு வெள்ளை மேலாதிக்கம் வெல்லாது என்பதைக் காட்டத் தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். வெள்ளை மேலாதிக்கத்திற்கு குறிப்பாக வாழ்வதற்கான நமது சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஜனநாயகத்தில் இடமில்லை”.

காவல்துறையினுள் இனவெறி மற்றும் பிற பிற்போக்கான கருத்துக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும், டெரெக் சோவனின் மிருகத்தனத்தை "வெள்ளை மேலாதிக்கத்தின்" ஒரு பரந்த நிகழ்வின் வெளிப்பாடாக மாற்றுவதற்கான முயற்சி, இந்த வழக்கினால் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் அடிப்படை யதார்த்தத்தை மறைக்க உதவுகிறது. மேலும் இதற்கான பொறுப்பை முதலாளித்துவ அரசிலிருந்து ஒட்டுமொத்த மக்களுக்கும் மாற்றிவிட உதவுகிறது.

ஃபுளோய்ட்டின் மரணம் உலகம் முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,000 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் எதிர்ப்புக்கள் எழுந்தன. அமெரிக்காவில் மட்டும், ஒரு கட்டத்தில் 15 மில்லியன் முதல் 26 மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியதாகும். ஃபுளோய்ட் இறந்த உடனேயே, அவரது பாதுகாப்பிற்கான இயக்கமும் மற்றும் பொலிஸால் அச்சுறுத்தப்பட்ட மற்றவர்கள் அனைவரும் பல்லின மற்றும் பல்தேசிய குணாதிசயத்தை எடுத்துக்கொண்டது.

பொலிஸ் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து பின்னணியை கொண்ட தொழிலாளர்களும் கோரினர்.

தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஃபுளோய்ட்டின் தம்பி ரோட்னி ஃபுளோய்ட் இந்த உலகளாவிய உணர்வைப் பேசினார். "இது நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி" என்று ரோட்னி அறிவித்தார். "இதில் எந்த நிற தடையும் இல்லை. இது கீழே விழுத்தப்பட்டு அழுத்தப்பட்ட அனைவருக்குமான தீர்ப்பாகும்".

ஃபுளோய்ட் கொலை செய்யப்படுவதைக் காணும் போது அவர்களது உணர்ச்சிகளை விவரிக்க பல சாட்சிகளை அரசு தரப்பு அழைத்தது. பொலிஸ் கைகளில் அர்த்தமற்ற முறையில் கொலை செய்யப்படுவது குறித்து வெள்ளை மற்றும் கறுப்பின சாட்சிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

மினியாபோலிஸ் அவசர உதவி 911 வாகனத்தை அனுப்பிய வெள்ளையின ஜெனா ஸ்கூரி, ஜூரிகளிடம், தான் பார்த்ததைக் கண்டு மிகவும் திகிலடைந்ததாகக் கூறினார். ஒரு வெள்ளையின ஜெனவியேவ் ஹான்சன், அதிகாரிகள் ஃபுளோய்ட்டை தரையில் அழுத்தும்போது தன்னை ஒரு துணை மருத்துவராக அடையாளம் காட்டியதாக கூறினார்.

ஃபுளோய்ட்டுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பொலிசார் அனுமதிக்க மறுத்தபோது, தான் எவ்வளவு உதவியற்றவராக இருந்ததாக உணர்ந்தார் என்பதை ஹான்சன் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். வெள்ளையின ஃபுளோய்ட்டின் காதலி கோர்ட்டேனி ரோஸ், ஓபியாய்ட் மருந்திற்கு அடிமையாகியதற்கு எதிராக இந்த ஜோடி எவ்வாறு ஒன்றாகப் போராடியது என்பதை மறுபரிசீலனை செய்வதற்காக இத்தருணத்தை பயன்படுத்தினார். இது மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு சோகமாக பழகிப்போன ஒரு துன்பமாகும்.

ஒரு பல்-இன நடுவர் குழு, சாட்சிகளைக் கேட்டவுடன் விரைவில் சரியான தீர்ப்பிற்கு வந்தனர்.

பொலிஸ் வன்முறை மற்றும் கொலைகளின் முடிவில்லாத அலையானது முதலாளித்துவ அரசின் தன்மையின் வெளிப்பாடே தவிர “வெள்ளையின மேலாதிக்கம்” அல்ல. இந்த வாரம் உலக சோசலிச வலைத் தளம் தனது முன்னோக்கில் குறிப்பிட்டது போல, பொலிஸ் வன்முறை அனைத்து இன மற்றும் இனக்குழு பின்னணியை கொண்ட உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது. காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெள்ளையினத்தவர்கள். மேலும் பெரும்பாலான பொலிஸ் கொலைகள் ஊடகங்களினால் தெரிவிக்கப்படாமல் உள்ளன.

பல ஆண்டுகளாக, எதிர்ப்புகளுக்கும் சீர்திருத்த உறுதிமொழிகளுக்கும் மத்தியில் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறையின் தொற்றுநோய் அதிகரித்துள்ளது. 2013 முதல், ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கொலை செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று கொலைகள். கொலைகளில் ஒரு சிறியளவிலானவையே ஒரு அதிகாரி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இன்னும் மிகக்குறைவான அதிகாரிகளே குற்றம்சாட்டப்படுகின்றார்கள்.

பொலிஸ் ஒருமைப்பாடு ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, 2005 முதல் 2019 வரை கடமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக கொலை அல்லது படுகொலைக்காக 104 பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் மட்டுமே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், சுமார் 15,000 பேர் பொலீசாரால் கொல்லப்பட்டனர்.

சோவனின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதே, ஓஹியோவின் கொலம்பஸில் 15 வயது மா’கியா பிரையன்ட்டை பொலீசார் கொலை செய்தனர். உள்ளூர் செய்தி அறிக்கையின்படி, பிரையன்ட் ஒரு வளர்ப்பு வீட்டில் வசித்து வந்தார். மேலும் வீட்டில் தங்கியிருந்த மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு பெண் மற்றவர்களை குத்த முயற்சிக்கிறார் என்ற தொலைபேசி அழைப்பை அடுத்து பொலீசார் அங்கு வந்தனர். பிற்பகல் 4:35 மணிக்கு போலீசாருக்கு அழைப்பு வந்தது. பத்து நிமிடங்களுக்குப் பின்னர், ஒரு அதிகாரி சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது இளம்பெண் கத்தியை வைத்திருந்ததாக பொலீசார் கூறினர். மா’கியா பிரையன்ட்டின் அத்தை ஹேசல் பிரையன்ட், தனது மருமகள் ஒரு போலீஸ் அதிகாரியால் பலமுறை சுடப்படுவதற்கு முன்பு, தான் வைத்திருந்த கத்தியை கைவிட்டுவிட்டதாக கூறினார்.

பொலிஸ் வன்முறையை பிரத்தியேகமாக இன அடிப்படையில் வடிவமைக்க எடுக்கப்படும் முடிவற்ற முயற்சிகள் அதற்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தவே முடியும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம், பொலிஸால் பாதுகாக்கப்படும் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் தேவைப்படுகிறது.

Loading