கோவிட்-19 பேரழிவின் மத்தியில், இந்திய மாநில தேர்தல்கள் மோடிக்கு பெரும் அடியை கொடுத்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் அவரது அதிவலது பாரதிய ஜனதா கட்சி (BJP) தேசிய அரசாங்கமும் மார்ச் கடைசியிலும் மற்றும் ஏப்ரலிலும் நடத்தப்பட்டு, கடந்த ஞாயிறன்று முடிவுகள் வெளியான ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

மே 2, 2021, ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் கொல்கத்தாவில், தனது கட்சி மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் உரையாற்றுகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி வெற்றி அடையாளத்தைக் காட்டுகிறார். (AP Photo)

இந்தியாவின் நான்காவது மிகஅதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுவதே அதன் முக்கிய குறிக்கோள் என்று உரக்க அறிவித்ததை விட மிகக் குறைந்த இடங்களை பெற்று இந்து மேலாதிக்க பாஜக கடும் தோல்வியைக் கண்டுள்ளது.

பானர்ஜி ஒரு வலதுசாரி வாய்வீச்சாளராவார், இவர் 2011 இல் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி கூட்டணி “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் என்று தாமே குறிப்பிட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது குறித்து எழுந்த மக்கள் கோபத்தை சுரண்டி ஆட்சிக்கு வந்தார். ஆனால் பாஜக இவரை ஒரு விரோதியாக பார்ப்பதுடன், மேற்கு வங்கத்தில் கிடைக்கும் வெற்றி அதன் வர்க்கப் போர் மற்றும் அதன் வகுப்புவாத சர்வாதிகார திட்டநிரல் குறித்து மக்களிடையே பெருகிவரும் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு மிகவும் தேவையாகவுள்ள அரசியல் ஊக்கத்தை அளிக்கும் என்று கணக்கிட்டது.

2019 தேசியத் தேர்தலின் போது மேற்கு வங்க மாநிலத்தில் தான் மேற்கொண்ட வலுவான பிரச்சாரத்தை நம்பி, தற்போது பானர்ஜியை தோற்கடிப்பதற்கான தனது பிரச்சாரத்திற்கு பாஜக கடுமையாக உழைத்ததுடன், அதற்கு பெரியளவில் வளங்களை பாய்ச்சியது. மோடியும் அவரது தலைமை உதவியாளரான உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் மேற்கு வங்கத்தில் ஏராளமான பிரச்சார பேரணிகளை நடத்தினர், அப்போது அவர்கள் முஸ்லிம் விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை முன்னிலைப்படுத்தியும், “முஸ்லீம்களை திருப்திப்படுத்தும்” பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்தும், “வெளிநாட்டு ஊடுருவலுக்கு” உதவி செய்பவராகவும், வெட்கமின்றி வாக்காளர்களை இனவாத வழிகளில் துருவப்படுத்த முயன்றனர்.

இருப்பினும், பாஜக தனது 2019 வாக்கு அளவுக்கு கூட பொருந்தாது தோல்வியைத் தழுவியுள்ளது, அதே நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸூக்கான வாக்குகள் 48 சதவிகிதத்திற்கு அதிகமாக 4 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளன, அதாவது 294 மாநில சட்டசபை இருக்கைகளில் 214 ஐ வெல்வதற்கு இது போதுமானது.

நாட்டின் ஆறாவது பெரிய மாநிலமான தமிழ்நாட்டில், பாஜக வின் பிராந்திய கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக 10 ஆண்டுகால பதவிக்குப் பின்னர் தோல்வியைத் தழுவியுள்ளது. அருகேயுள்ள தென் மாநிலமான கேரளாவில், பாஜக தனது ஒரே மாநில சட்டசபை இருக்கையையும் இழந்துவிட்டது.

இந்தியாவின் ஆளும் கட்சி வடகிழக்கு மாநிலமான அசாமில் கூட்டணி அரசாங்கத்தின் தலைமையில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், 1.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு யூனியன் பிரதேசமும், முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ பகுதியுமான புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் அதற்கு மற்றொரு ஆறுதலாக அமைந்தது. அங்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சியின் இளம் பங்காளர் ஒருவர் விலகியதால் அதிகாரத்தின் பங்கைப் பெற முடிந்தது.

இந்த வசந்த காலத்தில் தேர்தல்கள் நடந்த ஐந்து மாநிலங்களின் கூட்டு மக்கள்தொகை 255 மில்லியன் ஆகும், இது ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் அநேகமாக 18 சதவிகிதமாகும்.

நாடு முழுவதும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் வெடித்து பரவிக் கொண்டிருக்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த தேர்தல் பிரச்சாரங்கள், இந்தியாவை தொற்றுநோயின் பூகோள அளவிலான மையமாக மாற்றியுள்ளது. ஆயினும்கூட, மேற்கு வங்கத்தின் எட்டு கட்ட தேர்தலின் இறுதி கட்டம் வரை, மோடியும் ஏனைய கட்சி தலைவர்களும் பொறுப்பற்ற வகையில் பாரிய தேர்தல் பேரணிகளை நடத்தி முடித்தனர். இது மோடி மற்றும் அவரது பாஜக தலைமையில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், என்றாலும் வைரஸின் ஆபத்தை முறையாக குறைத்துக் காட்டுவதையும், அவர்கள் “பொருளாதாரத்தை திறந்து” வைத்திருப்பதை நியாயப்படுத்த இயல்பான சூழ்நிலை நிலவுவதாக காட்டுவதையும் முழு அரசியல் ஸ்தாபகமும் ஆதரித்தது.

மனித உயிர்களை பாதுகாப்பதை விட இந்தியாவின் பேராசை மிக்க முதலாளித்துவ உயரடுக்கின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு மனித பேரழிவிற்கு வழிவகுத்துள்ளது. ஏப்ரல் 7 முதல் இந்தியா சராசரியாக 100,000 க்கும் மேற்பட்ட நாளாந்த புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை பதிவு செய்தது; ஏப்ரல் 17 முதல் அங்கு சராசரியாக 200,000 நோய்தொற்றுக்கள் பதிவாகின; மேலும் ஏப்ரல் 24 முதல் சராசரியாக 300,000 அளவிற்கு நோய்தொற்றுக்கள் பதிவாகின. இதன் விளைவாக, இந்தியாவின் பாழடைந்துபோன சுகாதாரப் பாதுகாப்பு முறை அளவுக்கு மீறி நிரம்பிவழிந்தமை ஏராளமான இறப்புகளுக்கு வழிவகுத்தது. இந்தியா கடந்த ஏழு நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளது. ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையில் ஒரு பகுதி மட்டுமே காட்டப்படுகிறது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. “நாங்கள் மேற்கொண்ட அனைத்து மாதிரி ஆய்வுகளின் படி, உண்மையான இறப்புக்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதை விட இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்,” என்று மிச்சிகன் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பிரமர் முகர்ஜி நியூயோர்க் டைம்ஸூக்கு கூறினார்.

மோடி அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே பெரிதும் கோபம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெருந்தொற்று விவகாரத்தை இது குற்றகரமாக கையாளுவது தொடர்பாக. மேலும், கூடுதல் சிக்கன நடவடிக்கை, விரைந்து தனியார்மயமாக்கும் உந்துதல், வேளாண்வணிக-சார்பு சட்டங்களை திருத்தம் செய்தல், மற்றும் மலிவான ஒப்பந்த-தொழிலாளர் வேலைகளை ஊக்குவிக்கும் மற்றும் பெரும்பாலான வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கும் தொழில்துறை சட்டத்தை “சீர்திருத்தம்” செய்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு “புத்துயிரூட்ட” முனையும் அதன் முயற்சிகள் குறித்து மக்களிடையே கோபம் எழுந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்பதற்கான அதன் நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கோபம் அதிகரித்துவருகிறது.

அரசாங்கத்தின் சுய ஒப்புதல் பெற்ற “முதலீட்டாளர்-சார்பு கொள்கைகளை” எதிர்க்கவும், மற்றும் கடந்த வசந்த காலத்தில் மோடி அரசாங்கம் ஒரு பேரழிவுகரமான, எந்தவித முன்னேற்பாடுகளுமில்லாத முழு அடைப்பை விதித்தபோது, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துநின்ற பல கோடி மக்களுக்கு அவசரகால உதவி வழங்க கோரவும் கடந்த நவம்பர் 26 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்தனர். அதே நேரம், கடந்த செப்டம்பரில் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண்வணிக சட்டங்களை இரத்து செய்யக் கோரி நவம்பர் பிற்பகுதி முதல் பத்துகளில் தொடங்கி, நூற்றுக்கணக்கான, பின்னர் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் முகாமிட்டு போராடி வருகின்றனர்.

எவ்வாறாயினும், மோடி அரசாங்கத்திற்கு எதிரான, மற்றும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்த முனையும் இந்திய ஆளும் உயரடுக்கின் பரந்த முனைப்புக்கு எதிரான கோபம் என்பது தேர்தல் முடிவில் மிகவும் சிதைந்த வெளிப்பாட்டை மட்டுமே கண்டறிந்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, மேற்கு வங்கத்தை தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு முடிந்திருந்தது. அதாவது, கோவிட்-19 நோய்தொற்றுக்களின் பெருகிவரும் அலை ஒரு உண்மையான சுனாமியாக உருவெடுப்பதற்கு முன்னரே தேர்தல் நடந்து முடிந்திருந்தது, மேலும் இந்த நிலைமைகளின் கீழ், அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் இன்னும் ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக, மற்றும் மிக முக்கியமாக, பாஜக வின் தேர்தல் எதிர்தரப்பினரும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மத்தியில் தங்களது மதிப்பை பெரிதும் இழந்துள்ளனர், ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சமூக தீங்கு விளைவிக்கும் திட்ட நிரலை செயல்படுத்துவதில் அவர்களது சொந்த பங்கு இருந்ததும் அதற்கு காரணம். அனைத்திற்கும் மேலாக, சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற தேசிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரண்டு பெரிய ஸ்ராலினிசக் கட்சிகளைப் பொறுத்தும் இது உண்மையே.

மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மற்றொரு அடியை கொடுத்துள்ளது, இது 2019 இல் இரண்டாவது நேரடி தேசிய தேர்தலில் இந்தியாவின் பாராளுமன்ற கீழ்சபையில் 10 சதவிகித இருக்கைகளை வெல்வதற்கு கூட தவறிவிட்டது. பெரும் ஆரவாரமாக காங்கிரஸ் அதன் பிரச்சாரத்தை மேற்கொண்டும் கூட கேரளா மற்றும் அசாமில் தற்போதுள்ள அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்வதில் இது தோல்வி கண்டது, மேலும் மேற்கு வங்க சட்டசபையில் இது கொண்டிருந்த 23 இடங்களையும் இழந்ததுடன், புதுச்சேரியில் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்தது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை, வெற்றி பெற்ற திமுக - தலைமையிலான தேர்தல் கூட்டணியில் இது அங்கம் வகிப்பதால் இதற்கு சில அமைச்சரவை பதவிகள் வழங்கப்படலாம். என்றாலும், 234 மாநில சட்டமன்ற இருக்கைகளில் 133 இருக்கைகளை வென்று தெளிவான பெரும்பான்மை வெற்றியை திமுக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front-LDF) அரசாங்கம் மீண்டும் தேர்வு செய்யப்பட ஸ்ராலினிஸ்டுகள் அதிகம் பாடுபடுகிறார்கள், தற்போது இவர்கள் வழிநடத்தும் ஒரே மாநில அரசாங்கமாக இது உள்ளது. 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் LDF 99 இருக்கைகளை வென்றுள்ளது, அதாவது சிபிஎம் 62, சிபிஐ 17, மற்றும் எஞ்சியுள்ள 20 இருக்கைகளை விட்டோடி காங்கிரஸ் கன்னையான, கேரளா காங்கிரஸ் (M), மற்றும் சமீப காலம் வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த வகுப்புவாத இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வென்றுள்ளன.

40 ஆண்டுகளில் முதல் முறையாக கேரள மாநிலத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகளுக்கு இடையே அதிகார சுழற்சியை ஏற்படுத்தவில்லை. கேரளாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என காங்கிரஸ் பெரிதும் நம்பியிருந்தது. 2019 தேசிய தேர்தலில், இதன் கூட்டணி மாநிலத்தின் 20 இடங்களில் 19 இடங்களை வென்றிருந்தது. ஆனால் வலதிலிருந்து LDF ஐ எப்போதும் தாக்கிய இதன் பிரச்சாரம் தோல்வியடைந்தது. இதற்கிடையில், பெரும்பாலான பெருநிறுவன ஊடகங்கள் LDF அரசாங்கத்தையும், அதிலும் குறிப்பாக கேரள முதலமைச்சரும் சிபிஎம் இன் அரசியல் குழு உறுப்பினருமான “கேப்டன்” பினராயி விஜயனையும் அவர்களது “திறமையான” நிர்வாகத்திற்காக, அதாவது அற்பமான சமூக நலத் திட்டங்களுடன் கூடிய முதலாளித்துவ வளர்ச்சியின் கலவையை பாராட்டியுள்ளன.

கேரளாவை தவிர, மற்ற மாநிலங்களில் சிபிஎம் உம் சிபிஐ உம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டாளிகளாக இருந்து அதன் விதியை பெரிதும் பகிர்ந்து கொண்டன. தமிழ்நாட்டில், திமுக-காங்கிரஸ் கூட்டணி “சமூக நீதிக்காக” பாடுபடுவதாக கூறும் மோசடி கூற்றுக்களை ஊதிப் பெரிதாக்க சிபிஎம் உம் சிபிஐ உம் அதற்கு உதவின, மேலும் இளைய கூட்டணிக் கட்சிகளாக ஒவ்வொன்றும் இரண்டு சட்டமன்ற இருக்கைகளை பிடித்துள்ளன.

மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் கட்சியுடனும் மற்றும் சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனும் தேர்தல் கூட்டணியில் நின்று காங்கிரஸை விட அவமானகரமான ஒரு தோல்வியை ஸ்ராலினிஸ்டுகள் சந்தித்தனர். சிபிஎம் க்கு வெறும் 4.68 சதவீத வாக்குகளும், சிபிஐ க்கு 0.2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில், அவர்களும் அவர்களது இடது முன்னணி கூட்டணிக் கட்சிகளும் இணைந்து ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறிவிட்டன, இந்த மாநிலத்தில் தான் 1977 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் இடது முன்னணி கூட்டணி ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸூக்கு இடையிலான தேர்தல் துருவமுனைப்பே மேற்கு வங்கத்தில் தங்களது படுதோல்விக்கு காரணம் என்று ஸ்ராலினிஸ்டுகள் குறை கூற முயல்கின்றனர் என்றாலும், யதார்த்தத்தில் வர்க்கப் போராட்டத்தை பல தசாப்தங்களாக அவர்கள் நசுக்கியது, முதலாளித்துவ ஸ்தாபகத்திற்குள் ஒருங்கிணைந்திருப்பது மற்றும் முதலாளித்துவத்தின் 1991 க்குப் பின்னைய “புதிய பொருளாதாரக் கொள்கையை” செயல்படுத்துவதில் உறுதுணையாக இருந்தது மற்றும் முக்கிய பங்கு வகித்தது ஆகியவற்றின் விளைவாகும்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கோர்ப்பச்சேவ் மற்றும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்டெடுப்பு குறித்து உற்சாகமடைந்து, தொடர்ச்சியான இந்திய யூனியன் அரசாங்கங்களுக்கு சிபிஎம் உம் சிபிஐ உம் முட்டுக் கொடுத்தன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவ ஒழுங்கிற்குள் இந்தியாவை முழுமையாக ஒருங்கிணைத்த மற்றும் வாஷிங்டனுடன் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்ததுமான காங்கிரஸ் கட்சி தலைமையிலானது. இதற்கிடையில், மேற்கு வங்கத்தில், இவர்களது இடது முன்னணி அரசாங்கம், விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பது, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குவது, வணிகங்களை தனியார்மயமாக்குவது மற்றும் பெருநிறுவன வரிகளை குறைப்பது ஆகியவற்றின் மூலம் முதலாளித்துவ முதலீட்டை தொடர்ந்து பின்பற்றியது.

பல தசாப்தங்களாக, ஸ்ராலினிஸ்டுகள், பெருவணிக காங்கிரஸ் கட்சிக்கும், மற்றும் பாஜக மற்றும் இந்து மேலாதிக்க வலதுசாரிகளை எதிர்த்து போராடுவதன் பெயரில் வலதுசாரி சாதிய மற்றும் பிராந்திய இனக் கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக தொழிலாளர்களை அடிபணிய வைப்பதற்கான தங்களது அயராத முயற்சிகளை நியாயப்படுத்தி வந்துள்ளனர். இறுதி முடிவு என்னவென்றால், 2004-2014 காலகட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான UPA போன்ற “இடது” மற்றும் “இடது” ஆதரவு அரசாங்கங்கள் விளைவித்த கசப்பான அனுபவங்கள் மீதான பொதுமக்கள் கோபத்தையும் விரக்தியையும் இவர்கள் சுரண்டிக் கொள்ள முடிந்த நிலையில், பாஜக உம் மற்றும், பரவலான வறுமை, எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, வலுவிழந்த பொது சேவைகள் மற்றும் பரவலான ஊழல் போன்ற அதன் எதிர்வினையும் மட்டுமே வலுவாக வளர்ச்சி கண்டுள்ளன.

பாஜக உம் ராஷ்ட்ரியா சுயம்சேவக் சங் (RSS) என்ற அதன் இணை அமைப்பின் பாசிச குண்டர்களும் தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டல் மூலம் மட்டுமே அவர்களை தோற்கடிக்க முடியும், அதாவது இந்திய முதலாளித்துவம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராகவும் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திலும் அதன் தலைமையின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதாகும்.

Loading