கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதற்கு மத்தியில் பிரான்ஸிலும் இத்தாலியிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான நோய்தொற்றுக்கள் தொடர்ந்து பரவி வரும் நிலையிலும், மற்றும் ஏராளமான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை அமைப்புக்கள் தொடர்ந்து சீர்குலைந்துள்ள நிலையிலும் கூட, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் முழுவதுமாக நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில், ஆரம்பப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, அதேவேளை நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இன்னும் ஒரு வாரத்தில் மே 3 அன்று திறக்கப்படவுள்ளன. இத்தாலியில், அனைத்து தர மட்டங்களிலும் நேரடி கற்பித்தலுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டிருந்த நீண்டகால கட்டுப்பாடுகளை தடுப்பதற்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இந்த முடிவு பிரெஞ்சு மற்றும் இத்தாலிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு குற்றவியல் நடவடிக்கையாகும்.

மார்ச் 11, 2021, வியாழக்கிழமை, கிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள நைடெராவ் பள்ளியில் ஒரு குழந்தை உமிழ்நீர் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஒரு மருத்துவ ஊழியர் பரிசோதனை குழாயைச் சரிபார்க்கிறார். (AP Photo/Jean-Francois Badias)

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மார்ச் 31 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில் பள்ளிகளை மூடுவதற்கு அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு பள்ளிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதில்லை என்பதே உத்தியோகபூர்வ கொள்கையாக இருப்பதால், அரசாங்கம் ஏன் இந்த நடவடிக்கையை எடுக்கிறது என்பது பற்றி அவர் விளக்கவில்லை. ஆரம்பப் பள்ளிகள் இரண்டு வார கால விடுமுறை இடைவெளிக்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னரே மூடப்பட்டன, அதேவேளை நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு இணையவழி கற்பித்தல் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 6 அன்று, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அல்லது இறந்தாலும் அதை பொருட்படுத்தாமல், இந்த வேலை அட்டவணையை பின்பற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மக்ரோன் அறிவித்தார். “நேரடி வகுப்புக்களை நாங்கள் மீண்டும் தொடங்குவது அவசியம்” என்று அவர் கூறினார். மேலும், “மழலையர் பள்ளிகள், ஆரம்ப, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை எந்தவொரு சுகாதார குறிகாட்டிகளின் பேரிலும் மீண்டும் திறக்காமல் இருக்க நான் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு விஞ்ஞானக் கொள்கைக்கும் ஒரு முன் நிபந்தனை இருப்பது போல, பள்ளிகளை மீண்டும் திறப்பது “சுகாதார குறிகாட்டிகளின்” நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல, என்றாலும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபங்களைப் பாதுகாப்பது தொடர்பாக அது நிபந்தனைக்குட்படுகிறது.

மார்ச் 31 அன்று, மக்ரோனின் உரையின் போது, நாளாந்த நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 37,997 ஆக இருந்தது. ஆயினும், இன்று, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளபோது, மார்ச் 18 க்கு முன்னர் இருந்த மட்டத்திற்கு அநேகமாக 30,000 ஆக தொடர்ந்து இது இருந்தது, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பருக்குப் பின்னர் விஞ்சப்படவில்லை. இதற்கு மாறாக, கடந்த ஆண்டில் கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிற்கு குறைந்திருந்தன.

மேலும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தவர்களது எண்ணிக்கை தொடர்ந்து 30,287 ஆக நிலைத்திருந்ததுடன், கடந்த மாதம் இறுதியில் இருந்து பெரும்பாலும் அது மாறாமல் இருந்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உண்மையில் மார்ச் மாத இறுதியில் இருந்ததை விட 6,000 க்கும் அதிகமாக உள்ளது, அதாவது கடந்த ஆண்டு முதல் அலையின் உச்சத்திலிருந்து மீறப்படாத ஒரு நிலை உள்ளது. தேசிய அளவில் தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட விகிதம் ஏழு நாள் சராசரியாக மார்ச் மாதம் 7.67 சதவீதமாக இருந்து 9.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முன்னைய மூன்று வாரங்களில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை முடிந்தவரை குறைந்துள்ளது, இது முக்கியமாக பள்ளி மூடல்கள் மற்றும் விடுமுறை இடைவேளையின் தாக்கமாகும். இப்போது இந்த நடவடிக்கையும் கைவிடப்படுகிறது.

மே மாதம் நடுப்பகுதியில், திறந்தவெளி உணவகங்களை மீளத் திறப்பது உட்பட, பூட்டுதல் கட்டுப்பாடுகளை மேலும் நீக்குவதற்கு அறிவிக்க எலிசே கூட தயாராகி வருகிறது. இது குறித்து அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ளது.

இத்தாலியில், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஏனைய கலாச்சார மையங்களுடன் திறந்தவெளி உணவகங்களும் இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுப்பதும், மேலும் அது வைரஸின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று “கணக்கிடப்பட்ட ஆபத்தை” எதிர்கொள்வதும் அவசியம் என்று பிரதமர் டிராகி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, Radio France Internationale இன் “Grand Jury” நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேர் பேசினார். “மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது அவசியம்,” என்று கூறினார். மேலும், “இதை நான் ஓராண்டுக்கும் மேலாக கூறி வருகிறேன். … வெவ்வேறு அளவீடுகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நிச்சயமாக, கொரோனா வைரஸ் உள்ளது. என்றாலும் ஏனைய விடயங்களும் உள்ளன” என்கிறார்.

அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதை விட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு சதவீத வகுப்புகள் மூடப்படுவதை தான் விரும்புவதாக புளோங்கேர் கூறினார். கல்வி அமைப்புமுறை முழுவதும் வைரஸ் பெரும்பாலும் தடையின்றி பரவுகிறது என்பதை ஒப்புக்கொண்டு, மார்ச் மாதம் கடைசி வாரத்தில், அரசாங்கம் அதன் பள்ளி நெறிமுறையை மாற்றியமைத்தது, அதாவது முன்னர் மூன்று என்று இருந்ததை மாற்றி ஒரு உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று கண்டறியப்பட்டாலும் அதன் பின்னர் வகுப்பறைகள் மூடப்படும் என்றது. மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 11,200 க்கும் அதிகமான வகுப்புகள் மூடப்பட்டன, இது முன்னைய வாரத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

பள்ளிகளை மீண்டும் திறப்பது வைரஸ் பரவலை கணிசமாக அதிகரிக்க வழிவகுக்காது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடா என்று கேட்கப்பட்டதற்கு, “நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய இடம் பள்ளிகள் அல்ல. … அதாவது பெருந்தொற்றுக்கு பள்ளிகள் பொறுப்பல்ல. இது ஒரு சிறு பகுதியை மட்டுமே குறிக்கிறது” என்று அவர் பதிலளித்தார். பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இளைஞர்களிடையே நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வீதம் பெரிதும் குறைந்துள்ளதை அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிபர சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது: 6-10 வயதினரிடையே 19 சதவிகிதம், 11-14 வயதினரிடையே 23 சதவிகிதம், மற்றும் 15-17 வயதினரிடையே 19 சதவிகிதம் என்றளவிற்கு நோய்தொற்று வீதம் குறைந்துள்ளது.

மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட வைரஸின் திரிபு வகைகளால் மாணவர்களுக்கு மத்தியிலும் நோய்தொற்று பரவுவது துரிதமடைந்து வருகிறது. பிரான்சில் அநேகமாக அனைத்து நோய்தொற்றுக்களுக்கும் பிரிட்டிஷ் திரிபு வகை வைரஸ் காரணமாகவுள்ளது. சனிக்கிழமை, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ், “வைரஸ் திரிபு வகைகள் ஏராளமாக இல்லை என்பதுடன், அவை குறையும் போக்கு உள்ளது” என்று கூறி பிரேசிலிய திரிபு வகை வைரஸ் பரவலின் அபாயத்தை அவர் நிராகரிக்க முயன்றார். மாறாக, Public Health France அமைப்பு வெளியிட்டுள்ள தரவு, பிரேசிலிய திரிபு வகையின் தாக்கம் ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் 4.8 சதவிகித அளவிற்கு உள்ளதைக் காட்டுகிறது.

மக்ரோன் அரசாங்கத்தின் பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கை அப்பட்டமாக வர்க்க நலன்களின் அடிப்படையில் வெட்கக்கேடான வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் தொழிற்சங்கங்களின் தீவிர ஆதரவில்லாமல் அதைத் தொடர இயலாது என்பதும் விஞ்ஞானபூர்வமற்றது. அதாவது, ஆண்டு முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறந்து வைத்திருப்பதில் மக்ரோனுடன் தேசிய கல்வி தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்துள்ளன. ஐரோப்பாவில் வேறெந்த நாட்டையும் விட நீண்ட காலமாக பிரான்ஸ் பள்ளிகளை திறந்து வைத்திருக்கிறது. யுனெஸ்கோவின் கூற்றுப்படி, மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரை, ஜேர்மனியில் 28 வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததுடன் ஒப்பிடுகையில், பிரான்சில் 10 வாரங்கள் மட்டுமே மூடப்பட்டிருந்தன.

நேற்று பள்ளிகளின் மறுதிறப்புக்கு பதிலிறுக்கும் வகையில், தொழிற்சங்கங்கள், பள்ளிகளில் மிகுந்த அதிர்ச்சியூட்டும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்த பயனுள்ள விமர்சனங்களை வழங்கும் அவற்றின் கொள்கையை பராமரித்தன, அதேவேளை பள்ளிகளை மூடுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதோடு, பாதுகாப்பான நிலைமைகளை செயல்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் முன்வைக்கவில்லை.

FSU-SNES கல்வி சங்கம் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கை, “தொழிற்சங்கங்களுடன் ஒரு சில கலந்துரையாடல்களை மட்டுமே நடத்தியதற்காக அரசாங்கத்தை முக்கியமாக கண்டித்து, ஊடகங்கள் வழியாக பள்ளிகளை மீளத் திறப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை அது மீண்டும் கண்டறியும் என்றது. தகவல் மிகவும் தாமதமாக வரும்போது அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிகள் மூடப்பட்ட நாளிலிருந்து, நேரடி வகுப்புகளுக்கு திரும்புவதை எதிர்பார்க்க வேண்டும் என்று FSU வலியுறுத்தியது.”

பள்ளிகள் முழுவதுமாக வைரஸை பரவ அனுமதிக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், அதை கல்வியாளர்களும் மாணவர்களுமே எடுக்க வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் அதிவேக இணைய வசதி மற்றும் கணினி அணுகலை ஏற்பாடு செய்வது, மற்றும் வீட்டிலேயே இருக்க அவர்களது பெற்றோருக்கு ஊதியம் வழங்கப்படுவது உட்பட, மாணவர்களுக்கு இணையவழி கற்றலுக்கான பரந்த வளங்களை ஏற்பாடு செய்து பின்னர் பள்ளிகள் மூடப்பட வேண்டும். அத்தியாவசியமற்ற வேலைகள் நிறுத்தப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கும் சிறு வர்த்தகங்களுக்கும் முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அத்தகைய போராட்டத்தின் வளர்ச்சிக்கு, தொழிலாளர்கள் கட்டுப்பாட்டிலான, தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு பணியிடக் குழுக்களை உருவாக்குவது உட்பட, பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சுயாதீனமான போராட்ட அமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் படுகொலைக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தனது சொந்த சர்வதேச எதிர்ப்பை முன்னெடுப்பதற்கு ஒரு அடிப்படையை வழங்க, உலக சோசலிச வலைத் தளம், இந்த சனிக்கிழமை, மே 1 அன்று, ஒரு சர்வதேச இணையவழி மே தின பேரணியை நடத்துகிறது, இது சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (International Workers Alliance of Rank-and-File Committees) அபிவிருத்திக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கும். அனைத்து கல்வியாளர்களையும் மாணவர்களையும் இந்த பேரணிக்கு பதிவு செய்யவும், அதில் கலந்துகொள்ள திட்டமிடவும் கேட்டுக் கொள்கிறோம்.

Loading