தினசரி 30,000 COVID-19 தொற்றுக்களுடன், மக்ரோன் பிரெஞ்சு பள்ளிகளை மீண்டும் திறக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரெஞ்சு பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருந்தபோதிலும், மக்ரோன் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, வருகின்ற திங்களன்று பள்ளிகளை மீண்டும் திறக்கும் அதன் திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதை உறுதிப்படுத்தினார்.

மார்ச் இறுதியில் மக்ரோன் முதலில் அறிவித்தபடி, அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் திங்களன்று மீண்டும் திறக்கப்படும். இரண்டு வார பள்ளி விடுமுறை இடைவேளைக்கு முன்பு அவர்களுக்கு ஒரு வாரம் மட்டுமே மூடப்பட்டது. நடுநிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் அடுத்த வாரம் மே 3ம் தேதி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்ப உள்ளனர். உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் முதலில் ஒன்றும் பின் மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற அட்டவணையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. வகுப்பறைகள் பாதி அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன.

French President Emmanuel Macron (Image Credit: AP Photo/Francois Mori)

கூடுதலாக, வீட்டிலிருந்து வெளியே பயணம் செய்ய 10 கிலோமீட்டர் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. "மே மத்தியில்" வெளிப்புறத்தில் உணவருந்துதல் மற்றும் கஃபேக்கள், கலாச்சார மற்றும் விளையாட்டு இடங்கள் மற்றும் சில கடைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அதன் திட்டமிடப்பட்ட காலக்கெடுவை பராமரிக்கிறது என்று காஸ்டெக்ஸ் கூறினார், இருப்பினும் இது "சுகாதார நிலைமை" முன்னேற்றத்திற்கு ஏற்ப உறுதிப்படுத்தப்படும். இது நாடு தழுவிய அல்லது பிராந்தியவாரியாக செயற்படுத்தப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

"தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 30,000 க்கும் சற்று அதிகமாக உள்ளது" என்பதை ஒப்புக்கொண்டாலும், காஸ்டெக்ஸ் இந்த மறுதிறப்பு கொள்கையை அறிவித்தார். ஒப்பிடுகையில், மக்ரோன் அரசாங்கம் மே 2020 இல் கடுமையான பொதுமுடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, எட்டு வாரங்களில் பள்ளிகள் மற்றும் பல அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மூடப்பட்டபோது, நாளொன்றுக்கு நூறு முதல் பல நூறு தொற்றுக்களுக்கும் குறைவாக இருந்தன- அல்லது தற்போதைய மட்டங்களில் சுமார் 0.5 சதவிகிதம் இருந்தன. ஒரு பொதுமுடக்கத்தை மீண்டும் திணிப்பதற்கான அதன் வரம்பு அப்போது நாளொன்றுக்கு 5,000 தொற்றுக்கள் என்று அரசாங்கம் கூறியது.

அதற்குப் பிந்தைய காலத்தில், சுகாதார நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது, மேலும் தொற்று திரிபு வகையான பி.1.1.7 மேலாதிக்கத்துடன், இது இப்போது பிரான்சில் கிட்டத்தட்ட அனைத்து தொற்றுக்குள்ளாகுபவர்களையும் இது கொண்டுள்ளது. செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பிரான்சில் 34,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் இருந்தன. ஏப்ரல் 20 அன்று, 44,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் இருந்தன. தினசரி இறப்புக்களின் ஏழு நாள் சராசரி 300 ஆகும். பள்ளிகளை மீண்டும் திறப்பதை மக்ரோன் பின்தொடர்வது, தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதுடன், ஏராளமான மக்கள் தேவையில்லாமல் இறப்பார்கள் என்பதும் உறுதி செய்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகள் குறித்து மக்ரோன் அறிவித்த மூன்றரை வாரங்களுக்குப் பின்னர், இதன் விளைவு ஒரு பேரழிவாகும். புதிய தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 32,274 ஆகும், இது முந்தைய வாரத்தை விட இரண்டு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. சுமார் 31,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,000 ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் 100,000 இறப்புகளின் மைல்கல்லை ஏப்ரல் 15 அன்று கடக்கப்பட்டது. அக்டோபர் 20 ல் இருந்து தினசரி இறப்புக்களின் எண்ணிக்கை 250 க்கும் குறைவாக இல்லை. பெருந்திரளான வெகுஜன இறப்புக்கள் என்பது பெருந்தொற்று நோயை எதிர்கொள்ளும் மக்ரோன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாகும்.

2020 நவம்பரில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போதும் கூட வைரஸின் இனப்பெருக்க விகிதம் அல்லது ஆர் விகிதம் (r-rate) 0.7 க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது. சமீபத்திய நாட்களில் மட்டுமே இது தேசிய அளவில் 1 க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகாரபூர்வமாக குறைந்த ஆபத்து என்று கருதப்படும் பிராந்திய மாவட்டங்களில் கூட, ஆர் விகிதம் சில சந்தர்ப்பங்களில் 1 க்கு மேல் உள்ளது, அதாவது வைரஸ் அதிவேகமாக பரவுகிறது.

கடந்த வெள்ளியன்று பிரதம மந்திரி திராஹியின் ஒரு பகுதியான பொதுமுடக்க நடவடிக்கைகளுக்கு முடிவிற்கு கொண்டுவரும் அறிவிப்பின் ஒரு தொகுப்பு ஆணையை இத்தாலிய அரசாங்கம் முறையாக அங்கீகரித்த ஒரு நாளில் காஸ்டெக்ஸின் செய்தியாளர் உரை வந்தது. வெளிப்புறத்தில் உணவருந்துதல் மற்றும் கஃபேக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நீச்சல் குளங்களுடன் இத்தாலிய பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கி மீண்டும் திறக்கப்பட உள்ளன. இத்தாலியில் தற்போதைய தினசரி இறப்புக்கள் விகிதம் 300 க்கும் அதிகமாக உள்ளது.

உலக அளவில், கொரோனா வைரஸ் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான கட்டமாக வளர்ந்து வருகிறது. தினசரி நோயாளிகளின் ஏழு நாள் சராசரி சாதனையில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. கிழக்கு ஐரோப்பா, பிரேசில், இந்தியா, பிரேசில் மற்றும் பிற நாடுகளில், தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை புதிய மட்டங்களை எட்டியுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், ஐரோப்பா முழுவதிலுமுள்ள அரசாங்கங்கள் வைரஸ் பரவுவதற்கு எதிராக போராடுவதற்கான பொதுமுடக்க நடவடிக்கைகளை பராமரிக்கும் பாசாங்குத்தனத்தை கைவிட்டதுடன், மீண்டும் திறக்கப்படுவது பொருட்படுத்தாமல் தொடர வேண்டும் என்று அறிவிக்கின்றன.

இந்தக் கொள்கைக்கான உந்துதலானது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களிலும், பெருநிறுவன இலாபங்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு அத்தியாவசியமற்ற தொழிற்துறை தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற அதன் கோரிக்கையிலும் உள்ளது. பெற்றோர்கள் பணிகளில் வைக்கப்படும் வகையில் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. "பொருளாதாரத்தில்" மேலும் பொதுமுடக்கங்களின் தாக்கத்தை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று மார்ச் மாத இறுதியில் மக்ரோன் கூறியதன் பொருள் இதுதான்.

இவ்வாறாக, ஏப்ரல் 6 அன்று, மக்ரோன் சுகாதார நிலைமையில் முன்னேற்றத்தை பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான தனது முன்னோக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதாவது "ஏப்ரல் 26 அன்று மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கும், அடுத்த வாரம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று கற்கும் வகுப்புகளை மீண்டும் தொடங்குவது எங்களுக்கு அவசியம். மழலையர் பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளிகளை எந்த சுகாதார குறிகாட்டிகளிலும் மீண்டும் திறக்க நான் நிபந்தனை செய்யவில்லை".

ஆயினும் கூட, கடந்த இரண்டரை வாரங்களில் தொற்றுக்கள் குறைக்கப்பட்ட அளவிற்கு, இரண்டு வார விடுமுறைக்காலம் காரணமாகவும், மூன்று வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டதே முக்கிய காரணியாக இருந்தது. இப்போது இது கூட முடிவுக்கு வருகிறது. பெற்றோர்கள் வேலையில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற கொள்கையை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களின் செயலூக்கமான ஆதரவுடன் பள்ளிகளை மீண்டும் திறப்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கையானது உத்தியோகபூர்வ மொத்தத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிடியூட்டின்படி (John Hopkins Institute), பிரான்சில் தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது, ஏப்ரல் 3 அன்று ஆயிரம் பேருக்கு 7.92 ஆக இருந்தது, ஏப்ரல் 16 அன்று 5.09 ஆக இருந்தது, விடுமுறை காலத்தில் பரிசோதனையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தது.

Loading