ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூச்சுத்திணறலால் இறப்பவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் நேற்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக 300,000 ஐத் கடந்துள்ளது. மேலும் திங்களன்று 352,991 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச ஒரு நாள் மொத்த எண்ணிக்கையாக இருக்கிறது அல்லது உண்மையில் எங்கும் இப்படி ஏற்படவில்லை.

ஹெல்ப்நவ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இஷார் உசேன் ஷேக், இடப்பக்கத்தில் இருப்பவர்,மற்றும் பலர், மே 28, 2020 அன்று இந்தியாவின் மும்பையில் உள்ள தனது வீட்டிலிருந்து ஒரு கோவிட் -19 நோயாளியை அழைத்துச் செல்கின்றனர். (AP Photo/Rafiq Maqbool)

உத்தியோகபூர்வமாக, இந்தியாவின் தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, இது கோவிட்-19 நோய்த்தொற்றுக்கள் தொடர்ந்து அதிவேகமாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியமிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நகர்ப்புற சேரிகளில் அல்லது பொது சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வாழும் நாடு இது; மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரிய பெருநகர மையங்களில், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுகாதார பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே செயலிழந்த நிலைக்கு போய்விட்டது.

நேற்று, இந்தியா இதுவரையில்லாத அளவு அதிக எண்ணிக்கையில் 2,812 புதிய கோவிட்-19 இறப்புகளை பதிவு செய்திருக்கிறது. தொற்றுநோயின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்து இப்போதுவரைக்கும் 195,123 ஆக ஆகியிருக்கிறது. இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த வாரத்தில், 16,257 பேர் வைரஸால் இறந்துள்ளனர், இது முந்தைய வாரத்திலிருந்த 8,588 இறப்புகளை விட இரு மடங்கு அதிகமாகும்.

கடந்த வாரம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் 40 சதவீதத்திற்கும் மேலானதாக - கோவிட்-19 இன் உலக மையப்பகுதியாக இந்தியா தோன்றியுள்ளது - இது நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட “உயிர்களுக்கு மேலாக இலாபங்கள்” என்ற கொள்கையின் நேரடி விளைவாகும்.

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை கொடூரமானதாக இருக்கின்ற நிலையில், இது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இப்போது வெளிவரும் பேரழிவின் உண்மையான அளவை சந்தேகத்திற்கு இடமின்றி குறைத்து காட்டுகிறது. தொற்றுநோய்க்கு முன்னர், இந்திய அதிகாரிகள் அனைத்து இறப்புகளுக்கும் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக மருத்துவ ரீதியான சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். நாட்டின் மோசமான சுகாதார கட்டமைப்பு முறை இப்போது வீழ்ச்சியடைந்திருப்பதால், இறப்புகளின் சரியான காரணத்தை வெளிவிடுவதில் இன்னும் பெரிய சீர்குலைவில் உள்ளது.

இந்தியாவின் எக்னோமிக்ஸ் டைம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அதன் செய்தியில், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை ஆறு நாட்களில் கொரோனா வைரஸால் இறந்ததற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் 145 ஆக குறிப்பிட்டது. ஆனால் அதே காலகட்டத்தில், சுகாதார மற்றும் தகனம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களிடமிருந்து வந்த ஆதாரங்களின்படி “நகரத்தின் இரண்டு பிரதான தகன மையங்களின் 430 அல்லது மூன்று மடங்குக்கு அதிகமான தகனங்கள் கோவிட்-19 நெறிமுறையின் கீழ் நடந்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.

படுக்கைகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற பற்றாக்குறையால் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை திருப்பி அனுப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்திய நாட்களில் சிகிச்சையளித்துக்கொண்டிருந்த மருத்துவமனைகள் தங்கள் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தீர்ந்து விட்டதைத் தொடர்ந்து ஏராளமான நோயாளிகள் இறந்துவிட்டனர், அவசர உதவிக்காக அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த போதிலும், சரியான நேரத்தில் அவைகள் மீண்டும் வழங்கப்படவில்லை.

  •  சனிக்கிழமை அதிகாலை மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்பட்டநிலையில் டெல்லியின் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் இருபது நோயாளிகள் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 200 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, ஏனெனில் இந்த மருத்துவமனை மீண்டும் ஆக்ஸிஜனை இழந்துவிட்டது என்று 24 மணி நேரத்திற்குள் அதே மருத்துவமனை ஒரு ட்வீட்டை வெளியிட்டிருக்கிறது.
  •  அதே நாளில், பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நோயாளிகள் இறந்துள்ளனர்.
  •  ஏப்ரல் 22 அன்று, டெல்லியின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர், “கடந்த 24 மணி நேரத்தில் நோய்வாய்ப்பட்ட 25 நோயாளிகள் மருத்துவமனையில் இறந்துள்ளனர். ஆக்ஸிஜன் இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும்.” அவர் மேலும் கூறுகையில், “வென்டிலேட்டர்களும் பிபாப்பும் திறம்பட செயல்படவில்லை. அவசரமாக காற்றுவிடுவதற்கு ஆக்ஸிஜன் தேவை. மற்றொரு 60 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ” என்று கூறியுள்ளார்.
  •  முந்தைய நாள், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் 24 கோவிட் -19 நோயாளிகள் ஆக்ஸிஜன் கலம் கசிவு காரணமாக இறந்தனர்.

ஆக்ஸிஜன் விநியோக நெருக்கடி குறித்து மோடி அரசாங்கத்திற்கு பல வாரங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. "வரவிருக்கும் நாட்களில் இந்தியா ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்." என்று ஏப்ரல் 1 ம் தேதி, பிரதமர் அலுவலகம் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் சக்தியளிக்கும் குரூப் - VI நடத்திய "ஒரு பயனுள்ள கோவிட் பதிலிறுப்பு" என்ற கூட்டத்தில் எச்சரித்திருந்தது. ஆயினும்கூட, கடந்த வாரம் தான் மத்திய அரசு தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க தடை விதித்தது, இந்த தடை ஏப்ரல் 22 முதல்தான் நடைமுறைக்கு வந்தது.

பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் கிரிதர் ஆர். பாபு ஏப்ரல் 23 ம் தேதி நியூஸ் கிளிக் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நிலைமைகள் ஏற்கனவே கொடூரமானவையாக இருக்கின்றன, மோசமானவை இன்னும் வரவில்லை என்று எச்சரித்துள்ளார். தொற்றுநோய் பரவுவது புதிய, அதிக தொற்று மற்றும் ஆபத்தான உருமாறிய வைரஸால் பெருகி வருவதால், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் "நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் [400,000 முதல் 500,000] வரை பாதிப்புகளை நாங்கள் அடைவோம் என்றார்.

இந்த பேரழிவிற்கான பொறுப்பு பாஜக அரசாங்கத்திடம்தான் உள்ளது, ஆனாலும் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் என்று சொல்பவைகளிடமும் இருக்கின்றது. இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் உத்தரவின் பேரில், அவர்கள் அனைவரும் "பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு" ஆதரவளித்துள்ளனர், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து புதிய பாதிப்புகள் எழுச்சிபெற்றிருக்கும் நேரத்தில் பொது முடக்க நடவடிக்கைகளுக்கான அழைப்புகளை நிராகரித்தன, மேலும் இந்தியாவின் பாழடைந்து போயிருக்கும் சுகாதார அமைப்புக்கு நிதியுதவி மற்றும் பெரும் முதலீடுகளை செய்ய மறுத்துவிட்டன.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் பேரழிவு தரக்கூடிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் உருவாகும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களிடமிருந்து பலமுறை வந்த எச்சரிக்கைகளை ஒதுக்கித் தள்ளியதுடன் கடந்த ஆண்டு மோசமாக தயாரிக்கப்பட்ட பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியையும் கைவிட்டுள்ளது. முடக்கத்தின்போது பரவலான வறுமையைத் தடுக்க தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான நிதி ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்ட மோடி, பெருவணிகத்தின் மற்றும் பெரும் செல்வந்தர்களின் இலாபங்களையும் பரந்த செல்வத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் திறந்து விட்டார்.

பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே அதிகரித்து வரும் தொற்றுநோய்களின் அறிகுறிகள் இருந்தபோது, மோடி அரசாங்கம் "COVID-19 இன் போது என்ன வேலை செய்யப்பட முடியும் என்பதற்கு உலகத்தின் முன் ஒரு முன்மாதிரியாக இருந்ததாக" அதன் கொள்கையைப் பற்றி பெருமையாகக் கூறியது.

இப்போது கூட, தினசரி ஆயிரக்கணக்கான தடுக்கக்கூடிய மரணங்கள் பதிவாகிக்கொண்டிருக்கையில், வைரஸிலிருந்து அல்லாமல், மற்றொரு பொதுமுடக்கத்திலிருந்து இந்தியாவை "காப்பாற்றவேண்டும்" என்று மோடி தனது வார்த்தைகளைப் பயன்படுத்தி வலியுறுத்துகிறார். நடைமுறையில் இதன் பொருள் என்னவென்றால், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினருக்கு தடையின்றி இலாபம் வருவதற்கு உத்தரவாதம் அளிக்க நூறாயிரக்கணக்கானவர்கள், இல்லையென்றால் மில்லியன் கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை “பொருளாதார சக்திக்கான இந்தியத் தேடல்” என்ற ஒரு ஆன்லைன் கலந்துரையாடலில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வைரஸின் பரவலுக்கு தடையாக பிராந்திய அல்லது மாநில அளவிலான முடக்கங்களுக்கு மோடி அரசாங்கத்தின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், “மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைத்தலே அது முன்னோக்கி செல்லும் வழி. ” என்றார்.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும் எந்தவொரு ஒருங்கிணைந்த நடவடிக்கையையும் நிராகரித்தவிட்டு பின்னர், இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் சுரண்டலை தீவிரப்படுத்தும் மோடி அரசாங்கத்தின் உந்துதலுக்கு தொற்று மற்றும் இறப்பு அலை பாதிக்காது அல்லது குறைத்துவிடாது என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு உறுதியளிப்பதற்காக சீதாராமன் தனது கவனத்தைத் செலுத்தினார். "முடக்கங்கள் செய்யவேண்டிய வேண்டிய ஒன்று அல்லது இரண்டு மையங்கள் இருந்தாலும்கூட, அவை நாங்கள் அறிவித்துள்ள முதலீட்டை திரும்ப பெறுதல் (தனியார்மயமாக்கல்) திட்டத்தை பாதிக்காது அல்லது மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் அல்லது வேறு எந்த நிறுவன சீர்திருத்தங்களையும் பாதிக்காது " என்று சீத்தாரமன் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை பைனான்சியல் டைம்ஸுடன் இணைந்து வழங்கிய இந்தியன் எக்ஸ்பிரஸ் அப்பட்டமாகக் குறிப்பிட்டது போல, நிதியமைச்சரின் உரையின் உந்துதல் என்னவென்றால், இந்தியாவில் தொற்றுநோய்களின் “இரண்டாவது அலை” உள்ளூர் மற்றும் சர்வதேச மூலதனத்தால் கோரப்பட்ட “பெரிய சீர்திருத்த உந்துதலை” பாதிக்காது.

பாஜக தங்கள் ஏலத்தை செய்யும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்க விரைந்து வரும் வேளையில், இந்தியாவின் வறுமையில் வாடும் மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குவதில் மோடி அரசு பெரும் தயக்கும் காட்டி வருகிறது. இன்றுவரை, இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததும், தடுப்பூசி பற்றாக்குறையால் அரசாங்கத்தின் நோய்த்தடுப்பு முயற்சி நிறுத்தப்படுவதாக பல மாநிலங்களில் இருந்து அறிக்கைகள் வெளிவந்தன, இந்தநேரத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று மோடி திடீரென்று அறிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் தயாராக இல்லை என்பது விரைவில் வெளிப்படுத்தப்பட்டது. மாறாக, வறிய இந்தியர்கள் ஒரு டோஸுக்கு பல நாட்கள் சம்பாதிப்பதற்கு சமமான தொகையை செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் இப்போது அங்கு நடைபெற்று வரும் பல கட்ட மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாநிலத்தின் அரசாங்கமாக மாறினால் இலவச தடுப்பூசிகளை வழங்குவதாக பாஜக இழிந்தமுறையில் உறுதியளித்துள்ளது. ப்ளூம்பெர்க்கில் ஒரு கட்டுரையின் படி, சில மாநிலங்கள் “தடுப்பூசிகளை மானிய விலையில் வழங்கும், மற்றயவை “குடிமக்கள் மேல் முழுச் செலவையும் சுமத்தும்.”

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.32 முதல் 0.36 வரை அல்லது அனைத்து இந்திய பெரியவர்களுக்கும் தடுப்பூசி போட 3.5 பில்லியன் டாலர் செலவாகும் என்று பல்வேறு நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். இது இந்தியாவின் 130 க்கும் மேற்பட்ட பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த ஆண்டில் பெற்றுக்கொண்ட 48 பில்லியன் டாலர் செல்வ அதிகரிப்பு அல்லது 2020 ஆம் ஆண்டில் இந்தியா வேகமாக விரிவடைந்து வரும் இராணுவத்திற்காக செலவழித்த 73 பில்லியன் டாலர்களின் செல்வத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்குதல், மற்றும் எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது மோடி அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மேல் பெருந்திரளான மக்கள் மத்தியில் கோபம் வளர்ச்சியடைந்துவருகின்றன. ஏப்ரல் 23 அன்று சி.என்.என் அறிக்கை வெளியிட்டிருந்தது, “பல்லாயிரக்கணக்கான மக்கள் #மோடிபதவிவிலகு (#ResignModi), #நோய்சிறப்பாகபரப்பும்மோடி (#SuperSpreaderModi) மற்றும் #இந்தியாவைதோற்கடித்தவர் (#WhoFailedIndia) போன்ற பிரபலமான ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.” மிகவும் பரந்த அளவில் மக்கள் எதிர்ப்பு வெடிக்கும் என்று அஞ்சிய மோடி அரசாங்கம் "கொரோனா வைரஸ் வெடிப்பை இந்தியா கையாளுவதை விமர்சிக்கும் உள்ளூர் சட்டமியற்றுபவர்கள் உட்பட சில டஜன் ட்வீட்களை" நீக்குமாறு சமூக ஊடக தளமான ட்விட்டரை கேட்டுக் கொண்டது என்று ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Loading