கோவிட்-19 நோய்த் தொற்றுகளின் சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது, தினசரி புதிய பாதிப்புகள் 250,000 ஐ தாண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவில் ஏப்ரல் 15 இலிருந்து கோவிட்-19 தினசரி பாதிப்பு 200,000 க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது உலகளவில் மற்ற எந்த நாட்டிலும் பதிவானதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இது இவ்வாறு இருக்க, இந்தியாவின் அதி வலது நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மறுத்துவருகின்றது.

சனிக்கிழமையன்று, கடந்த 24 மணிநேரத்தில் 234,692 பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 261,500 புதிய தொற்றுக்களுடன் ஞாயிறன்று ஒரு புதிய தினசரி உச்சத்தை எட்டியிருக்கிறது, தற்போதிருக்கும் பாதிப்புகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனாக உள்ளது. மகாராஷ்டிரா மேற்கில் (67,123), உத்தரபிரதேசம் (27,734) மற்றும் டெல்லி வடக்கில் (24,375), கர்நாடகா தெற்கில் (17,489), மற்றும் சத்தீஸ்கர் மத்திய கிழக்கில் (16,083) ஆகிய புதிய நோய்த்தொற்றுகளைக் கொண்ட ஐந்து மாநிலங்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ள வைரஸை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2020, யூலை 11 சனிக்கிழமை, இந்தியா, மும்பையிலுள்ள தியோனார் சேரியின் குடியிருப்புவாசிகளிடம் கோவிட்-19 அறிகுறிகளை சுகாதாரப் பணியாளர்கள் பார்வையிடுகிறார்கள். (AP Photo/Rajanish Kakade)

தொற்றுநோயியல் நிபுணரும், பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவரும் கிரிதாரா பாபு கூற்றுப்படி இத்தகைய மோசமான நிலைமை மேலும் மோசமடையும் நிலையில் உள்ளது. மே 5 இல் ஒரு நாளைக்கு 300,000 – 400,000 க்கு பாதிப்பின் சுமை அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இன்றுவரை, இந்தியாவில் 14.5 மில்லியன் கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஆகும். ஆனால் இது மே 1 க்குள் இந்த எண்ணிக்கை 18 மில்லியனாக உயரக்கூடும்.

ஏற்கனவே 24 மணி நேரத்தில் 1,501 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ இறப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 177,150 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் ஒப்பீட்டளவில் காட்டப்படும் குறைந்த உத்தியோகபூர்வ இறப்பு புள்ளிவிவரங்கள் மருத்துவ நிபுணர்களால் மறுக்கப்பட்டுவருகின்றன. அதிகாரிகள் பரந்தளவில் இறப்புகளை குறைவாக கணக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக மத்திய பிரதேசத்தின் நிலைமை குறித்து ஒரு இந்திய செய்தி தளமான தி வயர் குறிப்பிட்டிருக்கிறது: "ஏப்ரல் 12 ம் தேதி போபாலின் பட்படா மயானத்தில் 37 சடலங்கள் தகனம் செய்யக் காத்திருந்தன, அதே சமயம் மத்தியப்பிரதேசம் வெளியிட்ட அரசு அறிவிப்பில் அன்று முழு மாநிலத்திலும் 37 இறப்புகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளது," என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. "இதேபோல், ஏப்ரல் 8 அன்று, போபாலில் மட்டும் 35 சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டியிருந்தது, ஆனால் அரசு அறிவிப்பில் 27 இறப்புகளை மட்டுமே குறிப்பிட்டது; ஏப்ரல் 9 அன்று, இது 35 உடல்களும் 23என அரசு அறிவிப்பிலும் இருக்கிறது".

பாதிப்புகள் பெருகுவதற்கான குற்றவியல் பொறுப்பு மோடி அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த இந்திய ஆளும் உயரடுக்கிற்கும் உள்ளது. மோடி அரசாங்கம் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" என்ற கொள்கையை பின்பற்றுகிறது, தேவையான பொதுமுடக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மறுக்கிறது அல்லது இந்தியாவின் வறிய மக்களுக்கு வீட்டிலேயே தங்குவதற்கான வசதிகளை வழங்க மறுக்கிறது. கடந்த வசந்த காலத்தில் மோசமாக தயாரிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், உழைக்கும் மக்களுக்கு உதவி இல்லாததால் ஒரு சமூக பேரழிவு தூண்டப்பட்டிருந்தது, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வைரஸ் பொங்கி எழும் அபாயகரமான தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், எதிர்க்கட்சி தலைமையிலுள்ளவர்கள் உட்பட, மாநில அளவில் மோடி அரசாங்கமும் அதன் சகாக்களும் ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையை பராமரித்து வருகின்றனர்.

தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் திறனைப் பற்றி மோடி பலமுறை பெருமையாக பேசியுள்ளார், மேலும் இந்தியா “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை” தொடங்கப்போவதாகவும் கூறினார். "ஒன்றாக, இந்தியா கோவிட்-19 ஐ தோற்கடிக்கும்" என்ற வாசகத்துடன், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழில் அதிகாரிகள் அவரது புகைப்படத்தையும் வைத்துள்ளனர்.

புதிய அலையின் தொடக்கத்தில், மார்ச் 23 க்குள், இந்திய அரசாங்கம் 39 மில்லியன் மக்களுக்கு அல்லது 2.7 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. ஏப்ரல் 12 க்குள், போட்டவர்களின் சதவீதம் நான்கு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் மற்றும் டெல்லியும் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக புகார் கூறுகின்றன. இருப்புகள் தீர்ந்துவிட்ட காரணத்தால் பல மாநிலங்களிலுள்ள தடுப்பூசி மையங்கள் சிக்கிரமே மூடப்பட்டிருப்பதாகவும் அல்லது மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் ஊடகங்களின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

இயல்பு நிலை குறித்து அரசாங்கத்தின் பிரச்சாரத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக, நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரும் இந்து மத நிகழ்வான கும்பமேளாவிற்கு போவதற்கும் நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் கங்கைக் கரையில் ஹரித்வாரில் கூடுவதற்கும் புதுடெல்லி அனுமதித்திருக்கிறது. இருப்பினும், நேற்று மோடி மதத் தலைவர்களிடம் திருவிழா ஒரு "அடையாள" நிகழ்வாக மட்டும் இருக்க வேண்டும் என்று பாசாங்குத்தனமாக கூறினார். ஹரித்வார் நகரில் மட்டும் மதத் தலைவர்கள் உட்பட குறைந்தது 2,000 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி உள்ளிட்ட பொது சுகாதார விதிகளில் கவனம் செலுத்தாமல், மோடி அரசாங்கம் மேற்கு வங்க மாநிலத்தில் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து வெகுஜன தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் உட்பட ஏழுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கோவிட் -19 சோதனையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் பதினான்கு மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான தினசரி நோய்த் தொற்றுக்களை பதிவு செய்துள்ளன. அவற்றில், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் 68 சதவீத நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸின் இங்கிலாந்து உருமாறிய வைரஸ் 18 முதல் 19 மாநிலங்களில் அல்லது இந்தியாவில் 70 முதல் 80 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேஸிலிய உருமாறிய வகைகளும் குறைந்த எண்ணிக்கையிலான மாவட்டங்களில் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மடங்கு உருமாறிய வைரஸ் வகைகள் அதிக தொற்றுநோயாகவோ அல்லது தடுப்பூசி செயல்திறனைக் குறைப்பதாகவோ கண்டறியப்பட்டுள்ளன.

பொங்கி எழுந்துவரும் தொற்றுநோயைப் பற்றி கவலைப்படுவதாக பாசாங்கு செய்யும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏப்ரல் 16 அன்று கூறினார்: “நாடு முழுவதும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதனால்தான் நிலைமையை கணக்கிடுவதற்காக நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வருகிறோம், மேலும் மருத்துவர்கள் மற்றும் அனைவரிடமும் மேலதிக ஏற்பாடுகளுக்காக பேசுகிறோம்.”

இருப்பினும், இந்தியாவின் தற்போதைய சுகாதாரத்திற்கான செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, இது உலகிலேயே மிகக் குறைவானதாகும். தொற்றுநோய் பரவல் மீண்டும் எழுச்சியடைந்திருக்கிற நிலையில், மருத்துவ சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவோ அல்லது தடுப்பூசிகளின் உற்பத்தியை விரைவுபடுத்தவோ எந்தவொரு துணை வரவு செலவுத் திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. இதற்கு நேர்மாறாக, இது பிப்ரவரி 1 ம் தேதி அறிவிக்கப்பட்ட 2021-22 வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு கூடுதலாக 18.5 பில்லியன் டாலர் ஒதுக்குவது உட்பட பாதுகாப்புக்காக பெருமளவில் செலவிடுகிறது.

ஆக்சிஜன் பொருத்தப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உட்பட மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை நாடு முழுவதும் இருந்து பதிவாகியுள்ளது. அதிகரித்திருக்கும் தேவை காரணமாக 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போதிருக்கும் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை தற்போதைய அரை மில்லியனில் இருந்து 15 நாட்களில் இரட்டிப்பாகும் என்று கூறியிருக்கின்ற நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த வாரம் வரையறுக்கப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். இருப்பினும், ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் மற்றும் உற்பத்தித் துறை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அனைத்தும் அதிகபட்சமாக 50 சதவீத திறன் கொண்ட இயக்கத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன. மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசிடமிருந்து இராணுவ உதவியை தாக்கரே கோரியுள்ளார்.

டெல்லி இந்தியாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது, 50,000 க்கும் மேற்பட்ட தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் தொற்று விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருவணிகத்திற்கு இடையூறு விளைவிக்காத "வார இறுதி ஊரடங்கு உத்தரவு" அறிவித்துள்ளார். சினிமா அரங்குகள் கூட 30 சதவிகித இருக்கைகளை அனுமதித்து திறந்திருக்கும்.

மார்ச் மாத இறுதியில், தொற்றுநோய்களின் எழுச்சி தொடங்கியபோது, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் அறிவித்தார்: "பொது முடக்கம் என்பது, ஒரு தீர்வு அல்ல, கோவிட் உடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்." அவர் மேலும் கூறினார், “இது ஒரு தொடர்ந்திருக்கும் நோய் ‘இது உடனடியாக முடிவடையும் என்று நம்ப வேண்டாம்’ அதனுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ” என்று ஆரம்பத்தில் இருந்தே நிபுணர்கள் சொன்னார்கள்.

சத்தீஸ்கர் மருத்துவமனையில் படுக்கைகள் இனிமேல் கிடைக்காது. ராஜ்நந்த்கோனில் உள்ள பத்திரிகையாளர் சங்கம் ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது, அதே நகரத்தில் ஒரு குப்பை லாரி இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கரின் மாநில தலைநகர் ராய்ப்பூரில், பிரதான அரசு மருத்துவமனையின் குளிர்பதன மையக்கிடங்கில் இறந்த உடல்களை சேமிக்க இடம் இல்லாமல் போய்விட்டது. உடல்கள் எல்லா இடங்களிலும் குவிந்து கிடப்பதாகவும், லாரிகள் ஒரே நேரத்தில் பத்து பேரை தகன மைதானத்திற்கு கொண்டு செல்கின்றன என்று அறிக்கைகள் விவரித்துள்ளன. "அவர்கள் விலங்குகளைப் போன்று உடல்களை சவக்கிடங்கிலிருந்து டிரக்கிற்கும் பின்னர் டிரக்கிலிருந்து இறுதி சடங்கிற்கும் இழுத்துச் செல்கின்றனர்." என்று நயா ராய்ப்பூரில் உள்ள ஒரு இறுதி சடங்கில் அவரது தந்தையின் உடல் தகனம் செய்யப்படுவதைப் பார்த்த உமேஷ்குமார் கூறியுள்ளார்.

இந்த பயங்கரமான நிலைமைகளின் கீழ், மோடி ஆட்சியும் எதிர்க்கட்சிகளும் வழக்கம் போல் வணிகம் தொடர வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளன. பெருநிறுவன இலாபங்களை மனித உயிர்களின் பாதுகாப்பிற்கு முன்னால் வைக்கும் இந்தக் கொள்கை ஒரு சமூகக் கொலையாகும். நூறாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோய், மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளைப் போலவே இந்தியாவில் தொற்றுநோய்களின் காலத்தில் லாபமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒரு ஆக்ஸ்பாம் (OXFAM) ஆய்வின்படி, மார்ச் 2020 முதல் ஜனவரி 2021 வரை, இந்தியாவின் 100 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை 13 டிரில்லியன் ரூபாய் (174 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமாக்கியுள்ளனர்.

உள்நாட்டு தேவையை மேற்கோள் காட்டி, மோடி அரசாங்கம் மார்ச் மாத கடைசி வாரத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது, ஜூன் மாதத்தில் அவற்றை மீண்டும் தொடங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த முடிவு மலிவான பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு இந்தியாவை நம்பியுள்ள பல நடுத்தர வருமான மற்றும் ஏழை நாடுகளில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India - SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா சமீபத்தில் புகார் கூறினார் அதாவது ஏற்றுமதியிலிருந்து சம்பாதிப்பதை விட ஒரு தடுப்பூசிக்கு புதுடெல்லி குறைவாகவே விலை கொடுப்பதால், தற்போது அதன் "மிகவும் நீட்டிக்கப்பட்ட" உற்பத்தி திறனை அதிகரிக்க அதற்கு அரசாங்கத்திடமிருந்து 30 பில்லியன் ரூபாய் (408 மில்லியன் அமெரிக்க டாலர்) தேவைப்படுகிறது என்றார்.

அதே நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான தடுப்பூசி-தேசியவாத கொள்கை இந்தியாவை பெரிதும் பாதிக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பூனவல்லா கூறினார், "தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும்." அவர் தொடர்ந்து கூறும்போது, “அமெரிக்கா, பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது மற்றும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இது தடுப்பூசிகளை தடை செய்வதற்கு ஒப்பானது.”

வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, பைடனின் ஏற்றுமதித் தடையின் நோக்கம் அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியை முடுக்கிவிட ஃபைசர் மற்றும் மாடர்னாவுக்கு உதவுவதேயாகும், எனவே “கொரோனா வைரஸுக்கு எதிரான வெகுஜன தடுப்பூசிகளை” துரிதப்படுத்த முடியும். உண்மையில், பைடனின் நடவடிக்கைகள் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான எந்தவொரு அக்கறையுடனும் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த இரண்டு நிறுவனங்களின் இலாபங்களையும் சந்தைப் பங்குகைளையும் உயர்த்துவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும், அவற்றின் உயிர் காக்கும் பொருட்கள் அமெரிக்க ஆளும் உயரடுக்கால் அதன் கொள்ளையடிக்கும் புவிசார் அரசியல் நலன்களை முன்னேற்றப் பயன்படுத்தப்படும். கோவிட்-19தடுப்பூசிகளுக்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளர் பிரிட்டிஷ்-சுவீடன் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோய் ஒரு பூகோளரீதியான பிரச்சினை, இதற்கு பூகோளரீதியான தீர்வு தேவைப்படுகிறது. இது பூகோள அளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தை மேலும் ஊக்குவித்தல், தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்தியையும் நிறுத்துதல், மற்றும் இந்தியாவில் மற்றும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் பெரும் செல்வந்தர்களின் செல்வத்தை பறிமுதல் செய்து வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை வழங்குதல் மற்றும் அனைவருக்கும் தரமான சுகாதார பராமரிப்புக்கான நிதி வழங்க ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை பெருமளவில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படமுடியும்.

Loading